உலகத்தைக் கவனித்தல்
விவாகமில்லா தம்பதிகள்
விவாகம் செய்துகொள்ளாமல் ஒன்றாகச் சேர்ந்து வாழும் நபர்களின் எண்ணிக்கை என்றுமில்லா உச்ச அளவை எட்டியிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் 22 இலட்சம் தம்பதிகள் இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம், ஆள்தொகை கணக்கு செய்தி அறிவிக்கும் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முந்தைய வருடத்தில் இவர்களின் எண்ணிக்கை சுமார் 19 இலட்சமாக இருந்தது. ஆகவே விவாகமில்லா தம்பதிகளுடைய குடும்ப எண்ணிக்கையின் மேல்நோக்கிய போக்கு 1985-ல் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அது தொடருகிறது. செய்தி அறிவிக்கும் அலுவலகத்தின்படி ஐக்கிய மாகாணங்களிலுள்ள மொத்த தம்பதிகளிலும் 4.1 சதவிகிதத்தினர் இப்பொழுது விவாகமில்லாத தம்பதிகளாவர்.
விசித்திரமான “விலக்கு”
ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்னில் 15 வயது பையனுக்கு அண்மையில் அவனுடைய பெற்றோரிடமிருந்து “விலக்கு” அளிக்கப்பட்டது. அவன் அரசாங்க பொறுப்பின் கீழ் வரும் பொருட்டு, சிறு பிள்ளைகள் நீதிமன்ற உத்தரவுக்காக விண்ணப்பித்திருந்தான். காரணம்? “ஒத்திணைந்து வராத கருத்து வேறுபாடுகள்!” தி ஆஸ்திரேலியனின் பிரகாரம், பெற்றோர்கள் தங்கள் மகன் ‘கெட்ட கூட்டுறவில் சிக்கிக்’ கொண்டு வழக்கமாக பள்ளியை தவறவிட்டதாக தெரிவித்தார்கள். அவனுடைய தவறான நடத்தையைக் குறித்து அவர்கள் கண்டித்தபோது, அவன் வீட்டை விட்டு ஓடிப்போய் அவனுடைய பெற்றோர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கையில் இறங்கினான். பையன் தன்னுடைய பெற்றோர்களைக் குறித்து, விசேஷமாக தன்னுடைய தாயைக்குறித்து பயந்ததாக தெரிவித்ததால் நீதிமன்ற பொதுத்துறை அதிகாரி அவன் அரசாங்க பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். இப்பொழுது அவன் மெல்பர்னில் ஒரு வளர்ப்பு குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறான்.
அவர்கள் சமாதானத்துக்காக ஜெபித்தார்கள்
“போப் ஜான் பால் II-ன் வேண்டுகோளுக்கு இணங்க, உலகிலுள்ள எல்லா முக்கிய மதங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் 12 வித்தியாசமான சமயங்களிலிருந்து ஆன்மீகத் தலைவர்கள் கடந்த அக்டோபர் மாதம் இத்தாலியிலுள்ள அஸிஸியில் கூடிவந்தார்கள். “சமாதானத்துக்காக உலக ஜெப நாளுக்கு” பிரதிநிதிகளாக அவர்கள் வந்தார்கள். அவர்களின் குறிக்கோள்: 24 மணி நேரத்துக்கு உலக சமாதானம், குறைந்த பட்சம் 11 தேசங்களில் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வடக்கு ஐயர்லாந்து லெபனன் போன்ற மற்ற இடங்களில் வன்முறை தொடர்ந்திருந்தது.
உலகளாவிய சமாதானத்தை அடையும் முயற்சியில் அவர்கள் ஐக்கியப்பட்டிருந்தாலும் பிரதிநிதிகள் மதசம்பந்தமான நெறியில் பிரிந்திருந்தார்கள். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஜெபிக்க அல்ல, ஆனால் போப் சொன்ன விதமாகவே, அவர்கள் “ஜெபிப்பதற்கு ஒன்றாகச் சேர்ந்து இருக்கவே” வந்தார்கள். ஒவ்வொரு சமயத்திலிருப்பவர்களும் தனித்தனியே ஜெபிக்கும் பொருட்டு 155 அல்லது அதற்கும் அதிகமாக இருந்த மதத்தலைவர்கள் 12 தொகுதிகளாகப் பிரிந்து சென்றார்கள். “மதசம்பந்தமாக குடும்பங்களாக” பிரதிநிதித்துவம் செய்யப்பட்டவைகளில் சில: புத்தமதத்தினர், இந்துக்கள், முகமதியர்கள், ஷின்டோ மதத்தினர், பார்ஸி சமயத்தவர், ஆப்பிரிக்க ஆன்மவாதிகள் யூதர்கள் மற்றும் அமெரிக்க இந்தியர்கள். தி நியு யார்க் டைம்ஸின் பிரகாரம் புத்த மதத் தலைவரான டாலை லாமா வழிபாட்டு மாடத்தின் மேலிடத்தில் புத்தரின் சிறிய உருவச் சிலையையும் அதைச் சுற்றி ஜெப சுருள்களையும் தூபவர்க்க விளக்குகளையும் வைத்து சான் பீட்டரோ சர்ச்சின் பீடத்தை மாற்றி அமைத்தார். க்ரோ கோத்திரத்தைச் சேர்ந்த இரண்டு அமெரிக்க இந்தியர்களான ஜானும் பர்டன் பிரிட்டியும் “இறுதி சடங்கின்போது சமாதான பைப்பை புகைத்தார்கள்.”
வலியின் விலை
“வலியின் உயர்ந்த விலையைப்” பற்றிய நியுப்பிரின் வலி அறிக்கை, தொழிலாளர்கள் ஏதோ ஒரு வகையான வலியினால் அவதியுறுவதால், ஆண்டுதோறும் ஐக்கிய மாகாணங்களில் 55 கோடி வேலை நாட்கள் இழக்கப்படுவதைக் காண்பித்தது. பட்டியலில் முதலிடம் பெறுவது தலைவலி. இதனால் 15 கோடி 70 இலட்சம் வேலை நாட்கள் இழக்கப்படுகிறது. பல்வேறு வகையான முட்டு வலிகள் இரண்டாவது இடத்தைப் பெறுகின்றன. இதனால் 10 கோடி 8 இலட்சம் வேலை நாட்கள் இழக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து வயிற்று வலிகளுக்காக 9 கோடி 9 இலட்சம் வேலை நாட்களும் முதுகு வலிகளுக்காக 8 கோடி 9 இலட்சம் வேலை நாட்களும் மாதவிடாய் வலிகளுக்காக 2 கோடி 5 இலட்சம் வேலை நாட்களும் பல் வலிகளுக்காக 1 கோடி 5 இலட்சம் வேலை நாட்களும் இழக்கப்படுகின்றன.
விண்வெளியில் உலோக துண்டுகள்
1957 அக்டோபர் 4-ம் தேதி முதல் முதலாக செயற்கை கோள் விடுவிக்கப்பட்ட சமயம் முதற்கொண்டு சுமார் 3500 விண்வெளி ஊர்திகளை மனிதன் கோள் வீதியில் அனுப்பியிருக்கிறான். கடந்த ஆண்டின் மத்திபத்தில், 1619 துணை கோள்களும் ஆய்வு கருவி பொருத்தப்பட்ட விண் வெளி கப்பல்களும் இன்னும் சுற்றிக்கொண்டிருப்பதையும், 1876 மறைந்து விட்டிருப்பதையும் ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. மேலுமாக, ஒரு துணை கோளைச் செலுத்துகையில் தேவைப்படும் மேலுறைகள் தாழ்ப்பாள்கள் போன்ற எண்ணற்ற ராக்கட் மேடைகளும் மிச்சம் மீதமாயுள்ள பொருட்களும் இன்னும் பூமியைச் சுற்றிக் கொண்டே இருந்தன. லுஃப்ட் உன்ட் ராம்போர்ட் (Luft- Und Raumfahrt) என்ற ஜெர்மன் பத்திரிகையின்படி பதிவிலுள்ள 4,457 சிதைவு பொருட்கள் 1986 ஜூன் 30-ம் தேதி இன்னும் பூமியைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
ஓரினப் புணர்ச்சியைப் பற்றிய வத்திக்கனின் கருத்து
கத்தோலிக்க சர்ச் வெளியிட்டிருக்கும் ஒரு புதிய அறிக்கையில், ஓரின புணர்ச்சியைப் பற்றிய அதனுடைய முந்தைய போதகங்கள் மேலுமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. முதல் முறையாக ஓரின புணர்ச்சி மன சாய்வை சர்ச், “உண்மையான கோளறு” என்பதாக வெளிப்படையாக கண்டனம் செய்திருக்கிறது. கடந்தகால அறிக்கைகள் ஓரின புணர்ச்சி செயல்களின் பாவத் தன்மையில் மட்டுமே கவனத்தை ஊன்ற வைத்தன. நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், ஓரின புணர்ச்சி ஆதரவு இயக்கத்தைக் குறைகூறுகையில், ஏய்ட்ஸ் கொள்ளை நோயைப் பற்றி இது மறைமுகமாக குறிப்பிட்டிருந்தது. விசுவாச கோட்பாட்டுக்காக வத்திக்கனின் புனித சபையால் வெளியிடப்பட்டு உலகம் முழுவதிலுமுள்ள கத்தோலிக்க ஆயர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்ட 14 பக்க அறிக்கை, ஓரின புணர்ச்சியில் ஈடுபடும் ஆட்கள் “முக்கியமான ஒரு தார்மீகப் பாவத்தை” நடப்பிப்பதாகவும்கூட தெரிவிக்கிறது. ஓரினப் புணர்ச்சியைப் பற்றிய சர்ச்சினுடைய நிலைநிற்கையைப் பற்றி பாதிரிமார்களும் இறைமையியல் வல்லுநர்களும் தவறான கருத்தைக் கொண்டிருக்கக் கூடிய சாத்தியத்தைப் பற்றிய வத்திக்கனின் கவலையே, புதிய விளக்கத்துக்கு காரணமாக இருப்பதாக வத்திக்கன் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
வரலாற்று புகழ் பெற்ற வான் செலவு
கடந்த டிசம்பர் மாதம் வாயேஜர் என்றழைக்கப்பட்ட மிக இலேசான எடையுள்ள ஒரு விமானம் வான் பயண வரலாற்றில் இடம் பெற்றது. மீண்டும் எரிபொருளைப் போட்டுக்கொள்ளாமலே எங்கும் நிற்காமலே உலகம் முழுவதையும் வெற்றிகரமாக முதல் முறையாக இது சுற்றி வந்தது. 25,012 மைல்கள் (40, 252 கி.மீ.) தூரம் பறந்து ஆகாயத்தில் அபாயமான ஒன்பது நாட்களைக் கழித்த பிறகு, ஓர் ஆணும் பெண்ணும் ஓட்டிச்சென்ற அந்த விமானம் கலிபோர்னியாவில் இறங்கியது. 1962-ன் முந்தைய உலகப் பதிவான 12,532 மைல்கள் (20,168 கி.மீ.) தூரத்தை இது தகர்த்துவிட்டிருக்கிறது. தும்பியைப் போல இருப்பதாக விவரிக்கப்படும் விநோதமான தோற்றத்தையுடைய வாயேஜர் விறைப்பான தாளினாலும் ப்ளாஸ்டிக்கினாலும் செய்யப்பட்டிருந்தது. இது அதன் எடையான 2,680 பவுண்டுகளை (1,216 கி.கிராம்) விட மூன்று மடங்கு அதிகமான எடை எரிபொருளைக் கொண்டு சென்றது. விமானத்தை உருவாக்கியவர் எளிமையே அதன் மிகப் பெரிய பலமாக இருப்பதாகத் தெரிவித்தார்: “தேவைப்பட்ட குறைந்த அளவை வைத்துக்கொண்டு அனைத்தையும் சீவி வெட்டி எறிவதன் மூலம் நாங்கள் வெற்றி பெற்றோம்” என்றார் அவர்.
ஒட்டைச்சிவிங்கி தாக்குகிறது
“ஒட்டைச்சிவிங்கி ஒரு சாதுவான பிராணி என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்,” என்பதாக தென் ஆப்பிரிக்காவிலுள்ள வேட்டை விலங்கு பூங்கா ஒன்றை பார்க்க வந்த சுற்றுலா பயணி சொன்னார். சிறிய பேருந்து ஒன்றில் வந்த அவரைச் சேர்ந்த பயணிகள் ஒட்டைச்சிவிங்கி ஒன்று பாதையில் நின்று கொண்டு நகர மறுத்ததன் காரணமாக வழியில் நிற்க வேண்டியதாயிற்று. ஆகவே பயணிகளில் ஒருவர் கீழே இறங்கி அதைத் துரத்திவிட முயன்றார். ஒட்டைச்சிவிங்கியோ தாக்க ஆரம்பித்தது. பயணி விரைவாக பேருந்துவின் கீழ் சென்று பதுங்கிக் கொண்டார். மிருகம் தொடர்ந்து பின் கால்களில் எகிறி குளம்பினால் உதைத்து கண்ணாடி ஜன்னலை நொறுக்கியது. உள்ளேயிருந்தவர்கள் மயிரிழையில் காயமடையாமல் தப்பினர். கடைசியாக ஒட்டைச்சிவிங்கியின் கோபம் தணிந்து அது புதருக்குள் சென்று மறைந்து விட்டது. ஏன் தாக்கியது? பேருந்து, அதற்கும் அதனுடைய பெண் சிவிங்கிக்குமிடையே நின்று விட்டதற்காகவே தாக்கியதாக தெரிகிறது.
வியாபாரிகள் பயங்கரவாதிகளின் குறியிலக்கு
பயங்கரவாதிகள் தங்கள் முக்கிய குறி இலக்குகளில் ஒன்றாக இப்பொழுது வியாபாரிகள் மீது கண் வைத்திருக்கிறார்கள். “பயங்கரவாதிகளின் பலவந்தமான கடத்தல்களில் நாற்பத்தெட்டு சதவிகிதத்தில் வியாபாரிகள் உட்பட்டிருந்தார்கள்” என்பதாக லீடர்ஸ் பத்திரிக்கையில் ரான்ட் நகராண்மைக் கழக பாதுகாப்பு இயக்குநர் ப்ரையன் M. ஜென்கின்ஸ் சொல்கிறார், பயங்கரவாதிகள், வன்முறை இயக்கங்களுக்குப் பண உதவியைப் பெற்றுக்கொள்ள, கூட்டாண்மை உயர் அதிகாரிகளைக் கடத்திச் செல்கிறார்கள். 1970-ம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்திலிருந்ததோடு ஒப்பிடுகையில், 1980-ம் ஆண்டுகளில் வியாபாரிகளுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் இரண்டு மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. “ஒரு சில கருத்துரையாளர்கள் முன்னறிவிப்பது போல, பயங்கரவாதிகள் வேதியல் அறிவியல் அல்லது அணு சக்தி ஆயுதங்களைக் கொண்டு அர்மகெதோனை ஆரம்பித்து வைக்காவிட்டால், பெரிய அளவில் பாகுபாடற்ற படுகொலை சம்பவங்கள் அதிகரிக்கும்” என்பதாக அவர் மேலுமாக சொல்கிறார்.
முரட்டுத்தனமாயில்லாத உடற்பயிற்சிகள்
ஓடுவதற்கும் உயர குதித்து ஆடும் நடனத்துக்கும் (acrobic dancing) அதிகமான எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் இருந்துவருகிறார்கள். ஆனால் பலவீனமான முழங்கால் முட்டினால் அல்லது கணுக்கால் அல்லது மோசமான முதுகு வலியினால் அவதியுறும் ஆட்களுக்கு, அந்த உடற் பயிற்சிகள், அவர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக இருக்கக்கூடும். “பெரும்பாலான ஆட்கள் ஓடக்கூடாது. ஆனால் ஏதாவது நிகழ்ந்தாலொழிய இதை அவர்கள் கற்றுக்கொள்வதில்லை” என்பதாக நியு யார்க் நகர மருத்துவமனையில் எலும்பு முறிவு நிபுணரும், விளையாட்டு நிர்வாகியுமான டாக்டர் ஜேம்ஸ் A. நிக்கோலஸ் தி நியு யார்க் டைம்ஸில் தெரிவித்தார். உடல் நலத்துக்கான அவைத் தலைவர் குழுவின் மருத்துவ ஆலோசகராக இருக்கும் மற்றொரு மருத்துவர் இதை ஒப்புக்கொள்கிறார். “ஓடுதல் சரீரத்தின் மீது பாதகமான விளைவை உண்டு பண்ணுகிறது” என்கிறார் அவர். ஆனால் வேகமாக குதித்து ஆடும் நடனத்தைப் போல அது அத்தனை மோசமானதல்ல. நீந்துவதும், சைக்கிள் ஓட்டுவதும், நடப்பதும் எவ்வளவோ மேலானவை. இந்தக் காரணங்களுக்காகவே, உடல் நலம் பேண, நடப்பதும், குறைவான விசைவலு அல்லது விசை வலுவில்லாத ஏரோபிக்ஸ் போன்ற மென்மையான உடற்பயிற்சிகளும், உடல் ஆரோக்கிய உணர்வுள்ள மக்களிடையே மதிப்பை பெற்று வருகிறது. (g87 3/22)