Maremagnum/Corbis Documentary via Getty Images
விழிப்புடன் இருங்கள்!
அர்மகெதோன் இஸ்ரேலில் ஆரம்பிக்குமா?—பைபிள் என்ன சொல்கிறது?
பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் அர்மகெதோன் என்பது உலகத்தில் ஏதோவொரு இடத்தில் மட்டும் நடக்கும் போர் கிடையாது. அது கடவுளுக்கும் உலகத்தில் இருக்கும் எல்லா மனித அரசாங்கங்களுக்கும் இடையில் நடக்கப்போகும் போர்.
“அவை அற்புத அடையாளங்கள் செய்கிற பேய்களுடைய செய்திகள். அந்தப் பேய்கள் சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்காகப் பூமி முழுவதுமுள்ள ராஜாக்களைக் கூட்டிச்சேர்க்கப் புறப்பட்டுப் போயின. எபிரெய மொழியில் அர்மகெதோன் என்று அழைக்கப்பட்ட இடத்தில் அவை அவர்களைக் கூட்டிச்சேர்த்தன.”—வெளிப்படுத்துதல் 16:14, 16.
“அர்மகெதோன்” என்ற வார்த்தை ஹர் மெகிதோன் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. அதன் அர்த்தம், “மெகிதோ மலை.” அன்று இருந்த இஸ்ரவேல் நாட்டில் மெகிதோ என்ற நகரம் இருந்தது. அதனால், இன்று இருக்கும் இஸ்ரேலில்தான் அர்மகெதோன் நடக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் மெகிதோவும் சரி, மத்தியக் கிழக்கில் இருக்கும் வேறெந்தப் பகுதியும் சரி, ‘பூமி முழுவதுமுள்ள ராஜாக்களும்’ அவர்களுடைய படைகளும் கூடிவரும் அளவுக்குப் பெரியது கிடையாது.
வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கும் எல்லாமே ‘அடையாளங்களாகத்தான்’ சொல்லப்பட்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 1:1) அதனால், அர்மகெதோன் என்பது நிஜமான ஒரு இடம் கிடையாது. உலகம் முழுவதும் இருக்கும் அரசியல் சக்திகள் கடவுளுடைய அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுதிரண்டு வரும் சூழ்நிலையைத்தான் அது குறிக்கிறது.—வெளிப்படுத்துதல் 19:11-16, 19-21.