பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
சின்ன வயதிலிருந்தே நிறைய கொடுமைகளை அனுபவித்த ஒரு பெண், தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்று நினைத்தார். அவர் எப்படித் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு கடவுளிடம் நெருக்கமானார்? அவரே சொல்கிறார்:
“இப்போது எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன்.”—விக்டோரியா டாங்
பிறந்த வருஷம்: 1957
பிறந்த நாடு: ஆஸ்திரேலியா
என்னைப் பற்றி: சிறுவயதில் கொடுமைகளை அனுபவித்தேன்
என் கடந்தகால வாழ்க்கை:
நியூ சௌத் வேல்ஸில் இருக்கும் நியூகேஸ்டல் என்ற இடத்தில்தான் நான் வளர்ந்தேன். எங்கள் வீட்டில் ஏழு பிள்ளைகள். நான்தான் மூத்தவள். என் அப்பா ஒரு குடிகாரர், எதற்கெடுத்தாலும் அடி உதை என்றுதான் இருப்பார். என் அம்மாவும் என்னைப் பயங்கரமாக அடிப்பார், எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். நான் ரொம்ப கெட்டவள் என்றும், நரகத்தில் சித்திரவதை அனுபவிப்பேன் என்றும் அடிக்கடி சொன்னார். இதையெல்லாம் கேட்டு நான் மிரண்டுபோயிருந்தேன்.
என் அம்மா என்னை அடித்து அடித்துக் காயப்படுத்தியதால் என்னால் ஸ்கூலுக்குக்கூடப் போக முடியவில்லை. எனக்கு 11 வயதானபோது, அரசாங்க அதிகாரிகள் என்னை வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு போய்க் கவனித்துக்கொண்டார்கள். அதன் பிறகு என்னை ஒரு கான்வென்ட்டில் சேர்த்தார்கள். எனக்கு 14 வயதானபோது நான் அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். திரும்பவும் வீட்டுக்குப் போக எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், சிட்னியில் இருந்த வீதிகளில்தான் என் வாழ்க்கையை ஓட்டினேன்.
அப்போதுதான் போதைப்பொருள், குடி, ஆபாசம், விபச்சாரம் போன்ற எல்லா கெட்ட பழக்கமும் எனக்கு வந்தது. நான் ஒரு நைட் க்ளப் ஓனருடைய வீட்டில் தங்கியிருந்த சமயத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அது என்னை அப்படியே தூக்கிவாரிப்போட்டது. ஒருநாள் சாயங்காலம், இரண்டு ஆட்கள் அந்த ஓனரைப் பார்க்க வந்தார்கள். என்னை பெட்ரூமுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதை நான் ஒட்டு கேட்டுவிட்டேன். ஜப்பானில் ஒரு பாரில் என்னை வேலையில் சேர்ப்பதற்காக ஒரு சரக்கு கப்பலில் என்னைக் கடத்திக்கொண்டு போவதாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் நடுநடுங்கிவிட்டேன். உடனே பால்கனியிலிருந்து வெளியே குதித்து ஓடினேன். யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று நினைத்தேன்.
சிட்னியைச் சுற்றிப்பார்க்க வந்திருந்த ஒருவரை நான் பார்த்தேன். என்னுடைய கதையை அவரிடம் சொன்னேன். அவர் பணம் கொடுத்து உதவி செய்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர், ‘முதலில் குளித்துவிட்டு ஏதாவது சாப்பிடுங்கள்’ என்று சொல்லி, அவர் தங்கியிருந்த ஓட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போனார். நான் அவருடனேயே தங்கிவிட்டேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம்.
பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது:
யெகோவாவின் சாட்சிகளோடு நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். உண்மைகள் புரியப் புரிய, ஒருபக்கம் கோபமாகவும் இருந்தது, இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. உதாரணத்துக்கு, நம்முடைய எல்லா கஷ்டத்துக்கும் காரணம் சாத்தான்தான் என்று தெரிந்துகொண்டபோது கோபமாக இருந்தது. ஏனென்றால், கடவுள்தான் நமக்குக் கஷ்டம் தருகிறார் என்று எனக்குச் சொல்லித்தந்திருந்தார்கள். ஆனால், கடவுள் யாரையும் நரகத்தில் வாட்டி வதைக்க மாட்டார் என்று தெரிந்துகொண்டபோது எனக்கு ரொம்ப நிம்மதியாக இருந்தது. ஏனென்றால், நினைவு தெரிந்த நாளிலிருந்தே நரகம் என்றால் எனக்கு ரொம்ப பயம்.
யெகோவாவின் சாட்சிகளிடம் எனக்கு நிறைய விஷயம் பிடித்திருந்தது. அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும் பைபிளின் அடிப்படையில்தான் எடுக்கிறார்கள். பைபிள் சொல்கிறபடிதான் வாழ்கிறார்கள். பொதுவாக, நான் மற்றவர்களோடு ஒத்துப்போக மாட்டேன். ஆனாலும், யெகோவாவின் சாட்சிகள் நான் சொன்னதையும் செய்ததையும் பெரிதுபடுத்தாமல் என்னை அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தினார்கள்!
நான் எதற்குமே லாயக்கில்லாதவள் என்று நினைத்து, என்னை நானே வெறுத்தேன். எனக்கு இதுதான் எல்லாவற்றையும்விடப் பெரிய போராட்டமாக இருந்தது. ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சியாக ஆன பிறகும்கூட ரொம்ப வருஷத்துக்கு இந்த உணர்ச்சிகளோடு போராடினேன். எனக்கு யெகோவாமேல் அன்பு இருந்ததில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால், என்னை மாதிரி ஒருத்தியை அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது என்று நினைத்தேன்.
நான் ஞானஸ்நானம் எடுத்து கிட்டத்தட்ட 15 வருஷங்களுக்குப் பிறகு என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ராஜ்ய மன்றத்தில் பேச்சு கொடுத்த ஒரு சகோதரர், யாக்கோபு 1:23, 24-ஐப் பற்றிச் சொன்னார். அந்த வசனம் கடவுளுடைய வார்த்தையை ஒரு கண்ணாடிக்கு ஒப்பிடுகிறது. யெகோவா நம்மைப் பார்ப்பதுபோல் நாம் நம்மைப் பார்ப்பதற்கு அது உதவி செய்கிறது. நான் என்னைப் பற்றி நினைப்பதற்கும், யெகோவா என்னைப் பற்றி நினைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று யோசிக்க ஆரம்பித்தேன். வித்தியாசம் இருக்கிறது என்பதை முதலில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யெகோவா என்மேல் அன்பு காட்ட வேண்டுமென்று நானெல்லாம் எதிர்பார்க்கவே கூடாது என்றுதான் அப்போதும் எனக்குத் தோன்றியது.
கொஞ்ச நாளுக்குப் பிறகு, நான் படித்த ஒரு வசனம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஏசாயா 1:18-தான் அந்த வசனம். அதில், “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம். உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும். செக்கச்செவேல் என்று இருந்தாலும், வெள்ளைவெளேர் என்று ஆகும்” என்று யெகோவா சொல்கிறார். அதைப் படித்தபோது, யெகோவாவே என்னிடம், ‘வா விக்கி, நம்ம பிரச்சினைய சரிசெய்யலாம். உன்ன பத்தியும், நீ செஞ்ச பாவங்கள பத்தியும் எனக்கு தெரியும். உன் மனசுல என்ன இருக்குன்னும் தெரியும். உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று சொன்னதுபோல் இருந்தது.
அன்று ராத்திரி என்னால் தூங்கவே முடியவில்லை. யெகோவாவுக்கு என்னைப் பிடிக்குமா என்று அப்போதும் சந்தேகமாக இருந்தது. இயேசுவின் மீட்புப் பலியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த பிறகுதான் ஒரு விஷயம் புரிந்தது. யெகோவா ரொம்ப காலமாக என்னிடம் பொறுமையாக இருந்திருக்கிறார். என்மேல் அன்பு வைத்திருப்பதை நிறைய விதங்களில் காட்டியிருக்கிறார். நான்தான் அவரிடம், ‘என் மனச தொடற அளவுக்கு உங்க அன்பு அப்படி ஒண்ணும் பெரிசு இல்ல, என்ன மீட்கறதுக்கு உங்க மகனோட பலி பத்தாது’ என்று சொன்னதுபோல் இருந்தது. மீட்புவிலையை ஏற்றுக்கொள்ளாமல் அதை யெகோவாவிடமே தூக்கி எறிந்ததுபோல் இருந்தது. ஆனால், மீட்புவிலை என்ற பரிசைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்த்த பிறகுதான், யெகோவாவுக்கு உண்மையிலேயே என்மேல் அன்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடிந்தது.
எனக்குக் கிடைத்த நன்மைகள்:
இப்போது எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். என் கல்யாண வாழ்க்கை முன்னேறியிருக்கிறது. வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து மற்றவர்களுக்கு உதவி செய்ய முடிகிறது. அதுமட்டுமல்ல, யெகோவாவோடு எனக்கு இருக்கிற நெருக்கமும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.