வரலாற்றுச் சுவடுகள்
“போகப் போக கால்பார்ட்டர் வேலை ரொம்பப் பிடித்துப்போனது”
வருடம் 1886. அமெரிக்காவில் (பென்ஸில்வேனியாவின்) அலிகென்னி நகரத்திலிருந்த பைபிள் ஹௌஸிலிருந்து ஆயிரமாண்டு உதயம், தொகுதி 1 என்ற ஆங்கில புத்தகத்தின் நூறு பிரதிகள் (இல்லினாய்ஸின்) சிகாகோ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் புதிய புத்தகத்தைப் புத்தகக் கடைகளில் விநியோகிப்பதற்கு சார்ல்ஸ் டேஸ் ரஸல் தீர்மானித்தார். அமெரிக்காவில் மதப் புத்தகங்களை விநியோகிக்கும் பெரிய நிறுவனம் ஒன்று ஆயிரமாண்டு உதயம் புத்தகங்களை விற்பதற்கு ஒப்புக்கொண்டது. எனவே, புத்தகங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், இரண்டு வாரங்களுக்குப் பிறகு மொத்த புத்தகங்களும் பைபிள் ஹௌஸுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.
பின்னர்தான் என்ன காரணமென்று தெரியவந்தது. பிரபல பிரசங்கியார் ஒருவர் தனது புத்தகங்களுடன் ஆயிரமாண்டு உதயம் புத்தகமும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொதித்தெழுந்திருக்கிறார். அந்தப் புத்தகம் தொடர்ந்து அங்கிருந்தால் அவரும் அவரது பிரபல நண்பர்களும் அவர்களது புத்தகங்களை வேறு கடைகளில் விற்பனைக்கு வைத்துவிடுவார்கள் என்றும் அதனால் அந்தக் கடைக்காரருடைய வியாபாரம் நொடிந்துபோகும் என்றும் கத்தி கூச்சல்போட்டிருக்கிறார். அவரும் வேறு வழியில்லாமல் உதயம் புத்தகங்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். அடுத்ததாக, உதயம் புத்தகத்தைப் பற்றிச் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. அதைப் பார்த்த எதிரிகள் அந்த விளம்பர ஒப்பந்தங்கள் ரத்தாகும்படி செய்துவிட்டார்கள். அப்படியென்றால், இந்தப் புதிய புத்தகம் சத்தியத்தை நேசிப்பவர்களின் கைகளில் எப்படிக் கிடைக்கும்?
கால்பார்ட்டர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் முக்கியப் பங்கு வகித்தார்கள்.a 1881-ல், பைபிள் பிரசுரங்களை முழுநேரமாக விநியோகிக்க 1,000 பிரசங்கிப்பாளர்கள் தேவை என்று சீயோனின் காவற்கோபுர (ஆங்கிலம்) பத்திரிகையில் அழைப்பு விடுக்கப்பட்டது. கால்பார்ட்டர்கள் சில நூறு பேரே இருந்தபோதிலும் எட்டுத் திக்கும் சத்திய விதைகளை அள்ளித் தூவினார்கள். 1897-ல் சுமார் பத்து லட்சம் உதயம் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெருமளவை கால்பார்ட்டர்களே விநியோகித்திருந்தார்கள். ஒவ்வொரு முறையும் காவற்கோபுர பத்திரிகைக்குச் சந்தா எடுத்தபோது அல்லது புத்தகத்தை விநியோகித்தபோது சொற்ப தொகையே கிடைத்தது. அதை வைத்தே அவர்களில் பெரும்பாலோர் வாழ்க்கையை ஓட்டினார்கள்.
அஞ்சா நெஞ்சம் படைத்த இந்த கால்பார்ட்டர்கள் யார்? சிலர் இளம் வயதினர், சிலர் பெரியவர்கள். பெரும்பாலோர் மணமாகாதவர்கள் அல்லது மணமாகியும் பிள்ளைகள் இல்லாதவர்கள். குடும்பஸ்தர்கள் பலரும் இந்த ஊழியத்தில் கலந்துகொண்டார்கள். ஒழுங்கான கால்பார்ட்டர்கள் நாள் முழுவதும் ஊழியத்தில் ஈடுபட்டார்கள், துணை கால்பார்ட்டர்கள் தினமும் ஓரிரு மணிநேரம் ஈடுபட்டார்கள். சூழ்நிலை... சுகவீனம்... காரணமாக எல்லாராலும் இந்த ஊழியத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் 1906-ல் நடைபெற்ற ஒரு மாநாட்டில்... இந்த ஊழியத்தில் ஈடுபடுபவர்கள் “அதிகம் படித்தவர்களாக, திறமை வாய்ந்தவர்களாக, தேவதூதரின் மொழி தெரிந்தவர்களாக” இருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லப்பட்டது.
கிட்டத்தட்ட எல்லாக் கண்டங்களிலும் இந்தச் சாமானியர்கள் சாதனை படைத்தார்கள். ஏழு வருடங்களில் 15,000 புத்தகங்களை விநியோகித்ததாக ஒரு சகோதரர் சொன்னார். “நான் கால்பார்ட்டர் ஆனது புத்தகங்களை விற்பதற்காக அல்ல, யெகோவாவுக்கும் அவரது சத்திய வசனத்திற்கும் ஒரு சாட்சியாக இருப்பதற்காகத்தான்” என்று அவர் சொன்னார். கால்பார்ட்டர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் சத்திய விதைகளை விதைத்தார்கள். அந்த விதைகள் வேரூன்றி, மரமாகி, கிளை பரப்பின; அதாவது, பைபிள் மாணாக்கர்களின் தொகுதிகள் பெருக ஆரம்பித்தன.
கால்பார்ட்டர்களைப் புத்தக வியாபாரிகள் என்றழைத்து மதகுருமார்கள் கேலிசெய்தார்கள். 1892-ல் வெளிவந்த ஆங்கில காவற்கோபுர பத்திரிகை இவ்வாறு சொன்னது: “நிறையப் பேர் [அவர்களை] கடவுளின் உண்மைப் பிரதிநிதிகளாகக் கருதவில்லை... அவர்களுடைய மனத்தாழ்மைக்காகவும் சுயதியாகத்துக்காகவும் கடவுள் அவர்களை உயர்வாய்க் கருதுவதைப் புரிந்துகொள்ளவுமில்லை.” கால்பார்ட்டர்களின் வாழ்க்கை “ரோஜா படுக்கையாக” இருக்கவில்லை என்று ஒரு சகோதரி சொன்னார். முரட்டு ஷூக்களும் சைக்கிள்களுமே அவர்கள் பயணத்திற்குத் துணைபுரிந்தன. வீட்டுக்காரர் கையில் காசு இல்லாத சமயங்களில் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொண்டார்கள். நாள் முழுவதும் ஊழியம் செய்து அலுத்துக் களைத்துபோனாலும் தாங்கள் தங்கியிருந்த கூடாரங்களுக்கு அல்லது வாடகை அறைகளுக்குச் சந்தோஷமாய்த் திரும்பினார்கள். பின்னர் கால்பார்ட்டர் வண்டி, அதாவது டிரெய்லர் வீடு, ஊழியத்தில் பயன்படுத்தப்பட்டது. இது நேரத்தையும் பணத்தையும் பெருமளவு மிச்சப்படுத்தியது.b
1893-ல் நடைபெற்ற சிகாகோ மாநாடு முதற்கொண்டு, மாநாடுகளில் கால்பார்ட்டர்களுக்கான விசேஷ நிகழ்ச்சிகள் இடம்பெற ஆரம்பித்தன. ஊழியத்தில் அவர்கள் பெற்ற சுவாரசியமான அனுபவங்கள்... கையாண்ட முறைகள்... உதவியாயிருந்த அறிவுரைகள்... ஆகியவை அந்த நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. ஊழியத்தில் கடினமாய்ப் பாடுபடும் பிரசங்கிப்பாளர்கள் காலையில் வயிறார சாப்பிட வேண்டும்... 10, 11 மணிவாக்கில் ஒரு கிளாஸ் பால் குடிக்க வேண்டும், வெயில் கொளுத்தும் நாட்களில் ஐஸ்கிரீம் சோடா குடிக்க வேண்டும்... என்று ஒருமுறை சகோதரர் ரஸல் உற்சாகப்படுத்தினார்.
தங்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய இன்னொரு கால்பார்ட்டரைத் தேடியவர்கள் மஞ்சள் நாடாவை அணிந்திருந்தார்கள். கால்பார்ட்டர் அணியில் புதிதாகக் காலடியெடுத்து வைத்தவர்கள் அனுபவசாலிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்தார்கள். இப்படிப்பட்ட பயிற்சி அவர்களுக்கு உண்மையிலேயே தேவைப்பட்டது. ஏனென்றால், ஒருசமயம் ஒரு புதிய கால்பார்ட்டர் ஊழியத்தில் புத்தகங்களைக் கொடுத்தபோது பயத்தில், “உங்களுக்கு இந்தப் புத்தகம் வேண்டாம்தானே?” என்று கேட்டுவிட்டார். இப்படிக் கேட்டும் அந்த வீட்டுக்காரர் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, பிறகு ஞானஸ்நானம் எடுத்ததுதான் ஆனந்த அதிர்ச்சி!
ஒரு சகோதரர்... ‘கைநிறைய சம்பளம் கிடைக்கும் என் வேலையைச் செய்துகொண்டு வருடத்திற்கு 1,000 டாலரை (ஐ.மா.) நன்கொடையாகக் கொடுப்பதா அல்லது என் வேலையை விட்டுவிட்டு கால்பார்ட்டர் ஆவதா?’ என்று யோசித்தார். அவர் என்ன முடிவெடுத்தாலும் கடவுளுக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கும்... ஆனால், தன் நேரம் முழுவதையும் கடவுளுக்காக அர்ப்பணிக்கும்போது அளவிலா ஆசீர்வாதம் கிடைக்கும்... என்ற பதிலைப் பெற்றார். “நிறையப் பேருக்கு உதவிசெய்ய மிகச் சிறந்த வழி” கால்பார்ட்டர் ஊழியம்தான் என்று மேரி ஹைன்ட்ஸ் சொன்னார். “போகப் போக கால்பார்ட்டர் வேலை ரொம்பப் பிடித்துப்போனது” என்றார் கூச்ச சுபாவம் உள்ள ஆல்பெர்டா கிராஸ்பி.
ஊழியத்தில் ஊக்கமாய் ஈடுபட்ட அந்த கால்பார்ட்டர்களின் சொந்த குடும்பத்தாரும் ஆன்மீகக் குடும்பத்தாரும் அவர்களுடைய காலடி தடத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள். அன்றுமுதல் இன்றுவரை உங்கள் குடும்பத்தில் கால்பார்ட்டராக/பயனியராக யாரும் சேவை செய்யவில்லை என்றால், அப்படியொரு பழக்கத்தை நீங்கள் ஏன் தொடங்கி வைக்கக்கூடாது? அப்படிச் செய்தால் போகப் போக முழுநேர ஊழியம் உங்களுக்கும் ரொம்பப் பிடித்துப்போகும்.
[அடிக்குறிப்புகள்]
a 1931-க்குப் பிறகு “கால்பார்ட்டர்கள்” “பயனியர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.
b டிரெய்லர் வீடு பற்றி... இனிவரும் இதழில்.
[பக்கம் 32-ன் சிறு குறிப்பு]
அவர்கள் “அதிகம் படித்தவர்களாக, திறமை வாய்ந்தவர்களாக, தேவதூதரின் மொழி தெரிந்தவர்களாக” இருக்க வேண்டிய அவசியமில்லை
[பக்கம் 31-ன் படம்]
சுமார் 1930-ல், கால்பார்ட்டர் ஏ. டபிள்யூ. ஆசே (கானா)
[பக்கம் 32-ன் படங்கள்]
மேலே (இங்கிலாந்தில்): சுமார் 1918-ல், கால்பார்ட்டர் சேவையில் ஈடத் கின் மற்றும் கெர்ட்ரூட் மாரிஸ்; கீழே (அமெரிக்காவில்): புத்தகங்களை விநியோகித்த பிறகு காலி அட்டைப் பெட்டிகளுடன் ஸ்டான்லி காஸாபூம் மற்றும் ஹென்றி நான்கீஸ்