பூமி அதிர்ந்தபோது, அவர்கள் உதவிக்கு வந்தார்கள்
சில்லியிலுள்ள விழித்தெழு! நிருபர் எழுதியது
தரை மேலும் மேலுமாக அதிர்ந்து நடுங்கியது. எங்களுடைய அறையின் வாசலுக்கு நாங்கள் மாறிச் சென்றோம். சமையல் அறையில் இருந்தவர்கள், கப்போர்ட்டுகளின் கதவுகளை மூடிய விதத்தில் இருக்க அவற்றை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில், மேல் மாடியில் புத்தகங்கள், பாட்டில்கள், வீட்டிற்குள் வளரும் செடிகள், ஜாம் வைக்கும் ஜாடிகள் எல்லாம் தரைக்கு விழுந்து நொறுங்கின. எவ்வளவு நேரம் இது நீடிக்குமோ என்று பயந்தோம்.
எவ்வளவு நேரம் எடுத்தது என்பதை நாங்கள் கணக்கு வைக்கவில்லை, ஆனால் அடுத்த நாள், அது இரண்டு நிமிடங்களுக்கு நீடித்ததாக செய்தித்தாள்கள் அறிவித்தன. இரண்டு நிமிடங்கள் தானே, அது அவ்வளவு நீண்ட நேரம் இல்லையே என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் உங்கள் பாதத்திற்கு கீழே இருக்கும் தரை அதிர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கும்போது, அது எவ்வளவு நீண்ட நேரம் நீடிப்பதாக தோன்றக்கூடும் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!
இங்கே சில்லியிலுள்ள சான்டியகோ நகரத்தில் பூமி அதிர்ந்தபோது, தினம் மார்ச் 3, 1985, ஞாயிற்றுக் கிழமை, நேரம் மாலை 7:47-ஆக இருந்தது. இது நடந்தபோது நாங்கள் உவாட்ச் டவர் சங்கத்தின் கிளைக்காரியாலயத்தில் எங்களுடைய அறைகளில் இளைப்பாறிக் கொண்டிருந்தோம். எங்களுடைய குடும்பத்தின் மற்ற அங்கத்தினர் சமையல் அறையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.
இந்த பூமி அதிர்ச்சியின் விளைவாக மணி கணக்கில் மின்சாரம் இல்லாமல் இருந்தோம். ஆகையால் உடனடியாக, எல்லோரும் அவரவரிடமிருந்து டார்ச் லைட்டுகளையும் மெழுகுவத்திகளையும் டிரான்ஸ்ஸிஸ்டர் ரேடியோக்களையும் வெளியே கொண்டுவந்தார்கள். ரேடியோ மூலமாக வந்த செய்தியின் மூலம் சான்டியகோவின் கடற்கரையோர இடங்களும் பழைய பகுதிகளும் மோசமாக தாக்கப்பட்டிருந்தன என்று அறிந்தோம். “அங்கு வசிக்கும் நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் எப்படி இருக்கிறார்களோ?” என்று நினைத்தோம். அவர்களோடு நாங்கள் தொடர்புகொள்ள முடியவில்லை, ஏனெனில் தொலைபேசி கம்பிகள் அவ்விடங்களில் சேதமடைந்திருந்தன. எங்களுக்கு கிடைத்த முதல் தொலைபேசி சந்திப்பு எங்களுடைய புதிய கிளைக் காரியாலயம் கட்டப்படும் இடத்திலிருந்தாகும். அங்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை என்றும், கட்டப்படும் புதிய தொழிற்சாலை கட்டிடம் உறுதியாக நின்றுகொண்டிருந்தது என்றும் கேள்விப்பட்டபோது எங்கள் கவலை தணிந்தது. உண்மையில், அன்றைய தினம் ஆபீஸ் பகுதியில் கட்டப்பட்ட செங்கல் சுவர் ஒன்று மட்டுமே விழுந்தது!
அன்றைய இரவு எங்களுக்கு சரியான தூக்கம் இல்லை. நாங்கள் படுக்கைக்கு சென்று உறங்கினபோதுதானே மற்றொரு பூமி அதிர்ச்சி எங்கள் படுக்கையை ஆட்டி, எங்களை எழுப்பிவிட்டது. அடுத்த நாள் பூமியதிர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட சேதத்தை செய்தித்தாள்கள் படங்களோடு அறிவித்தன. ரிச்சர் ஸ்கேலில் (பூமி அதிர்வின் அளவை பதிவு செய்யும் கருவி) இந்த அதிர்ச்சி 7.7 எட்டியது. பட்டணங்கள் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் இருந்தன. பாலங்கள் அழிக்கப்பட்டிருந்தன. 140-ற்கும் அதிகமான ஆட்கள் மாண்டனர், சுமார் 1,50,000 பேர் வீடுகளில்லாமல் ஆக்கப்பட்டனர். 180 டாலர்கள் (U.S.) மதிப்புள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டன! ஏன், அட்லாண்டிக் கரையோரத்தில் 1,350 கிலோ மீட்டர் (840 மைல்) தூரத்திலுள்ள ஆர்ஜன்டீனாவிலுள்ள பியூனோஸ் ஏறீஸ் என்ற நகரத்திலுங்கூட இந்த பூமியதிர்ச்சி உணரப்பட்டது!
விரைவில் உதவி தேவைப்பட்டது!
கிளை காரியாலயத்திலுள்ள பற்பல அங்கத்தினர் மாச்சாலி, மெலிப்பா, ரென்கோ, சான் ஆண்டோனியோ, வால்பாராய்சோ, மற்றும் வின்னா டெல் மார் ஆகிய இடங்களை நேரில் சென்று சந்திப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். காரணம்? நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள், அவசர உதவி கொடுக்கப்பட அவர்களுக்கு உடனடியாக என்ன தேவை என்பதை கண்டுகொள்வதற்காக.
எங்கு பார்த்தாலும் பாழ்படுத்தப்பட்ட நிலையின் காட்சிகள் இருந்தன. பெரும்பாலான சேதம் பழைய கட்டிடங்களுக்கு ஏற்பட்டிருந்தபோதிலும், சமீபத்தில் கட்டப்பட்ட சில கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன. உதாரணமாக ரெனாக்காவிலுள்ள ஒரு எட்டு மாடி கட்டிடம் அவ்வளவு பலமாக அசைக்கப்பட்டதனால், டவர் ஆப் பிஸா (பிஸா கோபுரம்)-வைப்போல் சாய்ந்து கொண்டிருந்தது. அது உடைத்து நொருக்கிவிட வேண்டியதாக இருந்தது.
நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களைப் பற்றி என்ன? அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த 16,000 சாட்சிகளில் ஒருவருங்கூட உயிரை இழக்கவில்லை, காயப்படவுமில்லை என்பதை அறிய நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தோம்! சான்டியகோ-விலுள்ள சபைகளும் புன்டா அரினாஸ் மற்றும் ஐக்யூக்யூ ஆகிய தூர இடங்களிலுள்ள சபைகளும், தொலைபேசி மூலம் எங்களிடம் தொடர்பு கொண்டு, தாங்கள் எப்படி உதவியளிக்கக்கூடும் என்று கேட்டார்கள். செய்தி விரைவில் பரவிற்று, சிலர் ஒரு சில மணிநேரத்துக்குள், உணவு, உடை, கம்பளி மற்றும் வேறு உபயோகமுள்ள பொருட்களுடன் வந்துசேர ஆரம்பித்தனர். சீக்கிரத்தில் 5.5 டன் கொள்திறமுள்ள எங்களுடைய இரண்டு டிரக்குகள் நிரப்பப்பட்டு புறப்பட்டன. அன்றய தினம் டிரக்குகள் சாயங்காலம் நேரம்சென்று வீடுதிரும்புவதற்குள்ளாக, மற்றொரு முறை பொருட்களை ஏற்றிகொண்டு செல்ல போதுமான நன்கொடை பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டன. ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு இதே விதமாக பொருட்கள் வந்து குவிந்துகொண்டே இருந்தன.
பூமியதிர்ச்சி ஏற்பட்டு இரண்டாவது வாரக்கடைசியில், அருகிலுள்ள சபைகளிலிருந்தும் புதிய கிளைக் காரியாலய கட்டிட வேலையாட்கள் மத்தியிலிருந்தும் தங்களை முன்வந்து அளித்த 110 சகோதரர்கள் அதிக மோசமாக பாதிக்கப்பட்ட சில பட்டணங்களுக்கு பிரயாணம் செய்து மர சட்டங்களால் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட 24 தங்கிடங்களை எழுப்பினார்கள். இந்த கட்டுரையை எழுதுகையில் ஏற்கெனவே இதைப்போன்ற 69 தங்கிடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன, பலத்த மழை துவங்குவதற்கு முன்பு மேலும் அனேக தங்கிடங்களை கட்டி முடிக்க எதிர்பார்த்திருந்தார்கள்.
அளிக்கப்பட்ட நடைமுறையான உதவியும் இந்த தங்கிடங்களும் காணக்கூடிய விதத்தில் நம்முடைய சகோதரத்துவத்தை எடுத்துகாட்டியிருக்கின்றன என்று ஒரு சபை எங்களுக்கு எழுதியது. “Los hermanos se pasaron!” (“சகோதரர்கள் தங்களால் கூடியதற்கும் அதிகம் செய்தார்கள்!) நாம் உண்மையிலேயே ஒரு சர்வதேச சகோதரகூட்டுறவின் பாகமாக இருந்தோம் என்பதை நெஞ்சைத் தொடும் விதமாக எங்களுக்கு நினைப்பூட்டப்பட்டது, ஏனெனில் பூகம்பம் ஏற்பட்ட தேதியைத் தொடர்ந்த நாட்களிலும் வாரங்களிலும், ஆர்ஜன்டீனா, ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய இடங்களிலுள்ள சாட்சிகள் இங்கே சில்லியிலுள்ள தங்களுடைய கிறிஸ்தவ சசோதரர்களின் சுகநலத்தைக் குறித்து தொலைபேசியின் மூலம் விசாரித்தார்கள். அவர்கள் விசாரித்ததோடுகூட, எங்களுடைய “குடும்பத்தினரின்” தேவைகளை திருப்திசெய்ய தயாள குணத்தோடு ஏராளமான நன்கொடைகள் அனுப்பினார்கள்.
தன்னைத்தானே பரீட்சை செய்ய நேரம்
“பூமியதிர்ச்சி!” என்ற கூக்குரலும் அதில் உட்பட்டுள்ள அழிவுக்கேதுவான சக்தியும் மக்கள் கடவுளுடன் தாங்கள் கொண்டிருக்கும் உறவைக் குறித்து சிந்திக்கும்படி செய்கிறது. உண்மையில், சில்லியில் இங்கே பூமியதிர்ச்சி ஏற்பட்டு சில நிமிடங்களுக்குள், அக்கம் பக்கத்திலுள்ள அயலார் பாதுகாப்பைத் தேடி எங்ளுடைய ராஜ்ய மன்றங்களுக்கு வந்தார்கள். மெரிப்பிலியாவிலுள்ள ஒரு சாட்சி தான் வசிக்கும் இடத்தில் யாவராலும் நன்கு அறியப்பட்டவராய் இருந்தார். அன்றைய இரவு அவருக்கு அனேக விருந்தாளிகள் இருந்தார்கள். ஒவ்வொரு அதிச்சிக்கு பின்பும், மேலும் அதிகமான அயலார் பாதுகாப்பிடத்தை தேடி தன் வீட்டிற்கு வந்தார்கள். தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் ஒரு கூடாரத்தை எழுப்பி, அங்கே கடைசி நாட்களில் “பூமியதிர்ச்சிகள் பல இடங்களில் உண்டாகும்,” என்பதாக இயேசு கூறிய வார்த்தைகளை கலந்தாலோசிப்பதில் அவர் அனேக மணிநேரம் இரவுவரை செலவழித்தார்.—மாற்கு 13:3-8.
வின்னா டெல் மாரில் ஒருவன் தன் பைபிள் படிப்பை நிறுத்திவிட்டு, இனிமேல் ராஜ்ய மன்றத்திற்கு வரவே மாட்டேன் என்று கூறியிருந்தான். ஆனால் அன்றைய இரவு பூகம்பத்திற்கு பின்பு அவன் தன்னை எங்கே கண்டான்? ஏன், நிச்சயமாகவே ராஜ்ய மன்றத்தில்தான்! அவனும் அவனுடைய குடும்பத்தாரும் வரவேற்பு கொடுக்கப்பட்டு தற்காலிகமாக தங்குமிடம் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் காட்டப்பட்ட அன்பான உபசரிப்பால் அவன் வெகுவாக உள்ளத்தில் தொடப்பட்டதனால், தன்னுடைய வேதப்படிப்பை மீண்டும் தொடருவதற்கு தீர்மானமுள்ளவனாய் இருந்தான்.
நம்முடைய சகோதரில் சிலர் மிகவும் அற்புதமான விதத்தில் தங்களுடைய உயிரை இழக்காமல் தப்பித்துக் கொண்டனர். உதாரணமாக, விக்குனா ரோஜாஸ் சபையில், ஒரு சகோதரன் சமீபத்தில்தானே மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பி இன்னமும் படுக்கையில் இருந்தான். அன்றைய இரவு தன் மனைவியும் மகளும் அவனை வீட்டில் தனியே விட்டுவிட்டு, கூட்டத்திற்கு சென்றிருந்தனர். பூமியதிர்ச்சி தாக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதானே, அவன் தன் மனைவியும் மகளும் வீடு திறும்புவதற்கு முன்பு, தேநீர் போடுவதற்கு தண்ணீர் சூடுசெய்து ஆயத்தமாக வைப்பதன் மூலம் அவர்களுக்கு எதிர்பாறாத ஆச்சரியத்தை கொடுக்கலாமென்று எண்ணி, அதிக முயற்சி எடுத்து படுக்கையை விட்டு எழுந்து, சமையல் அறைவரைக்கும் சென்றான். அந்த சமயம்தானே பூமியதிர்ச்சி ஏற்பட்டது. மீண்டும் தன்னுடைய அறைக்கு அவன் திரும்பினபோது, தன்னுடைய படுக்கை நொருங்கி விழுந்துகிடந்த மூன்று மீட்டர் (9 அடி) உயரமுள்ள ஒரு சுவரின் கீழ் இருப்பதாக கண்டான். சபையல் அறைக்கு சென்று தேனீர் தயாரிக்கலாம் என்று தான் நினைத்ததற்காக அவன் எவ்வளவு நன்றியுள்ளவனாயிருந்தான்!
தங்களுடைய உடைமைகள் யாவற்றையும் இழந்துவிட்ட போதிலும், நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களின் பிரதிபலிப்பை, அவர்கள் தளரா நம்பிக்கையார்வம் கொண்டிருப்பதை காண்பது விசுவாசத்தை பலப்படுத்துவதாய் இருந்தது. அனேகர் கூறினதுபோல்: “எங்களுடைய வீடுகள் இடிந்து வீழ்ந்தாலும் எங்களுடைய விசுவாகம் உறுதியாக இருக்கிறது!” (g85 11/8)