விவாகமின்றி சேர்ந்து வாழ்வதா அல்லது விவாகமா?
“அது வெறும் ஒரு அதிகாரத்துவ முறை! ஒரு சான்றிதழ் அதிகத்தைக் குறிப்பதில்லை. அன்புதானே முக்கியமானது. சேர்ந்து வாழ்வது காதல் மிகுந்ததோர் உறவு. சட்டப்பூர்வமாக ஒன்றாக இணைக்கப்படாதிருக்கையில் நீங்கள் ஒருவரோடொருவர் அதிக கவனமாகவும் கரிசனையுள்ளவர்களாகவும் நடக்க வேண்டியதாக இருக்கிறது.” ஜானும் அன்னாளும் சேர்ந்து வாழ ஆரம்பித்த சமயத்தில் இப்படித்தான் விவாதித்தனர்.
எனவே சில தம்பதிகள் சட்டப்பூர்வமாக கட்டுப்படாமல் சேர்ந்து வாழ்வதன் மூலம் ஒருவரையொருவர் இழந்துவிடும் பயம் அவர்களுக்குள் இருக்கும் என்று உணருகிறார்கள். ஒருவருக்கொருவர் தங்களுடைய உறவிலும் கவனமுள்ளவர்களாய் இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். மேலோட்டமாக, அது நல்ல விவாதமாகத் தோன்றக்கூடும். ஆனால் சட்டப்பூர்வமான விவாகங்களைவிட இவ்வகையான உறவுகள் அதிக நிலையானவையா?
சேர்ந்து வாழ்வது—ஏதாவது பாதிப்புகளைக் கொண்டிருக்கிறதா?
விவாகமின்றி சேர்ந்து வாழ்வது என்ற புத்தகத்தில், ஆய்வாளராகிய J. ட்ராஸ்ட் அந்தப் பொருளின் பேரில் அளித்த ஓர் ஆய்வுக் குறிப்பில் வெளிப்படுத்தியதாவது, “விவாகமாகாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாழ்க்கை முறிவுறுவது, விவாகமான தம்பதிகளைவிட இரண்டு மடங்கு அதிகமாயிருக்கிறது.”
ஜானும் அன்னாளும் விவாகமாவதற்கு முன் மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய முதல் உறவு எவ்வளவு உறுதியாக இருந்தது? “சாதாரணமான இந்த உறவு மற்ற ஒழுக்கமற்ற உறவுகளுக்கு வழி நடத்துகிறது. நீங்கள் வெறுமென ஒன்றாகச் சேர்ந்து வாழும்போது, வேறொரு நபருடன் நட்பு கொள்ளவும் நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமான நிலையில் உங்களை வைத்துக் கொள்கிறீர்கள்.”
லார்ஸும் அனெட்டும்கூட விவாகமாவதற்கு முன் மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர். லார்ஸ் சொல்லுகிறான்: “பிரச்னைகள் எழும்பியபோது, நாங்கள் இப்போது செய்வதுபோல் உட்கார்ந்து காரியங்களைச் சரிசெய்வதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் விட்டு ஓடவே பார்த்தோம். அனெட் மேலுமாக சொல்லுகிறாள்: “நான் லார்ஸ் மீது கோபப்பட்டு என்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு போய் விடுவேன் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் இப்போது அப்படி ஒருபோதும் செய்வதில்லை.”
“என்னுடைய பொருட்கள்” என்று அனெட் சொல்லுகிறாள். திருமணமாகாதத் துணைவர்களுடன் தங்களுடைய உடைமைகளை எப்படி “என்னுடையவை,” “உன்னுடையவை” என்று பிரித்துப் பேசுகிறார்கள் என்பதை இது காண்பிக்கிறது. சிலர், தாங்கள் வாங்கும் பொருட்களின் ரசீதுகளைப் பத்திரமாக வைத்துக்கொள்கிறார்கள், பொருட்களில் தங்களுடைய பெயர்களையும் பொறித்துக்கொள்கிறார்கள் அல்லது எழுதி வைத்துக்கொள்கிறார்கள்—ஒருவேளை நிலையான உறவுக்குத் தகுந்த ஸ்திரமான ஒரு அஸ்திபாரமாக இருக்கிறதா?
தம்பதியர் பிரிந்துவிட தீர்மானிக்கும் நேரம் வரும்போது என்ன நடக்கிறது? உடைமைகளைப் பிரிப்பது உண்மையிலேயே ஒரு பிரச்னையாக இருக்கிறது. அது வாக்குவாதங்களிலும் அநியாயங்களிலும் முடிவடைகிறது. உதாரணமாக, அந்தப் பெண், பிள்ளைகளையும் வீட்டு காரியங்களையும் கனித்து வந்திருக்க, அவளுடைய துணைவர்தானே சம்பாதித்துப் பொருட்களை வாங்கியிருப்பாரென்றால் அவள் ஒன்றுமில்லாமல் தனிமையில் விடப்படும் ஆபத்து இருக்கிறது. அவர்கள் விவாகமாகாதவர்களாக இருப்பதன் காரணமாக, சட்டப்பூர்வமாக அவள் ஒன்றும் செய்யமுடியாது. அப்படியிருக்க அவர்கள் பிரிந்துவிடும்போது, அவளுக்கு என்ன நடக்கிறது?
விவாகத்தில் தங்களால் நிலைநிற்க முடியுமா என்பதைக் காண்பதற்குத்தான் சில தம்பதியர் சிறிது காலத்திற்குச் சேர்ந்து வாழ்கின்றனர் என்று சொல்லுகிறார்கள். அதன் விளைவாக அவர்களுடைய எதிர்கால விவாகம் அதிக ஸ்திரமாக இருக்கும் என்று உணருகின்றனர். காரியம் இப்படி இருக்கிறதா? உதாரணமாக, விவாகமின்றி சேர்ந்து வாழும் இந்தப் பழக்கம் பொதுவாகக் காணப்படும் தேசங்களில், விவாகரத்தின் விகிதம் குறைந்திருக்கிறதா?
உதாரணத்திற்கு ஸ்வீடனை எடுத்துக்கொள்ளுங்கள். புதிதாக திருமணமானவர்களில் தற்போதுள்ள 99 சதவீதத்தினர் விவாகமாவதற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தவர்கள் என்று கணக்கிடப்படுகிறது. விவாகமாகாமல் சேர்ந்து வாழ்வது அதிக பாதுகாப்பான விவாகங்களில் விளைவடைந்தால், அந்தத் தேசத்தில் இருக்கும் விவாகரத்தின் விகிதம் குறையும் என்ற நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். 1958-லிருந்து 1983 வரையிலுமான 25 வருடங்களில் விவாகங்களின் வருடாந்தர எண்ணிக்கை 50,785-லிருந்து 36,210-ஆக குறைந்தது, விவாகரத்தின் எண்ணிக்கை 8,657-லிருந்து 20,618-ஆக அதிகரித்திருக்கிறது என்று புள்ளிவிவரம் காட்டுகிறது. எனவே விவாகத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது ஸ்திரமான விவாகங்களில் விளைவடைந்திருக்கிறது என்றா உண்மைகள் காட்டுகின்றன?
மற்றவர்களை எவ்வாறு பாதிக்கிறது?
ஒரு தம்பதி விவாகமின்றி சேர்ந்து வாழ்வது மற்றவர்கள் மீதும் பாதிப்பைக் கொண்டிருக்கிறது. அது தவறென்றும் அவ்வாறு சேர்ந்து வாழ்வது ஒழுக்கக்கேடானது என்றும் இன்னும் அநேகர் கருதுகின்றனர். எனவே பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டிமார் தங்களுடைய பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் விவாகமின்றி சேர்ந்து வாழ்வதைக் குறித்து சந்தோஷமற்றவர்களாயும் நிறைவற்ற மனநிலையுள்ளவர்களாயும் கவலையுள்ளவர்களாயும் இருப்பார்கள். தலைமுறைகளுக்கிடையே உள்ள தொடர்பு அச்சுறுத்தப்படுகிறது.
அன்னாள் நினைவுபடுத்துகிறாள்: “ஜானோடு சேர்ந்து வாழ்ந்ததைக் குறித்து என்னுடைய பெற்றோர் வெட்கமடைந்தனர். அந்தச் சமயம் வரையிலுமாக அவர்களோடு ஒரு நல்ல உறவை அனுபவித்து வந்தேன். ஆனால் எப்பொழுதெல்லாம் எங்களுடைய உறவினர் என்னைப் பற்றி விசாரித்தார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. ஜானைப் பற்றி அவர்கள் நல்ல மனநிலைக்கொள்ள முடியவில்லை. அவர்கள் எங்களை வந்து சந்திப்பதையும் அண்மையில் நிறுத்திவிட்டார்கள். அவர்கள் அதிக வேதனைப்பட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.”
அவ்விதமான ஒரு உறவில் பிறக்கும் பிள்ளைகளைப் பற்றியதென்ன? பெற்றோர்கள் உறவுகளை ஏற்படுத்தும் போதும் அவற்றை முறிக்கும்போதும், ஒரே தாய் தகப்பனைக் கொண்டிராத பிள்ளைகள் ஒரே வீட்டில் ஒன்றாகக் கூடி வாழும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. குழம்பிய நிலையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் விடப்பட்டிருப்பதை உணர ஆரம்பிக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் 15-வயது பிள்ளைகளிடம் தொலைக்காட்சி நிருபர் நடத்தின ஒரு சுற்றாய்வில் இளைஞரில் மூன்றில் ஒருவன் தன்னுடைய பிறப்புக்குக் காரணமாயிருந்த இருவரிடமும் வாழவில்லை. சுவீடனின் தலைநகராகிய ஸ்டக்ஹோமில் இந்த எண்ணிக்கை 43 சதவீதமாக இருந்தது. அறிக்கையாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இப்போது நாம் ஒரு வித்தியாசமான சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 1980-களின் பிள்ளைகள் இரண்டு வீடுகளைக் கொண்டிருக்கிறார்கள் . . . வரர இறுதி நாட்களை ஒரு வாரம் அம்மாவோடும் இன்னொரு வாரம் அப்பாவோடும் செலவழிக்கிறார்கள்.”
சுவீடனின் 5,500 பத்து வயது பிள்ளைகளைச் சுற்றாய்வு செய்தபோது, துணைப் பேராசிரியரான கிளேஸ் சன்டிலின் என்பவர், பத்தில் ஒரு பையன் மோசமான மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை உடையவனாக இருந்தான் என்றார். பிள்ளைகள் “இந்தப் பிரிவுகளின் அதிகரிப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.” மற்றும், “தங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களிடம் உணர்ச்சி சம்பந்தமாக ஒதுக்கிடம் காண்பிக்கின்றனர், எந்த ஒரு முறிவும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.” 12 வயதுள்ள ஒரு பெண்ணின் பெற்றோர் பிரிந்தபோது, அவள் கூறின வார்த்தைகள், அவ்விதமான சூழ்நிலையில் பெரும்பான்மையான பிள்ளைகள் எவ்வாறு உணருகிறார்கள் என்பதைக் காண்பிக்கின்றன: “நான் வளர்ந்தபிறகு, நன்றாக வாழ விரும்புகிறேன். நான் விவாகம் செய்துகொள்வேன், விவாகரத்து செய்யவே மாட்டேன்.”
ஸ்வீடனில் “பிரிந்திருப்பது” என்ற பதம் விவாகமாகாத தம்பதிகளுக்கும் விவாகமான தம்பதிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. விவாகமின்றி சேர்ந்து வாழ்வது, விவாகத்தைவிட அதிக ஸ்திரமற்ற உறவாக இருப்பதால், விவாகமாகாத பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள் ஒற்றை பெற்றோர் குடும்பங்களில் வாழும் நிலையில் விளைவடைகிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் பெற்றோர் பிரிந்துவிடுவதனால், பிள்ளைகள் கஷ்டப்படுகின்றனர். மேலும், அந்த 12 வயது பெண் சொல்வது போல், விவாகத்தில் ஒரு ஸ்திரமான, நீடிக்கும் உறவையே அவர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர்.
தம்பதிகள் விவாகமின்றி ஒன்றாக வாழ்வதில் மற்றப் பெரிய பாதிப்புகளும் உண்டு. இவ்விதமான தொடர்புகள் பதிவு செய்யப்படாததால், அதிகாரிகள் அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அவற்றிற்குச் சட்டங்களைப் பொருத்த முடியாது. சாதகமற்ற வரிவிதிப்புகளை மற்றும் சில ஓய்வு ஊதியங்களையும், மற்றப் பொது நன்மைகளையும் இழப்பதைத் தவிர்ப்பதற்கு சில தம்பதிகள் விவாகம் செய்ய மறுத்துவிடுகிறார்கள். பொதுவாக மக்கள் மத்தியில் வரிகள் எவ்வாறு சுமத்தப்படுகிறது என்பதை இது பாதிக்கிறது. பரம்பரை சொத்து, உயில்கள், சொத்துக்களைப் பிரித்தல், பிள்ளைகளை யார் வளர்ப்பது போன்றவற்றை உட்படுத்தும் சட்டங்களை முழுவதுமாகப் பொருத்த முடியாது. டென்மார்க் தேசத்து வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிடுவது போல்: “ஒழுக்க சம்பந்தமான பிரச்னை ஒரு பக்கமிருக்க, கண்டிப்பாகவே சட்டத்தின் நோக்குநிலையில், எழுத்தில் பதிவுசெய்யப்படாத விவாகங்கள் விரும்பப்படாதவை. சொத்துக்கள் மற்றும் பொறுப்புரிமை சம்பந்தப்பட்ட காரியங்களில் தீர்மானம் எடுப்பதற்குச் சரியான விதத்தில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களைவிட இத்தகைய நிலைமைகள் அதிகப்படியான காகித வேலையை, அதிகமான சட்டப்பூர்வமான ஆவணங்களையும் செயல்முறைகளையும் தேவைப்படுத்துகின்றன.”
ஒழுக்கம் அல்லது சமுதாயப் பிரச்னைகளைத் தவிர, அதிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு காரியம் இருக்கிறது.
வேதப்பூர்வமான நோக்குநிலை
விவாகமின்றி சேர்ந்து வாழ்பவர்களுக்கு இந்தக் காரியத்தைக் குறித்த வேதப்பூர்வமான நோக்குநிலை முக்கியத்துவமில்லாததாக இருக்கக்கூடும். ஆனால் கடவுளுடைய சட்டங்களைப் பொருத்த விரும்பும் ஆட்களுக்கு இது முக்கியமாக இருக்கிறது.
பைபிள் பிரகாரம் சட்டப்பூர்வமான விவாகம்தானே மனிதனுடைய சிருஷ்டிகரால் ஏற்கப்பட்டதாயும், அதுதானே மனிதனும் மனுஷியும் சேர்ந்து வாழும் ஒரே முறையாகவும் இருக்கிறது. யெகோவா தேவன் முதல் மனித ஜோடியை விவாகத்தில் ஒன்றாக இணைத்தார் என்று பைபிள் காண்பிக்கிறது. ஏன்? ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதற்கு என்பது ஒரு காரணம். ஆதியாகமத்திலுள்ள சரித்திர பதிவு சொல்வது போல்: “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்,” (2:18) இன்னொரு நோக்கம் இனப்பெருக்கம். “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்” என்று அந்த ஜோடிக்குச் சொல்லப்பட்டது. (1:27, 28) இது சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு ஏற்பாடல்ல என்பதை ஆதியாகமம் 2:24 காண்பிக்கிறது. அது சொல்வதாவது: “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.”
இன்று, எல்லா ஆண்களும் பெண்களும் அபூரணராக இருப்பதினால், அநேக திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைந்தாலும், சட்டப்பூர்வமான விவாகம் இன்றைய சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் அதிக பாதுகாப்பான உறுதியான ஸ்தபிக்கப்பட்ட முறையை ஏற்படுத்துகிறது. சட்டப்பூர்வமான விவாகம் அளிப்பது போன்று, சேர்ந்து வாழும் வேறு எந்த முறையும், பிள்ளைகள் உட்பட எல்லா சார்பினருக்கும் ஒரே அனலான பாதுகாப்பையும் தற்காப்பையும் கொடுப்பதில்லை.
ஜானும் அன்னாளும் இந்த விதமான முடிவுக்குத்தான் வந்தனர். ஜானுடன் பல வருடங்கள் வாழ்ந்த பிறகு, அன்னாள் பைபிளைப் படித்து யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தாள். விவாகத்தைக் குறித்த பைபிளின் சட்டங்களுக்கு இசைய அவள் இருக்க விரும்பினாள். எனவே ஒரு நாள் ஜான் தன்னை விவாகம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டாள். ஒவ்வொரு முறையும் அவள் கூட்டத்திலிருந்து திரும்பியபோது அவள் அதிக சந்தோஷமாகவும் திருப்தியுள்ளவளகவும் இருப்பதை அவன் கவனித்திருந்தான். விவாகம் செய்துகொள்வது அவளுக்கு எவ்வளவு அர்த்தப்படுத்தும் என்று அவன் உணர்ந்தான். எனவே அவளை விவாகம் செய்துகொண்டான்.
‘அந்த மதம் என்மீதும் ஒரு பயனுள்ள பாதிப்பை கொண்டிருக்கக்கூடும்’ என்று ஜான் நினைத்தான். தனக்குத்தானே ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தான். வெகு சீக்கிரத்தில், அவனும் விவாகத்தைப் பற்றிய வேதப்பூர்வமான நோக்குநிலையே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தான். ஜானும் அன்னாளும் இப்பொழுது யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சிகளாக, முழு-நேர ஊழியர்களாக சேவிக்கிறார்கள். சேர்ந்து வாழ்வதும், விவாகமும் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது? அவர்கள் பின்வருமாறு பதிலளிக்கின்றனர்: “நாங்கள் விவாகம் செய்வதற்கு முன், ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தோம். ஆனால் விவாகம் செய்தபிறகு, அதிக நெருக்கமான, அதிக அன்பான, அதிக உத்தரவாதமுள்ள உறவை, மூன்றாவது நபராகிய நம்முடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் உறவைக் கொண்டிருந்து, அதில் பெருக ஆரம்பித்தோம். இப்போது பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக, ஒரு சந்தோஷமான விவாகத்தை அனுபவித்து வந்தோம், இன்னமும் அனுபவித்து வருகிறோம்!”
ஆகிலும், மற்றவர்கள் இன்னொரு வழியை மேற்கொள்ளக்கூடும். விவாகம் ஒரு நல்ல ஏற்பாடு என்பதாகவும், ஆனால் விவாகத்திற்கு உண்மையாயிருத்தல் அவசியமில்லை என்றும் அவர்கள் உணருகின்றனர். விவாகத்திற்குப் புறம்பான விவகாரம், விவாகத்தின் மீது நம்பிக்கையான மற்றும் பலமான பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்று அவர்கள் சொல்கின்றனர். அது உண்மையிலேயே சரியான நம்பிக்கையா? (g86 7/8)
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“பிரச்னைகள் எழும்பியபோது, நாங்கள் இப்போது செய்வதுபோல் உட்கார்ந்து காரியங்களைச் சரிசெய்வதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் விட்டு ஓடவே பார்த்தோம்.”
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
சட்டப்பூர்வமான விவாகம் இன்றைய சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் அதிக பாதுகாப்பான உறுதியான ஸ்தாபிக்கப்பட்ட முறையை ஏற்படுத்துகிறது.
[பக்கம் 5-ன் படம்]
பெற்றோர் பிரிந்து வாழும்போது பிள்ளைகள் உணர்ச்சி சம்பந்தமாக பாதிக்கப்படுகிறார்கள்