பைபிளின் கருத்து
மதப்பிரிவுகளின் வணக்கம் கடவுளுக்கு ஏற்கத்தகுந்ததா?
“மதப்பிரிவு” என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்கள் மனதுக்கு வருவது என்ன? விநோதமாக உடையணிந்து தெருமுனையில் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கும் ஒரு ஜனக்கூட்டமா? எண்ணிலடங்கா பக்தர்கள், புரிந்துக் கொள்ளமுடியாத ஏதோ ஒரு குருவின் உருவத்துக்கு முன்னால் தலைவணங்குவதா? கடத்தப்பட்ட அல்லது கெடுக்கப்பட்ட சிறு பிள்ளைகளைப் பற்றிய திகிலுண்டாக்கும் கதைகளா? அல்லது ஒருவேளை தொடர்ச்சியாக பல கொலைகளை அல்லது ஒட்டுமொத்தமான தற்கொலைகளைப்பற்றிய அச்சமூட்டும் பதிவுகளா?
இதுபோன்ற அறிக்கைகள், ஒரு வேளை மிக அடிக்கடி வெளிவருவது வருத்தத்திற்குரியதாகும். இதன் விளைவு, பெரும்பாலான ஆட்களுக்கு, “மதப்பிரிவு” என்ற வார்த்தையும் விநோதமானது, பரம்பரை வழக்கத்துக்கு மாறானது, ஒருவேளை அபாயமானது என்ற சொற்களும் ஒரே பொருளுடையனவாக இருக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரையில் ஸ்தபிக்கப்பட்டதாக அழைக்கப்படும் செல்வாக்குப் பெற்ற சர்ச்சுகளோடு சேராத அனைத்து மத தொகுதிகளும் மதப்பிரிவுகளேயாகும். இந்தக் கருத்து நியாயமாக இருக்கிறதா? அதிக முக்கியமாக அதுதான் பைபிளின் கருத்தா?
மதப்பிரிவு என்பது என்ன?
முதல் நூற்றாண்டிலிருந்த யூதர்கள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்களை, குறிப்பாக அப்போஸ்தலனாகிய பவுலை பற்றி இப்படிப்பட்ட ஒரு கருத்தைத் தான் கொண்டிருந்தார்கள் என்பது அக்கறைக்குரியதாகும். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அவன் வைராக்கியமாக பிரசங்கித்ததன் விளைவாக, யூத தலைவர்கள் பவுலை “இந்த மனுஷன் கொள்ளை நோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும் நசரேயருடைய மத பேதத்துக்கு (மதப்பிரிவுக்கு, NW) முதலாளியாகவும் இருக்கிறானென்று” குற்றஞ்சாட்டினார்கள். (அப்போஸ்தலர் 24:5) “மதப்பிரிவு” என்பது இங்கே, “ஒரு தெரிவு” என்று அர்த்தங்கொள்ளும் கிரேக்கச் சொல்லாகிய ஹாய்ரிஸிஸ் என்ற வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதாவது, “பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு எதிர்மாறான ஒரு கருத்தை தெரிவு செய்வதாகும்.” ஆகவே “மதப்பிரிவு” என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து வித்தியாசப்படும் ஒரு போக்கை அல்லது நம்பிக்கையை பின்பற்றுவதை தெரிந்துக்கொள்ளும் ஒரு தொகுதி அல்லது மக்கள் கூட்டமாகும்.
பவுலும் அவனுடைய உடன் கிறிஸ்தவர்களும் பிரசங்கித்த செய்தி யூத மதத் தலைவர்களுக்கு முரணாகவும் குழப்புவதாகவும் தோன்றியது. இதன் காரணமாக அவர்கள் இவர்களை ஒரு மதப்பிரிவு என்பதாக பழிசுமத்திவிட்டார்கள். ஆனால் அவர்கள் செய்தது சரியா? நிச்சயமாக இல்லை. அவ்விதமாக விவாதிப்பது சரியானது என்பதாக நாம் ஏற்றுக்கொள்வோமேயானால் நசரேயனாகிய இயேசுவாலும் அப்போஸ்தலனாகிய பவுலாலும் பிரசங்கிக்கப்பட்ட கிறிஸ்தவம் ஒரு மதப்பிரிவு என்பதாக நாம் சொல்ல வேண்டும்!
இதற்கு நேர் எதிர்மாறாக, பைபிள் “பரிசேய சமயத்தார்” (மதப்பிரிவு, NW) என்றும் “சதுசேய சமயத்தார்” (மதப் பிரிவு) என்றும் பேசுகிறது. (அப்போஸ்தலர் 15:5; 5:17) ஏன்? ஏனென்றால் அவர்கள் பைபிள் போதிப்பதிலிருந்து வித்தியாசப்பட்ட ஒரு போக்கை அல்லது நம்பிக்கையை பின்பற்றுவதை தெரிந்துக் கொண்டார்கள். இயேசு பின்வருமாறு சொல்லுகையில், அவர்களுடைய தவற்றை சுட்டிக் காண்பித்தார்: “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினீர்கள் . . . உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள்.” (மாற்கு 7:9, 13) அவர்கள் ஸ்தபிக்கப்பட்ட செல்வாக்குப் பெற்ற மதத்தை தாங்கள் அப்பியாசித்து வருவதாக கருதினாலும், அவர்கள் அந்நாட்களின் “மதப்பிரிவுகளை” உண்டுபண்ணினார்கள்.
எது சரி என்பதன் பேரில் அவர்கள் தங்களுடைய சொந்த அபிப்பிராயத்தை அதிக நுட்பமாக பற்றிக் கொண்டிருந்ததன் காரணமாக சுய நீதியை தேடிய அந்த மதத்தலைவர்கள் இயேசுவை தள்ளிவிட்டார்கள். இதன் காரணமாக இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 21:43.
இன்று மதப்பிரிவுகள் எவை?
சமய எழுத்தாளர்களும், விமர்சகர்களும் மற்றவர்களும் மண் காசை தூக்கி எறிவது போல தங்களுடைய சொந்த மத உணர்ச்சிகளை புண்படுத்துகிற எவருக்கும் தாராளமாக “மதப் பிரிவு” என்ற பதத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவ்விதமாக முடிவு செய்ய இது சரியான ஆதாரமாக இருக்கிறதா? மாறாக, இயேசு அளித்த குறிப்புகளை பின்பற்றி அவைகளின் கனிகளை ஆராய்வதே மிகச் சிறந்ததாக இருக்குமல்லவா? அவர் சொன்னார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.”—மத்தேயு 7:16
இதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் நாம் கேள்விப்படும் அநேக தொகுதிகளும் இயக்கங்களும் மதப்பிரிவுகள் என்று நிச்சயமாகவே சொல்லப்படலாம். “ஆவியின் கனிகளை” பிறப்பிப்பதற்கு பதிலாக, அவை “வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம்” இன்னும் மற்றவைகளையும் உட்படுத்தும் “மாம்சத்தின் கிரியை”களை தாராளமாக வெளிப்படுத்தியிருக்கின்றன. (கலாத்தியர் 5:19-24) இவைகளில் பெரும்பாலானவை தனியொரு மனிதனை பின்பற்றும் தொகுதிகள் (கல்ட்ஸ்) என்பதாக சரியாகவே கருதப்படலாம். ஏனென்றால் அவை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை பின்பற்றுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட சில தலைவர்களை வழிப்பாட்டுக்குரியவர்களாக்கி அவர்களுடைய போதனைகளை பின்பற்றுகின்றன.
செல்வாக்குப் பெற்ற மதங்கள் என்றழைக்கப்பட்டவைகளைப்பற்றி என்ன? சரி, ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவை பைபிளின் உயர்ந்த தராதரங்களை உறுதியாக கடைபிடிக்கின்றனவா அல்லது அவைகளைக் குறித்து சொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனவா? (1 கொரிந்தியர் 6:9, 10) அன்பு, மெய்யான சீஷர்களின் அடையாள குறியாக இருக்கும் என்பதாக இயேசு சொன்னபடி அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்களா அல்லது தேசப்பற்றினாலும் அரசியலினாலும் அலைக்கழிக்கப்பட்டு போர் காலங்களில் ஒருவரையொருவர் கொலை செய்வதில் இறங்கிவிடுகிறார்களா? (யோவான் 13:35) இயேசு செய்தது போல பைபிளை, கடவுளுடைய ஆவியின் ஏவுதலினால் எழுதப்பட்ட வார்த்தை என்பதாக ஆதரித்துப் பேசுகிறார்களா அல்லது அதை கட்டுக்கதை என்றழைத்து மனித தத்துவங்களையும் கடவுளை கனவீனப்படுத்தும் பரிணாமக் கோட்பாட்டையும் ஆதரிக்கிறார்களா? (யோவான் 17:17) அவைகள் “சமுதாயத்தில் மதிப்புள்ளவையாக” இருந்தபோதிலும், செல்வாக்குள்ளவை என்றழைக்கப்படும் மதங்கள் மெய் கிறிஸ்தவமாக தோற்றமளிக்கும் பொய் மதப் பிரிவுகளேயன்றி வேறொன்றுமில்லை.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்
மெய் கிறிஸ்தவமானது ஒரு மதப்பிரிவுமில்லை. அது பலப் பிரிவுகளாகவும் இருப்பதில்லை. நீங்கள் ஒரு சர்ச்சை சேர்ந்தவராக இருந்தால், உங்கள் சர்ச் போதிப்பது என்ன என்பதையும் அதன் அங்கத்தினர்கள் பிறப்பிக்கும் “கனிகள்” எப்படிப்பட்டவை என்பதையும் கவனமாக ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். இவை முழுவதுமாக பைபிள் ஆதாரமுள்ளதாக அதற்கிசைவாக இருக்கின்றனவா? அல்லது உங்கள் சர்ச்சும் கூட பைபிளின் போதனையிலிருந்து வித்தியாசப்படும் ஒரு போக்கை தெரிந்துக்கொண்டிருப்பதால் அது ஒரு மதப்பிரிவாக இருக்கக்கூடுமா? நிச்சயமாக இதைத் தெரிந்துக் கொள்வதற்கு ஒரே வழி பைபிளை ஊக்கமாக படிப்பதே ஆகும். (g88 1⁄8)
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
அப்போஸ்தலனாகிய பவுல் “நசரேயருடைய மத பேதத்துக்கு (மதப் பிரிவுக்கு, NW) முதலாளியாக” இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டான்.
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
உங்களுடைய சர்ச் பைபிளை கடவுளுடைய வார்த்தை என்பதாக ஆதரித்துப் பேசுகிறதா அல்லது அதை கட்டுக்கதை என்றும் புராணக்கதை என்றும் அழைக்கிறதா?