கூட்டங்களுக்கு தவறாமல் வருவதில்தான் எத்தனை இன்பம்!
1 கிழக்கு ஐரோப்பாவில், பெரும்பாலான நம் அருமை சகோதரர்கள் பொது இடங்களில் சபைகூடி வருவதற்கு பல பத்தாண்டுகளாக தடைவிதிக்கப்பட்டிருந்தனர். தடை விலக்கப்பட்டு, சுதந்திரமாக கூடிவர அனுமதிக்கப்பட்டபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை கற்பனை செய்து பாருங்கள்!
2 அத்தகைய ஒரு சபையைச் சந்திக்கச் சென்ற வட்டாரக் கண்காணி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “செவ்வாய் மாலை, விசிட் தொடங்கிய கொஞ்ச நேரத்தில், ரூம் ஹீட்டர் பழுதடைந்து விட்டது. வெளியே, உறைந்து போகுமளவுக்கு கடுங்குளிர் வீசிக்கொண்டிருந்தது, உள்ளேயோ சுமார் ஐந்து டிகிரி சென்டிகிரேட் வெப்பம்தான் இருந்தது. சகோதரர்கள் கோட்டுகள், மஃப்லர்கள், கையுறைகள், தொப்பிகள், பூட்ஸ்கள் ஆகியவற்றை அணிந்திருந்தனர். பைபிள் பக்கங்களை திருப்பக்கூட முடியாததால், யாராலும் வசனங்களை எடுத்துப் பார்க்க முடியவில்லை. மேடையில் கோட்டு சூட்டுடன் நின்றும்கூட குளிரில் விறைத்துப் போயிருந்தேன். நான் பேசியபோதெல்லாம் என் வாயிலிருந்து புகை புகையாய் வந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள் முணுமுணுக்காமல் அமைதியாக இருந்தது என் நெஞ்சைத் தொட்டது. சபை கூடிவருவதில்தான் எத்தனை இன்பமும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்று எல்லா சகோதரர்களும் சொன்னார்கள்!” இந்தச் சகோதரர்களால் கூட்டங்களுக்கு வராமலிருப்பதை நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை!
3 இப்படித்தான் நாமும் உணருகிறோமா? தடையில்லாமல் கூட்டங்களுக்கு வருவதற்கு நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பைக் குறித்து நாம் சந்தோஷப்படுகிறோமா? சூழ்நிலை சாதகமாக இருக்கையில் கூட்டங்களை ஏனோதானோவென்று கருதுகிறோமா? தவறாமல் கூட்டங்களுக்கு வருவது சவாலாக இருக்கலாம்; கூட்டங்களுக்கு போகாமல் இருப்பதற்கு பொருத்தமான காரணங்களும்கூட சிலசமயங்களில் இருக்கலாம். இருந்தாலும், நம் மத்தியில் உள்ளவர்கள், வயோதிபம், தீராத வியாதிகள், உடல் ஊனங்கள், ஓய்வொழிச்சல் இல்லாத வேலை, இன்னும் மற்ற பெரும் பொறுப்புகளின் மத்தியிலும்கூட கூட்டங்களுக்கு வருவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தவறாமல் வருகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். நாம் பின்பற்றத்தக்க என்னே சிறந்த முன்மாதிரி!—லூக்கா 2:37-ஐ ஒப்பிடுக.
4 சிறிய புத்தகப் படிப்பானாலும்சரி, பெரிய மாநாடுகளானாலும்சரி, எல்லா கிறிஸ்தவ கூட்டங்களிலும் பங்குகொள்வதன்மூலம், உண்மை வணக்கத்தை ஆதரிப்பதை நம்முடைய பழக்கமாக ஆக்கிக் கொள்வோம். இத்தகைய கூடிவருதலை நாம் ஏன் முக்கியமானதாக கருதவேண்டும்? ஒன்றுகூடி வரவேண்டுமென்பது ஒரு தெய்வீக கட்டளை. ஆனால் இன்னும் முக்கியமான காரணங்களும்கூட இருக்கின்றன. தெய்வீக போதனையின் நன்மைகளும் பரிசுத்த ஆவியின் உதவியும் நம் அனைவருக்கும் தேவை. இதை நாம் கூட்டங்களில்தான் பெற்றுக் கொள்கிறோம். (மத். 18:20) நம்முடைய சகோதரர்களோடு கூட்டுறவு கொள்ளும்போது கிடைக்கும் உற்சாக பரிமாற்றத்தால் நாம் கட்டியெழுப்பப்படுகிறோம்.—எபி. 10:24, 25.
5 மறுரூபக் காட்சியின்போது, “ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது” என்று பேதுரு சொன்னார். (லூக். 9:33) நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்கள் எல்லாவற்றைக் குறித்தும் நாமும் அவ்வாறே உணரவேண்டும். நிஜமாகவே, கூட்டங்களுக்கு தவறாமல் வருவதில்தான் எத்தனை இன்பம்!