உலகத்தைக் கவனித்தல்
ஜனநெரிசலான நகரங்கள்
அநேக நகரங்களில் காணப்படும் மக்கள் தொகை பெருக்கம் கடுமையான பொருளாதார மற்றும் சமுதாய அழுத்தங்களை உருவாக்கி, அரசியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சம்பந்தமாக வன்முறை மாற்றங்களுக்கு வழிநடத்தக்கூடும் என்பதாக கடந்த பிப்ரவரியில், ஐக்கிய நாடுகள் அவை கூடிய மாநாட்டு ஒன்றில் குழுமியிருந்த வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். 2,000 ஆண்டுக்குள் நகர்ப்புற கேய்ரோவில் தற்போதுள்ள 90 லட்சம் மக்கட் தொகை 130 லட்சமாகவும்; நகர்புற மனிலாவிலுள்ள 86 லட்சம் 111 லட்சமாகவும்; மெக்ஸிக்கோ நகரின் மக்கட் தொகை 190 லட்சத்திலிருந்து 260 லட்சமாகவும் வளரும் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது. “சமூகப் புரட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் அமைதியின்மை வளரும் இடங்களாக, திடீரென்று சமுதாய கொந்தளிப்புகள் எழும்பக்கூடிய நிலையிலுள்ள இடங்களாக இந்தப் பெரிய நகரங்கள் மாறி வருகின்றன” என்பதாக மக்கட் தொகை நிறுவனத் தலைவர் வெர்நர் ஃபெர்நோஸ், தி நியு யார்க் டைம்ஸ்-ல் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நகரமயமாக்கல் அழிவுக்கு கொண்டுபோய்விடும் என்பதாக எல்லா நிபுணர்களும் சொல்லுவதில்லை. “இது ஒரு சிக்கலான பிரச்னையாக இருக்கிறது. சமுதாய ஸ்திரத்தன்மையைப் பற்றி, விதிமுறையினால் பொது கருத்து உருவாக்க முடியாது” என்று ஐ.நா. மக்கட் தொகை விவகார அதிகாரி எலன் ப்ரென்னர் தெரிவித்தார்.
இத்தாலியர்கள் வேட்டையாடுவதை கண்டனம் செய்கிறார்கள்
இத்தாலியிலுள்ள 15 லட்ச வேடர்கள் பொதுமக்களின் ஆதரவை இழந்து வருகிறார்கள் என்பதாக ரோம் செய்தித் தாளாகிய லா ரிப்பப்ளிக்கா-வில் பிரசுரமான ஒரு சுற்றாய்வு கண்டுபிடித்திருக்கிறது. சுற்றாய்வின்படி, பேட்டி காணப்பட்ட, சமுதாயத்தின் எல்லா நிலைகளிலுமுள்ள 1200 நபர்களில் 62.5 சதவிகிதத்தினர் வேட்டையாடுவதை ஒரு விளையாட்டாக கருதாமல், அது ஒழித்துக்கட்டப்படுவதை விரும்புவதாக தெரிவித்தார்கள். அவர்கள் கருத்துப்படி எதிராளிகள் ஒருவரையொருவர் சம நிலையில் எதிர்ப்படக்கூடியவர்களாக இருப்பதே உண்மையான விளையாட்டாக இருக்கிறது. “இத்தாலியர்கள் இனிமேலும் வேட்டையை, வேடர்களை, அவர்களுடைய அமைப்புகளை, அவர்களுடைய சிறப்புரிமைகளை பொறுத்துக்கொள்வது கிடையாது” என்கிறது அறிக்கை.
உடலின் மதிப்பு
உடலினுடைய வேதியல் ஆக்கக்கூறுகளினுடைய மதிப்பின் அடிப்படையில், மனித உடலின் மதிப்பு 26 ரூபாயாக இருப்பதாய் ஒரு சமயம் சொல்லப்பட்டது. இது வெகுவாக மாறிவிட்டது. மனித உடலின் மதிப்பு இப்பொழுது இருபத்தாறு லட்சத்துக்கும் அதிகமாய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வித்தியாசத்துக்கு காரணமென்ன? “ஒருவரிடத்திலிருந்து மற்றொருவரின் உடலுக்கு அங்கங்கள் பெயர்த்து பொருத்துவதற்கும், ஆராய்ச்சிக்கும் நோய் அறுதி செய்யவும், மற்றும் நோய் நீக்கப் பொருட்களை தயாரிக்கவும் திசுக்கள் சேர்த்து வைக்கப்படுகின்றன” என்பதாக தி நியு யார்க் டைம்ஸ் சொல்கிறது. “1985-ல் சுமார் 8,000 சிறு நீரகங்களும் 20,000 விழிமுன்தோல்களும் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மற்றொருவரின் உடலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மாற்று இருதய சிகிச்சைகள் வருடத்துக்கு 1,200 என்ற அளவில் செய்யப்படுகின்றன.”
கங்காருவின் வால்களுக்கு புதிய உபயோகம்
கார் விபத்தினாலும், பனிச்சறுக்கலில் வீழ்ந்துவிடுவதனாலும் அல்லது மற்ற விளையாட்டில் ஏற்படும் விபத்துக்களினாலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர், கவலைக்குரிய வகையில், முழங்கால் முட்டுக் காயங்களினால் அவதியுறுகிறார்கள். அவை குணமாகாது இருக்கும் பட்சத்தில், எலும்புகள் பிணைக்கும் கிழிந்துவிட்ட தசைநார்களை மாற்றீடு செய்ய அறுவை சிகிச்சை செய்வது அவசியமாகிறது. அண்மைக் காலங்கள் வரையாக, சிதைந்துவிட்ட தசைநார்களுக்குப் பதில் எருதுகளின் தசைகளை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இப்பொழுது கங்காருவின் வாலிலுள்ள தசைநார், எருதினுடைய தசை நாரைவிட அதிக எளிதாக வளைவதாகவும் “அழுத்தங்களைத் தாங்கிக்கொள்ள போதிய அளவு உறுதியாகவும்” இருப்பதாக ஆஸ்திரேலியாவில் சிட்னியிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். தி ஆஸ்டிரேலியனின் பிரகாரம், “ஒவ்வொரு கங்காருவின் வாலிலும் 40 மனித முழங்கால்கள் இருக்கின்றன.” கங்காரு வால் சூப் சுவையுள்ள உணவாக சிலரால் கருதப்பட்டாலும், எதிர்காலத்தில் இதனைக் கொண்டு செய்யப்படும் முழங்கால் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நிரூபித்துவிடுமேயானால் மருத்துவத்துக்கு அதிகமாகவும் உணவுக்கு குறைவாகவுமே இது கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
ஒலியினால் நோய் அறுதியிடல்
இந்தியாவில் புது தில்லியிலுள்ள சஃப்தார்ஜங் மருத்துவ மனையில் மருத்துவர்கள் எலும்பு முறிவுகளை ஒரு இதயத்துடிப்பு மானியையும் ஒரு இசை கவடையையும் வைத்து கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்கிறது லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை. வேகமாயும் வலியில்லமாலும் செயல்படுகின்ற இந்த முறை, எலும்புகளினுள்ளே ஒலி அலைகளின் அனுப்பீட்டு முறையில் சார்ந்திருக்கிறது. உதாரணமாக இசை கவடை அடித்து ஒலி எழுப்பி அதை முழங்கால் சில்லின் மீது வைத்து அழுத்தும்போது தொடையில் எலும்பு முறிவு, ஒலி அனுப்பீட்டு முறையில் குந்தகம் விளைவிக்கிறது. இடுப்பு எலும்பின் மீது வைக்கப்பட்ட தன்னுடைய இதயத்துடிப்பு மானியின் மூலமாக ஒலியைக் கேட்டுக் கொண்டிருக்கும் மருத்துவரால் தெளிவற்ற ஒலியை அல்லது ஒலியையே கேட்க முடியாமலிருக்கிறது. தொடை அல்லது முழங்கால் தண்டு எலும்பு முறிவினால் அவதியுறும் நோயாளிகளின் மீது செய்யப்பட்ட பரிசோதனையில் இந்த எலும்பு ஒலி உத்தி 94 சதவிகிதத்தினரின் விஷயத்தில் துல்லிபமாக இருந்தது. சாதாரணமாக மருத்துவப் பயிற்றுவிப்பு முறையினால் செய்யப்படுகையில் இது 88 சதவிகிதமாகவே இருக்கிறது.
சாவுக்கேதுவான போக்குவரத்து எரிச்சல்
தன் மோட்டார் வண்டியின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு ஓட்டுநர் தன்னுடைய தானியங்கித் துப்பாக்கியினால் ஐந்துப் பேரை நோக்கி சுட்டான். இதில் ஒரு வாலிபனுக்கு காலில் அடிப்பட்டது. மற்றவனுக்கு காயமேற்பட்டு உயிரிழந்தான். காரணம்? அதிகமான போக்குவரத்தினால் ஏற்படும் சண்டைகளில் உண்டாகும் எரிச்சல் என்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். தென் கலிபோர்னியா அதிகாரிகள், ஓட்டுநர் நடத்தையின் சீர்குலைவைக் குறித்து அதிகமதிகமாக கவலைப்படுவதாய் கலிபோர்னியா செய்தித் தாளாகிய தி ஹெரால்ட் குறிப்பிடுகிறது. ஹாலிவுட்டிலுள்ள ஒரு தெருவில் தடுப்புக் காப்புப் பொருள் சம்பந்தமான ஒரு விவாதத்தில் ஒரு மனிதன் தன்னுடைய மோட்டார் வண்டியின் சேமப் பெட்டியிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து, மற்றொரு ஊர்தியில் பிரயாணம் செய்து வந்தவர்களை நோக்கிச் சுட்டான். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் காயமடைந்தார். போக்குவரத்து சம்பந்தப்பட்ட அநேக சண்டைகளினால் தானே சிறிய விபத்துக்கள் ஏற்படுவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். எரிச்சல் அதிகமாக பொங்கி எழும்பக்கூடிய, குறிப்பாக அதிக போக்குவரத்து இருக்கும் தெருக்களில் மோதல்களைத் தவிர்க்கும்படியாக அதிகாரிகள் மோட்டார் வண்டி ஓட்டுநர்களை எச்சரித்து வருகிறார்கள்.”
“பை”யின் (வட்டலகின்) உலகப் பதிவு
வட்டத்தின் விட்டத்துக்கும் சுற்றளவுக்கும் உள்ள தகவினைக் குறிக்கும் அடையாளமான “பை”யின் பிடிபடாத மதிப்பு இப்பொழுது 13,35,54,000 பதின்முறை எண் தானங்களாக சொல்லப்படுகிறது! கடந்த செப்டம்பரில் நிர்ணயம் செய்யப்பட்ட முந்தையப் பதிவைவிட இது 10,00,00,000 எண் தானங்கள் அதிகமாக இருக்கிறது. “பை”யின் துல்லிபமான மதிப்பை பதின்முறையில் தெரிவிப்பது இயலாதக் காரியம் என்பதை கணக்கியலாளர்கள் அறிந்திருந்தாலும், ஆராய்ச்சியாளர்கள் கம்ப்யூட்டர்களின் துணைக்கொண்டு அதிக துல்லிபமாக அதன் மதிப்பைக் கண்டுபிடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஜப்பானிலுள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யாசுமாசா கானிடா ஏற்கெனவே உலகப் பதிவை பெற்றிருந்த போதிலும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரின் துணையோடு இந்த பதிவை நீடிக்கச் செய்ய 37 மணி நேரங்கள் செலவழித்திருக்கிறார். எண் இலக்கத்தை அச்சு செய்வதற்கு 19,000 தான்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. அந்த முயற்சியை அவர் மேற்கொண்டதற்கு காரணம் என்ன? “ஒரு மலை அங்கே இருக்கிறது என்பதற்காகவே அதன் மீது ஏறுவது போலவே” அது இருக்கிறது என்கிறார் கானிடா.
ரப்பர் மது
ரப்பரின் கழிவுப் பொருட்களிலிருந்து மதுவை தயாரிப்பது என்பது, மிகச் சிறந்த மது வகைகளின் சுவைத் திற வல்லுநர்களுக்கு, காரியங்களைச் சற்று அதிகமாக மிகைப்படுத்திக் கூறுவது போல தோன்றினாலும் இது செய்யப்பட்டிருக்கிறது. இந்த மதுவின் ருசி “ஜப்பானின் அரிசி மதுவைப் போல” இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கனடாவின் செய்தித் தாளாகிய தி க்ளோப் அண்டு மேய்ல்-லில் அறிவிக்கப்பட்டபடி, மலேசியா ரப்பர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் குழுவுக்கும் ஜப்பானின் யாக்கோஹாமா ரப்பர் கம்பெனிக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. “அதன் ரப்பர் தொழிற்சாலைகளிலுள்ள கழிவுப்பொருட்களை உபயோகித்து மது முதல் உரம் வரையான அனைத்துப் பொருட்களையும் செய்வதற்குரிய வழிகளை ஆராய்வதற்காக” இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இன்னும் இரண்டே ஆண்டுகளில் வர்த்தக உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. கழிவுப் பொருட்களை ஆறுகளில் கொட்டும்போது ஏற்படக்கூடிய தூய்மைக் கேட்டுப் பிரச்னைகளையும் துர்நாற்றத்தையும் கையாளுவதற்கு இது ஒரு வழியாக இருக்கும் என்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அளவுக்கு அதிகமான சுறுசுறுப்பும் சர்க்கரையும்
மிதமிஞ்சி சர்க்கரை உட்கொள்வது பிள்ளைகள் அளவுக்கு அதிகமாக சுறுசுறுப்பாயிருப்பதற்கு வழிநடத்துகிறது என்பது பல ஆண்டுகளாக அநேகரின் நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அது அவ்விதமாகச் செய்கிறதா? மாஸ சூஸட்டஸ் பொது மருத்துவமனை நியூஸ்லெட்டரில் பிரசுரமாயிருந்த அறிக்கை ஒன்றின்படி, மருத்துவ துறையிலுள்ளவர்கள் இப்பொழுது இதை மறு ஆய்வு செய்துவருகிறார்கள். சர்க்கரையின் காரணமாக தங்கள் பிள்ளைகளின் நடத்தையில் மாற்றமிருப்பதாக தெரிவித்த குடும்பங்களிலுள்ள பிள்ளைகளை வைத்து பரிசோதனைகள் பல செய்தபோது நடத்தையில் எந்த ஒரு மாற்றமும் காணப்படவில்லை. மற்ற பிள்ளைகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் செய்த இதேப் போன்ற சோதனைகளும் அதே விதமான விடைகளையே கொடுத்தன. நடத்தையில் காணப்பட்ட ஒருசில மாற்றங்களும் கூடுதலான சுறுசுறுப்பை அல்ல, குறைவான சுறுசுறுப்பையே குறிப்பிட்டுக் காண்பித்தன.
உணர்ச்சிகளுக்கு விளையாட்டு சாமான்கள்
டோக்கியோவில், முழு வளர்ச்சியடைந்த பெரியவர்கள், பேசும் பொம்மைகளை தங்களுக்காக வாங்கிச் செல்கிறார்கள் என்பதாக ஆஷாய் ஈவினிங் நியூஸ் அறிவிக்கிறது. காரணம்? ‘தனிமை’ என்பதாக பொம்மை விற்பனையாளர்கள் சொல்கிறார்கள். பெரும்பாலான பொம்மைகள் மூன்றிலிருந்து பத்து வயதிலுள்ள பெண் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டிருந்தாலும், மாணவர்களும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் பாட்டிமார்களும்கூட அவைகளை வாங்கி துணைக்காக வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். யாவரும் விரும்பும் ஒரு பொம்மை சொல்வதாவது,: “அற்பமான காரியங்களுக்காக கவலைப்படாதே” “பசிபிக் மகா சமுத்திரம் போன்று உன் மனமிருக்கட்டும்.” கைக் காலில்லாத மற்றொரு பொம்மைச் சொல்வதாவது, “எப்படியாயினும் நான் வெற்றி பெற்றே தீருவேன்.” அது நகரவாசிகள் அனுபவிக்கும் சந்ததி இடைவெளியை அவர்கள் நிரப்பிக்கொள்ளச் செய்யும் ஒரு முயற்சியே என்பது விளையாட்டுச் சாமான்கள் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் தரும் விளக்கமாக இருக்கிறது. பொம்மையை வாங்கிய ஒருவர் தன்னுடைய “பேரப் பிள்ளைகள் வெகுத் தொலைவிலிருப்பதால் அவர்களால் தன்னை வந்து பார்க்க முடிவதில்லை” என்பதாகச் சொன்னார். (g87 6⁄8)