மத்தேயு
ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 27
பெரியோர்கள்: வே.வா., “மூப்பர்கள்.”—மத் 16:21-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
ஆளுநர் பிலாத்துவிடம்: இவர் யூதேயாவை ஆட்சி செய்வதற்காக கி.பி. 26-ல் பேரரசரான திபேரியுவால் நியமிக்கப்பட்ட ரோம ஆளுநர் (மந்திரி). இவர் சுமார் பத்து வருஷங்களுக்கு ஆட்சி செய்தார். பைபிள் அல்லாத மற்ற புத்தகங்களை எழுதியவர்கள் பிலாத்துவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; உதாரணத்துக்கு, திபேரியுவின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்துவைக் கொலை செய்யும்படி பிலாத்து ஆணையிட்டதாக ரோம சரித்திராசிரியரான டசிட்டஸ் குறிப்பிட்டிருக்கிறார். “பொந்தியு பிலாத்து, யூதேயாவின் மந்திரி” என்று லத்தீனில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு இஸ்ரவேலைச் சேர்ந்த செசரியாவில் இருந்த பழங்கால ரோம அரங்கில் கண்டெடுக்கப்பட்டது.—பொந்தியு பிலாத்து எந்தெந்த பகுதிகளை ஆட்சி செய்தார் என்பதைத் தெரிந்துகொள்ள, இணைப்பு B10-ஐப் பாருங்கள்.
மனம் வருந்தினான்: இதற்கான கிரேக்க வார்த்தை, மெட்டாமீலோமேய். உள்ளப்பூர்வமாக மனம் வருந்துவதை இது குறிக்கலாம் என்பது உண்மைதான் (மத் 21:29, 32; 2கொ 7:8-ல் ‘மனம் வருந்து’ அல்லது ‘வருத்தப்படு’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது); ஆனாலும், யூதாஸ் உள்ளப்பூர்வமாக மனம் திருந்தியதற்கு எந்த அறிகுறியும் இல்லை. கடவுளுக்கு முன்பாக மனம் திருந்துவதைப் பற்றிச் சொல்லும்போது, மெட்டானோயீயோ என்ற வேறொரு வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது (மத் 3:2; 4:17; லூ 15:7; அப் 3:19-ல் ‘மனம் திருந்து’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). எண்ணத்தையோ, மனப்பான்மையையோ, நோக்கத்தையோ அடியோடு மாற்றிக்கொள்வதை இது குறிக்கிறது. தன்னோடு சதித்திட்டம் தீட்டிய ஆட்களிடமே யூதாஸ் திரும்பிப் போனதையும், பிறகு தற்கொலை செய்துகொண்டதையும் வைத்துப் பார்க்கும்போது, அவனுடைய கெட்ட எண்ணம் மாறவே இல்லை என்று தெரிகிறது.
எந்தத் தப்பும் செய்யாத: சில பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில், “நீதியுள்ள” என்று கொடுக்கப்பட்டுள்ளது.—மத் 23:35-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஆலயத்துக்குள்: ஆலயம் என்பதற்கான கிரேக்க வார்த்தை, நாயோஸ். அது ஆலயத்தின் முக்கியக் கட்டிடத்தை மட்டுமல்லாமல், அதன் பிரகாரங்களையும் சேர்த்து அதன் முழு வளாகத்தையும் குறிக்கலாம்.
தூக்குப்போட்டுக்கொண்டான்: யூதாசின் மரணத்தைப் பற்றி லூக்கா எழுதியபோது, அவன் விழுந்ததால் அவனுடைய வயிறு வெடித்தது என்று அப் 1:18-ல் குறிப்பிட்டிருக்கிறார். அவன் எப்படி தற்கொலை செய்துகொண்டான் என்று மத்தேயு எழுதியிருக்கிறார், அவன் தற்கொலை செய்துகொண்டபோது என்ன நடந்தது என்று லூக்கா எழுதியிருக்கிறார். இரண்டு பதிவுகளையும் வைத்துப் பார்க்கும்போது, யூதாஸ் ஒரு செங்குத்தான மலைமேல் இருந்த ஒரு மரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், கயிறு அறுந்ததாலோ மரக் கிளை உடைந்ததாலோ, கீழே இருந்த பாறைகள்மேல் அவன் தலைக்குப்புற விழுந்ததாகவும், அவன் வயிறு வெடித்ததாகவும் தெரிகிறது. எருசலேமைச் சுற்றியுள்ள இயற்கை அமைப்பை வைத்துப் பார்க்கும்போதும், நாம் இந்த முடிவுக்கு வருவது நியாயமாக இருக்கிறது.
இரத்தத்தின் விலையாக: அதாவது, இரத்தம் சிந்தியதற்காகப் பெறப்பட்ட பணமாக.
ஆலயத்தின் பொக்கிஷ அறையில்: இது யோவா 8:20-ல் சொல்லப்பட்டிருக்கும் பகுதியாக, அதாவது ‘ஆலயத்தில் காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியாக,’ இருந்திருக்கலாம். பெண்களுக்கான இடத்தில் இது இருந்ததாகத் தெரிகிறது. அங்கே 13 காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. (இணைப்பு B11-ஐப் பாருங்கள்.) எல்லா காணிக்கைப் பெட்டிகளிலிருந்தும் எடுத்துவரப்பட்ட பணம் ஆலயத்திலிருந்த ஒரு பெரிய பொக்கிஷ அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது.
அன்னியர்களை: அதாவது, மற்ற தேசங்களிலிருந்து வந்த யூதர்களை அல்லது மற்ற தேசத்து மக்களை.
அந்தக் காசுகளை வைத்து: முதன்மை குருமார்கள் அந்த 30 வெள்ளிக் காசுகளை வைத்து ஒரு நிலத்தை வாங்கியதாக மத்தேயு மட்டும்தான் எழுதியிருக்கிறார். ஆனால், யூதாஸ் அந்த நிலத்தை வாங்கியதாக அப் 1:18, 19 சொல்கிறது. அவன் தந்த காசுகளை வைத்து அந்த நிலத்தை முதன்மை குருமார்கள் வாங்கியதால் அது அப்படிச் சொல்வதாகத் தெரிகிறது.
குயவரின் நிலத்தை: இன்னோம் பள்ளத்தாக்கின் தெற்குச் சரிவிலே, கீதரோன் பள்ளத்தாக்கோடு அது இணைவதற்குச் சற்று முன்பு, இந்த நிலம் இருந்ததாக கி.பி. நான்காம் நூற்றாண்டு முதற்கொண்டே நம்பப்படுகிறது. அந்தப் பகுதியில்தான் குயவர்கள் தொழில் செய்ததாகத் தெரிகிறது. அந்த நிலம் “இரத்த நிலம்” அல்லது அக்கெல்தமா என்று அழைக்கப்பட்டதாக மத் 27:8-ம், அப் 1:19-ம் சொல்கின்றன.—இணைப்பு B12-ஐப் பாருங்கள்.
இந்த நாள்வரை: இந்தச் சம்பவங்கள் நடந்து கொஞ்சக் காலத்துக்குப் பிறகுதான் அவை பதிவு செய்யப்பட்டன என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. மத்தேயுவின் சுவிசேஷம் சுமார் கி.பி. 41-ல் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.
யெகோவா: இந்த வசனம் எபிரெய வேதாகமத்திலிருந்து (அடுத்த ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்) எடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள். இதனுடைய மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.
எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது அப்போது நிறைவேறியது: வசனங்கள் 9, 10-ல் உள்ள மேற்கோள் முக்கியமாக சக 11:12, 13-லிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அங்குள்ள வார்த்தைகளை மத்தேயு சுருக்கி எழுதியிருக்கிறார். அந்த வார்த்தைகள் நிறைவேறியதைப் பற்றிக் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அவர் எழுதினார். மத்தேயுவின் காலத்தில், தீர்க்கதரிசன புத்தகங்களின் வரிசையில் எரேமியாதான் முதலில் இருந்தது. அதனால் எரேமியா என்ற பெயர், சகரியா உட்பட அந்தத் தீர்க்கதரிசன புத்தகங்கள் எல்லாவற்றையும் குறித்திருக்கலாம்.—மத் 1:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
நீ யூதர்களுடைய ராஜாவா?: ரோம சாம்ராஜ்யத்தில், ரோமப் பேரரசரின் அனுமதி இல்லாமல் யாராலுமே ராஜாவாக ஆட்சி செய்ய முடியவில்லை. அதனால், இயேசு ஒரு ராஜாவா என்பதைப் பற்றியே பிலாத்து முக்கியமாக விசாரித்ததாகத் தெரிகிறது.
அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்: பிலாத்து சொன்னது உண்மை என்பதை உறுதிப்படுத்துவதற்காக இயேசு இப்படிச் சொன்னதாகத் தெரிகிறது. (மத் 26:25, 64-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.) தான் ராஜாதான் என்று பிலாத்துவிடம் இயேசு ஒத்துக்கொண்டபோதிலும், பிலாத்து நினைத்துக்கொண்டிருந்த அர்த்தத்தில் இயேசு ராஜாவாக இருக்கவில்லை. இயேசுவின் அரசாங்கம் ‘இந்த உலகத்தின் பாகமாக இல்லாததால்,’ அது எந்த விதத்திலும் ரோம சாம்ராஜ்யத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை.—யோவா 18:33-37.
ஒரு சிறைக்கைதியை விடுதலை செய்வது . . . வழக்கம்: நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களுமே இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். (மாற் 15:6-15; லூ 23:16-25; யோவா 18:39, 40) இந்த வழக்கம் பின்பற்றப்பட வேண்டும் என்றோ பின்பற்றப்பட்டதாகவோ எபிரெய வேதாகமத்தில் எந்தப் பதிவும் இல்லை. ஆனாலும், இயேசுவின் காலத்தில் யூதர்கள் அந்தப் பாரம்பரியத்தை ஏற்கெனவே பின்பற்றிவந்ததாகத் தெரிகிறது. அந்த வழக்கம் ரோமர்களுக்கு விசித்திரமாக இருந்திருக்காது; ஏனென்றால், மக்களுடைய சந்தோஷத்துக்காக அவர்கள் கைதிகளை விடுதலை செய்ததாக அத்தாட்சி காட்டுகிறது.
நியாயத்தீர்ப்பு மேடையில்: பொதுவாக, இது ஒரு திறந்தவெளி மேடையாக இருந்தது. அதிகாரிகள் இந்த மேடையில் உட்கார்ந்துகொண்டு மக்களிடம் பேசினார்கள், தீர்ப்பு கொடுத்தார்கள்.
ஒரு கனவு கண்டு: இது அநேகமாகக் கடவுள் வரவழைத்த கனவாக இருந்திருக்கும். சுவிசேஷ எழுத்தாளர்களில் மத்தேயு மட்டும்தான் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
தன் கைகளைக் கழுவினார்: ஒருவர் தன்மீது குற்றம் இல்லாததையும், ஏதோவொரு பொறுப்பிலிருந்து தான் விடுபட்டுவிட்டதையும் காட்டுவதற்காக அடையாள அர்த்தத்தில் இப்படிச் செய்வது வழக்கமாக இருந்தது. இந்த யூத வழக்கத்தைப் பற்றி உபா 21:6, 7 மற்றும் சங் 26:6 சொல்கின்றன.
இவனுடைய சாவுக்கு நாங்களும் எங்கள் பிள்ளைகளுமே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறோம்: வே.வா., “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் வரட்டும்.”
சாட்டையால் அடித்து: ரோமர்கள் குற்றவாளிகளை அடிப்பதற்கு ஒரு பயங்கரமான சாட்டையைப் பயன்படுத்தினார்கள். லத்தீனில் அதன் பெயர் ஃப்ளஜெல்லம். இந்தப் பெயரிலிருந்துதான் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொல் (ஃப்ராஜெல்லோயோ, “சாட்டையடி கொடுப்பது”) வந்திருக்கிறது. இந்தச் சாட்டையில், நிறைய கயிறுகளோ பின்னப்பட்ட தோல் வார்களோ ஒரு கைப்பிடியுடன் இணைக்கப்பட்டிருந்தன. சிலசமயங்களில், வலியைக் கூட்டுவதற்காக அந்தத் தோல் வார்களில் கூர்மையான எலும்புகளோ உலோகப் பொருள்களோ இணைக்கப்பட்டிருந்தன. அப்படிப்பட்ட சாட்டையடியால், ஆழமான உள்காயங்கள் ஏற்பட்டன, சதை நார்நாராகக் கிழிந்தது, சிலசமயங்களில் உயிர்கூட போனது.
ஆளுநர் மாளிகைக்குள்: ஆளுநர் மாளிகை என்பதற்கான கிரேக்க வார்த்தை, ப்ரைட்டோரியன் (இது பிரேட்டோரியம் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது). இது ரோம ஆளுநர்கள் தங்கிய அரசு மாளிகையாக இருந்தது. எருசலேமில் இருந்த மாளிகையை அநேகமாக மகா ஏரோது கட்டியிருக்கலாம். எருசலேமுடைய உயரமான பகுதியின், அதாவது தென் பகுதியின், வடமேற்கு மூலையில் அது அமைந்திருந்தது. (இணைப்பு B12-ஐப் பாருங்கள்.) பிலாத்து பெரும்பாலும் செசரியாவில் தங்கியிருந்தார்; ஆனால், பண்டிகை நாட்கள் போன்ற சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் எருசலேமில் தங்கினார். ஏனென்றால், அப்போது கலவரம் வெடிக்க வாய்ப்பு இருந்தது.
கருஞ்சிவப்பு நிற சால்வையை: ராஜாக்கள், நடுவர்கள், அல்லது படை அதிகாரிகள் போட்டிருந்த ஒருவித சால்வையை அல்லது அங்கியை இது குறித்தது. அது ஊதா நிற சால்வை என்று மாற் 15:17-ம் யோவா 19:2-ம் சொல்கின்றன. ஆனால் பழங்காலங்களில், சிவப்பும் நீலமும் கலந்த எந்தவொரு நிறத்தையும் “ஊதா” என்று மக்கள் அழைத்தார்கள். அதோடு, அவரவர் பார்த்த கோணத்தையும், ஒளியின் பிரதிபலிப்பையும், பின்னணியில் இருந்தவற்றையும் பொறுத்து அந்த நிறம் அவரவருக்கு வித்தியாசமாகத் தெரிந்திருக்கலாம். சுவிசேஷ எழுத்தாளர்கள் வித்தியாசமான நிறங்களைப் பதிவு செய்திருப்பது, அவர்கள் வெறுமனே மற்றவர்களுடைய பதிவைப் பார்த்து எழுதவில்லை என்பதைக் காட்டுகிறது.
கிரீடத்தை . . . கோலை: இயேசுவுக்கு ராஜா வேஷம் போட்டு அவரைக் கேலி செய்வதற்காக, எதிரிகள் அவருக்குக் கருஞ்சிவப்பு நிற சால்வையைப் போர்த்தியதோடு (மத் 27:28), அவருடைய தலையில் முள்கிரீடத்தை வைத்து, கையில் ஒரு கோலையும் கொடுத்தார்கள்.
அவருக்கு முன்னால் மண்டிபோட்டு: பொதுவாக, மேலதிகாரிகளுக்கு மரியாதை காட்ட அவர்கள் முன்னால் மண்டிபோடுவது வழக்கமாக இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், மண்டிபோடுவதன் மூலமாகவும் வீரர்கள் இயேசுவைக் கேலி செய்தார்கள்.—மத் 17:14-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
வாழ்க: நே.மொ., “சந்தோஷமாக இருங்கள்.” ரோமப் பேரரசனை வாழ்த்துவது போல அவர்கள் இயேசுவை வாழ்த்தினார்கள்; தன்னை ராஜா என்று இயேசு சொன்னதைக் கேலி செய்வதற்காக அவர்கள் அப்படி வாழ்த்தியதாகத் தெரிகிறது.
சிரேனே: வட ஆப்பிரிக்க கரையோரத்தின் பக்கத்தில், கிரேத்தா தீவின் தென்மேற்கில் (தென்மேற்கின் தென்பக்கத்தில்) இந்த நகரம் அமைந்திருந்தது.—இணைப்பு B13-ஐப் பாருங்கள்.
கட்டாயப்படுத்தி: மத் 5:41-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
சித்திரவதைக் கம்பத்தை: வே.வா., “மரண தண்டனைக் கம்பத்தை.”—சொல் பட்டியலில், “மரக் கம்பம்”; “சித்திரவதைக் கம்பம்” என்ற தலைப்புகளைப் பாருங்கள்; அடையாள அர்த்தத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கும் வசனங்களாகிய மத் 10:38; 16:24-ன் ஆராய்ச்சிக் குறிப்புகளையும் பாருங்கள்.
கொல்கொதா: இந்தப் பெயர், “மண்டையோடு” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. (யோவா 19:17-ஐப் பாருங்கள்; நியா 9:53-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள், அங்கே குல்கோலெத் என்ற எபிரெய வார்த்தை “மண்டை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) இயேசுவின் காலத்தில் இந்த இடம் எருசலேமின் மதில்களுக்கு வெளியே இருந்தது. ஆனாலும், அது சரியாக எங்கே இருந்ததென்று இன்னமும் தெரியவில்லை. (இணைப்பு B12-ஐப் பாருங்கள்.) கொல்கொதா ஒரு மலைமேல் இருந்ததாக பைபிள் சொல்வதில்லை. ஆனாலும், இயேசு கொல்லப்பட்டதைச் சிலர் தூரத்திலிருந்து பார்த்ததாகச் சொல்கிறது.—மாற் 15:40; லூ 23:49.
கசப்புப் பொருள்: கிரேக்கில், கோலீ. இங்கே, செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கசப்பான பானத்தை அல்லது வேறு ஏதாவதொரு கசப்பான பொருளை அது குறிக்கிறது. இந்தச் சம்பவம் ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் என்பதைக் காட்டுவதற்காக சங் 69:21-ஐ மத்தேயு மேற்கோள் காட்டுகிறார். செப்டுவஜன்ட் அந்த வசனத்தில், ‘விஷம்’ என்பதற்கான எபிரெய வார்த்தைக்கு இந்தக் கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது. அநேகமாக, மரண தண்டனை பெறுகிற நபர்களின் வலியைக் குறைப்பதற்காக எருசலேமில் இருந்த பெண்கள் திராட்சமதுவையும் இந்தக் கசப்பான பொருளையும் சேர்த்து ஒரு பானத்தைத் தயாரித்திருந்தார்கள். அதைக் குடிக்கக் கொடுப்பதற்கு ரோமர்களும் அனுமதித்தார்கள். ‘போதையூட்டும் வெள்ளைப்போளம்’ திராட்சமதுவில் கலக்கப்பட்டதாக இதன் இணைவசனமான மாற் 15:23 சொல்கிறது. அதனால், அந்தப் பானத்தில் வெள்ளைப்போளம், கசப்பான பொருள் ஆகிய இரண்டுமே இருந்ததாகத் தெரிகிறது.
குடிக்க மறுத்தார்: தன்னுடைய விசுவாசம் சோதிக்கப்பட்ட அந்தச் சமயத்தில், தன்னுடைய திறன்கள் எல்லாவற்றையும் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயேசு விரும்பியதாகத் தெரிகிறது.
குலுக்கல் போட்டுப் பார்த்து: சொல் பட்டியலில் “குலுக்கல்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
அவருடைய மேலங்கிகளைப் பங்குபோட்டுக் கொண்டார்கள்: மத்தேயுவும் மாற்குவும் லூக்காவும் குறிப்பிடாத இந்தக் கூடுதலான விவரங்கள் யோவா 19:23, 24-ல் கொடுக்கப்பட்டுள்ளன: அநேகமாக மேலங்கி, உள்ளங்கி ஆகிய இரண்டுக்குமே ரோமப் படைவீரர்கள் குலுக்கல் போட்டார்கள்; அவருடைய மேலங்கிகளை “நான்கு பாகங்களாக்கி ஆளுக்கொரு பாகத்தை எடுத்துக்கொண்டார்கள்”; உள்ளங்கியைக் கிழிக்க அவர்கள் விரும்பாததால் அதற்காகக் குலுக்கல் போட்டார்கள்; மேசியாவின் உடைக்காக அவர்கள் குலுக்கல் போட்டது சங் 22:18-ன் நிறைவேற்றமாக இருந்தது. மரண தண்டனையை நிறைவேற்றியவர்கள், குற்றவாளிகளின் உடைகளை வைத்துக்கொள்வது வழக்கமாக இருந்ததென்று தெரிகிறது. அதனால், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு குற்றவாளிகளின் உடையையும் மற்ற எல்லா பொருள்களையும் அவர்கள் உருவிக்கொண்டார்கள். இது குற்றவாளிகளுக்கு இன்னும் பெரிய அவமானமாக இருந்தது.
கொள்ளைக்காரர்களை: வே.வா., “கொள்ளைக்கூட்டத்தாரை.” இதற்கான கிரேக்க வார்த்தையான லீஸ்டெஸ், மற்றவர்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பதையும் குறிக்கலாம். சிலசமயங்களில், புரட்சிக்காரர்களையும் குறிக்கலாம். பரபாசுக்கும் இதே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. (யோவா 18:40) லூ 23:19-ன்படி, “தேசத் துரோகச் செயலில் ஈடுபட்டதற்காகவும் கொலை செய்ததற்காகவும்” அவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். லூ 23:32, 33, 39 ஆகிய இணைவசனங்கள், அந்த ஆட்களை ‘குற்றவாளிகள்’ என்று சொல்கின்றன. அந்த வார்த்தை, காகோர்காஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. அதன் நேரடி அர்த்தம், “கெட்டது செய்கிறவன் அல்லது அக்கிரமம் செய்கிறவன்.”
தலையை ஆட்டி: இந்தச் சைகை செய்யப்பட்டபோது பொதுவாக ஏதாவது வார்த்தைகளும் சொல்லப்பட்டன. இந்தச் சைகை அவமதிப்பையோ வெறுப்பையோ ஏளனத்தையோ காட்டியது. வழியில் போனவர்கள் தங்களுக்கே தெரியாமல் சங் 22:7-ஐ நிறைவேற்றினார்கள்.
சித்திரவதைக் கம்பத்தைவிட்டு: வே.வா., “மரண தண்டனைக் கம்பத்தைவிட்டு.”—மத் 27:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில், “மரக் கம்பம்”; “சித்திரவதைக் கம்பம்” என்ற தலைப்புகளையும் பாருங்கள்.
சித்திரவதைக் கம்பத்தைவிட்டு: வே.வா., “மரண தண்டனைக் கம்பத்தைவிட்டு.”—மத் 27:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில், “மரக் கம்பம்”; “சித்திரவதைக் கம்பம்” என்ற தலைப்புகளையும் பாருங்கள்.
ஆறாம் மணிநேரத்திலிருந்து: அதாவது, “மதியம் சுமார் 12 மணியிலிருந்து.”—மத் 20:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
ஒன்பதாம் மணிநேரம்வரை: அதாவது, “பிற்பகல் சுமார் 3 மணிவரை.”—மத் 20:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
ஏலி, ஏலி, லாமா சபக்தானி?: இவை அரமேயிக் மொழி வார்த்தைகள் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், இவை அநேகமாக அன்று பேசப்பட்ட எபிரெய மொழியின், அதாவது ஓரளவு அரமேயிக் கலந்திருந்த எபிரெய மொழியின், வார்த்தைகளாக இருந்திருக்கலாம். இவற்றை மத்தேயுவும் மாற்குவும் கிரேக்கில் எழுத்துப்பெயர்ப்பு செய்திருப்பதால், இவை உண்மையில் எந்த மொழியைச் சேர்ந்த வார்த்தைகள் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.
என் கடவுளே, என் கடவுளே: இயேசு தன் பரலோகத் தகப்பனை, ‘என் கடவுளே, என் கடவுளே’ என்று கூப்பிடுவதன் மூலம் சங் 22:1-ஐ நிறைவேற்றினார். இயேசுவின் வேதனைக் குரலைக் கேட்டவர்கள், சங் 22-ன் மற்ற வசனங்களில் அவரைப் பற்றிச் சொல்லப்பட்ட நிறைய தீர்க்கதரிசனங்களை நினைத்துப் பார்த்திருப்பார்கள். அதாவது, அவர் கேலி செய்யப்படுவார், ஏளனம் செய்யப்படுவார், அவருடைய கைகளும் பாதங்களும் தாக்கப்படும், அவருடைய அங்கிகளுக்காகக் குலுக்கல் போடப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்ததை நினைத்துப் பார்த்திருப்பார்கள்.—சங் 22:6-8, 16, 18.
எலியாவை: “யெகோவா என் கடவுள்” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெயப் பெயர்.
புளிப்பான திராட்சமதுவில்: வே.வா., “திராட்சமது காடியில்.” இது அநேகமாக, செறிவு குறைந்த, புளிப்பான திராட்சமதுவைக் குறிக்கலாம். இது லத்தீனில் அசிட்டம் (காடி) என்று அழைக்கப்படுகிறது, அல்லது தண்ணீர் கலக்கப்பட்டால் போஸ்கா என்று அழைக்கப்படுகிறது. ஏழை மக்களும் ரோமப் படைவீரர்களும்கூட, தாகத்தைத் தீர்த்துக்கொள்வதற்கு இந்த விலை குறைந்த பானத்தைத்தான் குடித்தார்கள். இதற்கான கிரேக்க வார்த்தை, ஓக்சோஸ். இதே வார்த்தையைத்தான் சங் 69:21-ல் செப்டுவஜன்ட் பயன்படுத்தியிருக்கிறது. மேசியாவுக்கு “காடி” கொடுக்கப்படும் என்று அந்த வசனம் முன்னறிவித்தது.
கோலில்: வே.வா., “குச்சியில்; தடியில்.” யோவானின் பதிவில் இது ‘மருவுச்செடியின் தண்டு’ என்று கொடுக்கப்பட்டுள்ளது.—யோவா 19:29; சொல் பட்டியலில் “மருவு” என்ற தலைப்பைப் பாருங்கள்.
இவனைக் காப்பாற்ற: சில பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில், “இன்னொருவன் ஒரு ஈட்டியை எடுத்து அவருடைய விலாவைக் குத்தினான்; இரத்தமும் தண்ணீரும் வெளியே வந்தன” என்ற வார்த்தைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மற்ற முக்கியமான கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இல்லை. இதேபோன்ற வார்த்தைகள் யோவா 19:34-ல் இருக்கின்றன. ஆனால் யோவா 19:33-ன்படி, இது நடந்தபோது இயேசு ஏற்கெனவே இறந்துபோயிருந்தார். நகலெடுப்பவர்கள் யோவானின் பதிவில் உள்ள வார்த்தைகளைப் பிற்பாடு மத்தேயுவின் பதிவிலும் சேர்த்ததாகப் பெரும்பாலான நிபுணர்கள் நம்புகிறார்கள்; நெஸ்லெ-ஆலந்த் மற்றும் ஐக்கிய பைபிள் சங்கத்தின் கிரேக்கப் பதிப்புகளின் ஆசிரியர்களும் இதைத்தான் நம்புகிறார்கள். வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் என்ற நிபுணர்கள்கூட இந்த வார்த்தைகள் “வேத அறிஞர்களால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் பலமாக ஊகிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்கள்; அவர்கள் தங்களுடைய கிரேக்கப் பதிப்பில் இந்த வார்த்தைகளை இரட்டை அடைப்புக்குறிகளில் சேர்த்தார்கள். மத்தேயுவின் பதிவுக்கு வித்தியாசமான கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாலும், யோவானின் பதிவில் எந்தக் குழப்பமும் இல்லாததாலும், யோவா 19:33, 34-ல் அந்தச் சம்பவங்கள் சரியான வரிசையில்தான் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதாவது, இயேசு இறந்த பிறகுதான் ரோமப் படைவீரன் அவரை ஈட்டியால் குத்தியதாகத் தெரிகிறது. இந்தக் காரணங்களால்தான், இந்த மொழிபெயர்ப்பு இந்த வார்த்தைகளை மத் 27:49-ல் சேர்க்கவில்லை.
உயிர்விட்டார்: வே.வா., “இறந்துவிட்டார்.” இங்கே “உயிர்” என்பதற்கான கிரேக்க வார்த்தையாகிய நியூமா, “மூச்சை” அல்லது “உயிர்சக்தியை” குறிக்கலாம். இதை ஆதரிக்கும் விதத்தில், இதன் இணைவசனமான மாற் 15:37-ல் எக்பினீயோ (நே.மொ., “மூச்சை விடு”) என்ற கிரேக்க வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது (அங்கே அது “இறந்துபோனார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; அடிக்குறிப்பில், “இறுதி மூச்சை விட்டார்” என்று கொடுக்கப்பட்டுள்ளது). “விட்டார்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, இயேசு எல்லாவற்றையும் முடித்துவிட்டதால் உயிர்வாழப் போராடுவதைத் தானாகவே நிறுத்திவிட்டார் என்பதை அர்த்தப்படுத்துவதாகச் சிலர் சொல்கிறார்கள். (யோவா 19:30) அவர் மனப்பூர்வமாக ‘தன்னுடைய உயிரையே கொடுத்தார்.’—ஏசா 53:12; யோவா 10:11.
ஆலயத்தின்: ஆலயம் என்பதற்கான கிரேக்க வார்த்தை, நாயோஸ். இந்த வசனத்தில் இந்த வார்த்தை, பரிசுத்த அறையும் மகா பரிசுத்த அறையும் சேர்ந்த முக்கியக் கட்டிடத்தைக் குறிக்கிறது.
திரைச்சீலை: அழகிய வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் திரைச்சீலை ஆலயத்தின் பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் இடையில் இருந்தது. பழங்கால யூதப் பதிவின்படி, இந்தக் கனமான திரைச்சீலையின் நீளம் சுமார் 18 மீ. (60 அடி), அகலம் சுமார் 9 மீ. (30 அடி), தடிமன் சுமார் 7.4 செ.மீ. (2.9 அங்.). யெகோவா இந்தத் திரைச்சீலையை இரண்டாகக் கிழித்ததன் மூலம், தன் மகனைக் கொன்றவர்கள்மேல் தன் கோபத்தைக் காட்டினார். அதோடு, பரலோகத்துக்குப் போகும் வாய்ப்பு அப்போது திறக்கப்பட்டதைக் காட்டினார்.—எபி 10:19, 20; சொல் பட்டியலைப் பாருங்கள்.
கல்லறைகள்: வே.வா., “நினைவுக் கல்லறைகள்.”—சொல் பட்டியலில், “நினைவுக் கல்லறை” என்ற தலைப்பைப் பாருங்கள்.
வெளியே வந்து விழுந்தன: இதற்கான கிரேக்க வினைச்சொல், ஈஜீரோ. இதன் அர்த்தம், “எழுவது.” இது உயிர்த்தெழுதலைக் குறிக்கலாம். ஆனால், அடிக்கடி வேறு அர்த்தங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, ஒரு குழிக்குள்ளிருந்து ‘வெளியே தூக்கிவிடுவதை’ அல்லது தரையிலிருந்து ‘எழுந்திருப்பதை’ இது குறிக்கலாம். (மத் 12:11; 17:7) இங்கே ‘பரிசுத்தவான்களை’ பற்றி அல்ல, ‘பரிசுத்தவான்களுடைய சடலங்களை’ பற்றி மத்தேயு சொல்கிறார். அநேகமாக, பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் கல்லறைகள் பிளந்து, அங்கிருந்த சடலங்கள் வெளியே வந்து விழுந்திருக்கும்.
அவர் உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு: அதாவது, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு. அடைப்புக்குறிகளுக்குள் உள்ளவை பிற்பாடு நடந்த சம்பவங்களைக் குறிக்கின்றன.
வந்த ஆட்கள்: வே.வா., “வெளியே வந்தவர்கள்.” இதற்கான கிரேக்க வினைச்சொல் ஆண்பாலிலும் பன்மையிலும் இருப்பதால் மக்களைக் குறிக்கிறது; வசனம் 52-ல் சொல்லப்பட்டுள்ள சடலங்களை (கிரேக்கில், அஃறிணையில் இருக்கிறது) குறிப்பதில்லை. அந்தப் பக்கமாகப் போனவர்கள், நிலநடுக்கத்தினால் வெளியே விழுந்த சடலங்களை (வச. 51) பார்த்து, நகரத்துக்குள் போய், அதைப் பற்றிச் சொன்னதைக் குறித்துதான் இங்கே சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
பரிசுத்த நகரத்துக்குள்: அதாவது, எருசலேமுக்குள்.—மத் 4:5-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
படை அதிகாரியும்: வே.வா., “நூறு வீரர்களுக்கு அதிகாரியும்.” அதாவது, “ரோமப் படையில் கிட்டத்தட்ட 100 வீரர்களுக்கு அதிகாரியாக இருந்தவரும்.” பிலாத்துவின் முன் இயேசு விசாரிக்கப்பட்டபோது இந்த உயர் அதிகாரி அங்கே இருந்திருக்கலாம்; இயேசு தன்னைக் கடவுளுடைய மகன் என்று சொல்லிக்கொண்டதாக யூதர்கள் குற்றம்சாட்டியதை அவர் கேட்டிருக்கலாம்.—மத் 27:27; யோவா 19:7.
மகதலேனா மரியாளும்: மகதலேனா (அர்த்தம், “மக்தலாவைச் சேர்ந்த”) என்ற சிறப்புப்பெயர், மக்தலா என்ற ஊரின் பெயரிலிருந்து வந்திருக்கலாம். அது கலிலேயா கடலின் மேற்குக் கரையில், கப்பர்நகூமுக்கும் திபேரியாவுக்கும் கிட்டத்தட்ட நடுவில் இருந்தது. மக்தலாதான் மரியாளின் சொந்த ஊராக அல்லது அவள் குடியிருந்த ஊராக இருந்ததென்று சிலர் சொல்கிறார்கள்.—மத் 15:39; லூ 8:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
யாக்கோபுக்கும்: இவர் “சின்ன யாக்கோபு” என்றும் அழைக்கப்படுகிறார்.—மாற் 15:40.
யோசேக்கும்: சில பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளில் “யோசே” என்பதற்குப் பதிலாக “யோசேப்பு” என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் இணைவசனமான மாற் 15:40-ல், பெரும்பாலான பழங்காலக் கையெழுத்துப் பிரதிகள் “யோசே” என்று குறிப்பிட்டுள்ளன.
செபெதேயுவின் மகன்களுடைய அம்மாவும்: அதாவது, அப்போஸ்தலர்களான யாக்கோபு மற்றும் யோவானின் அம்மாவும்.—மத் 4:21; 20:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
அரிமத்தியா: இந்த நகரத்தின் பெயர், “உயரம்” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. லூ 23:51-ல் இது ‘யூதேயர்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.—இணைப்பு B10-ஐப் பாருங்கள்.
யோசேப்பு: சுவிசேஷ எழுத்தாளர்கள் யோசேப்பைப் பற்றி வித்தியாசப்பட்ட தகவல்களைப் பதிவு செய்திருப்பது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருப்பதைக் காட்டுகிறது. யோசேப்பு பணக்காரராக இருந்தார் என்று வரி வசூலிப்பவரான மத்தேயு எழுதினார். யோசேப்பு ‘நியாயசங்கத்தின் மதிப்புக்குரிய உறுப்பினராக’ இருந்தார் என்றும், கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் காத்திருந்தார் என்றும் ரோமர்களுக்கு மாற்கு எழுதினார். யோசேப்பு “நல்லவர், நீதிமான்” என்றும், இயேசுவுக்கு எதிராக நியாயசங்கம் தீட்டிய சதித்திட்டத்தை ஆதரிக்காதவர் என்றும் அனுதாப குணமுள்ள மருத்துவரான லூக்கா எழுதினார். யோசேப்பு “யூதர்களுக்குப் பயந்து,” இயேசுவின் சீஷராக இருந்ததை ‘வெளியே சொல்லாமல் இருந்தார்’ என்று யோவான் மட்டும்தான் எழுதினார்.—மாற் 15:43-46; லூ 23:50-53; யோவா 19:38-42.
கல்லறையில்: வே.வா., “நினைவுக் கல்லறையில்.” இது இயற்கையான குகை அல்ல, ஆனால் மிருதுவான சுண்ணாம்புக் கற்பாறையில் குடையப்பட்ட அறையாக இருந்தது. இப்படிப்பட்ட கல்லறைகளில், சடலங்களை வைப்பதற்காகப் பெரும்பாலும் திட்டுகள் அல்லது மாடங்கள் குடையப்பட்டிருந்தன.—சொல் பட்டியலில், “நினைவுக் கல்லறை” என்ற தலைப்பைப் பாருங்கள்.
ஒரு பெரிய கல்லை: இது அநேகமாக ஒரு வட்டமான கல்லாக இருந்திருக்கும். ஏனென்றால், அது உருட்டி வைக்கப்பட்டதாக இந்த வசனம் சொல்கிறது. அதோடு, இயேசு உயிரோடு எழுப்பப்பட்டபோது ‘அது ஏற்கெனவே உருட்டப்பட்டிருந்தது’ என்று மாற் 16:4 சொல்கிறது. அதன் எடை ஒரு டன்னாக அல்லது அதற்கும் அதிகமாக இருந்திருக்கலாம்.
அடுத்த நாள்: அதாவது, நிசான் 15. நிசான் 14-க்கு அடுத்த நாள் எந்தக் கிழமையில் வந்திருந்தாலும் சரி, அது எப்போதுமே ஒரு ஓய்வுநாளாக, அதாவது பரிசுத்தமான நாளாக, இருந்தது. அதோடு கி.பி. 33-ல், நிசான் 15-ஆம் தேதி வாராந்தர ஓய்வுநாளில் வந்தது. அதனால், அது “பெரிய” ஓய்வுநாளாக, அதாவது இரட்டை ஓய்வுநாளாக, இருந்தது.—யோவா 19:31; இணைப்பு B12-ஐப் பாருங்கள்.
ஆயத்த நாளுக்கு: வாராந்தர ஓய்வுநாளுக்கு முந்தின நாள்தான் ஆயத்த நாள் என்று அழைக்கப்பட்டது. இந்த நாளில்தான் ஓய்வுநாளுக்குத் தேவையான ஏற்பாடுகளை யூதர்கள் செய்தார்கள். அதாவது, கூடுதலாக உணவு தயாரித்தார்கள், ஓய்வுநாள் முடியும்வரை தள்ளிப்போட முடியாத வேலைகளையும் செய்து முடித்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், ஆயத்த நாள் நிசான் 14-ல் வந்தது.—மாற் 15:42; சொல் பட்டியலில் “ஆயத்த நாள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
மூன்று நாட்களுக்கு: இது மூன்று நாட்களை முழுமையாகக் குறிப்பதில்லை; ஏனென்றால், ‘மூன்றாம் நாள்வரை கல்லறையைக் காவல் காக்கும்படி’ கேட்கப்பட்டது, நான்காம் நாள்வரை அல்ல.—மத் 27:64; மத் 12:40-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
முதலில் செய்த மோசடியைவிட இந்த மோசடி படுமோசமாக இருக்கும்: “இந்த மோசடி” என்று சொல்லப்பட்டது இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறிப்பதாகத் தெரிகிறது; ‘முதலில் செய்த மோசடியைவிட,’ அதாவது இயேசு தன்னை மேசியா என்று சொல்லிக்கொண்டதைவிட, இது படுமோசமாக இருக்கும் என்று எதிரிகள் சொன்னதாகத் தெரிகிறது. இயேசு உயிரோடு எழுப்பப்பட்டால், அவர் சொல்லிக்கொண்டது போலவே அவர்தான் மேசியா என்பது நிரூபிக்கப்படும் என்று அந்த எதிரிகளுக்கு அநேகமாகத் தெரிந்திருக்கும்.
காவலர்களை: நே.மொ., “ஒரு காவலரை.” பிலாத்து அநேகமாக ரோமப் படைவீரர்கள் சிலரை அனுப்பியிருப்பார். (மத் 28:4, 11) அந்தக் காவலர்கள் யூதர்களுடைய ஆலயத்தின் காவலர்களாக இருந்திருந்தால், யூதர்கள் பிலாத்துவிடம் அனுமதி கேட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமல்ல, இயேசுவின் உடல் காணாமல்போன விஷயம் ஆளுநருடைய காதுக்கு எட்டினால் அவரிடம் பேசிக்கொள்வதாக குருமார்கள் வாக்குக் கொடுத்தார்கள்.—மத் 28:14.