‘பாதகமான காலத்தில்’ ஊழியம் செய்யப் பயிற்சி பெறுதல்
1 ‘பாதகமான காலத்தில்’ தகுதியானவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நமக்குப் பயிற்சி அளிப்பதற்கென்றே தயாரிக்கப்பட்ட நம் ராஜ்ய ஊழியத்தின் முந்தைய இதழ்களில் வெளிவந்த காலத்துக்கேற்ற அறிவுரைகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், அல்லவா? (2 தீ. 4:2) இவற்றில் எதையாவது நீங்கள் பின்பற்றியிருக்கிறீர்களா? நற்செய்தியைக் கேட்பதற்கோ கேட்காதிருப்பதற்கோ வீட்டுக்காரருக்கு உரிமை இருக்கிறது; அதை மதிக்கும்படி நமக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இது சரியே; ஏனென்றால், வெவ்வேறு மத நம்பிக்கையுடைய ஆட்களின் வீடுகளுக்கு அழையா விருந்தாளிகளாக நாம் செல்கிறோம். ஆகவே, செய்தியைச் சொல்வதற்கு முன் அதைக் கேட்க வீட்டுக்காரருக்கு விருப்பம் இருக்கிறதா என்பதை நாம் முதலில் உறுதிசெய்துகொள்கிறோம். இவ்வாறு, அவருடைய விருப்பங்களை நாம் மதிக்கிறோம் என்பதை அவருக்குப் புரிய வைக்கிறோம்.
2 ஜாக்கிரதையாகவும் விவேகமாகவும் சாதுரியமாகவும் இருப்பதன் மூலம், பிரச்சினையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க நம்மாலானதைச் செய்கிறோம். நாம் என்ன பேசக் கூடாது என்பதைத் தெரிந்திருப்பதும் சாதுரியமாக இருப்பதில் உட்பட்டுள்ளது. (யோவா. 16:12) நாம் மக்களைக் கட்டாயப்படுத்தியோ அவர்களுக்கு ஆசைகாட்டியோ மதம் மாற்றுவதில்லை என்பது தெரிந்த விஷயமே. மன சமாதானத்தையும் ஆறுதலையும் தரும் செய்தியை கிறிஸ்துவின் சீடர்கள் மக்களிடம் சொல்கிறார்கள். ஆனாலும், எல்லா மக்களும் அச்செய்தியை வரவேற்பதில்லை, நம் நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்வதுமில்லை. ஆகவே, நம்மைத் ‘துன்புறுத்துவோரிடமிருந்து’ அல்லது பிரச்சினையைத் தூண்டிவிடுவோரிடமிருந்து நாம் ‘தப்பியோட’ வேண்டும். (மத். 10:23; அப். 14:5-7) சமீப மாதங்களில் சகோதரர்கள் எதிர்ப்பைச் சந்தித்த பகுதிகளில் இவ்வாறே செய்திருக்கிறார்கள்; விருப்பம் உள்ளவர்களிடம் செய்தியைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் நல்ல பலன்களையும் பெற்றிருக்கிறார்கள். என்றாலும், முன்பு நம்மை எதிர்த்தவர்கள் ஏதேதோ காரணங்களால் பிற்பாடு நம்மை வரவேற்கலாம் என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.
3 சபைப் பிராந்தியத்திலிருக்கும் மதவெறி பிடித்த ஆட்களைச் சமாளிப்பது பற்றி வெளிவந்துள்ள அறிவுரைகளை மூப்பர்கள் அவ்வப்போது நினைப்பூட்டுவதற்காக சகோதரர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். (2 பே. 3:1, 2) 2008-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மற்றும் ஆகஸ்ட் மாத நம் ராஜ்ய ஊழிய இதழ்களிலிருந்து சில குறிப்புகளை அவ்வப்போது சபையாருக்கு நினைப்பூட்டுவது மிகவும் பிரயோஜனமாக இருக்கும்; ஊழியக் கூட்டத்தில் பொருத்தமான ஒரு பகுதியைக் கையாளுகையிலும், வெளி ஊழியத்திற்குத் தொகுதியினரைப் பிரித்துவிடுவதற்கு முன்பும் அவற்றை நினைப்பூட்டலாம். இப்படிச் செய்வது, ஊழியத்தில் மக்கள் தவறாகப் புரிந்துகொள்கிற பழைய முறைகளையே பின்பற்றாதிருக்கவும், முன்பு பயன்படுத்திய வார்த்தைகளையே உபயோகிக்காதிருக்கவும், தற்போது செய்யப்படுகிற ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிதலோடு ஒத்துழைக்கவும் நம் எல்லாருக்கும் உதவுகிறது. இந்த அறிவுரைகள் திரும்பத் திரும்ப கொடுக்கப்படும்போது, ஊழியத்திற்காகப் பொது இடங்களில் கூடிவருகிறவர்கள் சத்தமாகப் பேசாதபடி கவனமாக இருப்பார்கள்; அநாவசியமாக மற்றவர்களின் கவனத்தைத் திருப்பாதபடியும் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.
4 எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு பிரச்சினையைச் சந்திப்பதற்கு முன்பாகவே நாம் ஒவ்வொருவரும் நம் இருதயத்தைத் தயார்படுத்த வேண்டும்; இதற்கு, தினந்தோறும் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும் ஜெபம் செய்வதும் அவசியம். நம் விசுவாசம் உயிருள்ளதாகவும், தைரியமாகச் செயல்பட நம்மைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். (எஸ்றா 7:10; சங். 78:8; யாக். 2:17; w09 9/15, பக்கங்கள் 12-15-ஐப் பாருங்கள்.) யெகோவாமீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, கலகக் கும்பல் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போது பதற்றமடையாமல் இருக்கவும், போலீஸ் அதிகாரிகளிடம் நம் ஊழியத்தைக் குறித்து மரியாதையோடு விளக்கவும் உதவும்.
5 பயத்தின் காரணமாக ஊழியத்தில் உங்களுடைய பக்திவைராக்கியம் தணிந்துபோயிருந்தால் ஊக்கம் பெறுங்கள். இயேசுவின் மரணத்திற்குப் பிறகு அப்போஸ்தலர்கள் எல்லாருமே சில காலத்திற்குப் பிரசங்க வேலையை நிறுத்திவிட்டார்கள்; ஆனாலும், சீக்கிரத்திலேயே மீண்டும் சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்தார்கள் என்பதை நினைவில் வையுங்கள். (மத். 26:56; அப். 5:28) முக்கியமாக நம் செய்தியை யாராவது உதறித்தள்ளும்போது, அப்போஸ்தலர் 18:9, 10-ல் உள்ள இயேசுவின் வாக்குறுதியை நாம் ஞாபகத்தில் வைப்பது நல்லது. நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிப்பதற்குத் தேவையான தைரியத்திற்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (அப். 4:29) நற்செய்தியைக் கேட்கிறவர்களின் இருதயத்தைத் தொடும் விதத்தில் பேசுவதற்கு வழிதேடுங்கள். யெகோவா, இருதயங்களைப் பார்க்கிறார் என்பதையும், நல்மனமுள்ளவர்களைத் தம்மிடம் இழுக்கிறார் என்பதையும் ஒருபோதும் மறவாதீர்கள்.—1 சா. 16:7; யோவா. 6:44.