நெருங்கப் பின்பற்ற ஒரு முன்மாதிரியானவர்
1 சந்தேகமின்றி, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் இயேசு மிகப் பெரிய மனிதராக இருந்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு ஒரு பரிபூரண முன்மாதிரியை வைத்தார். நாம் அவருடைய பரிபூரண தராதரத்திற்குச் சமமாக முடியாதென்றாலும்கூட, ‘அவருடைய அடிச்சுவடுகளை நெருங்க பின்பற்றும்படி’ நாம் உந்துவிக்கப்படுகிறோம். (1 பே. 2:21, NW) சத்தியத்தை மற்றவர்களோடு வைராக்கியமாகப் பகிர்ந்துகொண்டு, முடிந்தவரை இயேசுவைப்போல இருக்க நாம் விரும்பவேண்டும்.
2 இயேசு, ஒரு பிரசங்கிப்பாளரைக் காட்டிலும் மேலானவராக இருந்தார்; அவர் மிகச் சிறந்த போதகராக இருந்தார். “அவர் போதிக்கும் முறையைக்குறித்து ஜனக்கூட்டத்தார் ஆச்சரியப்பட்டனர்.” (மத். 7:28, NW) அவர் ஏன் அவ்வளவு திறம்பட்டவராக இருந்தார்? நாம் அவருடைய “போதிக்கும் முறையைக்குறித்து” கூர்ந்து ஆராய்வோமாக.
3 நாம் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம்: இயேசு அவருடைய பிதாவினால் போதிக்கப்பட்டிருந்தார். (யோவா. 8:28) அவருடைய உள்ளெண்ணம், யெகோவாவைக் கனப்படுத்தி அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவதாக இருந்தது. (யோவா. 17:4, 26) நம்முடைய பிரசங்கிப்பிலும் போதிப்பிலும் நமக்குக் கவனத்தை ஈர்ப்பதல்ல, ஆனால் யெகோவாவைக் கனப்படுத்துவதும் நம் உள்ளெண்ணமாக இருக்கவேண்டும்.
4 இயேசு போதித்ததெல்லாம் கடவுளுடைய வார்த்தையில் ஆதாரங்கொண்டிருந்தது. ஏவப்பட்ட வேதவசனங்களில் எழுதப்பட்டிருந்ததை அவர் தொடர்ந்து மேற்கோளாக எடுத்துக்காட்டினார். (மத். 4:4, 7; 19:4, 5; 22:31) நமக்குச் செவிகொடுப்பவர்களை பைபிளுக்குக் கவனம் செலுத்தும்படி செய்ய நாம் விரும்ப வேண்டும்; இவ்விதமாக நாம் பிரசங்கிப்பதும் போதிப்பதும் மிக மேலான அதிகாரத்தின்மீது ஆதாரங்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் காணும்படி செய்கிறோம்.
5 இயேசு சுருக்கமான, நடைமுறையான, சிக்கலற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். உதாரணமாக, நாம் எவ்வாறு கடவுளுடைய மன்னிப்பைப் பெறமுடியும் என்பதை விளக்குகையில், நாம்தாமே பிறரை மன்னிக்கிறவர்களாய் இருக்கும்படி அவர் நம்மை உற்சாகப்படுத்தினார். (மத். 6:14, 15) இராஜ்ய செய்தியை நாம் எளிய, மிகவும் சாதாரண வார்த்தைகளில் விளக்க முயற்சிசெய்ய வேண்டும்.
6 இயேசு மற்றவர்களுடைய சிந்தனையைத் தூண்டுவிக்க உதாரணங்களையும் கேள்விகளையும் திறமையாக பயன்படுத்தினார். (மத். 13:34, 35; 22:20-22) சாதாரணமான அனுதின விஷயங்களைப் பற்றிய உதாரணங்கள் சிக்கலான பைபிள் கோட்பாடுகளை மக்கள் புரிந்துகொள்வதற்கு உதவக்கூடும். நமக்குச் செவிகொடுப்போர் தாங்கள் கேட்கிறவற்றைக் குறித்து சிந்திக்கும்படி ஊக்குவிக்கிற கேள்விகளை நாம் கேட்கவேண்டும். வழிநடத்தும் கேள்விகள், அவர்கள் சரியான முடிவுகளுக்கு வரும்படி உதவிசெய்யக்கூடும்.
7 அதிகமான தகவல்கள் கேட்டவர்களுக்கு கடினமான விஷயங்களை விளக்க இயேசு நேரமெடுத்துக் கொண்டார். அவருடைய சீஷர்கள் போன்ற உண்மையான அக்கறையுடையோர், இயேசு போதித்தவற்றின் கருத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. (மத். 13:36) உண்மை மனதுடன் கேள்விகள் கேட்கப்படுகையில் நாமும் அதேபோல உதவிசெய்பவர்களாய் இருக்கவேண்டும். நமக்கு பதில்கள் தெரியவில்லையென்றால், நாம் பேச்சுப் பொருளின்மீது ஆராய்ச்சிசெய்து, வேறொரு சமயத்தில் தகவலோடு செல்லலாம்.
8 இயேசு போதிப்பதற்கு கண்கூடான படிப்பினைகளைப் பயன்படுத்தினார். இதற்கு ஓர் உதாரணம், அவர்களுடைய எஜமானாக இருந்தபோதிலும்கூட, அவர் தம்முடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவினதாகும். (யோவா. 13:2-16) நாம் மனத்தாழ்மையான மனநிலையைக் காண்பிப்போமானால், போதிக்கப்படுகிறவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டு வருவதைப் பொருத்திப் பிரயோகிக்கும்படி தூண்டுவிக்கப்படுவார்கள்.
9 இயேசு மக்களுடைய இருதயத்திற்கும் நீதிக்கான அவர்களுடைய அன்பிற்கும் கவர்ச்சியூட்டினார். நாமும்கூட இருதயத்தைச் சென்றெட்ட விரும்புகிறோம். மேலான ஒருவரை வணங்குவதற்கும் மற்றவர்களுடன் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்வதற்குமான அனைத்து மனிதகுலத்தின் இயல்பான ஆசையைக் கவர்ந்திழுக்க நாம் முயற்சிசெய்கிறோம்.
10 டிசம்பர் மாதத்தின்போது, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தை அளிப்பதன்மூலம் இயேசுவைப் பற்றி நாம் கற்றிருக்கிற காரியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இயேசு போதித்ததை நாம் விளக்குகையில், அவருடைய போதிக்கும் பண்புகளை நாம் பின்பற்றுவது உண்மை மனமுள்ளவர்கள் செவிகொடுத்துக் கேட்பதற்குத் தூண்டுவிப்பதாக.—மத். 10:40.