கிழக்கு ஐரோப்பாவில் பெருகி வரும் உண்மை வணக்கத்தார்
1 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வைராக்கியம் மிக்க ராஜ்ய பிரசங்கிகளாய் திகழ்ந்தார்கள். சபைகள், ‘நாளுக்குநாள் பெருகியதை’ கண்ட அவர்களுக்கு சந்தோஷம் பொங்கியது. (அப். 16:5) ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் அவர்கள் சத்தியம் என்ற விதையை தைரியமாக விதைத்து, விசுவாசிகள் என்ற பயிரை அமோகமாக அறுவடை செய்தார்கள்.
2 இந்த முடிவு காலத்தில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் உண்மை வணக்கத்தார் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். 1990-ன் துவக்கத்தில் அரசாங்கத்தின் தடை உத்தரவுகள் நீக்கப்பட்ட நாடுகளில் இப்போது அசரவைக்கும் அளவுக்கு அதிகரிப்புகள். ரஷ்யா, உக்ரேன் நாடுகள் ஒவ்வொன்றிலும் 1,00,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் பிரசங்க ஊழியத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற அறிக்கையை 1999 இயர்புக் தருகிறது. 1991 முதல், முன்னாள் சோவியத் யூனியனின் 15 பிராந்தியங்களில் 2,20,000-க்கும் மேலானோர் தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் எடுத்துள்ளனர்! இப்படி ராக்கெட் வேகத்தில் அதிகரிப்பு நிகழ்ந்துள்ளதால், புதிய புதிய ராஜ்ய மன்றங்களும் அசெம்பிளி ஹால்களும் நிறைய கட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதோடு கிளை அலுவலகத்தையும் விரிவாக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
3 குறைந்த வருவாயும், பொருளாதார நெருக்கடியும் நிலவும் நாடுகளில் உடனடியாக ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுவதால், மார்ச் 1997 நம் ராஜ்ய ஊழியத்தின் ஐக்கிய மாகாணங்களின் பதிப்பில் அறிவித்தபடி, சங்கத்தின் ராஜ்ய மன்ற நிதியிலிருந்து ஒரு தொகையை எடுத்து, அங்குள்ள சபைகளுக்கு கடனாக தரப்படுகிறது. ஆகவே கிழக்கு ஐரோப்பாவில் 11 நாடுகளை மேற்பார்வையிடும் கிளை அலுவலகங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், 1996 மார்ச் முதல் 1998 அக்டோபர் வரை 359 ராஜ்ய மன்றங்கள் கட்டுவதற்கு கடன் தர சங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. நன்கொடையாக பெற்ற நிதி, புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டுவதற்கு கட்டடப் பொருட்களை வாங்கவும், ஏற்கெனவே இருக்கும் ராஜ்ய மன்றங்களை சபைகள் மாற்றியமைத்து கட்டிக்கொள்ளவும் பயன்படுகிறது. ஐக்கிய மாகாணங்களிலும், மற்ற நாடுகளிலும் நம் சகோதர சகோதரிகள் சங்கத்தின் ராஜ்ய மன்ற நிதிக்காக தரும் நன்கொடைகளிலிருந்து கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நம் சகோதர சகோதரிகள் எப்படி பயனடைந்தார்கள் என்பதை இங்கே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
4 1998-ல் பல்கேரியாவில் 12 சதவிகித அதிகரிப்பு இருந்தது. அங்கே அவ்வருடம் ஏப்ரலில் சகோதரர்கள் தங்களது முதல் ராஜ்ய மன்றத்தை பிரதிஷ்டை செய்து, பேரானந்தம் அடைந்தனர். க்ரோயேஷீயாவிலும் 4 சதவிகித அதிகரிப்பு இருந்தது. ராஜ்ய அதிகரிப்புக்காக, அங்குள்ள நம் சகோதரர்கள் இன்னும் நிறைய ராஜ்ய மன்றங்களை தற்போது கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஹங்கேரியில், கிட்டத்தட்ட 80 ராஜ்ய மன்றங்களை 144 சபைகள் உபயோகிக்கின்றன. அதாவது, அந்நாட்டில் உள்ள 235 சபைகளில், 61 சதவிகித சபைகளுக்கு சொந்த ராஜ்ய மன்றங்கள் உள்ளன. ராஜ்ய மன்ற கட்டுமான திட்டத்தின் கீழ் தற்போது இரண்டு ராஜ்ய மன்றங்கள் மாசிடோனியாவில் கட்டி முடிக்கப்பட்டன. இன்னும் பல மன்றங்களுக்கு கட்டடப் பணி நடைபெறுகிறது. 1999 கோடையில், தலைநகர் ஸ்கோப்ஜியில் ஒரே கட்டிடத்தில் இரண்டு ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இம்மன்றங்களை குறைந்தது ஆறு சபைகள் உபயோகிக்கும் அளவுக்கு விஸ்தாரமாக உள்ளது.
5 1998 ஊழிய ஆண்டில், ரஷ்யாவில், ஒவ்வொரு வாரமும் சராசரியாக 260 பேருக்கும் அதிகமானோர் முழுக்காட்டுதல் எடுத்தனர்! மற்ற நாடுகளில் உள்ளதை போலவே ரஷ்ய கிளை அலுவலகமும் தற்போது அதன் பரந்து விரிந்து கிடக்கும் பிராந்தியத்தில் 12 ரீஜனல் பில்டிங் கமிட்டிகளை அமைத்துள்ளது. இவை எதிர்கால ராஜ்ய மன்ற கட்டுமான திட்டங்களை கவனித்துக்கொள்ளும். அந்நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-ன் வடக்குப் பகுதியில், 1,600 பேர் அமரும் வசதியோடு முதல் மாநாட்டு மன்றத்தை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதில், 200 பேர் அமரும் வசதியோடு, ஐந்து ராஜ்ய மன்றங்களும் கட்டப்படும். உக்ரேனிலுள்ள நம் சகோதரர்கள், சத்தியத்தில் ஆர்வம் காட்டுவோரின் ஆவிக்குரிய தேவைகளை நிறைவுசெய்யும் வகையில், 84 ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 80 மன்றங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
6 கிழக்கு ஐரோப்பாவில் உண்மை வணக்கத்தார் அதிகரிப்பது நமக்கும் ஆனந்தம் தரவில்லையா? நாம் எங்கே இருந்தாலும்சரி, உண்மை வணக்கத்தார் பெருகுவதை பார்க்கும்போது, கடவுள் ஓரவஞ்சனை உள்ளவர் அல்ல, அவர் பொறுமையோடு இருப்பதால்தான், ‘திரள் கூட்டத்தார்’ இரட்சிப்பு அடைய வாய்ப்பு கிடைக்கிறது என்ற உண்மை விளங்குகிறது. (வெளி. 7:9; 2 பே. 3:9) நாம் தொலைதூர தேசங்களில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர்களது ஆவிக்குரிய வளர்ச்சிக்காக ஏதோ நம்மால் இயன்றதை நன்கொடையாக தரும் பாக்கியமே பாக்கியம்! நீதிமொழிகள் 28:27 (பொ.மொ.) இவ்வாறு உறுதியளிக்கிறது: “ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு ஏற்படாது.” இத்தகைய கட்டுமான பணிகளின் செலவுகளை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால், பொருட்செல்வங்கள் “சமநிலை” அடையும். அதோடு, கொடுப்பதால் வரும் மகிழ்ச்சியையும், உண்மை வணக்கத்தார் பெருகுவதை காணும் பேரானந்தத்தையும் எல்லாரும் அனுபவிக்கலாம்.—2 கொ. 8:14, 15; அப். 20:35.
[பக்கம் 3-ன் படம்]
ஸசேலே, ருமேனியா
[பக்கம் 3-ன் படம்]
மார்தூ, எஸ்டோனியா
[பக்கம் 3-ன் படம்]
ஸவ்னிக்கா, ஸ்லோவேனியா
[பக்கம் 3-ன் படம்]
டிஷ்ஷாவஸ்வரி, ஹங்கேரி
[பக்கம் 4-ன் படங்கள்]
ஜுர்மலா, லாட்வியா
[பக்கம் 4-ன் படங்கள்]
டௌராக், லிதுவேனியா
[பக்கம் 4, 5-ன் படம்]
டல்லின், எஸ்டோனியா
[பக்கம் 4, 5-ன் படம்]
ப்ரியேவீத்ஸா, ஸ்லோவாகியா
[பக்கம் 5-ன் படங்கள்]
மாதேஸால்கா, ஹங்கேரி
[பக்கம் 5-ன் படங்கள்]
பெல்கிரேட், யுகோஸ்லாவியா
[பக்கம் 6-ன் படங்கள்]
ரூமா, யுகோஸ்லாவியா
[பக்கம் 6-ன் படங்கள்]
வரானோஃப் நாட டோப்லூ, ஸ்லோவாகியா
[பக்கம் 6-ன் படங்கள்]
டோர்நாகால்ன்ஸ், லாட்வியா