காலம் இதுவே
1 அப்போஸ்தலன் பவுல் தன் இரண்டாவது கடிதத்தை கொரிந்தியர்களுக்கு எழுதியபோது, எருசலேமிலுள்ள தங்கள் உடன் விசுவாசிகளின் சார்பாக நல்ல துயர்த்தீர்ப்புப் பணி ஒன்றைச் செய்வதற்கு அவர்கள் உள்ளத்தில் உறுதிபூண்டிருந்ததை அவர்களுக்கு நினைவுபடுத்தினார். என்றபோதிலும், ஒரு வருடம் கடந்துவிட்டிருந்தது, ஆரம்பிக்கப்பட்ட வேலையை அவர்கள் இன்னும் முடிக்கவில்லை. ஆகவே அவர்களை இவ்வாறு உந்துவித்தார்: “தொடர்ந்து அதைச் செய்து முடியுங்கள்: அதை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்ததுபோல அத்திட்டத்தை முடிப்பதற்கு ஆவலுள்ளவர்களாய் இருங்கள்.”—2 கொ. 8:11, தி நியூ இங்லிஷ் பைபிள்.
2 ஏதோ ஒருசமயத்தில், நாமனைவருமே நமக்காக இலக்குகளை வைத்திருக்கிறோம். வெளி ஊழியத்தில் நம்முடைய பங்கை அதிகரிப்பதற்கு, நம்முடைய சகோதரர்களை நன்கு அறிந்துகொள்வதற்கு, ஒரு ஊழிய சிலாக்கியத்திற்காக தகுதிபெறுவதற்கு, அல்லது ஏதாவது பலவீனத்தை மேற்கொள்வதற்கு நாம் தீர்மானித்திருக்கலாம். நாம் நல்ல எண்ணங்களோடு ஆரம்பித்தபோதிலும், நம்முடைய இலக்கை சென்றெட்டுவதில் இறுதிவரை உழைத்திருக்காமல் இருக்கலாம். நாம் அதை உணருவதற்கு முன்பாக, நம்மிடம் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் வாரங்கள், மாதங்கள் அல்லது வருடங்கள்கூட கடந்துசென்றிருக்கலாம். நாம் ஆரம்பித்ததை ‘தொடர்ந்து செய்து முடிப்பதற்கான’ ஆலோசனையை நமக்கு நாம் பொருத்திப் பிரயோகிக்கவேண்டிய அவசியம் இருக்கக்கூடுமா?
3 நம்முடைய இலக்குகளை முயன்றடைதல்: தனிப்பட்ட தீர்மானம் செய்வது சுலபம்தான், ஆனால் அதை நிறைவேற்றுவது ரொம்ப கஷ்டம். காலந்தள்ளிப்போடுதல் எந்தவொரு முன்னேற்றத்தையும் தடைசெய்யக்கூடும். நம்முடைய மனதில் உறுதிசெய்துகொண்டு, பின்பு நாம் காலந்தாழ்த்தாமல் இறுதிவரை அந்தக் காரியத்தில் தீர்மானமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். தனிப்பட்ட ஒழுங்கமைப்பு இன்றியமையாதது. அந்த வேலையை செய்துமுடிக்க தேவையான நேரத்தை ஒதுக்கிவைப்பதும் அந்தக் காரியத்திற்காக அந்த நேரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதும் முக்கியமாகும். ஒரு கெடு வைத்து, பின்பு அதை அடைவதை நிச்சயப்படுத்த சுயக்கட்டுப்பாட்டை பிரயோகிப்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கிறது.
4 நம்முடைய இலக்குகளைச் சென்றெட்டுவதற்கு நாம் கஷ்டத்தை எதிர்ப்படுகையில், ‘அதை நான் பிறகு செய்வேன்,’ என்று நியாயங்காட்டுவது சுலபம்தான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. நீதிமொழிகள் 27:1 சொல்கிறது: “நாளையத் தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.” எதிர்காலத்தைப் பற்றி அளவுமீறிய தன்னம்பிக்கையோடு இருப்பதற்கு எதிராக சீஷனாகிய யாக்கோபு எச்சரித்தார்; ஏனென்றால் “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. . . . ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.”—யாக். 4:13-17.
5 ஏராளமான இடையூறுகள், அதோடு ஒரு காரியத்தை செய்யும்படியான மற்றவர்களுடைய நச்சரிப்புகள் ஆகியவற்றால் நம்முடைய இலக்குகள் சுலபமாக மறைக்கப்பட்டுவிடலாம். அவற்றை மனதில் உயிர்ப்போடு வைத்துக்கொள்ள விழிப்புணர்வுள்ள முயற்சி தேவைப்படுகிறது. அந்தக் காரியத்தை நம்முடைய ஜெபங்களில் வைப்பது பயனுள்ளது. நெருங்கிய பழக்கமுள்ளவர்கள் நமக்கு அவற்றை ஞாபகப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் கேட்டுக்கொள்வது வித்தியாசத்தை உண்டுபண்ணலாம். நம்முடைய காலண்டரில் குறித்து வைத்துக்கொள்வது நம்முடைய முன்னேற்றத்தைச் சரிபார்த்துக்கொள்ள ஒரு நினைப்பூட்டுதலாகச் சேவிக்கும். ஒரு நபர் “தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே செய்”வதற்கு தன்னுடைய மனதில் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.—2 கொ. 9:7, NW.
6 நம்முடைய இலக்குகளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்த அக்டோபர் மாதம் ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது. வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் மறுசந்திப்புகளிலும் நாம் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! சந்தாக்களை அளித்துக்கொண்டிருப்போம். நாம் முயன்றடைவதற்கு நியாயமான இலக்குகள் சிலவற்றை வைக்கமுடியுமா? ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான சந்தாக்களை அளிக்க இலக்கு வைப்பதைப் பற்றியதென்ன? அல்லது நம்முடைய பத்திரிகை அளிப்புகளை அதிகரிக்க முயற்சிசெய்யும் இலக்கைப் பற்றியதென்ன? அதிகமான மறுசந்திப்புகள் செய்வதற்கும் ஒரு புதிய பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிப்பது அநேகருக்கு நியாயமான இலக்குகளாக இருக்கலாம்.
7 முக்கியமான காரியம் எதுவோ அதை தள்ளிப்போடுவது ஞானமான காரியமல்ல, ஏனென்றால் இந்த ‘உலகம் ஒழிந்துபோகிறது.’ (1 யோ. 2:17) யெகோவாவின் சேவையில் விசேஷித்த சிலாக்கியங்களும் ஆசீர்வாதங்களும் இப்பொழுது நமக்குக் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது நம்மைச் சார்ந்திருக்கிறது.