ஞானமாய் முக்கியமான சாதனங்களைப் பயன்படுத்துவது
1 வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடும்போது, பைபிளையும் மற்ற முக்கியமான சாதனங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு வீட்டுக்காரரையும் ஒரு கட்டியெழுப்பக்கூடிய, வேதப்பூர்வமான சம்பாஷணையில் ஈடுபட வைப்பது உங்களுடைய இலக்காக இருக்கவேண்டும். (ஒத்துப்பாருங்கள்: 2 கொரிந்தியர் 6:1; 2 தீமோத்தேயு 2:15.) இந்நாட்களில் உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்கள் எதன்பேரில் அக்கறைக் கொண்டிருக்கிறார்கள்? பொருளாதார சூழ்நிலையைக் குறித்தும் குடும்ப வாழ்க்கையின் தரக்குறைவைக் குறித்தும் அவர்கள் கவலையுள்ளவர்களாயிருக்கிறார்களா? இந்தப் பொருட்களின்பேரில் ஒருசில அறிமுக குறிப்புகளைச் சொல்வது ஒரு நல்ல பைபிள் கலந்தாலோசிப்புக்கு வழிநடத்தும்.
2 நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “சவால்நிறைந்த இந்தக் காலங்களில், அநேகர் குறைந்த வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதைக் கடினமாக காண்கிறார்கள். வருவாய் சார்ந்த நம்முடைய பிரச்னைகளை, எல்லோருக்கும் நியாயமாக வருவாய் கிடைக்கச்செய்யும் விதத்தில் மனித அரசாங்கங்கள் தீர்வு காணும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [சொல்லும் பதிலைக் கவனித்துக் கேளுங்கள்.] இந்த ஆலோசனை எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது . . . ”
3 பின்னர் நீங்கள் சங்கீதம் 72:12-14 வாசித்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 154-5-ல் காணப்பட்டுள்ள மற்றொரு பகுதியைத் தெரிந்தெடுத்துப் பேசி உங்கள் உரையாடலை முடித்துக்கொள்ளலாம். அல்லது ஒரு வசனத்தை வாசித்தப் பிறகு, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியிலுள்ள பாராவில் சொல்லப்பட்டிருக்கும் காரியத்தைக் குறிப்பிடலாம். அந்தத் துண்டுப்பிரதியிலுள்ள ஒரு பாராவை வாசித்தப் பின்னர் வாசித்ததன்பேரில் வீட்டுக்காரருடைய கருத்தைக் கேட்பதன் மூலம் அநேகர்—இளைஞருங்கூட—வெற்றிகரமாக பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கின்றனர்.
4 சில சமுதாயங்களில் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்த நீங்கள் விரும்பலாம்:
◼ “சர்ச் அங்கத்தினர்களாக இருக்கும் அநேக மக்கள் பைபிளை எவ்வாறு கருதுவது என்பதில் நிச்சயமாயில்லை. பைபிள் கடவுளுடைய வார்த்தை என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அல்லது சிலர் எண்ணுகிறதுபோல அது வெறும் ஒரு நல்ல புத்தகம் என்று நீங்கள் கருதுகிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பைபிள் ஞானமான ஆலோசனைகளை ஏராளமாக கொண்டிருக்கிறது என்றும் அவற்றை எல்லோருமே பின்பற்றினால் இன்னும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நமக்கு உதவும் என்றும் அநேகர் ஒப்புக்கொள்கின்றனர்.”
5 இந்தத் தருணத்தில் 2 தீமோத்தேயு 3:16, 17-ல் அப்போஸ்தலனுடைய கூற்றை அறிமுகப்படுத்தி அதன்பேரில் நீங்கள் சம்பாஷிக்கலாம், அல்லது நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் என்ற துண்டுப்பிரதியிலுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி முதல் சந்திப்பிலேயே ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடத்த முயற்சி செய்யலாம்.
6 வீட்டுக்காரர் அக்கறை காண்பித்தால், உங்கள் மொழியில் இந்த மாதத்துக்குரிய அளிப்பை, சங்கத்தின் பழைய 192-பக்க புத்தகத்தின் மதிப்பை அவருக்கு எடுத்துக்காட்டுங்கள், அல்லது நம்முடைய பிரச்னைகள் புரோஷுரை அளிக்கிறீர்களென்றால், அதன் மதிப்பை எடுத்துக்காட்டுங்கள். அல்லது ஒரு துண்டுப்பிரதியிலோ, ஒரு பத்திரிகையிலோ, வேறொரு புரோஷுரிலோ உள்ள பொருத்தமான குறிப்பைப் பகிர்ந்துகொள்வது சரியாயிருக்கும் என்று நீங்கள் உணர்ந்தால் மற்ற முக்கியமான சாதனங்களை ஞானமாய் பயன்படுத்துங்கள்.
7 முதல் சந்திப்பிலேயே ஒரு படிப்பை உங்களால் தொடங்க முடிந்தால், பின்னர் வந்து தொடர்ந்து பேசுவதற்குத் திட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?” என்று சாதாரணமாக கேட்கப்படும் கேள்விக்குப் பதிலை திரும்பவரும்போது பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று வீட்டுக்காரரிடம் சொல்வதன் மூலம் அடுத்த முறை சந்திப்பதற்கு அடிக்கல்லை நீங்கள் நாட்டலாம். மறுசந்திப்பில் எப்படி அந்தப் பொருளின்பேரில் தொடரலாம் என்பதை கீழே இருக்கிற கட்டுரை சிந்திக்கும்.