இளைஞர் கேட்கின்றனர் . . .
ஏன் நான் கோபப்படுகிறேன்?
“நான் கோபமாக இருக்கையில் சீறிவிழுவேன், நீங்கள் என் பக்கத்தில் வர விரும்ப மாட்டீர்கள். . . . என் முகம் சிவந்துவிடும் . . . சில சமயங்களில் நான் வெறுமென கத்திக்கொண்டிருப்பேன்.”—11 வயது ஈவான்.
உங்கள் தங்கை உங்களுக்குப் பிடித்தமான சட்டையை நாசமாக்கிவிடுகிறாள். ஒரு தேர்வில் உங்கள் ஆசிரியர் அநியாயமாக மதிப்பெண்ணை குறைத்துவிடுகிறார். உங்களுக்கு அவசரமாக தேவைப்படும் ஒரு சமயத்தில், தலைமுடியை உலர்த்த நீங்கள் பயன்படுத்தும் கருவி வேலை செய்யாமல் போய்விடுகிறது. அநேக இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட எந்தக் குறுக்கீடுகளும், அநீதிகளும், அசெளகரியங்களும் அதிகமாக கோபத்தைத் தூண்டுவதற்குக் காரணங்களாக இருக்கக்கூடும்.
ஹெல்த் பத்திரிகையில் டாக்டர் ஜார்ஜியா விட்கின் லேனாயில் ஒரு கட்டுரையில் இவ்வாறு விளக்குகிறார்: “கோபத்தைத் தூண்டும் ஒரு சம்பவத்துக்கு மூளை பிரதிபலிக்கையில் தன்னியக்கமுள்ள நரம்பு மண்டலம் செயல்படுகிறது. குண்டிக்காய் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீர், இரத்த ஓட்டத்தில் வெளியேற ஆரம்பித்து இதய துடிப்பையும், மூச்சுவிடுதலையும் அதிகரித்து, ஆற்றலுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள சர்க்கரைகளை வெளிப்படும்படி தூண்டுகிறது.”
என்ன விளைவுகளோடு? ‘நம்முடைய சொந்த குண்டிக்காய் சுரப்பி நீரின் செல்வாக்கின் கீழ் நாம் எடுக்கும் நடவடிக்கைகள் அநேகமாக அளவுக்கு மீறிய பிரதிபலிப்புகளாக இருக்கின்றன’ என்று தொடர்ந்து டாக்டர் விட்கில் லேனாயில் சொல்கிறார். “நாம் கத்தி கூச்சல் போடுகிறோம். வெறுக்கத்தக்க அரைகுறை உண்மைகளைத் தூக்கி எறிகிறோம். தாக்குதல் செய்து, சேதப்படுத்தி அழித்து, அவ்விடத்தில் ஒரு சிடுசிடுப்பான நிலையை விட்டுச்செல்கிறோம். அதே விதமாகவே, டீன் பத்திரிகையில் ஒரு கட்டுரை, “கோபம், நீங்கள் உண்மையில் சொல்ல விரும்பாத காரியங்களைச் சொல்ல வைக்கவும், நண்பர்களை இழந்துவிடவும்—உள்ளே சரீரப்பிரகாரமான நோவையும்கூட உண்டுபண்ணும்.”
நீங்கள் எப்போதாவது கோபப்பட்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் மட்டுமே அப்படி இல்லை. நம்மில் பெரும்பாலானோரைப் போல, அதற்குப் பிற்பாடு மிகவும் முட்டாள்தனமாக உணர்ந்து, ’நான் ஏன் அதைச் செய்தேன்?’ என்பதாக யோசித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆம், சிலருக்குத் தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்துவது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது? அவ்விதமாகச் செய்ய முயற்சிசெய்வது தகுதியுள்ளதாக இருக்கிறதா?
நாம் ஏன் கோபமடைகிறோம்?
அவ்வப்போது நாம் கோபங்கொள்ளக்கூடியவர்களாக இருப்பதற்கு ஒரு காரணம், நாம் “தேவ சாயலாக” சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 1:27) கடவுள் தாமேயும் கோபங்கொள்ள முடியும்! உதாரணமாக அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்: “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.”—ரோமர் 1:18.
ஆனால் யெகோவா தேவனின் கோபத்துக்குக் காரணம் நீதியையும் நியாயத்தையும் அவர் நேசிப்பதே ஆகும். கடவுளுடைய கோபமானது, வெறுமென ஓர் உணர்ச்சியின் வேகமாக இல்லை. அவர் தம்முடைய கோபத்தைக் கட்டுப்படுத்தி, நீதியான வழியில் அதை வெளிப்படுத்துகிறார். இதன் காரணமாகவே பொல்லாத உலகின் மீது உலகளாவிய ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தபோது அவர் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக அவர் “நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றினார்.” (2 பேதுரு 2:5) ஆகவே, கடவுளை, “இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமுமுள்ள தேவன்” என்பதாக விவரிக்க முடியும்.—யாத்திராகமம் 34:6.
கடவுள் மனிதனை தம்முடைய சாயலில் சிருஷ்டித்திருக்கிறபடியால், நாம் இயல்பாகவே நேர்மை உணர்வை பெற்றிருக்கிறோம். ஆகவே நாம் அநீதியாக நடத்தப்படும்போது அல்லது நமக்குத் தீங்கிழைக்கப்படும்போது இயற்கையாகவே நாம் உள்ளுக்குள் கொதித்தெழுவதை உணரலாம். பைபிள் காலங்களில் தேவபக்தியுள்ள அநேக ஆட்களுக்கு இது சம்பவித்திருக்கிறது.
உதாரணமாக, இஸ்ரவேல் ஜனத்தின் தலைவனான மோசக்கு எதிராக அநேகர் கலகம் பண்ணினபோது அவன் கடுங்கோபங் கொண்டான். ?(எண்ணாகமம் 16:1, 15) இயேசு கிறிஸ்துவுங்கூட கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்! கடவுளுடைய வணக்கத்துக்குரிய ஆலயத்தில் மனிதர்கள் வியாபாரம் செய்துகொண்டிருந்ததை அவர் கவனித்தபோது, அவர் “இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்” என்று கடுங் கோபத்தோடு கட்டளையிட்டார். (யோவான் 2:13-16) ஆகவே நியாயமான கோபம் ஒரு கிறிஸ்தவனுக்கு வெகுவாக பொருத்தமானதாகவே இருக்கிறது.
துரதிருஷ்டவசமாக, பெரும்பாலும் நம்முடைய கோபம் நியாயமாக தூண்டப்பட்டதாக இல்லை. ஏனென்றால் பைபிள் சொல்லுகிற விதமாகவே “யாவரும் பாவத்திற்குட்பட்டவர்கள்.” ஆகவே அது தொடர்ந்து சொல்வதாவது: “அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.” (ரோமர் 3:9, 10) ஆகவே, அப்படியென்றால் நம்முடைய சொந்த அபூரணங்களும்—மற்றவர்களின் குறைபாடுகளும்—அமைதியை இழப்பதற்குக் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. “சில சமயங்களில் ஆட்கள் என்னை மிகவும் எரிச்சலடையச் செய்கிறார்கள்” என்பதாக இளைஞனான ஸ்டீஃபென் சொல்கிறான்.
ஆனால் அநேகமாக, நாம் நியாயமான காரணம் ஏதுமின்றி கோபப்படுகிறோம். எல்லாவற்றையும் பார்க்கும் யெகோவாவைப் போலில்லாமல், எந்த ஒரு விஷயத்தையும் பற்றி வரையறைக்குட்பட்ட நோக்கே நமக்கு இருக்கிறது. (எபிரெயர் 4:12, 13) உதாரணமாக ஞானவானான சாலொமோன், “கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” என்பதாகச் சொன்னான். (நீதிமொழிகள் 15:1) ஆனால் சில சமயங்களில் “சொல்” அப்பாவித்தனமாக சொல்லப்பட்டதாக, அல்லது சரியான நேரத்தில் சொல்லப்படாத ஒரு ஹாஸ்யமாக அல்லது விளையாட்டுத்தனமான கேலிப் பேச்சாக இருக்கக்கூடும். இதை அறியாமல் நாம் கொதித்தெழுகிறோம்.
கடைசியாக, உணர்ச்சி இயல்புகள் வித்தியாசப்படுகின்றன. நம்மில் சிலருக்கு மற்றவர்களைவிட கோபங்கொள்ளும் மனச்சாய்வு அதிகமிருப்பதாக தோன்றுகிறது. ஓர் இளைஞனாக, நீங்கள் பருவவயது கொண்டுவரும் எல்லா புதிய ஆசைகளையும் தூண்டுதல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இப்பொழுதுதானே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் உங்களைப் பற்றியே நிச்சயமற்றவராக, குற்றஞ்சாட்டப்படுகையில் எளிதில் புண்பட்டுவிடலாம். உங்கள் உணர்ச்சிகளைக் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரையாக கோபமூட்டப்படும்போது நீங்கள் எளிதில் புண்பட்டுவிடுகிறீர்கள். விசேஷமாக குடும்ப வட்டாரத்துக்குள் இது உண்மையாக இருக்கிறது. “என் அக்காளிடம் நான் கோபங்கொள்வதுண்டு” என்பதாக 15 வயது லாரி ஒப்புக்கொள்கிறாள். “முட்டாள்தனமாக எதையாவது சொல்லி அல்லது நான் சொல்லும் எல்லாவற்றிலும் திருத்தம் செய்து என்னை எவ்வாறு எரிச்சலூட்ட முடியும் என்று அவளுக்குத் தெரியும்.” அதே விதமாக உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்குமிடையே மன இறுக்கங்கள் கொழுந்துவிட்டெரியக்கூடும்.
ஆனால், உண்மையில் நீங்கள் அனுமதிப்பீர்களேயானால், எதுவும் உங்களைக் கோபங்கொள்ள செய்துவிடக்கூடும். கேள்வி என்னவெனில், அந்தக் கோப உணர்ச்சிகளை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்?
கட்டுப்படுத்தப்படாத கோபம்
“அநேக ஆட்களுக்குக் கோபத்தை நல்லறிவுடன் எவ்விதமாக வெளிக்காட்டுவது என்பது தெரிவதில்லை” என்பதாக உங்கள் பருவ வயதினரை சென்றெட்டுதல் என்ற புத்தகம் குறிப்பிட்டது. சிலர் சிறு பிள்ளைத்தனமாக ஒருவித வெறியோடு கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். சிலர் வார்த்தையிலும் செயலிலும் கோபவேசத்தைக் காண்பிக்கிறார்கள். மற்றவர்கள் வெளித்தோற்றத்தில் அமைதியாக ஆனால் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் இளம் பெண் சொன்னவிதமாகவே: “எனக்குக் கோபம் வந்தால் நான் கத்தி கூச்சல் போடுவதில்லை. நான் அசட்டையாக இருந்து மெளனமாகிவிடுவேன்.” இன்னும் மற்றவர்கள் தங்கள் மோட்டார் வண்டியை எடுத்து அவர்கள் ஓட்டும் விதத்தில் கோபத்தை வெளியே கொண்டுவருகிறார்கள்.
ஆனால் கட்டுப்படுத்தப்படாத கோபம் ஆக்கப்பூர்வமாக இருப்பதில்லை. யேல் பல்கலைக்கழக பேராசிரியர் கேய்ரி ஷுவார்ட்ஸ், கோபமானது “வேறு எந்த உணர்ச்சிகளைக் காட்டிலும், பயத்தையும்விட இருதயத்தின் மீது மிக கடுமையான மற்றும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பாதிப்புகளை உண்டுபண்ணுகிறது” என்கிறார். டியூக் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரெட்போர்ட் B. வில்லியம்ஸ் ஜுனியர் இவ்விதமாகச் சொன்னார்: “பெரிய அளவில் அகால உயிரிழப்பானது பகைமை உணர்ச்சியோடு சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும் என்பதை இப்பொழுது பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.” நிச்சயமாகவே ஒவ்வொரு சமயம் எரிச்சலூட்டப்படும்போதும் ’கோபப்படுவதை’ ஒரு வழக்கமாக வைத்துக்கொள்வது ஆரோக்கியமானதாக இராது. “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்” என்பதாக ஒரு பூர்வாங்க நீதிமொழி சொல்கிறது.—நீதிமொழிகள் 14:30.
மேலுமாக, கட்டுக்கடங்காத கோபம், பொதுவாக மோசமான நிலையை இன்னும் மோசமாக்கிவிடுகிறது. சிமியோன், லேவி என்ற பெயருடைய இரண்டு சகோதரர்களையும் கற்பழிக்கப்பட்ட அவர்களுடைய சகோதரியையும் பற்றிய பைபிள் பதிவை நினைவுபடுத்திப் பாருங்கள். இதைக் கேள்விப்பட்டபோது அவர்கள் கோபங்கொண்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது! ஆனால் அவர்கள் தங்கள் கோபத்தை எவ்விதமாக வெளிக்காட்டினார்கள்? கற்பழித்தலுக்குக் காரணமாயிருந்த அந்த மனிதனை—அவனுடைய குடும்பத்திலுள்ள மற்றும் அந்தப் பட்டணத்திலுள்ள எல்லா ஆண்மக்களையும் இரக்கமில்லாமல் கொலை செய்துவிடக்கூடிய வகையில் காரியங்களை அவர்கள் திட்டமிட்டார்கள்.—ஆதியாகமம் அதிகாரம் 34.
பல வருடங்களுக்குப் பின்பு அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபு, அவனுடைய மரண படுக்கையில் இந்தக் கொடுமையான சம்பவத்தை இன்னும் நினைவில் வைத்திருந்தான். அவர்களுடைய கோபவேசமான பழிவாங்குதலுக்காக அவன் அவர்களை பாராட்டினானா? மாறாக, அவர்களுடைய கோபத்தை அவன் சபித்தான். ஏனென்றால் அது “உக்கிரமானது, அவர்கள் மூர்க்கமும் கொடுமையானது.” (ஆதியாகமம் 49:7) ஆம், கோபத்தைத் தூண்டிய காரியத்தைவிட மோசமானதாக இருந்தது. அவர்கள் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை; தங்கள் மதிப்பை அவர்கள் கெடுத்துக்கொண்டார்கள்.
ஆகவே நீதிமொழி பின்வருமாறு சொல்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “முற்கோபி மதிகேட்டைச் செய்வான்.” (நீதிமொழிகள் 14:17) கோபத்தில் இருக்கும் ஒருவர் நல்லறிவுடன் சிந்திக்கவோ அல்லது செயல்படவோ முடிவதில்லை. கோபவேசத்திலுள்ள ஒருவர் தவறை சரிசெய்துகொள்ளும் கிறிஸ்தவ வழியையும் நாடுவதில்லை. பைபிள் எழுத்தாளனாகிய யாக்கோபின் வார்த்தைகள் உண்மையாக இருக்கின்றன: “மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.” (யாக்கோபு 1:20) கோபவேச வெறி, மரியாதையற்ற நடத்தை, முகத்தை தூக்கி வைத்துக்கொள்வது ஆகியவை ஆக்கப்பூர்வமான நடத்தைக்கு எதிர்மாறானவையாக இருக்கின்றன.
உங்களுக்குத் தீங்கிழைத்த எவரோ ஒருவரை வார்த்தைகளால் வசைமாறிப் பொழிவது, அந்தச் சமயத்துக்கு உங்களுக்கு மனநிறைவளிப்பதாக இருக்கலாம். ஆனால் விசேஷமாக அந்த எவரோ ஒருவர் உங்கள் முதலாளியாக, ஆசிரியராக அல்லது பெற்றோராக இருக்கையில் பொதுவாக கோபத்தை வெளிப்படுத்தியதைக் குறித்து நீங்கள் பின்னால் மனஸ்தாபப்டுகிறீர்கள். (பிரசங்கி 10:4 ஒப்பிடவும்) ஆகவே நீதிமொழிகள் 29:11 சொல்கிறது: “மூடன் தன் உள்ளத்தையெல்லாம் [கோபத்தின் மூலம்] வெளிப்படுத்துகிறான். ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.”
ஆனால் அதை எவ்விதமாக நீங்கள் செய்யக்கூடும்? பின்னால் வர இருக்கும் ஒரு கட்டுரை இதை ஆலோசிக்கும். (g87 4/22)
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
நம்முடைய சொந்த அபூரணங்களும் மற்றவர்களின் குறைபாடுகளும்—அமைதியை இழப்பதற்குக் காரணங்களாக அமைந்துவிடுகின்றன
[பக்கம் 22-ன் படம்]
கோபப்படுவது பியோஜனமுள்ளதாக இருக்கிறதா?