கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பைபிளை இன்னும் ஆழமாக எப்படிப் படிக்கலாம்?
தானியேலைப் போலவே நீங்களும் சோதனைகளின் மத்தியிலும் உண்மையாக இருக்க விரும்புகிறீர்களா? ஆழமான தீர்க்கதரிசனங்கள் உட்பட கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் எல்லாவற்றையும் தானியேல் ஆழமாகப் படித்தார். (தானி 9:2) நீங்களும் பைபிளை அதேபோல் ஆழமாகப் படித்தால், தொடர்ந்து உண்மையாக இருக்க முடியும். எப்படிச் சொல்லலாம்? அப்படிப் படிக்கும்போது, யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற விசுவாசம் உங்களுக்கு அதிகமாகும். (யோசு 23:14) கடவுள்மேல் உங்களுக்கு இருக்கும் அன்பும் அதிகமாகும்; சரியானதைச் செய்ய அந்த அன்பு உங்களைத் தூண்டும். (சங் 97:10) ஆனால் எதைப் படிப்பது? எப்படிப் படிப்பது? இதோ, சில ஆலோசனைகள்:
எதைப் படிப்பது? நல்ல படிப்புப் பழக்கத்தில், சபைக் கூட்டங்களுக்குத் தயாரிப்பதும் அடங்கும். அந்தந்த வாரத்துக்கான பைபிள் வாசிப்புப் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு விஷயம் புரியவில்லை என்றால், நேரம் எடுத்து ஆராய்ச்சி செய்வது நல்ல பலனைத் தரும். சிலர், பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களைப் பற்றியும், அப்போஸ்தலன் பவுலின் மிஷனரி பயணங்களைப் பற்றியும், ஏன், யெகோவாவின் படைப்புகளைப் பற்றியும்கூட ஆராய்ச்சி செய்கிறார்கள். பைபிள் சம்பந்தப்பட்ட ஏதாவது கேள்வி உங்கள் மனதுக்கு வந்தால் உடனடியாக அதை எழுதிவையுங்கள். பிறகு அடுத்த ஆராய்ச்சியின்போது அதற்குப் பதிலைக் கண்டுபிடியுங்கள்.
எப்படி ஆராய்ச்சி செய்வது? இதைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்துகொள்ள, ஆராய்ச்சி செய்வது எப்படி? என்ற வீடியோவைப் பாருங்கள். உங்களால் எந்தளவுக்கு ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள, தானியேல் 7-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள மிருகங்கள் எந்த உலக வல்லரசுகளைக் குறிக்கின்றன என்பதைக் கண்டுபிடியுங்கள்.
எவ்வளவு நேரம் படிப்பது? தவறாமல் படிப்பது யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவும். ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் படிக்கலாம், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரிக்கலாம். கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது, மறைத்து வைக்கப்பட்டிருக்கிற புதையல்களைத் தேடுவதுபோல் இருக்கிறது. புதையல்கள் கிடைக்கக் கிடைக்க இன்னும் ஆழமாகத் தோண்ட விரும்புவீர்கள். (நீதி 2:3-6) அதோடு, கடவுளுடைய வார்த்தையைப் படிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு அதிகமாகும்; தவறாமல் பைபிள் படிப்பது உங்கள் பழக்கமாகவே இருக்கும்.—1பே 2:2.
தானியேல் 7-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற மிருகங்கள் எதைக் குறிக்கின்றன?
இதற்கும் பதில் கண்டுபிடியுங்கள்:
தானியேல் 7:8, 24 எப்படி நிறைவேறியது?
அடுத்த ஆராய்ச்சிக்கு...
வெளிப்படுத்துதல் 13-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் மிருகங்கள் எதைக் குறிக்கின்றன?