உங்களுக்கு ஆன்மீக ஆலோசகர் இருக்கிறாரா?
உ சியா என்ற 16 வயது வாலிபர், அந்த இளம் வயதில், தெற்கு ராஜ்யமாகிய யூதாவின் அரசனாக முடிசூட்டப்பட்டார். அவர் 50-க்கும் அதிகமான வருடங்கள் அரசாண்டார். அதாவது, அவரது ஆட்சிகாலம் பொ.ச.மு. 829 முதல் 778 வரை நீடித்தது. சிறு வயதிலிருந்தே உசியா, ‘கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார்.’ அப்படிச்செய்ய அவருக்கு எது உதவியது? ‘தெய்வ பயத்தை அவருக்குப் போதித்துவந்த சக்கரியாசின் [சகரியாவின்] வாழ்நாள் முழுவதும் ஓசியாஸ் [உசியா] கடவுளைத் தேடி வந்தார். அவர் ஆண்டவரைத் தேடின காலமெல்லாம், அவர் எல்லாக் காரியங்களிலும் அவருக்கு வெற்றி அளித்தார்’ என்று சரித்திரப்பூர்வ பதிவு உசியாவைப்பற்றி சொல்கிறது.—2 நாளாகமம் 26:1, 4, 5; கத்தோலிக்க பைபிள்.
ராஜாவின் ஆலோசகரான சகரியாவைப்பற்றி பைபிளிலுள்ள இந்தப் பதிவைத் தவிர வேறு எந்தத் தகவலும் நமக்குத் தெரியாது. இருந்தாலும், இளம் ராஜாவான உசியா சரியானதைச் செய்வதற்கு, ‘தெய்வ பயத்தை போதித்துவந்த சகரியா’ பெரும் உதவியாக இருந்தார். “அவர் வேதவசனங்களில் நல்ல புலமை பெற்றவராகவும், அவற்றைக் குறித்து ஆழமான அறிவும் அனுபவமும் உடையவராகவும், தன் அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தவராகவும்” இருந்திருக்க வேண்டும் என்று த எக்ஸ்போஸிட்டர்ஸ் பைபிள் சகரியாவைப்பற்றி குறிப்பிடுகிறது. “அவர் தீர்க்கதரிசனங்களை நன்கு அறிந்திருந்தார். அதோடு . . . புத்திசாலியாகவும் தேவ பக்தியுள்ளவராகவும் நேர்மையானவராகவும் இருந்தார்; அதுமட்டுமல்ல, உசியாமீது அவர் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது” என்று ஒரு பைபிள் அறிஞர் சகரியாவைப்பற்றி விவரித்தார்.
உசியா, கடவுளுக்கு உண்மையாக இருந்ததால் அவருக்குப் பல ஆசீர்வாதங்கள் பிறந்தன. ‘தேவன் அவருக்குத் துணைநின்றதால் . . . அவர் மிகவும் பெலங்கொண்டார்.’ ‘சகரியாவின் வாழ்நாட்களிலே’ உசியா, கடவுளுக்குப் பயந்து நடந்ததாலேயே வாழ்க்கையில் மற்ற விஷயங்களிலும் அவருக்கு வெற்றி மேல் வெற்றி குவிந்தது. (2 நாளாகமம் 26:6-8) உசியா, செழித்தோங்கியதும் தன் ஆலோசகரான சகரியாவின் போதனைகளை அசட்டை செய்தார். ‘தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவருடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக’ நடந்தார். கடவுளுக்கு எதிராக, துணிச்சலான ஒரு செயலைச் செய்ததால் அருவருப்பான ஒரு தோல் வியாதியால் அவர் பாதிக்கப்பட்டார். எனவே, அவரால் தொடர்ந்து ராஜாவாக அனைத்து வேலைகளையும் செய்ய இயலாமற்போனது.—2 நாளாகமம் 26:16-21.
‘தேவனைத் தேடும்படி’ உந்துவிக்கும் ஓர் ஆன்மீக ஆலோசகரோ போதகரோ உங்களுக்கு இருக்கிறாரா? நீங்கள் இளைஞராக இருந்தாலும் சரி இளம் வயதைக் கடந்தவராக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அப்படிப்பட்ட ஒரு நபர் உங்களுக்கு இருக்கலாம். இந்த ஆன்மீக ஆலோசகரை உங்களுக்குக் கிடைத்த பரிசாகக் கருதுங்கள். ஏனெனில், நீங்கள் தொடர்ந்து யெகோவாவுக்குப் பிரியமாக நடக்க அவருடைய ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். அனுபவமுள்ள அந்தக் கிறிஸ்தவர் சொல்வதைக் கேட்டு அவர் தரும் ஆலோசனைகளைக் கவனமாக சீர்தூக்கி பாருங்கள். ‘தெய்வ பயத்தை போதிக்கும்’ அப்படிப்பட்ட ஒருவரின் ஞானமான ஆலோசனைகளை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளாதீர்கள்.—நீதிமொழிகள் 1:5; 12:15; 19:20.