பணம்—அதன் ஆரம்பமும் பயனும்
அதற்கு அவர்கள் கொடுத்த விலை 24 டாலர் (ரூ350) மட்டுமே, ஆனால் அதை அவர்கள் காசுகளாக அல்லது காசோலையாக—நாம் இன்று அறிந்திருக்கும் பணமாக கொடுக்கவில்லை. நியு யார்க்கிலுள்ள மான்ஹாட்டன் தீவுதான் வாங்கப்பட்ட அந்தப் பொருள். இன்று அதன் மதிப்பு எண்ணமுடியாத கோடிக்கணக்கான டாலர்களாகும். 1626-ல் அங்கு குடியேறிய டச் மக்கள் அதை அந்த இந்திய குடிகளிடமிருந்து மணிகளும், அணிகலன்களும் துணிமணிகளும் கொடுத்து வாங்கினார்கள்.
சரித்திர முழுவதிலும் பணம் பல உருவில் தோன்றியிருக்கிறது. பயனுள்ள எந்தப் பொருளும் பணமாக பயன்படுத்தப்பட்டது—தோல், தானியம், கடற் சிப்பிகள், புகையிலை, உப்பு, கால்நடை, கற்கள், இறகுகள் மற்றும் கொக்கோ பருப்புகள். சம்பளம் என்று சொல்லப்படும் ஆங்கில வார்த்தையாகிய “சாலரி” (Salary) உப்பைக் குறிக்கும் சாலேரியம் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. அதுபோல பணம் சார்ந்த “பெக்கியுனியரி” (pecuniary) என்ற ஆங்கில வார்த்தை கால்நடையைக் குறிக்கும் பெக்கஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. பூர்வ ரோமில் உப்பும் கால்நடையும் வித்தியாசமான சமயங்களில் பணமாக பயன்படுத்தப்பட்டன.
ஆனால் வர்த்தகமும் தொழிலும் செழித்திடுவதற்கு, பணம், வசதியாக கையாளப்படுவதும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக மதிப்பிடப்பட்டதுமான ஒரு உருவத்தைக் கொண்டிருக்க வேண்யதாயிருந்தது. உதாரணமாக, ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் சோழிகள் (cowrie shells) பணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவை அங்கு கிடைப்பது அரிதாயிருந்தது, அதிக மதிப்புடையதாயிருந்தது. அவை எடையில் குறைவாயும், கள்ளத்தனம் பண்ண முடியாததாயும் இருந்தன—பணத்திற்கு இவை முக்கியமான அம்சங்களாகும். ஆனால் அவை இந்தியாவுடன் செய்யப்பட்ட வியாபாரத்தில் பயன்படுத்த முடியாதவை, ஏனென்றால் கடற்கரையில் அவை ஏராளமாகக் காணப்பட்டது.
நாளடைவில் இந்தப் பண முறையை விலையுயர்ந்த உலோகங்களாகிய பொன், மற்றும் வெள்ளிப் பணம் பயன்படுத்தப்பட்டன. அவை வெகு நாட்களுக்கு தேய்மானமின்றி, பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் (ஒரு பொருளின் எடைக்கு இசைவாக உயர் ரக கிரயத்தைக் கொண்டதுமானவை. இவை எளிதாக கொண்டுச் செல்லப்படக்கூடியதும் சிறிய அளவில் பிரித்து கொடுக்கப்படக் கூடியதுமாயிருந்தன. என்றபோதிலும் கொடுத்தல் வாங்கல் அனைத்தும் சரியாகவும் எந்த நபரும் ஏமாற்றப்படாமலிருக்கவும் வியாபாரிகள் தங்களுடன் ஒரு திருத்தமான தராசை எடுத்து செல்ல வேண்டியதாயிருந்தது. பின்பு மதிப்பு குறிப்பிடப்பட்ட காசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, இவை தராசுகளின் தேவையையும் நீக்கிவிட்டன.
நாம் இன்று கொண்டிருக்கும் பணம் அல்லது காசுகள் ஏன் வளைவுகளைக் கொண்டதாயும், கவனமாக அலங்கரிக்கப்பட்டதாயும் இருக்கின்றன என்பதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? அதற்குக் காரணம் பூர்வத்தில் காசுகள் சீரான வட்டமாக இருக்கவில்லை. அவை ஒருவரிலிருந்து இன்னொருவருக்குக் கடத்தப்படுவதற்கு முன்பு ஓரங்கள் வெட்டப்படக்கூடும். இப்படியாக ஒரு வியாபார நோக்குடைய ஒருவன் மதிப்புவாய்ந்த அந்த உலோகங்களிலிருந்து சிறுசிறு துண்டுகள் வெட்டியெடுத்து ஒரு பெரிய தொகையை சேர்த்துவிட முடியும். அப்படிப்பட்ட ஏமாற்றுதலைத் தடை செய்வதற்காகவே, காசுகளில் ஓரங்கள் செதுக்கப்பட்டன, இது ஏமாற்றும் பழக்கத்தை எளிதில் கண்டுபிடிக்க உதவியது.
காகித நோட்டுகள், கடன் பத்திரங்கள் மற்றும் கஜானா பத்திரங்கள் வகை பொ.ச.மு. ஒன்பதாவது நூற்றாண்டில் சீனாவிலும் ரோமிலும் அறியப்பட்டிருந்தது. நவீன வங்கித் தாள்கள் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது. லண்டன் பொற்கொல்லர்கள் மற்றவர்களுக்காகப் பொன்னையும் விலைமதிப்புள்ள பொருட்களையும் சேர்த்து வைக்கத் தங்களுடைய சேமிப்பு அறைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். சேமிக்கப்படும் ஒவ்வொன்றுக்கும் ஒரு ரசீது வழங்கப்பட்டது. அந்தப் பொற்கொல்லர்கள் மீது நம்பிக்கை வளர ஆரம்பித்தபோது, பொருட்களைச் சேமிப்பிலிருந்து எடுப்பதைவிட அவற்றிற்காக வழங்கப்பட்ட ரசீதுகள்தாமே பணமாக கைமாற்றம் செய்யப்பட்டன. மற்றும் பொற்கொல்லருக்கு கொடுக்கப்பட்ட கையொப்பமிடப்பட்ட சீட்டுகள் மூலம் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயருள்ளவருக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்படியான ஏற்பாடு நவீன காசோலைகளுக்கு முன்னோடியாக அமைந்தன.
பாதுகாப்புரிமை பெற்றதாயும் நம்பிக்கைக்குரியதாயும் இருக்கும் வரையில் காகிதப் பணம் பயன்படுத்தப்படுவதற்கு அதிக வசதியாகவும் அதிக ஆபத்தற்றவையாகவும் இருந்தன—விசேஷமாக பெரிய தொகைகள் கல்வியறிவு இல்லாதவர்களுக்கு உதவியாக படங்களையுடைய தாள்களும் பயன்படுத்தப்பட்டன. இன்று உலக முழுவதும் வியாபார கொடுக்கல் வாங்கலில் காகிதப் பணமும், கணக்கு வைப்பும், மின்னியல் முறையில் கணக்கு மாற்றமும் மேம்பட்டிருக்கிறது.
இப்பொழுது, நீங்கள் தினந்தோறும் எதைப் பயன்படுத்தவும் எடுத்துச் செல்லவும் விரும்புவீர்கள்? கால்நடைகளையா, கற்களையா, சோழிகளையா, தானியத்தையா, உலோகங்களையா அல்லது காகித பணத்தையா? (g87 2⁄8)