தீமையும் வேதனையும்—அவை எவ்விதமாக முடிவுக்கு வரும்?
கசப்பான அனுபவங்கள் அநேகமாக மனக்கசப்பை உண்டுபண்ணுகின்றன. ஆனால் மனித துன்பங்களுக்கு ஒரு நேர்மையான காரணமிருந்தால் என்ன? அதை மனதில் கொண்டவர்களாய், யோபைப் பற்றிய பதிவை நாம் தொடர்ந்து வாசிக்கலாம். மூன்று கசப்பான சுற்று விவாதத்துக்குப் பின்பு, எலிகூ என்ற பெயர் கொண்ட ஓர் இளம் மனிதன் பேசுகிறான். அவன் யோபுவிடம் பின்வருமாறு சொல்கிறான்: “என் நீதி தேவனுடைய நீதியைப் பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று எண்ணுகிறீரோ.” ஆம் யோபு தன்னலமே கருதுகின்றவனாகவும், தன்னிலை விளக்கம் தருகின்றவனாகவும் இருந்தான். “இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப் பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.”—யோபு 35:2; 33:8-12
கடவுள் நல்லவர் என்பதற்கு ஏராளமான அத்தாட்சியை விட்டு வைத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 14:17; ரோமர் 1:20) ஆகவே கடவுளுடைய நற்குணத்தை மறுப்பதற்கு தீமை இருப்பது தானே காரணமாயிருக்கிறதா? எலிகூ பதிலளிக்கிறான்: “அக்கிரமம் தேவனுக்கும் அநீதி சர்வ வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.”—யோபு 34:10.
கடவுள்—தீமைக்கு எதிராக வல்லமையற்றவரா?
அப்படியென்றால் யோபுவின் சார்பாக அல்லது வேறு ஒருவரின் சார்பாகவும் தலையிடுவதற்கு கடவுள் போதிய வல்லமையற்றவராக இருக்கிறாரா? அதற்கு எதிர்மாறாக இருக்கிறார். பயங்கரமான ஒரு பெருங்காற்றிலிருந்து கடவுள் இப்பொழுது தமக்காகப் பேசி தம்முடைய சர்வ வல்லமையை சக்திவாய்ந்த விதத்தில் உறுதி செய்கிறார். “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?” என்று யோபுவிடம் கேட்கிறார். ஏன், வரையறைக்குட்பட்டவராக இருப்பதற்குப் பதிலாக, சமுத்திரங்களையும் வானங்களையும் அதிலுள்ள ஜீவ ஜந்துக்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தக் கூடியவராக தம்மைப் பற்றி பேசுகிறார்.—யோபு 38:4, 8-10, 33; 39:9; 40:15; 41:1.
உண்மைதான், துன்பமனுபவிப்பதைக் கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என்பதை யோபுவிடம் அவர் விளக்கவில்லை. ஆனால், “சர்வ வல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்?” என்பதாக கடவுள் கேட்கிறார். “நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக் கொள்ளும்படிக்கு என் மேல் குற்றஞ் சுமத்துவாயோ?” (யோபு 40:2, 8) அப்படியென்றால், உலகிலுள்ள கஷ்டங்களுக்குக் கடவுள் மீது பழி சுமத்துவதும் அல்லது அவருடன் வழக்காடுவதற்காக தத்துவங்களை தீர்மானிப்பதும் எத்தனை அகந்தையான காரியமாக இருக்கிறது! யோபு இப்பொழுது செய்ய தூண்டப்படுவது போலவே இப்படிப்பட்டவர்கள், அவர்களுடைய முரணான விளக்கங்களைக் குறித்து “மனஸ்தாபப்படு”வது சரியான காரியமாக இருக்கும்.—யோபு 42:6.
தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள்
யோபு, தான் அனுபவித்து வந்த துன்பங்கள் மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட பின்பு விரைவிலேயே எழுப்பப்பட்ட முக்கியமான பலப் பிரச்னைகளில் ஒன்றை உட்படுத்தினது என்பதை அறியாதவனாயிருந்தான். அந்தச் சமயத்தில், சாத்தான் (எதிர்ப்பவன்) என்றழைக்கப்பட்ட ஒரு கலகத்தனமான ஆவி சிருஷ்டி மனிதனைப் பாவத்துக்குள் வழிநடத்தி விட்டிருந்தான். கடவுள் ஆதாமையும் ஏவாளையும் “நன்மைத் தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி”யைப் புசிப்பதைத் தவிர்க்கும்படியாகக் கட்டளையிட்டிருந்தார். அவர்களுக்கு எது நல்லது அல்லது தீயது என்பதைத் தீர்மானிப்பதற்குரிய கடவுளுடைய உரிமைக்கு அவர்கள் மரியாதை காண்பிக்க வேண்டியவர்களாக இருந்தனர். ஆனால் எதிர்ப்பவனோ பின்வருமாறு சொல்வதன் மூலம் ஏவாளின் மனதில் சந்தேகங்களை ஊன்ற வைத்திருந்தான்: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” அடுத்து கடவுள் கூறியதற்கு எதிர்மாறாக பின்வருமாறு சொன்னான்: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும் நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.”—ஆதியாகமம் 2:17; 3:1-5
சாத்தானின் அவதூறான வார்த்தைகள், மனதில் பதிந்துவிடக்கூடிய பிரச்னைகளை எழுப்பின; விலக்கப்பட்ட கனியைப் புசித்ததற்காக கடவுள் மரணத் தீர்ப்பை அளித்தபோது அவர் பொய்ச் சொல்கிறவராக இருந்தாரா? அப்படியே இருந்தாலும், தம்முடைய சிருஷ்டிகளிடமிருந்து சுயாதீனத்தைப் பறித்துக்கொண்டு தம்முடைய தராதரங்களை அவர்கள் மீது திணிப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? தம்முடைய சிருஷ்டிகளிடமிருந்து, நன்மையானவற்றைத் தடுத்துவிடும் அவர் தன்னலமுள்ள கடவுளாக இருந்தாரல்லவா? கடவுள்மீது சார்ந்திராமல் வாழ்வது மகிழ்ச்சியைத் தருவதாக ஒருவேளை இருக்குமா?
கலகக்காரர்களை அழித்துவிடுவது, இன்னும் பல கேள்விகளை எழுப்புவதைப் பார்க்கிலும் அதிகத்தைச் செய்திருக்காது. கடவுளுடைய உதவியின்றி சுதந்திரமாக இடையே தடையில்லாமல் போதிய காலம் செல்லும்படியாக அனுமதிப்பதன்மூலம் மாத்திரமே, சாத்தான் சுயாதீனத்துக்காகக் கொடுத்த அழைப்பு, அழிவதற்கான அழைப்பே என்பதை எல்லா காலத்துக்கும் ஒரே முறையாக நிரூபிக்கமுடியும். ஆம், “உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” கடவுளுடையதில் அல்ல ஆனால் பிசாசாகிய சாத்தானின் வல்லமைக்குள் கிடக்கிறது.” (1 யோவான் 5:19) மனிதன் கடவுளிடமிருந்து விலகி சாத்தானுடைய ஆட்சியின்கீழ் வருவதைத் தெரிந்துகொண்டிருப்பதால், கிடைத்திருக்கும் பலன் நோயும் அநீதியும் பொருளாதார அடிமைத்தனமும், மனவேதனையுமே! எந்தத் தொழில்துறை முன்னேற்றத்தின மத்தியிலும் உலக நிலைமைகள் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே வருகின்றன—அநேகமாக இவைகளுக்குக் காரணம், நவீன தொழில் நுணுக்கத் துறையாக இருக்கிறது.
ஆனால் விவரிக்கமுடியாத இந்த எல்லா வேதனைகளும் கடவுளை அநீதியுள்ளவராகச் செய்வது கிடையாது. மாறாக, மனிதனின் அநீதி ‘கடவுளுடைய நீதியை முன்னிலைக்குக் கொண்டுவந்திருக்கிறது.’ (ரோமர் 3:5) எவ்விதமாக?
துன்பங்கள் என்றுமாக அழிக்கப்படுகிறது!
“இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான். (ரோமர் 8:22) ஆம், மனித சுதந்திரத்தின் 6000 துன்பமான வருடங்கள், எரேமியா 10:23-ன் வார்த்தைகள் உண்மை என்பதைக் காண்பித்திருக்கின்றன: “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” ஆனால் சீக்கிரத்தில் கடவுள் நீதியாகக் குறுக்கிட்டு மனிதவர்க்கத்தின் விவகாரங்களை இயக்க ஆரம்பிப்பார்.
மனித சுதந்திரத்தின் அழிவுண்டாக்கும் பின்விளைவுகள் இத்தனை முழுமையாக வெளியரங்கமாக்கப்பட்டுவிட்டதன் காரணமாக, துன்பத்துக்குக் காரணமாயுள்ள எல்லாக் காரியங்களையும் கடவுள் ஒழித்துவிடுவார்: போர்கள், நோய், குற்றச் செயல், வன்முறை— மரணமும் கூட! (சங்கீதம் 46:8, 9; ஏசாயா 35:5, 6; சங்கீதம் 37:10,11; யோவான் 5:28, 29; 1 கொரிந்தியர் 15:26) அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு பரலோகக் காட்சியில் கேட்டவிதமாகவே: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின:—வெளிப்படுத்தின விசேஷம் 21:3, 4.
கடவுள் யோபுவின் உடல் ஆரோக்கியத்தையும் செல்வங்களையும் மீண்டும் தந்து ஒரு பெரிய குடும்பத்தினால் அவனை ஆசீர்வதிப்பதன் மூலம், அவனுடைய துன்பங்களுக்கு அவர் முடிவைக் கொண்டுவந்தார். (யோபு 42:10-17) அதேவிதமாகவே பைபிள் நமக்கு வாக்களிப்பதாவது: “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல . . . சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” (ரோமர் 8:18, 20) இவ்விதமாக துன்மார்க்கமானது உண்மையில் நம்முடைய நினைவுகளிலிருந்தே துடைத்தழிக்கப்பட்டுவிடும்.—ஏசாயா 65:17-ஐ ஒப்பிடவும்.
தீமையோடு வாழ்தல்
அந்த சுயாதீனம் வரும் வரையாக நாம் பொல்லாத உலகில் வாழ்வதைச் சகித்துக்கொண்டு, தனிப்பட்டவிதமாக கடவுள் நம்மை அழிவிலிருந்து பாதுகாக்கும்படியாக எதிர்பாராமல் இருக்கவேண்டும். சங்கீதம் 91:10-12-லுள்ள பைபிள் வசனத்தைத் திரித்து இயேசுவை ஆலயத்தின் மேலிருந்து கீழே குதிக்கும்படியாக பிசாசாகிய சாத்தான் தூண்டி பொய்யான நம்பிக்கையை எழுப்பினான். அது சொல்வதாவது: பொல்லாப்பு உனக்கு நேரிடாது . . . உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.” ஆனால் அற்புதமாக சரீரப் பிரகாரமான பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எந்த எண்ணத்தையும் இயேசு மறுத்துவிட்டார். (மத்தேயு 4:5-7) நம்முடைய ஆவிக்குரிய நலனை மட்டுமே பாதுகாப்பதாகக் கடவுள் வாக்களிக்கிறார்.
ஆகவே துன்பங்கள் தாக்கும்போதுகூட மெய்க் கிறிஸ்தவர்கள் “யெகோவாவுக்கு விரோதமாய்த் தாங்கலடைவதில்லை.” (நீதிமொழிகள் 19:3) ஏனெனில் கிறிஸ்தவர்களுக்குங்கூட, “சமயமும் முன்னறியமுடியாத சம்பவங்களும் நேரிடுகிறது.” (பிரசங்கி 9:11) என்றாலும் நாம் உதவியற்றவர்களாக இல்லை. தீமை இனிமேலும் இல்லாதிருக்கப்போகும் நீதியுள்ள ஒரு புதிய உலகில் என்றுமாக வாழும் நம்பிக்கை நமக்கிருக்கிறது. நாம் எப்பொழுதும் யெகோவா தேவனை ஜெபத்தில் அனுகலாம். ஏனென்றால், எந்த ஒரு சோதனையையும் சகித்துக்கொள்ள தேவையான ஞானத்தை நமக்குக் கொடுப்பதாக அவர் வாக்களிக்கிறார், (யாக்கோபு 1:5) உடன் கிறிஸ்தவர்களின் ஆதரவையுங்கூட நாம் அனுபவித்துக் களிக்கிறோம். (1 யோவான் 3:17, 18) சோதனையின்கீழ் உண்மையுள்ளவர்களாயிருத்தல் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.—நீதிமொழிகள் 27:11.
என்றாலும், தீமையைச் சகித்துக்கொண்டிருப்பது ஒருபோதும் எளிதல்ல. இதன் காரணமாகவே துன்பத்திலுள்ள ஒருவருக்கு ஆறுதல் சொல்லுகையில் “அழுகிறவர்களுடனே அழுது”—நடைமுறைக்கு ஏற்ற உதவியை அளிப்பது நல்லதாக இருக்கிறது. (ரோமர் 12:15) ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அன்னா, துன்பத்திலிருந்து மீண்டு வர உதவப்பட்டாள். யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக இருக்கும் அவள் உடன் கிறிஸ்தவர்கள் உதவி செய்ய அதிக மனமுள்ளவர்களாக இருப்பதையும் தற்காலிகமாக அவளுக்கு வீட்டில் இடமளிக்கத் தயாராக இருப்பதையும் கண்டாள். அவ்வப்போது அவள் சோர்வாக உணர்ந்த போதிலும், பைபிள் அளிக்கும் நம்பிக்கையில் அவள் புகலிடத்தைக் காண்கிறாள். “என்னுடைய பிள்ளைகள் உயிர்த்தெழுதலில் திரும்ப வருவார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று அன்னா சொல்கிறாள். நற்குணத்தின் கடவுளில் அவளுடைய விசுவாசம் என்றுமிருந்ததைவிட அதிக பலமுள்ளதாக இருக்கிறது.
துன்பமான காலப்பகுதியினூடே நீங்கள் சென்றுகொண்டிருந்தால், உங்களுடைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலைக்காண யெகோவாவின் சாட்சிகளை உதவும்படியாக கேளுங்கள். “கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார்?” மற்றும் “நீங்கள் ஒரு முக்கிய விவாதத்தில் உட்பட்டவர்களாக இருக்கிறீர்கள்” என்ற பயனுள்ள அதிகாரங்களைக்கொண்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தையும் நீங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். உண்மைதான், இப்பொழுது நல்ல ஆட்களுக்குக் கெட்ட காரியங்கள் நேரிடுகின்றன. ஆனால் சீக்கிரத்தில் இவை அனைத்தும் மாற இருக்கிறது. நீங்கள் வாழுமிடத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்பவர்களுக்கு எழுதுவதன்மூலமோ அதிகமான விவரங்களை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். (g87 10⁄8)
[பக்கம் 9-ன் படங்கள்]
கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில், தீமையானது படிப்படியாக மறைந்துவிடும் நினைவாக இருக்கும்.