நம் செய்திக்கு செவிகொடுப்போர் யார்?
1 மனித சரித்திரத்திலேயே முன்னொருபோதும் இராத அளவில், ஏகப்பட்ட தகவல்கள் மக்களிடம் மலைபோல் வந்துகுவிகின்றன; அவற்றில் பெரும்பாலானவை அற்பமானவையாயும் தவறாக வழிநடத்துபவையாயும் இருக்கின்றன. அதன் விளைவாக, தங்களுடைய சிந்தை ஆட்கொள்ளப்படுவதாக அநேகர் உணருகின்றனர்; இதனால் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்திக்கு அவர்களை செவிகொடுக்கும்படி செய்வது நமக்கு ஒரு சவாலாக ஆகிறது. கடவுளுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பது அவர்களுக்கு என்ன நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.—லூக்கா 11:28.
2 உலகின் பல்வேறு பாகங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் அந்தச் செய்திக்கு செவிகொடுத்து நாம் நடத்தும் பைபிள் படிப்புகளை ஏற்றுக்கொள்கையில் நாம் களிகூருகிறோம். இருப்பினும், மற்ற பிராந்தியங்களில் பிரதிபலிப்பு அவ்வளவு அதிகமாக இல்லை. ஊழியத்தில் நாம் செய்யும் அநேக சந்திப்புகள் சாதகமான பலனில்லாமல் இருக்கின்றன, இதனால் நம்முடைய செய்திக்கு யார் செவிகொடுப்பார்கள் என நாம் யோசிக்கக்கூடும்.
3 ஊக்கமிழந்தவர்களாய் ஆவதற்கெதிராக நம்மை காத்துக்கொள்ள வேண்டும். பவுல் இவ்வாறு விளக்கினார்: “ ‘யெகோவாவுடைய நாமத்தில் கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’ இருந்தபோதிலும், அவரைக்குறித்து கேள்விப்படாதவர்கள் . . . எப்படி அவரைக் கூப்பிடுவார்கள்? யாரேனும் பிரசங்கிக்காமல் அவர்கள் எவ்வாறு கேள்விப்படுவார்கள்? ‘நற்காரியங்களைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்போருடைய பாதங்கள் எவ்வளவு அழகானவை!’ என்று எழுதியிருக்கிறதே.” (ரோ. 10:13-15, NW) நாம் ஊக்கமாய் ராஜ்ய விதைகளை விதைத்தால், நேர்மை இருதயமுள்ளோரில் அது வளரும்படி கடவுள் செய்வார்.—1 கொ. 3:6.
4 தவறாமல் மறுசந்திப்புகள் செய்வதே திறவுகோல்: நம்முடைய செய்திக்கு வெகுசிலரே செவிகொடுப்பதாக தோன்றுகிற பிராந்தியங்களில், நாம் பிரசுரங்களை அளித்தாலும்சரி அளிக்காவிட்டாலும்சரி, கொஞ்சம் அக்கறையை காட்டியிருந்தாலும்சரி அதை வளர்ப்பதிலேயே நம்முடைய கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். ஒன்றுமே சாதிக்கப்படபோவதில்லை என்று நாமே ஏன் உடனடியாக முடிவுகட்டணும்? நாம் விதை விதைக்கையில், எங்கே அது பலன்தரும் என்பது நமக்குத் தெரியாது. (பிர. 11:6) வேதவசனங்களிலிருந்து எதையாவது பகிர்ந்துகொள்வதற்கு நாம் ஆயத்தமாக செல்வோமாகில், சுருக்கமாக சொன்னாலும்கூட, அந்த நபரின் இருதயத்தைக் கவரமுடியும். நாம் ஒரு துண்டுப்பிரதியை விட்டுவரலாம் அல்லது தற்போதைய பத்திரிகைகளை அளிக்கலாம். இறுதியில், ஒரு பைபிள் படிப்பை நடத்திக் காண்பிக்கலாம். நம்முடைய முயற்சிகளை யெகோவா எவ்வளவாய் ஆசீர்வதிக்கிறார் என்பதைக் காணும்போது நமக்கு ஒருபுறம் மகிழ்ச்சியும் இன்னொரு புறம் ஆச்சரியமும் ஏற்படும்.—சங். 126:5, 6.
5 ஓரளவே அக்கறை காண்பித்த ஒரு பெண்ணிடம் துண்டுப்பிரதி ஒன்று விட்டுச்செல்லப்பட்டது. பிறகு இரண்டு மாதமாக அவள் வீட்டில் இல்லை, மீண்டும் அவளை சந்தித்தபோதோ பேச முடியாதளவுக்கு அதிக வேலையாக இருந்தாள். அதே துண்டுப்பிரதி மீண்டும் அவளிடம் விட்டுச்செல்லப்பட்டது. அவளை வீட்டில் சந்திப்பதற்கு பிரஸ்தாபி விடாப்பிடியாக முயற்சிகள் எடுத்தபோதிலும், அவளுடன் தொடர்புகொள்வதற்கு மற்றொரு மூன்று மாதங்கள் எடுத்தன, அப்போதும் அவள் வியாதியாக இருந்தாள். அந்தச் சகோதரி அடுத்த வாரத்தில் மீண்டும் அவளை சந்தித்தார், அந்தத் துண்டுப்பிரதியைப் பற்றி ஒரு சுருக்கமான சம்பாஷணை ஆரம்பமானது. அதற்கடுத்த வாரத்தில் அந்தச் சகோதரி மீண்டும் சென்றபோது, ராஜ்ய செய்தியில் அந்தப் பெண் இருதயப்பூர்வமான அக்கறை காண்பித்தாள். அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம் ஆவிக்குரிய தேவையைக் குறித்து அவள் உணர்வுள்ளவளாகும்படி செய்தது. ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, அதன் பிறகு ரொம்ப ஆர்வத்துடன் ஒவ்வொரு வாரமும் அவள் படித்தாள்.
6 நாம் வளர்ச்சியைக் காண விரும்புகிற எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், பூக்களாக இருந்தாலும்சரி, காய்களாக இருந்தாலும்சரி, அல்லது ராஜ்ய செய்தியில் காண்பிக்கப்படும் அக்கறையாக இருந்தாலும்சரி, பண்படுத்துதல் அவசியம். அதற்கு நேரம், பெருமுயற்சி, கவனித்துக்கொள்ளும் மனோபாவம், விட்டுவிடக்கூடாதென்ற உறுதியான தீர்மானம் ஆகியவை தேவைப்படுகின்றன. கடந்த வருடத்தில், ராஜ்ய விதையை தங்களுக்குள் வேரூன்ற அனுமதித்த மூன்று இலட்சத்திற்கும் மேலான மக்கள் முழுக்காட்டப்பட்டார்கள்! நாம் தொடர்ந்து பிரசங்கிப்போமானால், நம்முடைய செய்திக்கு செவிகொடுக்கும் அநேகரை நிச்சயமாகவே கண்டுபிடிப்போம்.—கலாத்தியர் 6:9-ஐ ஒப்பிடுக.