இளைஞர் கேட்கின்றனர் . . .
பரீட்சையில் ஏமாற்றுவது—ஏன் கூடாது?
“நான் ஒரு மெய்யான உலகத்துக்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். வாணிக தொழில் நன்னெறியில்லாத ஒன்றாயிருக்கிறது, ஏமாற்றுவது . . . வெறும் ஒரு நல்ல பயிற்சியாக இருக்கிறது. நான் பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறுகையில் என் மேல் வைக்கப்படும் உத்தரவாதத்தைக் கையாளுவதற்கு நான் மேம்பட்ட நிலையிலிருப்பேன்.” தனக்காக வேறொருவர் எழுதிய ஒரு பரீட்சைத் தாளை ஒப்படைக்கும் சமயத்தில் இவ்வாறே ஜெரிமி என்ற பெயருள்ள ஒரு வாலிபன் தன் செயலை நியாயமென்று நிரூபித்துக்கொண்டிருந்தான்.
பதினைந்து வயது கேரன் என்பவளுங்கூட பரீட்சையில் ஏமாற்றுவதற்காக தனது சொந்த காரணத்தை உடையவளாயிருந்தாள்: “‘ஆ, அது இந்த ஒரே ஒரு தடவை மட்டுமே’ அல்லது ‘எல்லோருமே செய்கிறார்கள், எனவே நான் ஏன் செய்யக்கூடாது!’” கேரன் தன் பரீட்சைக்காக நன்றாகத் தயார் செய்யவில்லை. எனினும் ஏமாற்றியது அவளுக்கு உதவவில்லை. ஏனெனில் தன்னுடைய ஆசிரியையால் அவள் கண்டுபிடிக்கப்பட்டாள்.
தனக்கு அருகிலிருப்பவர் எழுதுவதை திருட்டுத்தனமாக பார்ப்பது, மடியில் புத்தகம் வைத்துப் பார்ப்பது, அல்லது வேறு அதிக திறமையான தொழில் நுணுக்க முறைகளைப் பயன்படுத்துவது—பரீட்சையில் ஏமாற்றுபவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் அனேகமும் பலதரப்பட்டதாகவுமிருக்கிறது. வழிமுறைகள் எதுவாக இருந்தாலும் கேரன், ஜெரிமி போன்ற அனேகர் இருக்கின்றனர். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட சுற்றாய்வானது பாதிக்கு மேற்பட்ட எல்லா மாணவர்களும் தங்களுடைய பள்ளி ஆண்டுகளின்போது ஏமாற்றுகின்றனர் அல்லது ஏமாற்றியிருக்கின்றனர் என்று காட்டுகிறது. ஏமாற்றுவதானது ஏறக்குறைய எல்லா இடங்களிலேயும் ஒரு பிரச்னையாக இருக்கிறது. நீ பள்ளிக்குச் செல்பவனாக இருந்தால் ஒருவேளை அது உன்னையுங்கூட பாதிக்கக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால் ஏமாற்றுவதானது ஏன் அவ்வளவு பரவலானதோர் பிரச்னையாக இருக்கிறது? அது ஒருவேளை உயர்ந்த மார்க்குகளை வாங்குவதற்குரிய ஒரு வழிமுறையாக இருந்தபோதிலும், உண்மையிலேயே அது பயனுள்ளதா?
அவர்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள்?
இந்தப் பழக்கத்தைச் சரியென்று நிரூபித்துக் காட்டுவதற்காகச் சில மாணவர்கள் தங்கள் பள்ளி சலிப்பூட்டுவதாக இருக்கிறதென்றும், எனவே படிப்பதற்குப் பதிலாகத், தங்களுக்கு உண்மையிலேயே ஆர்வமூட்டக்கூடிய காரியங்களில் தங்கள் நேரத்தைச் செலவழிக்க விரும்புவதாகவும் சொல்லுகின்றனர். ஏமாற்றுவதற்குத் தாங்கள் உண்மையிலேயே வற்புறுத்தப்படுவதாக மற்றவர்கள் சொல்லுகின்றனர். 15-வயது வாலிபன் ஒருவன் விவரிப்பதாவது, “ஒவ்வொரு ஆசிரியரும் தான் மட்டுமே வீட்டுப் பாடங்களையும் பரீட்சைகளையும் கொடுப்பதாக நினைக்கிறார். . . . ஆனால் உண்மையில் இப்பொழுது நடப்பதைப் பார்த்தால், எல்லாப் பரீட்சைகளுக்காகவும் படிப்பது மனித சக்திக்குட்பட்டதல்ல.”
“என்றபோதிலும் எல்லாருமே சாக்குப்போக்குச் சொல்வதற்கான அவசியத்தை உணருகிறதில்லை என்று சென்னீகலில் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்புக் காட்டுகிறது. அனேக இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது ஏமாற்றுவதற்கான ஒரு முக்கிய காரணமானது வெறுமென சோம்பேறித்தனம் என்று ஒப்புக்கொண்டார்கள். பாடங்களை நன்றாக படித்தபோது அவர்கள் ஏமாற்றவில்லை என்று அவர்களில் சிலர் ஒப்புக்கொண்டனர். இதுவே ஒரு உண்மையான காரணமென்றால் ஏமாற்றுவதற்கான சோதனையை எதிர்படும் ஒருவர் பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளிலுள்ள பின்வரும் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்: “சோம்பற் கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்.”—நீதிமொழிகள் 10:4.
“வெற்றிகாணவேண்டும் என்பது ஏமாற்றுவதற்கான காரணங்களில் ஒன்று.” இவ்வாறாக தி ஜர்னல் ஆப் பிஸ்னஸ் எஜுக்கேஷன் என்ற பத்திரிகை மாணவர்களால் அடிக்கடி கூறப்படும் மற்றொரு அம்சத்தை எடுத்துச் சொல்லுகிறது. உதாரணமாக, 17 வயது ஆலிசன் என்பவள் தானும் தன் நண்பர்களும் எதை எதிர்படுகிறார்கள் என்பதை விவரிக்கிறாள்: பல ஆண்டுகளுக்கு முன்பாக நல்ல மார்க்குகள் விரும்பத்தக்க ஒன்றாக இருந்தது. இன்றோ, கல்லூரிக்கு விண்ணப்பிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு அவை கண்டிப்பான தேவையாக இருக்கிறது.” அவள் தொடர்ந்து சொன்னதாவது: “கல்லூரியின் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு மாணவர்கள் முயற்சிக்கையில் ஏமாற்றுதலானது பெருமளவுக்கு அங்கீகாரம் பெற்ற ஒன்றாகிவிட்டது.”
இளைஞர்கள் இப்படிப்பட்ட அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 1,60,000 அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றாய்வு ஒன்று இதைக் காட்டுகிறது. அவர்களில் அறுபது சதவிகிதமானோர் தாங்கள் பரீட்சையில் வெற்றியடைவதற்காகப் படித்ததாகச் சொன்னார்கள். வெறும் 40 சதவிகிதமானோர் தாங்கள் உண்மையிலேயே கற்றுக்கொள்வதற்காக படித்ததாகச் சொன்னார்கள். “கடும் போட்டி” மாணவர்களை முரட்டுத் துணிச்சலில் அதாவது ஏமாற்றுவது போன்ற செயலில் ஈடுபடும்படி செய்கிறது என்று கலரோடா பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுவின் பிரசிடென்டாக இருக்கும் ராண்டி ஹெர்பெர்ட்சன் தெரிவிக்கிறான்.
சிறந்த வழி?
மேலும், நல்ல மார்க்குளை வாங்குவதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். ‘எனவே ஏமாற்றுவதன் மூலம்தான் வெற்றியடையக்கூடும் என்றால் நான் ஏன் அதைச் செய்யக்கூடாது?’ என்று நீ சிந்திக்கக்கூடும். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அதில் உட்பட்டிருக்கும் ஆபத்து, ஒரு மாணவன் ஏமாற்றிய அந்தக் காரணம் அவனுடைய நிரந்தர பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுவிடுமானால் அது நீண்ட கால தீய பாதிப்புகளையுடையதாயிருக்கும். ஒரு பள்ளியின் நீதி விசாரணை நிகழ்ச்சிகளின் இயக்குநர் குறிப்பிட்டதாவது: “எந்த ஒரு மாணவனாவது கல்விகூடத்தில் நாணயமற்ற ஒரு செயலில் ஈடுபடுவானாகில் எதிர்கால கல்வி மற்றும் வேலை ஆகியவற்றிற்கான வாய்ப்புகளை இழக்கும் படுமோசமான அபாயத்தினுள் தன்னை வைக்கிறான்.” லிண்டா என்பவளுக்கு இந்த அனுபவம் இருந்தது. அவள் விவரிப்பதாவது: என்னுடைய உயர்நிலைப் பள்ளி படிப்பின் முந்தின ஆண்டின் இளவேனிற் காலத்தில் எழுத்தில் திருட்டுவேலை செய்யும்போது கண்டுபிடிக்கப்பட்டேன். எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் அதை மறந்துவிடும்படி செய்ய என்னால் முடியவேயில்லை.” அதன் விளைவு என்னவெனில், தான் போக விரும்பிய பள்ளிக்குப் போக முடியாமற் போயிற்று.
ஆனால் ஒருவேளை நீ கண்டுபிடிக்கப்படாமற் தப்பித்துக்கொண்டாலுங்கூட அல்லது தண்டிக்கப்படும் ஆபத்து குறைவாக இருந்தாலுங்கூட ஏமாற்றுவதானது மற்ற நீண்டகால பின்விளைவுகளைக் கொண்டிருக்கும். உதாரணமாக, மற்றொரு இளம் பெண் கணித பாடத்தில் ஏமாற்றினாள். அது அவளுக்கு உதவியதா? அவள் சொல்வதாவது: “அப்போதுங்கூட நான் பரீட்சையில் தவறிப்போனேன். அதிலிருந்து நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை.” அவளுடைய தோல்வி அவள் கண்களை ஒருவேளை திறந்திருக்க வேண்டும். ஆனால் ஏமாற்றியதில் அவள் வெற்றியடைந்திருந்தால் இன்னும் அதிகமாக படித்திருப்பாளா? இல்லை, எனவே ஏமாற்றுகிறவர்கள் குறைந்த பட்சம் ஒரு அம்சத்தில் இழப்பாளிகளாகவே இருக்கின்றனர். அதாவது பள்ளியில் படிக்கும் காலத்தில் கற்றுக்கொள்ளும் நன்மையை இழக்கிறார்கள். இந்த முறையில் ஏமாற்றுகிறவனாக இருப்பவன் எவனும் வாழ்க்கையில் பிற்காலங்களில் வினைமையான பிரச்னைகளைக் கொண்டிருக்கும் பெரும் அபாயத்திலிருக்கிறான். ஒருவேளை ஏமாற்றுவதன் மூலம் கல்லூரி பட்டச் சான்றிதழைப் பெற்றிருந்தால் அந்தச் சான்றிதழ் மூலம் அவனுக்கு ஒரு வேலை கிடைக்குமானால், அவனுடைய திறமைகள் பரீட்சிக்கப்படுகையில் அவன் என்ன செய்வான்?
கூடுதலாக, பள்ளியில் செலவிடப்படும் ஆண்டுகள் ஒருவருடைய அறிவு சம்பந்தப்பட்டத் திறமைகளை வளர்த்துகொள்ள உதவுவது மட்டுமல்லாமல் நல்ல பண்புகளையுங்கூட விருத்திசெய்து கொள்வதற்கு உதவுகிறது என்பதை ஏமாற்றுகிறவன் மறந்துவிடுகிறான். பருவப்பிள்ளைகள் தாமே என்ற அந்தப் புத்தகம் கேள்விக்குரிய இந்த ஒரு அம்சத்தை ஏன் சில இளைஞர் மறந்துவிடுகின்றனர் என்பதற்கான ஒரு காரணத்தைக் கொடுக்கிறது: “பருவப்பிள்ளைகள் [13 முதல் 19 வயதிலிருப்பவர்கள்] . . . அடிப்படையாகவே குறுகிய கால சிந்தனையுள்ளவர்கள். . . . இளமைப் பருவமானது அச்சமயத்தில் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேண்டி எதிர்கால ஒழுக்கப்பண்புகளை உடனடியாகப் பறிகொடுத்துவிடும்.”
இது உன் காரியத்தில் ஒருவேளை அப்படியில்லாமல் இருக்கக்கூடும். ஆனால் ஏமாற்றக்கூடிய ஒருவனுடைய காரியத்தில் இது உண்மையல்லவா? பள்ளியிலிருக்கும்போதே பிரச்னைகளை எதிர்பட கற்றுகொள்வது அவனுக்குச் சிறந்ததாக இருக்குமல்லவா? நீதிமொழிகள் புத்தகமானது அந்தக் குறிப்பைத் திட்டவட்டமாகச் சொல்லுகிறது: “ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.”—நீதிமொழிகள் 21:5.
பைபிள் சொல்லுகிற பிரகாரம் நேர்மையுடனிருப்பது ஒரு நல்ல ஆள் தன்மையை உண்டுபண்ணுவதோடுகூட மற்ற பல நன்மைகளையும் கொண்டுவருகிறது. இதில் நல் மனசாட்சி மனசமாதானம் மேலும் முக்கியமாக சர்வலோகத்தின் சிருஷ்டிகரோடு ஒரு நல்ல உறவைக் கொண்டிருப்பதையும் உட்படுத்துகிறது. அவர் சத்தியத்தின் கடவுள், அவரைத் தொழுகிறவர்கள் அதே பண்பை வளர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.—சங்கீதம் 31:5; யோவான் 4:24.
ஏமாற்றுதலா—அல்லது திருடுதலா?
பரீட்சையில் ஏமாற்றுதலானது, ஏமாற்றாத மாணவர்களுக்கும் அநியாயம் செய்வதாக இருக்கிறது. கெல்லி என்ற சிறுமி சொல்லுகிறபடி: “மேசை மீது எழுதி வைத்துவிடுவதற்கு மாறாக, மற்றவர்கள் பரீட்சைக்காக முன்பே தங்களால் இயன்ற அளவு முயன்று கற்று அதை நினைவில் வைத்திருக்கின்றனர்.” ஏமாற்றுவதில் ஈடுபடாதவர்கள் ஏமாற்றுகிறவர்களை எவ்வாறு நோக்குகின்றனர்? நியு யார்க் நகர பிராந்தியத்திலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் திருமதி வெஸ்ஸர் பதிலளிப்பதாவது: “பரீட்சையில் திருட்டுத்தனமாக ஏமாற்றி தங்களைவிட அதிக மார்க்குகள் வாங்குவதைக் காணும்போது கடும் முயற்சியால் உயர்ந்த சாதனையை கொண்டிருப்பவர்கள் மனக்கசப்பு அடைகின்றனர்.” ஆம், நீ மிகவும் கடினமாக உழைத்தபின்பு ஏமாற்றுகிறவன் மேலான மார்க்குகளைப் பெறுகிறான் அல்லது உனக்கும் முன்பாக அவனுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது என்றால் நீ என்ன நினைப்பாய்?
மேலுமாக, நீ மதிக்கப்பட விரும்புகிறாய் என்பது உண்மையல்லவா? ஆனால், நீ ஏமாற்றிக்கொண்டிருந்தாய் என்பதையும், அதன் விளைவாக நீ அவர்களுக்குத் தீங்கு உண்டாக்கினாய் என்பதையும் காணும்போது உன் நண்பர்கள் உன்னை மதிப்பார்களா? அவர்களுடைய மதிப்பைத் திரும்ப பெறுவது பெரும்பாலும் மிகக்கடினமானதே. எனவே ஏமாற்றுவதற்கு முன்பே இப்படிப்பட்டதோர் இழப்பைக் குறித்து நீ சற்று சிந்தனை செலுத்துவது நல்லதாக இருக்குமல்லவா?
எனவே ஏமாற்றுவதானது தீங்கற்றது என்று கற்பனை செய்யாதே. ஏனெனில் நீ ஏமாற்றக்கூடுமானால் மற்றவர்களுங்கூட ஏமாற்றக்கூடும். ஒருவேளை என்றாவது ஒரு நாள் நீ திருமணஞ்செய்து பிள்ளைகளை உடையவனாய் இருக்கையில், பிள்ளைகளில் ஒருவனுக்கு நோய் வந்து, அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அந்த மருத்துவர் தகுதியற்றவர்—அதாவது தன்னுடைய கல்லூரி பட்ட சான்றிதழை பெற அவர் ஏமாற்றியிருக்கிறார்—என்பதை நீ அறிய வந்தால் எப்படி உணருவாய்? நீ தானே முன்பு செய்திருக்கும் ஒரு காரியத்தை அந்த மருத்துவர் செய்திருப்பதற்காக உன்னால் குற்றஞ்சாட்டக்கூடுமா?
திருடுதல் என்றால் உனக்குச் சொந்தமல்லாத ஒரு பொருளை எடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. எனவே ஏமாற்றுதல் என்பது ஒருவகையான திருட்டாக இருக்கிறது. ஏனெனில் ஏமாற்றுகிறவன் தான் பெறுவதற்கு தகுதியில்லாத மார்க்குகளை அல்லது பட்டச் சான்றிதழை அல்லது இன்னொருவருக்கு உரிய அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளுகிறான். ஆகவே, திருடுகிறவனுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள பைபிள் அறிவுரை ஏமாற்றுகிறவனுக்கும் சமமாகப் பொருந்துகிறது: “திருடுகிறவன் [அல்லது ஏமாற்றுகிறவன்] இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்கு கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.”—எபேசியர் 4:28.
கடினமான முயற்சி செய்து படிப்பவன் தன்னுடைய மார்க்குகளை நேர்மையோடு பெற்ற மனநிறைவை அடைகிறான். தான் பள்ளியில் கற்றுக்கொண்ட ஒவ்வொரு சிறு விவரங்களையும் அவன் பிற்கால வாழ்க்கையில் பயன்படுத்தாவிட்டாலும், தன்னுடைய பிற்கால வாழ் நாட்களில் நன்மைக்கேதுவாய் பயன்படுத்தக்கூடிய அறிவை அல்லது திறமையை உடையவனாய் பள்ளிப் படிப்பை முடிக்கிறான். கூடுதலாக, அவனுடைய மனம் விரிவடைகிறது, மற்றும் ஆள்தன்மையின் பலத்தை விருத்தி செய்வதற்குப் பயிற்சி பெற்றவனாக ஆகிறான்.
பரீட்சையில் ஏமாற்றுகிறவனைப் பற்றியதென்ன? அவன் உண்மையில் தன்னையே ஏமாற்றியிருக்கிறான் என்பதை விரைவில் கண்டறிகிறான். (g86 6/8)
[பக்கம் 14-ன் படம்]
பரீட்சையில் ஏமாற்றுபவன் எழுதுபவன் தனக்கும் மற்றவர்களுக்கும் தீங்குண்டாக்குகிறான்