உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்
எப்போதும் துண்டுப்பிரதிகளுடன். 12 வயதான நேதன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறான். அவன் தன் ஸ்கூல் பையில் துண்டுப்பிரதிகளை எப்போதும் எடுத்துச் செல்கிறான்; நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்கூல் பிள்ளைகளுக்குச் சாட்சி கொடுக்கிறான். ஒரு நாள், ஸ்கூல் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு வயதான பெண்மணி தன் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்தான். அந்தப் பெண்மணி இவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார், இவனும் பதிலுக்குப் புன்முறுவல் செய்துவிட்டுத் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுத்தான். மூன்று வருடங்களுக்கு முன் தன் கணவர் இறந்துவிட்டதாக அந்தப் பெண்மணி சொன்னார். உடனே நேதன் தன் பையிலிருந்து, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? என்ற துண்டுப்பிரதியை எடுத்து நீட்டினான். வரப்போகிற பூஞ்சோலை பூமியில் அவருடைய கணவர் மீண்டும் உயிரோடு வருவார் என்று அவன் சொன்னதும் அந்தப் பெண்மணியின் கண்கள் குளமாயின. “ஆனால், துன்பத்துக்கெல்லாம் எப்போதுதான் முடிவு வரும்?” என்று கேட்டார். உடனே அவன், துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! என்ற துண்டுப்பிரதியை எடுத்துக் கொடுத்தான். வேறென்ன துண்டுப்பிரதிகள் வைத்திருக்கிறான் என அந்தப் பெண்மணி கேட்டார். அப்போது நேதன், யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்தான். அதன்பின், வீடு திரும்பினான். சில வாரங்களுக்குப் பிறகு மறுபடியும் அந்தப் பெண்மணி தன் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்தான். அவர் நேதனை அழைத்துக் கட்டியணைத்தார். “ஒன்று தெரியுமா, நேதன்? நீ அந்தத் துண்டுப்பிரதிகளைக் கொடுத்த பிறகு இரண்டு சாட்சிகள் என் வீட்டிற்கு வந்தார்கள்; இப்போது நான் அவர்களோடு பைபிளைப் படித்து வருகிறேன்!” என்றார்.