நம்மை வேறுபடுத்திக் காட்டும் பிரசங்கம்
1 “மற்ற மதத்துக்கும் உங்க மதத்துக்கும் என்ன வித்தியாசம்?” என அநேகர் யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்கின்றனர். இந்த கேள்விக்கு நீங்கள் எப்படி பதில் அளிப்பீர்கள்? நம்முடைய பைபிள் நம்பிக்கைகளில் சிலவற்றை ஒருவேளை நீங்கள் எடுத்து விளக்கலாம். ஆனால், நீங்கள் செய்யும் ஊழியம் மற்ற மதங்களில் இருந்து உங்களை எந்தளவுக்கு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது என்பதை யோசித்திருக்கிறீர்களா?—மத். 24:14; 28:19, 20.
2 இன்று, வெகு சிலரே தங்களுடைய மத நம்பிக்கைகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டுமென நினைக்கின்றனர். ராயனுடைய [அரசாங்க] சட்டங்களுக்கு கீழ்ப்படிவது, ஒழுக்கநெறிகளோடு வாழ்வது, அல்லது மற்றவர்களுக்கு கருணை காட்டுவது போன்றவையே போதுமானது என அவர்கள் கருதலாம். எனினும், இரட்சிப்பைப் பெறுவதற்கு பைபிள் என்ன சொல்கிறது என்பதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறதென அவர்கள் எண்ணுவதில்லை. ஆனால், நம்மைப்பற்றி என்ன?
3 மற்ற மதங்களின் நடவடிக்கைகளில் இருந்து நம் வைராக்கியமான ஊழியம் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. பூர்வ கிறிஸ்தவர்களைப் போலவே, நவீன சாட்சிகள் பூமியின் கடைமுனை மட்டும் நற்செய்தியை நூறு வருடங்களுக்கும் மேலாக, மும்முரமாக பிரசங்கித்து வருகின்றனர். எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைய வாழ உதவ வேண்டுமென்பதே நோக்கம்.—1 தீ. 2:4; 2 பே. 3:9.
4 நற்பெயர் உடையவராய் இருக்கிறீர்களா? கடவுளுடைய வார்த்தையை பிரசங்கிப்பதில் வைராக்கியமுள்ளவர் என்று பெயர் எடுத்திருக்கிறீர்களா? (அப். 17:2, 3; 18:25) உங்களுடைய பிரசங்க வேலையால், உங்களுடைய மதத்திற்கும் அவர்களுடைய மதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உங்கள் அயலகத்தார் தெளிவாக காணமுடிகிறதா? மற்றவர்களோடு தன்னுடைய நம்பிக்கைகளை ஆர்வத்தோடு பகிர்ந்துகொள்ளும் ஒருவராக நீங்கள் அறியப்பட்டிருக்கிறீர்களா? ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ள அட்டவணை வைத்திருக்கிறீர்களா? நம் பெயர் மட்டுமே நம்மை வித்தியாசப்படுத்திக் காட்டுவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். நம் பெயர் எதை அடையாளப்படுத்துகிறதோ அதை செய்வதே, அதாவது யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுப்பதே நம்மை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும்.—ஏசா. 43:10.
5 கடவுள் மற்றும் அயலான்மீதுள்ள அன்பே நம்மை பிரசங்க வேலையில் ஈடுபட தூண்டுவிக்கிறது. (மத். 22:37-39) எனவேதான், இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களைப் போல், ராஜ்ய செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். செவி கொடுக்க விரும்பும் அனைவருக்கும் நற்செய்தியை வைராக்கியமாய் தொடர்ந்து பிரசங்கிப்போமாக. அப்படி செய்வதுதானே, நேர்மை இருதயமுள்ளோர், ‘தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை காண’ உதவும்.—மல். 3:18.