பைபிளின் கருத்து
எனக்காகச் செலவிட கடவுளுக்கு நேரமிருக்கிறதா?
“கடவுள் ஒருவர் இருந்தால், அவர் உன்னிலோ என்னிலோ அக்கறை கொண்டில்லை!” ஆட்கள் இவ்வாறு சொல்வதை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? கடவுள் இருக்கிறாரென பெரும்பான்மையர் நம்புகின்றனர், ஆனால் தங்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு அவருக்கு நேரமிருக்க முடியாது என்றே பலர் உணருகின்றனர்.
கடவுள் அக்கறை கொள்கிறாரென நாம் எப்படி நிச்சயமாயிருக்கலாம்? உயிர் உட்பட அன்புள்ள பரிசுகளை அவர் நமக்கு அருளிச் செய்திருக்கிறார். அவர் நமக்காக இன்பங்களை உண்டாக்கினார்—உணவின் சுவை, இன்னிசையின் தொனி, இயற்கையின் அதிசயங்கள், சில்லென்று கிளர்ச்சியூட்டும் மலைக் காற்றின் நறுமணம், அன்பானவரின் மென் தொடுகை, பிள்ளைகளின் சிரிப்பொலி, அனலூட்டும் குழந்தையின் மென்சிரிப்பு. இவை யாவும் கடவுள் தந்தப் பரிசுகள். நம்முடைய ஐம்புலன்களைக் கொண்டு நுகர்ந்தனுபவிப்பதற்குத் திறமையை அவர் அன்புடன் கொடுத்ததனால் மாத்திரமே இவற்றை நாம் அனுபவித்து மகிழ முடிகிறது.—யாக்கோபு 1:17.
மேலும், கடவுள் மனிதரைப்பற்றிக் கவலைகொள்வதில்லையென்றால், மக்களுக்கு அவ்வளவு மிகுந்த வழிநடத்துதலையும் ஆறுதலையும் கொடுப்பதும் தம்முடைய வழிகளையும், நடைமுறைத் தொடர்புகளையும் பற்றிய தகவல் நிரம்பியதுமான பைபிளை அவர் ஏன் கொடுத்தார்-—2 தீமோத்தேயு 3:16, 17.
கடவுள் தனியே ஒவ்வொரு ஆட்களிலும் அக்கறை கொண்டிருக்கிறாரென—அவர் உங்களில் அக்கறை கொண்டிருக்கிறாரென பைபிள் காட்டுகிறது. நீங்கள் எவ்வாறு முன்னிலுமதிக மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையை, மேம்பட்ட குடும்பத்தை, நல்ல பிள்ளைகளைக் கொண்டிருக்கலாமென்றும் அவருடைய எழுதப்பட்ட வார்த்தை காட்டுகிறது. ஆம், மனநிறைவுக்கும், திருப்திக்கும் செல்லும் வழியை பைபிள் உங்களுக்குக் காட்டுகிறது. கடவுளுடைய ஞானத்தை விரித்துரைத்து அவருடைய வாக்குகளில் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. எதிர்காலத்துக்கு உறுதியான நம்பிக்கை அளிக்கிறது. இது அக்கறையற்ற ஒருவரிடமிருந்து வரும் வகையான உதவியைப்போல் தொனிக்கிறதா?
மேலும், உங்களைப் பற்றிக் கவலையுள்ள ஒருவர் அணுகத்தக்கவராயிருப்பார். கடவுள் அவ்வாறு இருக்கிறாரா? இந்தப் பைபிள் எழுத்தாளர்கள் சொல்வதைக் கவனியுங்கள்: “யெகோவா நல்லவர் என்று ருசித்தறியுங்கள்,” என்று தாவீது எழுதினான். மேலும், “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்,” என்று சீஷனாகிய யாக்கோபு அறிவுரை கூறினான். மேலும், “கடவுளாகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கே” கடவுள் மனிதரை உண்டாக்கினார். “இப்படி நாம் தேடவேண்டியவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்.—அப்போஸ்தலர் 17:24-27.
நீங்கள் கடவுளுக்காக நேரம் ஒதுக்கி வைக்கிறீர்களா?
இது உற்சாகந் தருகிறதல்லவா? கடவுள் அருகில் இருக்கிறார், ஆனால் அவரோடு உறவை நாடித்தேட நாம் நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டுமென்று பைபிளிலுள்ள இந்தக் கூற்றுகள் சொல்லுகின்றன. அவர் அக்கறை கொள்கிறார், ஆனால், நாம் முயற்சி எடுக்க வேண்டும், நம்முடைய மனமுவந்த முயற்சியை ஏதோவொரு வகையில் காட்ட வேண்டும்!
இயேசு பின்வருமாறு கூறினார்: “தொடர்ந்து கேளுங்கள், . . . தொடர்ந்து தேடுங்கள், . . . தொடர்ந்து தட்டுங்கள். அது உங்களுக்குத் திறக்கப்படும்.” (NW) உங்கள் மகன் அப்பத்தைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுக்கமாட்டீர்கள், அல்லது அவன் மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுக்க மாட்டீர்கள். “ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”—மத்தேயு 7:7-11.
இயேசு சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள்—நீங்கள் கடவுளுடைய தயவை நாடித் தேடினால், பெற்றோர் தங்கள் சொந்தப் பிள்ளைகளில் காட்டும் அக்கறையைப் பார்க்கிலும் அதிகப்படியான அக்கறையை அவர் உங்களில் காட்டுவார்!
‘கடவுள் எனக்குங்கூட செவிகொடுப்பாரா?’
எனினும், சிலர்—கடவுளின் மற்றும் மனிதரின் பார்வையில்—மிகக்கெட்ட காரியங்களைச் செய்துவிடலாம். அவர்கள் ‘நிச்சயமாகவே, எனக்குக் கடவுள் செவிகொடுக்கமாட்டார்’ என்று சொல்லலாம்.
ஆனால் இவர்கள் தங்கள் வாழ்க்கையைக் குறித்து ஒன்று செய்யலாம். அவர்கள் மாறலாம். பைபிளில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “தெய்வ பயமற்றவன் தன் வழியையும் அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு யெகோவாவினிடம் திரும்புக, அவர் அவன்மேல் மனதுருகுவார், நமது கடவுளிடமே திரும்புக, அவர் மன்னிப்புக்கு அளவில்லை.”—ஏசாயா 55:7.
ஆட்கள் செய்திருக்கக்கூடிய காரியங்களை வரிசையாக பைபிள் குறிப்பிடுகிறது. அதில் செல்லியிருப்பதாவது: “வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்.” அவர்கள் மாறினார்கள். தங்கள் பழைய வழிகளை விட்டு விலகினார்கள். அவர்கள் முற்றிலும் மனந்திரும்பினார்கள், ‘கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்டார்கள்,’ ஆகவே கடவுள் தங்களைக் கவனித்துக் காக்க உண்மையில் விரும்பும் யாவருக்கும் நம்பிக்கை உண்டு!—1 கொரிந்தியர் 6:9-11.
உங்களுக்காக ஒருவர் மரித்தார்
எனினும் தனி நபர்களில் கடவுள் அக்கறையுடையவர்—உங்களுக்காகச் செலவிட அவருக்கு நேரம் இருக்கிறதென நிரூபிக்கும் மிகப் பெரும் அத்தாட்சி உண்டு. மீட்பை ஏற்க மனமுள்ளோருக்காக, கடவுள், சர்வலோகம் முழுவதிலுமே தமக்கு மிக அதிக அருமையானவரை மீட்பின் கிரயமாகத் தம்முடைய உயிரைக் கொடுப்பதற்கு அனுப்பினார். வேத எழுத்துக்கள் சொல்வதாவது: “நாம் இன்னும் பாவிகளாயிருக்கும்போதே கிறிஸ்து நமக்காக மரித்ததனால் கடவுள் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.”—ரோமர் 5:8, தி.மொ.
இந்த மிக உயர்வான அன்பின் செயலுக்காக நாம் உண்மையில் நன்றிமதித்துணர்வைக் காட்டுகிறோமா? இவ்வளவு அக்கறை கொள்ளும் கடவுளிடம் நன்றி செலுத்துதலோடு பேச நாம் நேரம் ஒதுக்கி வைக்கிறோமா? அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேச நாம் நேரம் செலவிடுகிறோமா?—1 யோவான் 4:16, 19.
அவர் எதிர்பார்ப்பது
இவ்வாறு, ஏற்கெனவே இடக்குறிப்பு கொடுக்கப்பட்ட வேதவசனங்கள், கடவுள் அருகில் இருக்கிறார் ஆனால் நாம் முயற்சி எடுக்கும்படி அவர் எதிர்பார்க்கிறாரெனக் காட்டுகின்றன. நாம் நம்பிக்கையோடு நடவடிக்கை எடுக்கும்படி அவை பின்வருமாறு நம்மைத் தூண்டி ஊக்கப்படுத்துகின்றன: “ருசித்தறியுங்கள்,” “ஆராய்ந்து பாருங்கள்,” “தேடுங்கள்,” ‘தடவி கண்டுபிடியுங்கள்,’ “கேளுங்கள்,” “தட்டுங்கள்.” இத்தகைய நடவடிக்கைகள் மனவிருப்பத்தையும், தீர்மானத்தையும் நன்றிமதித்துணர்வையும், விசுவாசத்தையும் காட்டுகின்றன.
கடவுளைப் பற்றிக் கற்றறியவும், நம்முடைய வாழ்க்கையை அவருடைய வழிகளுக்குப் பொருந்தக் கொண்டுவரவும், அவருடைய குமாரனை மீட்பராக ஏற்றுக்கொள்ளவும், மீட்புக்கான கடவுளுடைய ஏற்பாட்டின்கீழ் வரவும் நமக்கு அறிவுரை கொடுக்கப்படுகிறது. அப்படிச் செய்ய நீங்கள் முயற்சி எடுத்தால், உங்களுக்குச் செலவிட கடவுளுக்கு உண்மையில் நேரமிருக்கிறதென்று நீங்கள் காண்பீர்கள். (g87 1/1)
[பக்கம் 26-ன் படம்]
உங்களுக்காகச் செலவிட கடவுளுக்கு நேரம் இருக்கிறது. கடவுக்காக நீங்கள் நேரத்தை ஒதுக்கி வைக்கிறீர்களா?