வரலாற்றுச் சுவடுகள்
சரியான சமயத்தில் வந்த ‘மறக்க முடியாத’ டிராமா!
“மறக்கவே முடியாது!” “கிரியேஷன் டிராமா” பற்றி பலரும் இப்படித்தான் சொன்னார்கள். சரியான சமயத்தில் வந்த... பார்த்தவர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த... டிராமா அது. ஐரோப்பாவிலிருந்த யெகோவாவின் மக்கள் ஹிட்லரின் ஆட்சி காலத்தில் படுபயங்கரமான சித்திரவதையை அனுபவிப்பதற்குக் கொஞ்சக் காலம் முன்புதான் அது வெளிவந்தது; யெகோவாவுக்குப் பெரும் புகழைச் சேர்த்தது. ஆனால், “கிரியேஷன் டிராமா” என்பது என்ன?
ஷோப்ஃபுங் (கிரியேஷன்) புத்தகத் தலைப்பின் அடிப்படையில் புதிய டிராமாவுக்குப் பெயர் சூட்டப்பட்டது
அமெரிக்கா, நியு யார்க், புருக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமையகம் 1914-ல் “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற படக்காட்சியை வெளியிட்டது. ஒலியும் ஒளியும் கலந்த, வண்ண ஸ்லைடுகளையும் படக்காட்சிகளையும் உடைய எட்டு மணிநேர நிகழ்ச்சி அது. அந்தப் படக்காட்சியைக் கோடிக்கணக்கானோர் உலகெங்கும் கண்டுகளித்தார்கள். “யுரேகா டிராமா” என்ற தலைப்பில் அதன் சுருக்க வடிவமும் 1914-ல் வெளியிடப்பட்டது. ஆனால், 1920-க்குள்ளாக அதன் ஸ்லைடுகளும் படச்சுருள்களும் புரொஜக்டரும் பாழாய்ப்போயின. இருந்தாலும், அதற்கான மவுசு குறையவே இல்லை. உதாரணத்திற்கு, ஜெர்மனியிலிருந்த லூட்விக்ஸ்பர்க் வாசிகள், “‘ஃபோட்டோ டிராமாவை’ மறுபடியும் எப்போது போட்டுக் காட்டுவீர்கள்?” என்று கேட்டார்கள். சகோதரர்கள் அதற்காக என்ன செய்தார்கள்?
‘ஃபோட்டோ டிராமாவை’ மறுபடியும் போட்டுக் காட்டுவதற்காக, 1920-களில் ஜெர்மனியிலிருந்த மாக்டபர்க் பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த சில சகோதரர்கள் செயலில் இறங்கினார்கள். பிரான்சு நாட்டில், பாரிஸிலிருந்த ஒரு செய்தி நிறுவனத்திடமிருந்து படச்சுருள்களையும், லீப்ஜிக் மற்றும் ட்ரெஸ்டெனிலிருந்த கிராஃபிக்ஸ் கம்பெனிகளிடமிருந்து ஸ்லைடுகளையும் விலைக்கு வாங்கினார்கள். பழைய “ஃபோட்டோ டிராமா” ஸ்லைடுகளில் நல்ல நிலையிலிருந்த சிலவற்றை அவற்றுடன் இணைத்தார்கள்.
திறம்பட்ட இசைக் கலைஞரான எரிக் ஃப்ராஸ்டு என்ற சகோதரர், அந்தப் படக்காட்சிகளுக்கும் ஸ்லைடுகளுக்கும் ஏற்ப இசையமைத்துக் கொடுத்தார். அந்தப் படக்காட்சிகளுக்கான சில உரைகள் கிரியேஷன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டன. அதனால், மறுபதிப்பு செய்யப்பட்ட ‘ஃபோட்டோ டிராமாவுக்கு’ “கிரியேஷன் டிராமா” என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.
இந்தப் புதிய படக்காட்சி ஃபோட்டோ டிராமாவைப் போலவே எட்டு மணிநேர நிகழ்ச்சியாக இருந்ததால், மாலை வேளைகளில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது; பல முறை இவ்வாறு போட்டுக் காட்டப்பட்டது. படைப்பு நாட்களைப் பற்றிய வியக்க வைக்கும் விளக்கங்களை அது அளித்தது, பைபிள் சரித்திரத்தையும் உலகச் சரித்திரத்தையும் அலசி ஆராய்ந்தது, பொய் மதம் மனிதகுலத்தைத் தவறாக வழிநடத்தியிருந்ததைச் சுட்டிக்காட்டியது. இந்த “கிரியேஷன் டிராமா” ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, லக்ஸம்பர்க், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் ஜெர்மன் மொழி பேசப்பட்ட பிற இடங்களிலும் போட்டுக் காட்டப்பட்டது.
எரிக் ஃப்ராஸ்டு மற்றும் ‘கிரியேஷன் டிராமாவுக்கான’ அவரது இசைக் குறியீடுகள்
எரிக் ஃப்ராஸ்டு இவ்வாறு கூறினார்: “படக்காட்சியின் இடைவேளை சமயத்தில் ஒவ்வொரு வரிசைக்கும் சென்று பார்வையாளர்களுக்கு நம்முடைய அருமையான புத்தகங்களையும் சிறுபுத்தகங்களையும் விநியோகிக்கும்படி என் நண்பர்களிடம், முக்கியமாக என் சக இசைக் கலைஞர்களிடம், சொன்னேன். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கொடுக்க முடிந்ததைவிட அதிகமான பிரசுரங்களை அந்தச் சமயத்தில் எங்களால் கொடுக்க முடிந்தது.” பார்வையாளர்களில் அநேகர் தங்களை வந்து சந்திக்கும்படி விலாசங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றதாக போலந்திலும் இன்றைய செக் குடியரசிலும் அந்தப் படக்காட்சியைப் போட்டுக் காட்டிய யோஹான்ஸ் ரவ்டா என்ற சகோதரர் சொல்கிறார். அந்த விலாசங்களில் இருந்தவர்களைச் சகோதரர்கள் மறுபடியும் போய்ச் சந்தித்து, அவர்களிடம் பைபிள் விஷயங்களைச் சுவாரஸ்யமாகக் கலந்துரையாடினார்கள்.
1930-களில் “கிரியேஷன் டிராமா” போட்டுக் காட்டப்பட்டபோது அரங்கம் நிரம்பி வழிந்தது. ஊரெங்கும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியே பேச்சாக இருந்தது. 1933-க்குள், ஜெர்மனியிலிருந்த கிளை அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் படக்காட்சியைக் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் பார்த்திருந்தார்கள். “இந்த டிராமாவைப் பார்ப்பதற்காக, தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு 20 கிலோமீட்டர் (12 மைல்) போகவர நடந்தோம்; காட்டையும் மேட்டையும் குன்றையும் பள்ளத்தாக்கையும் கடந்து நடந்தே சென்றோம்” என்று சகோதரி கேத்தி கிராஸ் சொல்கிறார். “சத்தியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையை இந்த ‘கிரியேஷன் டிராமாதான்’ என் மனதில் விதைத்தது” என்று சகோதரி எல்ஸா பில்ஹார்ட்ஸ் சொல்கிறார்.
ஆல்ஃப்ரெட் ஆல்மென்ட்ங்கா என்ற சகோதரர் அந்தப் படக்காட்சியைப் பார்த்த தன் அம்மா என்ன செய்தாரெனச் சொல்கிறார்: “அவர் அந்தளவு பூரித்துப்போனதால், ஒரு பைபிளை வாங்கி ‘உத்தரிக்கும் ஸ்தலம்’ என்ற சொற்றொடர் அதில் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தார்.” பைபிளில் அது இல்லாததால் சர்ச்சுக்குப் போவதையே அவர் நிறுத்தினார், பின்பு ஞானஸ்நானம் பெற்றார். “‘கிரியேஷன் டிராமாவை’ பார்த்துவிட்டு எத்தனையோ பேர் சத்தியத்திற்கு வந்தார்கள்” என்று எரிக் ஃப்ராஸ்டு சொல்கிறார்.—3 யோ. 1-3.
ஒருபுறம், ‘கிரியேஷன் டிராமாவை’ பார்க்க வந்த ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்தது; மறுபுறம் ஐரோப்பா எங்கும் நாசி கட்சியின் ஆதாரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1933-ன் ஆரம்பம்முதல், ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதுமுதல் 1945-ல் இரண்டாம் உலகப் போர் முடியும்வரை ஐரோப்பா எங்குமிருந்த யெகோவாவின் சாட்சிகள் கடும் துன்புறுத்தலை எதிர்ப்பட்டார்கள். எரிக் ஃப்ராஸ்டு சுமார் எட்டு ஆண்டுகள் சிறை முகாமில் கழித்தார். விடுதலையான பின்னர் ஜெர்மனியிலிருந்த வீஸ்பாடன் கிளை அலுவலகத்தில் சேவை செய்தார். மறக்க முடியாத அந்த “கிரியேஷன் டிராமா” சரியான சமயத்தில், இரண்டாம் உலகப் போரின்போது கிறிஸ்தவர்கள் விசுவாசத்திற்கான சோதனைகளைச் சந்திக்கவிருந்த சமயத்தில், வந்ததால் அவற்றைத் தைரியமாக எதிர்கொள்ள அவர்களுக்குப் பெருமளவு ஊக்கத்தை அளித்தது.—ஜெர்மனியிலுள்ள வரலாற்றுச் சுவடுகளிலிருந்து.