உலகத்தைக் கவனித்தல்
உலகம் முழுவதிலும் போதை மருந்தின் துர்பிரயோகம்
உலகம் முழுவதிலும் 480 லட்சம் ஆட்கள் போதை மருந்தைத் துர்பிரயோகம் செய்பவர்களும், தவறான நோக்கத்துக்காக பயன்படுத்துகிறவர்களுமாக இருக்கிறார்கள் என்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது. இதில் சுமார் 17 லட்சம் பேர் அபினிக்கு அடிமைகளாகவும் 300 லட்சம் பேர் கஞ்சா புகைக்கிறவர்களாகவும் 7,00,000 பேர் ஹிரோயின் உபயோகிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். எளிதில் ஒருவரை அடிமையாக்கிவிடக்கூடிய போதை மருந்தாக இப்பொழுது கருதப்படும் கோக்கேயினுக்கு அடிமையாகிவிட்டிருப்பவர்களின் எண்ணிக்கை பல லட்சமாக இருப்பது மதிப்பிடப்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவன அதிகாரிகளின்படி எல்லா தேசங்களிலிருந்தும் தகவல் கிடைக்காததன் காரணமாக இது மேலோட்டமான ஒரு எண்ணிக்கையாக மட்டுமே இருக்கிறது.
ஏய்ட்ஸை ஒரு கருவியாகவா?
ஐக்கிய மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களில் இப்பொழுது ஏய்ட்ஸ் சம்பந்தப்பட்ட வழக்குகள் நிறைய வருகின்றன. காவல்துறை அதிகாரிகளின் மீது எச்சில் துப்பி அல்லது அவர்களைக் கடிந்திருக்கும் ஏய்ட்ஸ் நோயாளிகளாகிய பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள், வலிந்து தாக்கும் குற்றச் சாட்டுகளைப் பதிவு செய்கிறார்கள் என்பதாக தி நேஷனல் லா ஜர்னல் அறிவிக்கிறது. மூன்று வித்தியாசமான வழக்குகளில், சாவுக்கேதுவான இந்நோய் பரவும் அபாயம் இருப்பதன் காரணமாக வழக்கறிஞர்கள் இதுபோன்ற பெருங் குற்றச்சாட்டுகளைக் குறித்து ஏதாவது செய்யப்பட வேண்டும் என்று சொன்னார்கள். “உமிழ் நீரானது, திறந்த காயம், கண்கள் அல்லது இரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதன் மூலமாக ஏய்ட்ஸ் கடத்தப்படலாம்” என்று அவர்கள் நம்புகிறார்கள். வழக்கு விசாரணை நடத்திய வழக்கறிஞர் ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “யார் மீது வழக்குத் தொடுக்கலாம் என்று நாங்கள் தேடிக் கொண்டில்லை. ஆனால் எவராவது ஒரு நோயை ஒரு எதிர் கருவியாகப் பயன்படுத்தினால் நாங்கள் அதைப் பொறுத்துக் கொள்ளப்போவதில்லை.”
மத்திய கிழக்கில் எலித்தொல்லை
இஸ்ரேல்-சீரியா போர் நிறுத்த எல்லை நெடுகிலும் நெருக்கடித் தொல்லை இருந்து வருகிறது. மனிதர்கள் மத்தியில் அல்ல. ஏனென்றால் இந்தப் பகுதியில் அவ்வளவாக மக்கள் குடியிருப்பதில்லை. ஆனால் அது வயல் எலிகளின் தொல்லையாகும். அங்கு 2500 லட்சம் எலிகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்த எலிகள் கூட்டங்கூட்டமாக ஆறுகளிலும் கோலன் ஹைட்ஸிலுள்ள மலைப்பாறைகளிலிருந்தும் குதித்து தங்களை மாய்த்துக் கொள்கின்றன. இவைகளைக் கூர்ந்து கவனித்து வரும் விஞ்ஞானிகளின் கருத்துப்படி, தங்களுடைய நெருக்கடி பிரச்னையைத் தீர்ப்பதற்காக கொறிக்கும் இந்த விலங்கினம் தங்களுடைய இயல்புணர்ச்சியில் இவ்விதமாக நடந்துகொள்கின்றன.
எரிமலை புதிய தீவை உருவாக்குகிறது
1986 ஜனவரி 20 திங்கட்கிழமை டோக்கியோவுக்கு தெற்கே 750 மைல் (1200 கி.மீ.) தொலைவில் ஒரு தீவு தோன்றியது. மேற்கு பசிபிக் சமுத்திரத்தின் அடியிலிருந்து எரிமலை வெளிப்பட்டு புதிய பிறைவடிவில் தீவு ஒன்று உருவானது. வெள்ளிக்கிழமைக்குள் இந்தத் தீவு கிழக்கு மேற்காக 2300 அடி (700 மீட்டர்) நீளமாகவும் 650 அடி (200 மீட்டர்) அகலமாகவும் பரவ ஆரம்பித்தது. இது இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று ஜப்பானின் கடல் சார்ந்த பாதுகாப்பு ஏஜென்ஸி விழித்தெழு! பத்திரிகையிடம் சொன்னது. புதிதாக தோன்றிய இந்தத் தீவு மறைந்துவிடக்கூடும். மைனிச்சி டெய்லி நியூஸ் பத்திரிகைச் சொல்வதுபோல, இதே பிராந்தியத்தில் 1907-1908 மற்றும் 1914-ல் எரிமலை வெடிப்புக்குப் பின் தோன்றிய புதிய தீவுகள் வெகு சீக்கிரத்திலேயே மறைந்து விட்டன.
உயர் தொழில் நுணுக்க கடத்தல்
ஐக்கிய மாகாணங்களிலிருந்து உயர் தொழில் நுணுக்க கருவிகள் கடத்தப்படுவதற்குப் பேராசையே முக்கியமான காரணமாக இருக்கிறது என்று நியு யார்க் டைம்ஸ் அறிக்கைச் செய்கிறது. இவற்றில் சில அணு ஆயுதக் கருவிகளைப் பரிசோதிப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன. ஐக்கிய மாகாணங்களின் சுங்கபணி ஏஜென்ட் ரிச்சர்ட் ராபர்ட்ஸ் பின்வருமாறு சொன்னார்: ‘அண்டை நாட்டு அரசாங்கங்கள் விலைமதிக்கமுடியாத ஐக்கிய மாகாணங்களின் தொழில் நுணுக்கத்தைச் சட்டத்துக்கு மாறாக பெறுவதற்கு அவர்கள் தங்களின் இரகசிய பணி வேலையாட்களை உபயோகிக்கத் தேவையில்லை. தங்களின் நாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட கருவி வேண்டும் என்று தெரியப்படுத்தும்போதும் அதற்கு உயர்ந்த டாலர் கொடுக்க மனமுள்ளவர்களாக இருக்கும்போதும் அதை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார். ஏனென்றால் பேராசை அங்கு வந்துவிடுகிறது. யார் கடத்தல் செய்வது? பெரும்பாலும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகள் அதிகமான பணத்தைச் சம்பாதிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்போது இதைச் செய்கிறார்கள் என்று ஐக்கிய மாகாணங்களின் துணை வழக்கறிஞர் சொன்னார். மேலும் அவர் அவர்கள் சர்ச்சுக்குப் போகும் நல்ல நடத்தையுள்ள ஆட்கள் என்றும் சொன்னார்.
நிக்கோடீனைச் சார்ந்து வாழும்நிலை
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் கென்டக்கி பல்கலைக்கழகத்தில் நடந்த, புகைப்பிடித்தலைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் இந்த அறிக்கைக் கொடுக்கப்பட்டது: புகைப்பிடிக்கும் பழக்கம், உடல் அதன் மீது சார்ந்து வாழும் நிலைமைக்கு வழிநடத்தும் என்பதை அண்மைக் கால விஞ்ஞான அத்தாட்சி காண்பித்திருக்கிறது. புகையிலையில் காணப்படும் நிக்கோடீன் என்ற மருந்து, போதைப் பொருளை ஒத்திருக்கிறது என்று போதை மருந்து துர்பிரயோக ஆராய்ச்சி மைய தேசீய நிறுவனத்தின் பிரதிநிதி குறிப்பிட்டார். மேலும் “நிக்கோடீன் என்பது ஹிரோயின் வகையைச் சார்ந்த தூண்டுதலளிக்கும் பொருள் என்று சொல்லலாம்” என்பதாக அவர் சொன்னார். புகைப்பிடித்தலை நிறுத்த முயற்சிக்கும் ஆட்களில் 80 சதவிகிதமான ஆட்கள் ஒரு ஆண்டுக்குள்ளாகவே தோல்வியடைவதை ஐக்கிய மாகாணங்களின் அறுவை மருத்துவ தலைவர் கண்டுபிடித்ததை விளங்கிக்கொள்ள இது உதவுகிறது.
◻ஐக்கிய மாகாணங்களின் காங்கிரஸ் இயற்றிய சட்டம், புகையில்லாத புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களும் அவர்களின் பொருட்களின் மேல் எச்சரிக்கை அறிவிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னது. எச்சரிக்கை மூன்று, சுற்றி வரும் செய்திகளைக் கொண்டிருக்க வேண்டும். (1) பொடி மற்றும் சுவைக்கும் புகையிலை வாய் புற்று நோய்க்குக் காரணமாக இருக்கும். (2) ஈறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் பற்கள் இழப்புக்கும் காரணமாக இருக்கும். (3) சிகரெட்டுகளுக்குப் பாதுகாப்பான மாற்று பொருட்கள் அல்ல என்றும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
குழந்தை உணவு எச்சரிப்பு
ஆராய்ச்சி காண்பிக்கிறவிதமாக, சிறு நீரகம் நன்றாக வேலைச் செய்யாத குழந்தைகளுக்கு அலுமினியம் கலந்த உணவைக் கொடுக்கக்கூடாது. சிறு நீரகம் வேலைச் செய்யாததால் இறந்த இரண்டு குழந்தைகளின் மரணம் பற்றி, புலனாய்வுச் செய்த மியாமி பல்கலைக்கழக மருத்துவர்கள், இதற்குரிய காரணத்தைப் பின்வருமாறு கண்டுபிடித்தார்கள். அந்தக் குழந்தைகளின் சிறு நீரகங்கள் அலுமினிய உலோகத்தின் நச்சுத் தன்மையை மேற்கொள்ள முடியாத காரணத்தால் அவைகளின் மூளையில் இந்த உலோகம் அதிகமான அளவில் இருந்தது. புதிய விஞ்ஞானி பத்திரிகை இவ்விதம் அறிக்கைச் செய்தது: பவுடர் பால் உணவைக் குடிக்கும் குழந்தைகள் தாய் பாலில் காணப்படும் அலுமினியத்தைவிட 50 மடங்கு அதிகமான அலுமினியத்தைக் குடிக்கிறார்கள்.
“இயற்கைத் தாயை” ஏமாற்றுதல்
மெழுகைத் தயாரிக்க தேனீக்கள் செலவிடும் ஏழு-லிருந்து பத்து நாட்களை இப்பொழுது மீத்துவிடலாம் என்பதாக செயற்கை அடையைக் கண்டுபிடித்திருக்கும் ஒருவர் சொல்லுகிறார். உயர் அடர்த்தியுள்ள பாலி எத்திலீன் அடைகளை உண்டுபண்ண ஒன்பது வருடங்கள் செலவிடப்பட்டிருக்கின்றன. இந்தக் காலப் பகுதியில் செயற்கைத் தேன் கூடுகள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை. இதில் மற்றொரு அனுகூலம் என்னவென்றால், உயர் வேக சுழற்சி இயந்திரத்தை உபயோகித்து ஒரே நிமிடத்தில் தேனைப் பிழிந்தெடுத்துவிடலாம். தற்போது பயன்படுத்தப்படும் முறைகளில் இதற்கு அரைமணி நேரமாகிறது. ப்ளாஸ்டிக் அடைகள் உருகிவிடுவதோ உடைந்துவிடுவதோ இல்லை. அவற்றை அந்தப் பூச்சுகள் துளைத்துக் கெடுத்துவிடுவது கிடையாது. அந்தப் பூச்சுக்களைக் கொல்ல மருந்துகளைப் பயன்படுத்துவது அவசியமிராது. இதனால் சுத்தமான தேன் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அவசியமானால் இந்தச் செயற்கைக் கூடுகளில் நோய் நுண்மங்கள் இல்லாதபடி அவற்றைச் சுத்தம் செய்துவிடலாம். கலிபோர்னியாவில் இதைக் கண்டு பிடித்தவர், புதிய செயற்கைக்கூடுகள், தேனீ வளர்ப்பை இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்துவதை அனுமதிக்கும் என்பதாக நம்புகிறார்.
‘லாட்டரி இல்லை இழப்பு இல்லை’
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள கலிபோர்னியா நகரில் அண்மையில் லாட்டரி விற்பனை ஆரம்பமானபோது 260 லட்சம் ரூபாயைப் பரிசுப் பொருளாகப் பெறுவது அநேக ஆட்களின் மனதுக்குக் கவர்ச்சியாக இருந்தது. லாட்டரி விற்பனையை ஊக்குவிக்க, அநேக கடைகள், வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் வாங்கும் பொருட்களின் தொகைக்கு ஏற்ப லாட்டரி சீட்டுகளை வழங்கினார்கள். ஆனால் ஒரு தொகுதியான கடைகள், இதில் பங்குகொள்ள மறுத்தனர். அந்தக் கடைகளில், “லாட்டரி இல்லை. வரிசை இல்லை. இழப்பு இல்லை” என்பதாக எழுதப்பட்டிருந்தது. ஏன்? “லாட்டரி, வாடிக்கையாளர்களுக்கு நல்ல பேரம் என்பதாக நாங்கள் நினைக்கவில்லை” என்பதாக அந்தக் கடைகளின் விற்பனைத் தலைவர் விளக்கினார். மேலுமாக “எதையும் செய்யாமல் எதையோ பெற்றுக்கொள்ளலாம் என்பதையே அது பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறது. இது முற்றிலும் தவறானதாகும்.” விற்பனைச் சரிந்துவிட்டதா? லாட்டரி ஆரம்பித்தப் பின் முதல் வாரம் நாங்கள் வியாபாரம் இல்லாமல் இருந்தோம். “ஆனால் இப்பொழுது எப்போதுமிருந்ததைவிட வியாபாரம் நன்றாக இருக்கிறது” என்று அவர் சொன்னார்.
சாவுக்கேதுவான கூட்டமைவு
கருத்தடை மாத்திரைகளையும் உட்கொண்டு, புகையும் பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அபாயம் குறைந்தபட்சம் பத்து மடங்கு அதிகமாக இருப்பதாக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டின் இருதய நோய் நிபுணர் பேராசிரியர் பீட்டர் ஸ்லீட் எச்சரிக்கிறார். சன் என்ற ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி செய்தித்தாளில், இளவயதிலுள்ள பெண்களின் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக பேராசிரியர் ஸ்லீட் சொல்லுகிறார். விளைவு? இந்த வயதிலுள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவது சாதாரணமாகிவிட்டது. விசேஷமாக கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தி வரும்போது இவர்கள் புகைப்பிடிப்பதே இதற்குக் காரணம் என்பதாக அவர் நம்புகிறார்.
மிருகங்கள் எங்கே?
ஆப்பிரிக்க வேட்டை விலங்குப் பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கு போதுமான காட்டு மிருகங்களைப் பார்க்க முடியாது ஏமாற்றமடைகிறார்கள். “பல்வேறு மிருகங்கள் அலைந்து கொண்டில்லாத ஒரு பகுதி, வேட்டை விலங்குகளுக்கும் புல்வெளி பரப்புக்களுக்குமிடையேயுள்ள ஆரோக்கியமுள்ள சமநிலையைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கக்கூடும்” என்பதாக தென் ஆப்பிரிக்க பத்திரிகை ஃபெளனா அண்டு ஃப்லோரா (Fauna & Flora) குறிப்பிடுகிறது. அளவுக்கு மீறிய விலங்குகள் புல்வெளியை நாசமாக்குவதால் இது மண் அரிப்புக்கு வழிநடத்துகிறது. ஒரு சமயம் வேட்டை விலங்குகள் முழு சுயாதீனத்தோடு நடமாடிக் கொண்டிருந்தன. இது அவைகளுக்கும் புல்வெளிக்கும் பாதுகாப்பாக இருந்தது. இப்பொழுது, அவற்றின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுவதன் காரணமாக, வேட்டை விலங்குகள் பசியினாலும் தாகத்தினாலும் அவலமாக மரிக்காதபடிக்கு, மந்தையிலிருந்து தகுதியற்றவற்றை விலக்கிவிடுவது அவசியமாக இருப்பதைப் பாதுகாப்புக் குழுவினர் காண்கிறார்கள்.
பூர்வீக மரம்
ஐரோப்பாவின் பழமையான மரம் ஸ்டாரா சக்கோரா பேரூர் அருகே பல்கேரிய கிராமத்தில் இருக்கிறது. பல்கேரிய செய்தித் துறைக் கருத்துப்படி, இந்தக் கருவாலி மரம் 1640 ஆண்டுகள் பழமையானதாக, 75 அடிக்கும் (23 மீ.) மேல் உயரமானதாக, 25 அடி (7.5 மீ.) சுற்றளவுடையதாக இருக்கிறது. அப்படியென்றால் புறமதத்தைக் கிறிஸ்தவத்தோடுக் கலந்து ஒன்றாக்கி வைத்த ரோம பேரரசன் கான்ஸ்டன்டைனின் மரணத்துக்கு 10 வருடங்களுக்குப் பின் இந்த மரம் வளர ஆரம்பித்தது என்று அர்த்தமாகிறது. அவன் பொ.ச. 337-ல் மரித்தான். ஆனால் காலிபோர்னியாவிலுள்ள, வயதில் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் செக்குவாயா என்ற ஒருவகை உயரமான மரங்களோடு ஒப்பிடுகையில் இந்த பழைய கருவாலி மரம் இளமையானதாகவே இருக்கும்.
அதிக விலையுள்ள எலும்புகள்
இந்தியாவிலிருந்து மனித எலும்புக் கூட்டின் இறக்குமதிக்கு அண்மையில் கொண்டுவரப்பட்டிருக்கும் தடை, ஐரோப்பாவையும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களையும் ஜப்பானையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. மனித எலும்புக் கூட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தத் தட்டுப்பாட்டின் காரணமாக மருத்துவம் பயிலும் மாணவர்கள் முன்னர் 1300 ரூபாய்க்கும் குறைவாகவே செலுத்திப் பெற்றுக்கொண்ட ஒரு அரைகுறையான எலும்புக்கூட்டுக்கு இப்பொழுது 1820 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட வருடங்களாக இந்தியா மனித எலும்புகளை உலகிற்குச் விற்று வந்தபோதிலும், “பிணத்தைப் பறித்து செல்வது” மற்றும் மரித்தோரிடமிருந்து ஆதாயத்தைத் தேடி செய்யும் மற்ற பயங்கரமான பழக்கங்களையும் முன்னிட்டே இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அலர்ஜி பரிசோதனையில் நம்பத்தக்க தன்மை
4550 ரூபாய்க்குச் செய்யப்படும் ஒரு இரத்த பரிசோதனையின் மூலமாக உயிர்வேதியல் உடல்நல மையங்கள், 187-க்கும் மேலாக வித்தியாசமான பொருட்களுக்கு ஒரு நபரின் எதிர்விளைவைக் கண்டுபிடித்துச் சொல்வதாக உறுதியளித்தன. இதுபோன்ற ஒரு அறிவிப்பில் சந்தேகங்கொண்ட ஒரு FDA புலன் ஆய்வாளர், பசுமாட்டின் இரத்தத்தைச் சோதனைக்கு அனுப்பி வைத்தார். இது மனித இரத்தமல்ல என்பதை அடையாளங்கண்டுகொள்ள தவறியது மட்டுமின்றி இரத்ததானம் செய்தவருக்கு, பாலடைக்கட்டி, தயிர், பசுவின்பால் ஆகியவை எதிர்விளைவை உண்டுபண்ணும் என்பதாகவும் புலன் ஆய்வாளருக்கு அது தெரிவித்தது. (g86 5/8)