‘எல்லாவற்றையும் அன்போடு செய்யுங்கள்’
1 “உங்கள் அங்கத்தினர்கள் அருமையானவர்கள், கண்ணியமானவர்கள், மற்றவர்களை மதித்து நடப்பவர்கள்” என்று ஐக்கிய மாகாணங்களின் ஒரு நகரத்தில் நடைபெற்ற மாநாட்டைப் பற்றி அந்நகர கன்வென்ஷன் அண்ட் விசிட்டர்ஸ் பீரோ பாராட்டியது. பொது இடங்களில் நம்முடைய மெச்சத்தக்க நடத்தைக்காக கிடைக்கும் இப்படிப்பட்ட பாராட்டுதல்கள் நமக்கு அதிக சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தருகின்றன. இது நாம் அனைவரும் ‘எல்லாவற்றையும் அன்போடு செய்ய’ விரும்புவதை காட்டுகிறது. (1 கொ. 16:14) அதே சமயத்தில், நாம் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களும் உள்ளன; அவற்றை நாம் சரிசெய்யவில்லை என்றால் கடவுளுடைய ஜனங்களின் நற்பெயரைக் கெடுத்துப் போடுவோம்.
2 ரூம் புக்கிங் பிரச்சினைகள்: ஒவ்வொரு மாநாட்டு நகரத்திலும் ரூமிங் டிபார்ட்மெண்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வசதியாக, இந்த டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த சகோதரர்கள் நியாயமான வாடகைக்குப் பேசிமுடித்து, ரூம்களை புக் செய்வர். இந்தச் சகோதரர்கள் நமக்காக அதிக நேரத்தையும் முயற்சியையும் செலவிடுகின்றனர். பிற மதத்தினரின் மோசமான செயல்களால் சில ஓட்டல் மேனேஜர்கள் குறைந்த வாடகைக்கு நமக்கு ரூம்களைத் தர முதலில் தயங்கியுள்ளனர். நம் பிரதிநிதிகள் ஓட்டல் நிர்வாகத்தினருடன் நிச்சயம் ஒத்துழைப்பார்கள் என இவர்கள் உறுதியளித்ததால் அநேக இடங்களில் நமக்கு ரூம்கள் கொடுக்க அவர்கள் சந்தோஷமாக முன்வந்திருக்கின்றனர்.
3 ஆனால் கடந்த வருடம், ஒருபோதும் இல்லாதளவுக்கு கடைசி நேரத்தில் அதிகமானோர் ரூம்களை ரத்துசெய்ததாக அநேக ஓட்டல் நிர்வாகிகள் குறைகூறியிருக்கின்றனர். காரணம் என்ன? சில பிரதிநிதிகள் இரண்டு ஓட்டல்களில் ரூம்களை புக் செய்தனர்; ஆனால் முதலில் புக் செய்த ஓட்டலுக்கு தங்கள் முன்பணத்தை அனுப்பவில்லை; அல்லது வேறொரு ஓட்டலில் ரூம் கிடைத்துவிட்டதால் இந்த புக்கிங்கை ரத்துசெய்யவில்லை. இன்னும் சிலர், தங்களுடன் பயணம் செய்பவர்களுக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு, ஓட்டலில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரூம்களை புக் செய்தனர். நேரில் வந்தபோதோ அவர்கள் ஒரு ரூமை மட்டுமே வாடைக்கு எடுத்துக்கொண்டனர். மற்றதை ரத்து செய்துவிட்டனர். உவாட்ச்டவர் பிரதிநிதிகள் இப்படி ஒருபோதும் செய்ததேயில்லை என பாதிக்கப்பட்ட ஓட்டல்காரர்கள் குறைபட்டுக்கொண்டனர்.
4 இது ஓட்டல் நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல மாநாட்டு ஏற்பாடுகளை கவனிப்பவர்களுக்கும் பெரும் கஷ்டத்தை உண்டுபண்ணுகிறது. நம்முடைய பிரதிநிதிகளுக்காக குறிப்பிட்ட எண்ணிக்கை ரூம்களை ஓட்டல் நிர்வாகிகள் முன்கூட்டியே ஒதுக்குகையில் அவை எல்லாமே புக் ஆகிவிட்டதாக அவர்கள் நினைக்கின்றனர்; ஆனால் மாநாட்டு சமயத்தில்தான் காலி ரூம்கள் இருப்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. இந்தப் பிரச்சினை தொடருமானால், எதிர்காலத்தில் மாநாடுகளுக்காக ஓட்டல் நிர்வாகிகளிடம் பேசி முடிவு செய்வது சண்டை சச்சரவுகளுக்கு வழிநடத்தலாம். இதைத் தவிர்ப்பதற்கு, பின்வரும் ஆலோசனைப்படி நடந்துகொள்ளுங்கள். நீங்கள் தங்கப் போகிற ரூம்களை மாத்திரமே முன்னதாக புக் செய்யுங்கள். அதோடுகூட, அதற்கு உத்தரவாதமாக, ஒரு நாள் வாடகையை முன்பணமாக அனுப்பி வையுங்கள். இப்படி செய்வதால் அன்று இரவு தாமதமாக வந்து சேர்ந்தாலும் அறை காலியாக இருக்கும். இதை நினைவில் வைத்தவர்களாய், நீங்கள் தங்கப் போகும் ஓட்டலுக்கு உங்கள் முன்பணத்தை ஏற்கெனவே அனுப்பிவிட்டீர்களா?
5 சில ஓட்டல்கள் இலவசமாக காலை உணவை அளிக்கின்றன; நம்முடைய சகோதரர்கள் அத்தகைய ஏற்பாட்டை தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்வதாய் ஓட்டல் நிர்வாகத்தினர் குறைகூறியிருக்கின்றனர். எந்த விதத்தில்? நம் சகோதரர்களில் சிலர் ஓட்டலில் காலை உணவை சாப்பிட்ட பின் எக்கச்சக்கமான உணவை கையிலும் எடுத்து சென்றிருக்கின்றனர். ஓட்டலில் விருந்தினராக தங்கியிருப்பவருக்காகவே விலையின்றி காலை உணவைக் கொடுப்பது அதன் வழக்கமாக இருக்கும். அதனால், பின்னர் சாப்பிடுவதற்காகவோ மாநாட்டிற்கு வந்திருக்கும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவோ அந்த உணவை எடுத்துச்செல்வது முறையாகாது. இந்த ஏற்பாட்டை நாம் சரிவர மதிக்கவில்லை என்றால், ஓட்டல் இந்த உபசரிப்பை நமக்கு அளிக்காதிருக்கலாம்; ரூம் வாடகையை அதிகரிக்கலாம்; எதிர்காலத்தில் அறைகளைத் தரவும் மறுக்கலாம்.
6 எல்லாருக்கும் நன்மை செய்வோம்: போற்றத்தக்க பழக்கவழக்கங்களும் நன்னடத்தையும் யெகோவாவிடமும் நம்முடைய அயலாரிடமுமுள்ள அன்பினால் தூண்டப்படுகின்றன. (மத். 22:37-39; யாக். 3:13) எல்லாரிடமும் அன்பும் கரிசனையும் காட்ட வேண்டுமென பைபிள் நமக்கு வலியுறுத்துகிறது. (கலா. 6:10) இந்த நியமத்தை ஓட்டலில் தங்குகையில் மறக்காமல் பின்பற்ற வேண்டும். ஒத்துழைக்க தவறினால் நம் நற்பெயருக்கு களங்கம் விளையும், குறைந்த வாடகைக்கு ரூம்கள் கிடைக்காது, சகோதரர்களுக்கு மத்தியில் பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தும். ஓட்டல் குறைந்த வாடகைக்கு ரூம்களைத் தர மறுத்தால், அந்நகரத்தில் மாநாட்டை அனுபவிக்க வருபவர்களில் அதிக வாடகை கொடுக்க வசதியில்லாதவர்கள்தான் பெரிதும் கஷ்டப்படுவார்கள்.
7 வசதியான ரூமை முன்கூட்டியே புக் செய்துவிட்டு கடைசி நேரத்தில் ரத்துசெய்கையில், அத்தகைய ரூம் தேவைப்படும் சகோதரருக்கு அது கிடைக்காமல் போகும். இதனால் அவர் வெகு தூரத்தில் போய் தங்கும்படி அல்லது வசதியற்ற இடத்தில் தங்கும்படி நேரிடலாம். அப்படி செய்வது அன்பான அல்லது கரிசனையான செயலா? நம்மை பற்றி மட்டுமே சிந்திக்காமல், மற்றவர்களுடைய தேவைகளையும் மனதில் வைத்து அவர்களிடம் அன்பு காட்டவும், எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுவது எவ்வளவு சிறந்தது!—மத். 7:12; யோவா. 13:34, 35.
8 “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் நாளை நாம் எல்லாரும் ஆவலாய் எதிர்நோக்கி இருக்கிறோம். ரூம் புக்கிங், பயண ஏற்பாடுகள் உட்பட இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நீங்கள் செய்துவிட்டீர்களா? ஓட்டல்களிலும் மாநாட்டு நகரத்திலும் நம் நடத்தை, நம் இதயத்தில் பதிந்த சத்தியத்தையும் நம் சிருஷ்டிகரிடமுள்ள அன்பையும் எப்போதும் வெளிப்படுத்திக் காட்டட்டும்.