ஆதாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டதன் அர்த்தம் என்ன?
“நமது சாயலாக . . . மனுஷனை உண்டாக்குவோமாக” என்று கடவுள் சொன்னார். (ஆதி. 1:26) இவை, மனித வரலாற்றில் இடம்பிடித்த முக்கிய வார்த்தைகள், அல்லவா? ‘கடவுளுடைய மகனான’ ஆதாம், முதன்முதலில் படைக்கப்பட்ட மனிதனாகும் அரிய வாய்ப்பைப் பெற்று சரித்திரத்தில் இடம் பிடித்தான்! (லூக். 3:38) அவன் யெகோவாவின் பூமிக்குரிய படைப்புகளில் மணி மகுடமாகத் திகழ்ந்ததற்குக் காரணம், ஆறு படைப்பு காலங்களின் முடிவில் உண்டாக்கப்பட்டதால் மட்டுமே அல்ல, மிக முக்கியமாக, ‘அவன் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்டதால்தான்.’ (ஆதி. 1:27) ஆதாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டான் என்பதன் அர்த்தம் என்ன?
பரிபூரண மனிதனான ஆதாமும், அபூரணரும் சீரழிந்தவர்களுமான அவனுடைய சந்ததியாரும் யோசிக்கும் திறனிலும் பிற திறமைகளிலும் பூமியிலுள்ள மற்ற எல்லா படைப்புகளையும்விட மேம்பட்டு விளங்கினார்கள். தனது மகத்தான படைப்பாளரின் சாயலில் ஆதாம் படைக்கப்பட்டது, அவனுக்கு அன்பு, ஞானம், நீதி, வல்லமை ஆகிய தெய்வீக குணங்கள் இருந்ததை அர்த்தப்படுத்தியது. ஆகவே, பூமியிலுள்ள அத்தனை ஜீவராசிகளும் பெற்றிராத ஒன்றை, அதாவது மனசாட்சியை உள்ளடக்கிய ஒழுக்க உணர்வை அவன் பெற்றிருந்தான். கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்ட ஆதாம், முழு பூமியையும் கண்காணிப்பவனாக ஆகவிருந்தான். அதன் மூலம், கடலில் நீந்துகிற, நிலத்தில் வாழ்கிற, வானில் பறக்கிற அனைத்து உயிரினங்களும் அவனுடைய முழு கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்.
கடவுளுடைய குணங்களைப் பெற்றிருப்பதற்கு, ஆதாம் முற்றிலும் ஒரு ஆவி சிருஷ்டியாக அல்லது பாதி மனிதனும் பாதி ஆவி சிருஷ்டியுமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யெகோவா மனிதனைப் பூமியின் மண்ணினால் உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவனுக்குள் செலுத்தியபோது அவன் உயிருள்ளவன் ஆனான்; அதோடு, தம்முடைய சாயலைப் பிரதிபலிக்கும் திறனையும் அவனுக்குக் கொடுத்தார். “முதல் மனிதன் பூமியிலிருந்து தோன்றியவன், மண்ணினால் உண்டானவன்” என்றும் “முதல் ஆதாம் உயிருள்ளவன் ஆனான்” என்றும் பைபிள் குறிப்பிடுகிறது. (ஆதி. 2:7; 1 கொ. 15:45, 47) மனிதன், மண்ணினால் உருவாக்கப்பட்டு முற்றிலும் மாம்ச உடலில் இருந்தாலும், அவன் கடவுளுடைய அருமையான குணங்களையும் சுபாவத்தையும் பிரதிபலிக்க வேண்டுமென்பது யெகோவாவின் சித்தமாக இருந்தது; அந்த மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி தன் படைப்பாளருக்கு மகிமை சேர்க்க வேண்டியிருந்தது.