தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—ஆமோஸ்
1. ஆமோஸின் உதாரணம் நமக்கு ஏன் உற்சாகம் அளிக்கிறது?
1 ‘பிரசங்கிக்க எனக்குத் தகுதியில்லை!’ நீங்கள் எப்போதாவது இப்படி யோசித்திருக்கிறீர்களா? குறைவான படிப்பு, சாதாரண பின்னணி போன்ற காரணங்கள் உங்களை இப்படி நினைக்க வைக்கிறதா? அப்படியென்றால், மனந்தளர்ந்துவிடாதீர்கள், ஆமோஸ் தீர்க்கதரிசியின் உதாரணம் உங்களுக்கு உதவியாக இருக்கும். அவர் மந்தை மேய்க்கிறவராகவும், காட்டத்திப் பழங்களைக் குத்திவிடுகிற சாதாரண கூலியாளாகவும் இருந்தாலும் மிக முக்கியமான செய்தியை அறிவிப்பதற்கு யெகோவா அவரைப் பலப்படுத்தினார். (ஆமோ. 1:1; 7:14, 15, NW) இன்றும் யெகோவா தம்முடைய வேலையைச் செய்வதற்கு மனத்தாழ்மையுள்ள சாதாரண நபர்களையே பயன்படுத்துகிறார். (1 கொ. 1:27-29) ஊழியம் சம்பந்தமாக ஆமோஸிடமிருந்து நாம் வேறு என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
2. எதிர்ப்பின் மத்தியிலும் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?
2 எதிர்ப்பின் மத்தியிலும் உறுதியாயிருங்கள்: இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வட ராஜ்யத்தில் கன்றுக்குட்டியை வழிபட்ட ஆசாரியனான அமத்சியா, ஆமோஸின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டுவிட்டு இப்படிச் சொல்லியிருக்கலாம்: ‘எங்களுக்கு உபதேசம் பண்ணாதே! முதலில் இங்கிருந்து ஓடிப்போ! எங்களுக்கு எங்கள் மதம் இருக்கிறது!’ (ஆமோ. 7:12, 13) ஆமோஸின் வேலையைத் தடை செய்வதற்காக அமத்சியா, ராஜாவாகிய யெரொபெயாமிடம் ஆமோஸின் வார்த்தைகளைத் திரித்துக் கூறினான். (ஆமோ. 7:7-11) ஆனால், ஆமோஸ் அதற்குப் பயப்படவில்லை. இன்றும், யெகோவாவின் மக்களைத் துன்புறுத்தும் முயற்சியில் சர்ச் குருமார்கள் அரசாங்க அதிகாரிகளின் ஆதரவை நாடுகிறார்கள். இருந்தாலும், நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும் என்று யெகோவா உறுதி அளிக்கிறார்.—ஏசா. 54:17.
3. நாம் அறிவித்துவரும் செய்தியில் என்ன இரண்டு அம்சங்கள் உட்பட்டுள்ளன?
3 நியாயத்தீர்ப்புச் செய்தியையும் எதிர்கால ஆசீர்வாதங்களையும் அறிவியுங்கள்: இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்திற்கு விரோதமாக ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தபோதிலும், தான் எழுதிய பைபிள் புத்தகத்தை நம்பிக்கையூட்டும் செய்தியோடு நிறைவு செய்தார். ஆம், அந்த ராஜ்யம் திரும்ப நிலைநாட்டப்பட்டு ஏராளமான ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் என்ற யெகோவாவின் வாக்குறுதியோடு நிறைவு செய்தார். (ஆமோ. 9:13-15) இன்று நாமும்கூட, துன்மார்க்கருக்கு விரோதமாக வரும் ‘நியாயத்தீர்ப்பு நாளை’ பற்றி அறிவிக்கிறோம். ஆனால், நாம் அறிவிக்கிற “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய” நற்செய்தியில் இது ஒரு அம்சம் மட்டுமே. (2 பே. 3:7; மத். 24:14) அர்மகெதோனில் யெகோவா துன்மார்க்கரை அழித்த பின்பு, நல்லோரைப் பூஞ்சோலை பூமியில் என்றென்றுமாக வாழ வைப்பார்.—சங். 37:34.
4. யெகோவாவின் சித்தத்தை நம்மால் நிறைவேற்ற முடியும் என்பதில் நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
4 எதிர்ப்பின் மத்தியிலும் நற்செய்தியை அறிவிப்பது நம் அர்ப்பணத்திற்கு இசைவாக வாழ்வதற்கான மன உறுதியை... யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கான மன உறுதியை... பரீட்சை பார்க்கலாம். (யோவா. 15:19) இருந்தாலும், தம்முடைய சித்தத்தைச் செய்ய யெகோவா ஆமோஸை எப்படிப் பலப்படுத்தினாரோ அப்படியே நம்மையும் பலப்படுத்தி போதிய தகுதி அளிப்பார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.—2 கொ. 3:5.