பைபிளின் கருத்து
“மரிப்பதற்கான உரிமை”—தீர்மானம் யாருடையது?
‘என்னை ஒன்றுக்கும் உதவாதவளாக உயிரோடிருக்கும்படி என் உயிரை நீடிக்கச்செய்யாதீர்கள்!’ என்று 88 வயதான கிளாரா மருத்துவமனையிலிருந்து கதறினாள். ஒரே வாரத்தில் மூன்றுமுறை உயிர்பிழைக்கச் செய்த பின்பு, தான் நிம்மதியாக மரித்தால் போதும் என்று விரும்பினாள். மரணத்தை எதிர்நோக்கிய நிலையிலிருக்கும் தீர்க்கமுடியாத வியாதியஸ்தர்களின் நிலையும் இதுவே. மரணத்திற்காக மன்றாடுகிறார்கள். மருத்துவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இது வாதத்துக்குரிய ஒரு கேள்வியாக இருக்கிறது—உறவினர்களுக்கோ ஒரு வேதனைமிக்கத் தெரிவாக இருக்கிறது. ஆனால் தீர்மானம் யாருடையது?
ஏன் இந்த இரண்டக நிலை?
மரிப்பதைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருப்பது என்ற புத்தகத்தின்படி, “சில சமயங்களில் மருத்துவமனையின் சுவர்களுக்குள்ளே அறிவுகெட்ட விதத்தில் உயிரை நீடிக்க வைப்பதில் மருத்துவ தொழில்துறை கட்டுப்பாடற்ற நிலையில் நடந்துகொள்ளுகிறது. கிட்டிய மரணம் விசித்திரமான மருத்துவ முறைகளால் தள்ளிப் போடப்படக்கூடிய நிலையில், மதிப்போடு மரிக்கும் உரிமையைக் குறித்து கேள்விகள் எழும்புகின்றன. நோயாளிகள் என்ன விதமான மரணத்தை தெரிந்துகொள்வது—வேதனையான ஒன்றையா அல்லது அமைதியான ஒன்றையா? தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு விவரிக்கிறது: “ஒரு இயந்திரத்தால் செயற்கையாக உயிரோடு வைக்கப்படும் ஒரு நோயாளியால் விரிவாக சிந்திக்கப்படும் கொள்கை சம்பந்தமான இரண்டக நிலை அறிமுகப்படுத்தப்படுகிறது. கேள்வி என்னவென்றால், இயந்திரம் நிறுத்தப்பட வேண்டுமா? ஒரு பெரிய மருத்துவ நிலையத்தில் இரண சிகிச்சை நிபுணர் ஒருவர் பின்வருமாறு கேட்கிறார்: “சுவாசக் கருவியை நிறுத்திவிடுவது கொலையாகுமா? சுவாசக் கருவியை செயல்பட துவங்காமலிருப்பதை, துவங்கிவிட்ட ஒன்றை நிறுத்திவிடுவதுடன் ஒப்பிடுகையில் ஏதாவது கொள்கை அல்லது நெறிமுறை வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா?
“உயிரோடிருத்தல்” மற்றும் “மரித்தல்” போன்ற பதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விளக்கம் இல்லாததாலும் “குணப்படுத்த முடியாத” “மரணத்துக்கேதுவான நோய்” அல்லது “மரித்துக் கொண்டிருக்கும்” போன்றவற்றை உத்தரவாதமாக சொல்ல முடியாததாலும் இந்த இரண்டக நிலை நீடிக்கிறது. “அசாதாரணம்” என்பது இடம், சமயம் மற்றும் நிபுணர்களின் திறமைகளுக்கேற்ப வித்தியாசப்படுகிறது. நோயாளிகள், உறவினர் மற்றும் மருத்துவ குழுவினரின் அக்கறைகளும் முரண்படக்கூடும். மேலும் 1982-ல் நைஜீரியாவில் லாகோஸ் பல்கலைக்கழகத்தில், மருத்துவ கல்லூரி ஏற்பாடு செய்த மருத்துவ நெறிமுறை கலந்தாய்வு நிகழ்ச்சியில், “மரணம் ஏற்படுவதை அறியும் காரியத்தை சரியான விதத்தில் ஆய்வு செய்வது அரிது” என்று டாக்டர் ஒலாடாப்போ அஷிரு ஒப்புக்கொண்டார்.
நெறிமுறையான மற்றும் மத சம்பந்தமான நம்பிக்கைகளைக் கவனிக்க கடமைப்பட்டிருப்பதாக உணரும் மருத்துவர்களின் மனசாட்சியை இந்தப் பிரச்னைகள் சவாலுக்கு உட்படுத்துகின்றன. டாக்டர் அஷிரு பின்வருமாறு முடித்தார்: “ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாளுவதற்கு ஓரளவு கவனிப்பு, மதிப்பு மருத்துவ நிதானிப்பு, மறுப்பு மற்றும் உறுதி தேவைப்படுகிறது.”
பைபிள் சொல்வது என்ன?
உயிர் நம்முடைய சிருஷ்டிகரிடமிருந்து வந்திருக்கும் ஒரு பரிசுத்த ஈவு. (சங்கீதம் 36:9) அது பாதுகாக்கப்பட வேண்டும். உயிர் மீது கடவுள் கொண்டிருக்கும் நோக்குநிலைக்கு மரியாதையும், உலகப்பிரகாரமான சட்டத்திற்கு மதிப்பும், ஒரு நல்ல மனசாட்சியையும் கொண்டிருப்பதால் ஒரு கிறிஸ்தவன் வேண்டுமென்றே ஒருவருடைய மரணத்திற்குக் காரணமாக இருக்க மாட்டான்.—யாத்திராகமம் 20:13; ரோமர் 13:1, 5.
“உயிரைத் தொடர்ந்து நீடிப்பதற்காக எடுக்கும் கடும் முயற்சிகள், உண்மையில் உயிரோடிருப்பதை நீடிக்கச் செய்வதைக் காட்டிலும், மரித்துக் கொண்டிருப்பதை நீடிக்கச் செய்வதாக இருக்கிறது என்பதை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். எனவே இயந்திர கருவிகளின் மூலம் மரித்துக் கொண்டிருப்பதை நீடிப்பதே சிறந்தது என்று மருத்துவர்கள் சொன்னால், அதைப் பற்றியதென்ன? மரணம் கிட்டிவிட்டது என்பது தெளிவாக இருக்கும் நிலையில் அந்த மரண படுக்கையைச் செயற்கை முறையில் நீடிக்க வைப்பதைப் பைபிள் தேவைப்படுத்துவதில்லை. இவ்விதமான சூழ்நிலைகளில் மரணம் அதன் போக்கை கொண்டிருக்க அனுமதிப்பதானது, கடவுளுடைய எந்தச் சட்டத்தையும் மீறுவதாக இருக்காது.
பைபிளின் இந்தப் பதிவுகளை ஒரு கிறிஸ்தவன் சிந்திப்பது உபயோகமாக இருக்கும். யோபு, எசேக்கியா ஆகிய இருவரும் மரண படுக்கையிலிருக்கும் வியாதிப்பட்டிருந்தபோதும், அவர்கள் அதிலிருந்து குணமடைந்தார்கள். (யோபு 7:5, 6; 42:16; 2 இராஜாக்கள் 20:1-11) எனவே, ஒருவர் மரித்துக் கொண்டிருக்கிறார் என்ற முடிவுக்குச் சீக்கிரத்தில் வந்துவிடாதீர்கள். என்றபோதிலும் பெனாதாத்தின் விஷயத்தில், விளைவு வித்தியாசமாக இருந்தது. (2 இராஜாக்கள் 8:7-15) ‘மதிப்புள்ள விதத்தில் மரிக்க உதவிசெய்ய வேண்டும் என்ற ராஜாவின் வேண்டுகோளை மறுத்தான், அந்தப் படைவீரன். அந்த ‘இரக்க கொலையைச்’ செய்த இன்னொரு மனிதனை இரத்தப்பழிக்கு காரணமானவன் என்று தாவீது அவனை மரண தண்டனைக்கு உட்படுத்தினான். (1 சாமுவேல் 31:4; 2 சாமுவேல் 1:6-16) எனவே, மரணத்தைத் துரிதப்படுத்தும் காரியத்தைப் பைபிள் அங்கீகரிப்பதில்லை.
இன்றுள்ள காரியங்களைக் கையாளுவதிலும், கவனம் தேவையாக இருக்கிறது என்று இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. ஒவ்வொன்றும் அதன் சொந்த தனித்தன்மைகளைக் கொண்டதாகவும், உயிரின் பரிசுத்தத் தன்மையைக் குறித்த கடவுளுடைய நோக்குநிலைக்கு மதிப்புக்கொடுத்து ஜெபத்தோடு தீர்மானிக்கப்பட வேண்டும். இந்தக் காரியத்தில் ரெபேக்காளிடம் ஒரு நல்ல முன்மாதிரி இருக்கிறது, அவளுடைய உயிரைக் குறித்து கவலையாக இருந்தபோது, “யெகோவாவினிடம் விசாரிக்க போனாள்.”—ஆதியாகமம் 25:22.
யார் தீர்மானிப்பது?
ஒரு பொதுவான கேள்வி என்னவென்றால்: ‘என்னதான் இருந்தாலும் அது யாருடைய உயிர்? அடிப்படையான தீர்மானம் நோயாளியுடையது, ஏனென்றால் அந்த நபரே சிருஷ்டிகர் கொடுத்த உயிராகிய பரிசைக் காத்து பராமரிப்பவராக இருக்கிறார்.’ (அப்போஸ்தலர் 17:28) என்றபோதிலும், ஒரு நோயாளி தீர்மானிக்க முடியாத நிலைக்குள்ளாகும்போது, அவருக்கு நெருங்கிய உறவினரோ அல்லது ஒரு நியமிக்கப்பட்ட பிரதிநிதியோ அவருக்குப் பதிலாக தீர்மானம் கொடுப்பவராக இருக்கக்கூடும். எந்தவொரு விஷயத்திலும், அந்தப் பதில் தன்னுடைய உரிமையை அல்ல, நோயாளிகளின் உரிமைகளுக்கே மதிப்பளித்து, அதை உறுதிசெய்ய வேண்டும். அது போலவே, சிறிய பிள்ளைகளின் விஷயத்திலும், பெற்றோர்கள் தங்களுடைய வாரிசுகளுக்காக தீர்மானிக்க வேண்டிய சட்டப்பூர்வமான உரிமையையும், கடவுளால் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தையும் கொண்டிருக்கின்றனர்.—சங்கீதம் 127:3.
மறுபட்சத்தில், கொலம்பியா சட்ட விமர்சனம் பின்வருமாறு கூறுகிறது, “சிகிச்சை முறைகளின் பேரில் தெரிவு செய்வதற்கு நீதிமன்ற அறை தகுந்த இடமாக இருக்க முடியாது என்பது பரந்த அங்கீகரிப்பைப் பெற்று வருகிறது . . . பதில் தீர்மானம் செய்யவும் உத்தரவாதத்தை மேற்கொள்ளுவதற்கு நீதிமன்றங்கள் முழு ஆயத்தத்தில் இல்லை.” மருத்துவரை பொருத்தவரையில், தன்னுடைய சொந்த மத நம்பிக்கைகளை நோயாளியின் மீது வற்புறுத்துவது நெறிமுறைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும், அல்லவா? தன்னுடைய நோயாளியின் மத நம்பிக்கைகளுக்கு இசைவாக செயல்பட வேண்டும் அல்லது தன்னுடைய மத நம்பிக்கைகள் அவருடைய மனச்சாட்சிக்கு விரோதமாக இருக்கும்போது, அதிலிருந்து அவர் தன்னை நீக்கிக்கொள்ள வேண்டும். காரியத்தை குழுவாக அணுகும் ஒரு முறை சிறந்ததாகும். பொதுவாக மருத்துவர், நோயாளியின் மத ஊழியர் மற்றும் குடும்பத்தினர் நோயாளியோடு ஒத்துழைத்து, அவருடைய சிறந்த அக்கறைகளை மனதில் கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும்.
தீர்மானத்தின் முடிவு என்னவாக இருந்தபோதிலும், “நான் வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று ஒருவரும் சொல்லாத ஒரு காலத்தைப் பற்றிய சிருஷ்டிகரின் வாக்குறுதியின் மீது ஒரு கிறிஸ்தவன் நம்பிக்கை வைக்கலாம். (ஏசாயா 33:24) மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கோ, கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் பரதீஸான நிலைமையில் ஆரோக்கியத்தையும் ஜீவனையும் பெறும் கடவுளுடைய மகத்தான வாக்குத்தத்தம் இருக்கிறது. (அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 21:1-4) கிறிஸ்துவின் மூலம், யெகோவா தேவன் கீழ்ப்படிதலுள்ள மனிதருக்கு நித்தியமாக வாழும் உரிமையை அளிக்கப்போகும் அந்தக் காலம் நெருங்கிவிட்டது!—யோவான் 3:26.— (g86 9/8)
[பக்கம் 21-ன் படம்]
நீடிக்கச் செய்யப்படுவது எது?—உயிருடனிருப்பதா அல்லது மரித்துக்கொண்டிருப்பதா?