மத்தேயு
ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 18
உண்மையாகவே: மத் 5:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை: வே.வா., “கழுதையை வைத்து இழுக்கப்படும் திரிகைக் கல்லை.” நே.மொ., “ஒரு கழுதையின் திரிகைக் கல்லை.” அப்படிப்பட்ட ஒரு திரிகை கல் அநேகமாக 1.2-1.5 மீ. (4-5 அடி) விட்டத்தில் இருந்திருக்கும். அது மிகவும் கனமாக இருந்ததால் ஒரு கழுதையை வைத்துத்தான் இழுக்க வேண்டியிருந்தது.
மக்களைப் பாவம் செய்யத் தூண்டுகிற: வே.வா., “முட்டுக்கட்டையாக இருக்கிற.” இதற்கான கிரேக்க வார்த்தை ஸ்கான்டேலான். ஆரம்பத்தில் இது ஒரு பொறியைக் குறித்ததாக நம்பப்படுகிறது. அதுவும், ஒரு பொறிக்குள் இருந்த குச்சியை (இரை வைக்கப்பட்ட குச்சியை) அது குறித்திருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். காலப்போக்கில், ஒருவரைத் தடுக்கி விழவைக்கும் எல்லா பொருள்களையுமே குறிப்பதற்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அடையாள அர்த்தத்தில், ஒருவரைத் தவறான பாதையில் போக வைக்கிற, அல்லது ஒழுக்க நெறிகளை மீற வைக்கிற, அல்லது பாவக் குழியில் விழ வைக்கிற செயலையோ சூழ்நிலையையோ அது குறிக்கிறது. இந்த வார்த்தையோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல்லான ஸ்கான்டலைசோ மத் 18:8, 9-ல் பயன்படுத்தப்பட்டுள்ளது. “பாவம் செய்ய வைத்தால்” என்று அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “உன்னை விழ வைத்தால்; உனக்குக் கண்ணியாக இருந்தால்” என்றெல்லாம்கூட அதை மொழிபெயர்க்கலாம்.
கெஹென்னாவுக்குள்: மத் 5:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பையும் பாருங்கள்.
என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள்: வே.வா., “என் தகப்பனின் முகத்தை எப்போதும் பார்க்கிறார்கள்.” தேவதூதர்களால் மட்டும்தான் கடவுளுடைய முகத்தைப் பார்க்க முடியும்; ஏனென்றால், கடவுளுடைய சன்னிதிக்குப் போய்வர அவர்களால் முடியும்.—யாத் 33:20.
சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன: “வழிதவறிப்போனவர்களை மீட்பதற்காக மனிதகுமாரன் வந்தார்.” ஆனால், மிகவும் பழமையான மற்றும் நம்பகமான கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இல்லை. கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட லூ 19:10-ல் இதேபோன்ற வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், பழங்காலத்தில் நகலெடுப்பவராக இருந்த ஒருவர் லூக்காவின் பதிவிலிருந்து இந்த வார்த்தைகளை எடுத்திருக்க வேண்டுமென்று சிலர் நினைக்கிறார்கள்.—இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
என்: சில பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில் “உங்கள்” என்று கொடுக்கப்பட்டுள்ளது.
சபைக்கு: திருச்சட்டத்தின்படி, நீதிவிசாரணைகள் நடத்தப்பட்டபோது நியாயாதிபதிகளும் அதிகாரிகளும் இஸ்ரவேல் சபையின் சார்பாகச் செயல்பட்டார்கள். (உபா 16:18) இயேசுவின் காலத்தில், குற்றம் செய்தவர்கள் உள்ளூர் நீதிமன்றங்களில் யூதர்களுடைய பெரியோர்களால் விசாரணை செய்யப்பட்டார்கள். (மத் 5:22) பிற்பாடு, தீர்ப்புகளை வழங்குவதற்குக் கடவுளுடைய சக்தியால் ஒவ்வொரு கிறிஸ்தவ சபையிலும் பொறுப்புள்ள ஆண்கள் நியமிக்கப்பட்டார்கள். (அப் 20:28; 1கொ 5:1-5, 12, 13) “சபை” என்ற வார்த்தையின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்வதற்கு, மத் 16:18-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “சபை” என்ற தலைப்பையும் பாருங்கள்.
மற்ற தேசத்தாரைப் போலவும் வரி வசூலிப்பவரைப் போலவும்: அதாவது, “யூதர்கள் அநாவசியமாக சகவாசம் வைத்துக்கொள்ளாத ஆட்களைப் போல.”—அப் 10:28-ஐ ஒப்பிடுங்கள்.
பூட்டுவதெல்லாம் . . . திறப்பதெல்லாம்: வே.வா., “கட்டுவதெல்லாம் . . . கட்டவிழ்ப்பதெல்லாம்.” இந்த வசனத்தில், ‘கட்டுவது’ என்பது அநேகமாக ‘குற்றவாளியாகக் கருதுவதை’ குறிக்கிறது; ‘கட்டவிழ்ப்பது’ என்பது ‘நிரபராதியாகக் கருதுவதை’ குறிக்கிறது. “நீங்கள்” என்று பன்மையில் கொடுக்கப்பட்டிருப்பதால், பேதுரு மட்டுமல்லாமல் மற்றவர்களும் இப்படிப்பட்ட தீர்மானங்களை எடுப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.—மத் 16:19-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஏற்கெனவே பூட்டப்பட்டிருக்கும் . . . ஏற்கெனவே திறக்கப்பட்டிருக்கும்: வே.வா., “ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் . . . ஏற்கெனவே கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.” இந்த வார்த்தைகளுக்கான கிரேக்க வினைச்சொற்கள் இந்த வசனத்தில் வித்தியாசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சீஷர்கள் என்ன தீர்மானம் எடுத்தாலும் (அவர் “கட்டுவதெல்லாம்”; “கட்டவிழ்ப்பதெல்லாம்”), அதற்கு முன்பே பரலோகத்தில் அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை அவை காட்டுகின்றன. அதாவது, சீஷர்கள் தீர்மானம் எடுத்துவிட்ட பின்பு பரலோகத்தில் தீர்மானம் எடுக்கப்படாது, பரலோகத்தில்தான் முதலில் தீர்மானம் எடுக்கப்படும் என்பதைக் காட்டுகின்றன. பரலோகத்தில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருக்கும் நியமங்களின் அடிப்படையில்தான் சீஷர்கள் தீர்மானங்களை எடுப்பார்கள். ஆனால், பூமியில் எடுக்கப்படும் தீர்மானத்துக்குப் பரலோகத்திலிருந்து ஆதரவு காட்டப்படும் என்பதையோ, அந்தத் தீர்மானம் உறுதிசெய்யப்படும் என்பதையோ இது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, சீஷர்களுக்குப் பரலோகத்திலிருந்து வழிநடத்துதல் கிடைக்கும் என்பதைத்தான் அர்த்தப்படுத்துகிறது. பூமியில் எடுக்கப்படும் தீர்மானங்கள், ஏற்கெனவே பரலோகத்தில் எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானங்களோடு ஒத்திருப்பதற்கு அப்படிப்பட்ட வழிநடத்துதல் தேவை என்பதை இது சிறப்பித்துக் காட்டுகிறது.—மத் 16:19-க்கான ஆராய்ச்சிக் குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
77 தடவை: நே.மொ., “ஏழு எழுபது தடவை.” இதற்கான கிரேக்க வார்த்தைகள், 7-ஐயும் 70-ஐயும் கூட்டினால் வரும் தொகையை (77) குறிக்கலாம், அல்லது 7-ஐயும் 70-ஐயும் பெருக்கினால் வரும் தொகையை (490) குறிக்கலாம். ஆதி 4:24-ல், “77 தடவை” என்பதற்கான எபிரெய வார்த்தைகளுக்கு இதே கிரேக்க வார்த்தைகளைத்தான் செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது. அதனால், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அந்த வார்த்தைகளை “77 தடவை” என்று மொழிபெயர்ப்பது சரியாக இருக்கும் என்று தெரிகிறது. அது எந்தத் தொகையைக் குறித்தாலும் சரி, ஏழு என்ற எண் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருப்பது, “அளவே இல்லாமல்” அல்லது “கணக்கில்லாமல்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. “ஏழு தடவை” என்று பேதுரு சொன்னதை “77 தடவை” என்று இயேசு மாற்றிச் சொன்னபோது, மன்னிப்பதற்கு அளவே இருக்கக் கூடாது என்று தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதற்கு நேர்மாறாக, பாபிலோனிய தால்முட் (யோமா 86ஆ) இப்படிச் சொல்கிறது: “ஒருவன் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டால், முதல் தடவையும் இரண்டாவது தடவையும் மூன்றாவது தடவையும் மன்னிக்கப்படுகிறான், ஆனால் நான்காவது தடவை மன்னிக்கப்படுவதில்லை.”
10,000 தாலந்து: ஒரு சாதாரண கூலியாள் கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு வேலை செய்தால்தான் ஒரு தாலந்து கூலி கிடைக்கும். அப்படிப் பார்த்தால், 10,000 தாலந்து கடனை அடைக்க அவர் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வேலை செய்ய வேண்டும். அந்தக் கடனை அடைக்கவே முடியாது என்பதைக் காட்டுவதற்கு இயேசு உயர்வு நவிற்சி அணியைப் பயன்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 10,000 தாலந்து வெள்ளி என்பது 6,00,00,000 தினாரியு.—மத் 18:28-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “தாலந்து” என்ற தலைப்பையும், இணைப்பு B14-ஐயும் பாருங்கள்.
அவருடைய காலில் விழுந்து: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவர் முன்னால் மண்டிபோட்டு; அவருக்கு மரியாதை செலுத்தி.” இதற்கான கிரேக்க வினைச்சொல், ப்ரோஸ்கினீயோ. ஒரு தெய்வத்தை வணங்குவது சம்பந்தமாகப் பயன்படுத்தப்படும்போது “வணங்க” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசனத்தில், ஒரு அடிமை தன் எஜமானுக்கு மரியாதையோடு அடிபணிவதைக் காட்டுகிறது.—மத் 2:2; 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
அவனுடைய கடன்களையெல்லாம் ரத்து செய்துவிட்டார்: வே.வா., “அவனுடைய கடன்களையெல்லாம் மன்னித்துவிட்டார்.” கடன்கள் என்பது அடையாள அர்த்தத்தில் பாவங்களைக் குறிக்கலாம்.—மத் 6:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
100 தினாரியு: 10,000 தாலந்தோடு (6,00,00,000 தினாரியுவோடு) ஒப்பிடும்போது 100 தினாரியு ஒரு சிறிய தொகைதான்; ஆனாலும், அதற்கு மதிப்பு இருந்தது. 100 தினாரியு கூலி கிடைப்பதற்கு ஒருவர் 100 நாட்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது.—இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
உன் கடனையெல்லாம் ரத்து செய்தேன்: வே.வா., “உன் கடனையெல்லாம் மன்னித்துவிட்டேன்.”—மத் 6:12-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
சிறைக்காவலர்களிடம்: சிறைக்காவலர்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை, பஸானிஸ்டெஸ். இதன் அடிப்படை அர்த்தம், “வதைக்கிறவர்கள்.” ஒருவேளை, சிறைக்காவலர்கள் கைதிகளைப் பெரும்பாலும் கொடூரமாகத் துன்புறுத்தியதால் இந்த வார்த்தை அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், சிறைக்காவலர்களைப் பொதுப்படையாகக் குறிப்பதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. சிறைக்காவலர்கள் கைதிகளைச் சித்திரவதை செய்தார்களோ இல்லையோ, அவர்களைச் சிறையில் அடைத்ததே அவர்களை வதைப்பதுபோல் இருந்ததாகக் கருதப்பட்டிருக்கலாம்.—மத் 8:29-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில் “எங்களைப் பாடுபடுத்த” என்ற தலைப்பைப் பாருங்கள்.