முத்துக்களை வளர்த்தல் தங்கமான ஒரு யோசனை!
கோக்கிச்சி மிக்கிமோட்டோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். சிப்பிகளைப் பற்றி யோசனை செய்து கொண்டிருந்த அவர் “முதலாவதாக முத்துக்கள் அதற்குள் எப்படிச் செல்கின்றன?” என்பதாக சப்தமாகவே அதிசயப்பட்டுக் கொண்டார்.
“தற்செயலாக,” என்பதாக அவருடைய அன்பு மனைவி உம்மி பதிலளித்தாள்.
“தற்செயலாக அது நிகழ்ந்ததென்றால் அது நிகழும்படியாக நாம் எப்படிச் செய்யலாம்?” என்று மிக்கிமோட்டோ ஆழ்ந்து யோசிக்கலானார். “நெல் மணியை அல்லது கிழங்கு வகையைப் போலவே, முத்துக்களையும் விதைத்து அவைகளை வளரச் செய்வதற்கு ஏதாவது ஒரு வழி இருக்க வேண்டும்.”a
முத்துக்களை “வளர்ப்பது” பற்றி ஜப்பானில் இந்த இளம் தம்பதி பேசிக் கொண்டதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, சமுத்திரத்திலிருந்து கிடைக்கும் இந்த விலையுயர்ந்த மணிக்கல் கிழக்கத்திய தேசங்களிலுள்ள விநோதமான அழகுள்ள இடங்களில், விசேஷமாக பாரசீக வளைகுடாவில் ஏற்கெனவே அறுவடை செய்யப்பட்டு வந்தது. ஷேக் ஆட்சி நடைபெறும் பஹரேய்ன் என்ற சிறிய தீவில் சிப்பி படுகைகள் ஏராளமாக இருந்தன. ஒவ்வொரு மே மாதமும் ஷேக்கின் உத்தரவின்படி முத்துக்குளிக்கும் பருவம் ஆரம்பமானது. முத்துக்குளிப்பவர்கள் பாடல்களைப் பாடிக் கொண்டு தங்கள் மரப் படகுகளில் ஏறி சிப்பிகளில் அடைப்பட்டு கிடக்கும் பளபளப்பான மணிக்கற்களைத் தேடி பயணிக்கிறார்கள்.
சமுத்திரத்தின் இயற்கை ஆபரணம்
அவர்கள் தேடிக் கொண்டிருந்தது, இயற்கையான முத்துக்கள் என்றழைக்கப்படும் சமுத்திரத்தின் ஆபரணமாகும். சிப்பி சமுத்திரத்தில் இருக்கையில், ஏதோ ஒரு நுண் துகள் அதன் கூட்டிற்குள் வந்தடையும் போது முத்து உண்டாகிறது. முத்தின் தாய் அடுக்கு என்றழைக்கப்படும் ஒரு முத்துப்போன்ற பொருளை, ஓர் உறையை, சிப்பி அதைச் சுற்றி தோற்றுவித்துவிடுகிறது. விரைவில் நியுக்கிளியஸ் காணப்படுவதில்லை. அது மெருகேற்றப்பட்ட ஒரு மணிக்கல்லாக—பயன்படுத்தப்பட தயாரான ஒரு முத்தாக மாறிவிடுகிறது.
முத்துக்களைப் பற்றிய விஞ்ஞான விளக்கம், அறுவடையைப் போலவே அத்தனைப் பழமையானது. பூர்வ சீன மக்கள் அதை “சிப்பியினுள் ஒளிந்துகொண்டிருக்கும் ஆத்துமா” என்றழைத்தனர். மின்னல் சமுத்திரத்தினுள் பிரவேசித்தப் போது முத்துக்கள் உருவாகின்றன என்று கிரேக்கர்கள் நினைத்தார்கள். ரோமர்கள் முத்துக்கள் சிப்பியின் கண்ணீர் என்று எண்ணினார்கள். இவை அனைத்துமே அது புதிராக இருப்பதையும் அது அரிதாகவே கிடைப்பதையும் உயர்த்திக் காண்பிக்கின்றன. சமீபத்தில், 1947-ல் ஒரே வாரத்தில் படகோட்டிகளின் குழு ஒன்று அறுவடைச் செய்த 35,000 சிப்பிகளில் 21-ல் மாத்திரமே முத்துக்கள் இருந்தன. இவற்றில் மூன்று மாத்திரமே விற்பதற்குத் தரமுள்ளதாக இருந்தன.
கற்களுக்கு மெருகேற்றும் உத்தி, முழுமைப் பெறும்வரையாக மணிக்கற்களில், இயற்கையான முத்துக்களே மிகவும் விரும்பப்பட்டவையாக இருந்தன. ரோமர்களின் முழு மலர்ச்சி வேளையிலே, தளபதி விட்டிலஸ், “அவருடைய தாயின் ஒரே காதணியை” விற்று ஒரு முழு இராணுவ போர்த்திற நடவடிக்கையையே நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. முதல் நூற்றாண்டில், இயேசு, விலையேறப்பெற்ற “பரலோக ராஜ்யத்தை” விளக்க “விலையுயர்ந்த முத்தைப்” பயன்படுத்தினார். (மத்தேயு 13:45, 46) மலபார் அரசனின் ஆபரணங்களில் “ஒரு பட்டணத்தின் கொள்விலைக்கும் அதிகமான மதிப்புள்ள” 104 முத்துக்களையும் மாணிக்க கற்களையும் கொண்ட “ஜெப மாலை”யும் இருந்ததை மார்க்கோ போலோ அவனைச் சந்தித்தது பற்றி பேசுகையில் குறிப்பிட்டான். தரமான நல்முத்துக்கள் தங்கத்தைப் போலிருந்தன. முத்துக் குளிப்பவர்களுக்கே இவை கிடைத்தன.
உலகம் 20-ம் நூற்றாண்டுக்குள் முன்னேறிச் சென்ற போது, பகட்டான முத்துக்கள் இன்னும் அரச குடும்பத்தினர் மத்தியிலும் செல்வந்தர் மத்தியிலுமே பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் அதன் உயர்ந்த விலையின் காரணமாக அது பொதுமக்களின் கைக்கு எட்டாததாகவே இருந்தது. ஆனால் முத்து வளர்த்தல் ஆரம்பமான போது அவை அனைத்துமே மாறிவிட்டது.
மிக்கிமோட்டோவின் கனவு
19-வது நூற்றாண்டின் பிற்பகுதிக்குள் இயற்கை முத்து அறுவடையினால் ஜப்பானைச் சுற்றியுள்ள இடங்களில் சிப்பிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டிருந்தது. மை பிரிபெக்சரில் அகோ விரிகுடாவில் தன் வீட்டைச் சுற்றியிருந்த சமுத்திரத்தை நேசித்ததன் காரணமாக கொக்கிச்சி மிக்கிமோட்டோ சிப்பிகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலானார். முத்துக்களை பிறப்பிக்கும் சிப்பிகளின் திறமை அவரை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு முத்து மாலையை விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அது கிடைக்கக்கூடிய எண்ணிக்கையில் முத்துக்களை உற்பத்தி செய்ய ஏதாவது வழியிருக்கிறதா? இப்படியாக அவர் கனவு மலர்ந்தது.
முத்தை வளர்ப்பதற்காக சிப்பியினுள் ஏனினும் ஓர் அந்நிய துகளை அறிமுகப்படுத்தும் யோசனை கொஞ்ச காலமாகவே இருந்து வந்திருக்கிறது. நல்ல தண்ணீரில் காணப்படும் சிப்பியிலிருந்து பக்குவமுறாத முத்துக்களை அல்லது அரை கோள வடிவ முத்துக்களை உற்பத்திச் செய்ய சீனர்கள் இந்த முறையை 12-வது அல்லது 13-வது நூற்றாண்டு முதற்கொண்டு பயன்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
ஆகவே 1880-களில் தானே மிக்கிமோட்டோ சிப்பிகளை வைத்து சோதனைகளைசெய்ய ஆரம்பித்தார். உள்ளூரிலுள்ள மீனவர்களின் உதவியோடு அவர் புறப்பட்டுச் சென்று ஆயிரம் சிப்பிகளில் சிறிய கிளிஞ்சல் துண்டுகளை விதைத்துவிட்டு வந்தார். ஆனால் வெற்றி கைக்கூடி வரவில்லை; ஒரு சிப்பியும் கூட ஒரு முத்தை விளைவிக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும், மக்களின் கேலிப் பேச்சுகளையும் சமாளித்துக் கொண்டு துணிச்சலை வரவழைத்துக் கொண்டு இன்னும் 5,000 சிப்பிகளுக்குள் சிறிய துண்டு பவழம், கிளிஞ்சல், கண்ணாடி அல்லது எலும்பு ஆகியவற்றை விதைத்துவிட்டு—காத்திருந்தார். இதற்கிடையில், அவரும் உம்மியும் கிளிஞ்சல்களிலிருந்து முத்தின் தாய் அடுகிலுள்ள பளபளப்பான சிறிய துண்டுகளை அவர்களுடைய வீட்டுக்கு அருகாமையில் இருந்த சிறிய சிப்பி வகைக்குள் நுழைத்து வைத்தனர்.
சிப்பிகளுக்கு இயற்கையில் விரோதிகள் உண்டு. அதில் மிக மோசமானது அந்த வருடத்தில் தாக்கியது. சிவப்பு அலை என்றழைக்கப்படும், சிவப்பு-ஆரெஞ்சு நிறத்தில் கடலில் மிதக்கின்ற ஒரு நுண்ம உயிரினம் விரைவாகப் பெருகி, அவை வெளியிடும் விஷத்தால், சிப்பிகளை மூச்சு முட்டச் செய்து கொன்றுவிட்டது. விதையை தாங்கியிருந்த ஐந்தாயிரம் சிப்பிகளும் நான்கு ஆண்டு கடின உழைப்பும் அலையோடு அடித்துச் செல்லப்பட மிக்கிமோட்டோவின் கனவு கொடுங் கனவானது.
தன் கணவனின் உற்சாகம் குறைந்துவிடாதபடி, அவரை ஊக்குவிக்கும் வகையில், உம்மி, சேதமடையாத விளைச்சலைப் போய் பார்க்கும்படியாக துரிதப்படுத்தினாள். அது மந்தாரமான ஒரு நாளாக இருந்தபடியால் அவளும் அவனோடுச் சென்று சிப்பிகளை சுறுசுறுப்பாக ஆராய ஆரம்பித்தாள். ஒரு சிப்பியை திறந்த போது அவள் அலறிவிட்டாள். அங்கே மினுமினுத்துக் கொண்டிருந்தது ஒரு முத்து! அது அரைகோள வடிவு முத்தாக, ஓட்டின் உட்புறத்தில் உருவாகியிருந்தது. பக்குவமுறாத இந்த முத்தைப் பிறப்பித்த மிக்கிமோட்டோவின் செய்முறை 1896-ல் காப்புரிமைப் பெற்றுக் கொண்டது. ஆனால் அவருடைய மனதோ இன்னும்—முழுமையான உருண்டை வடிவ முத்தை வளர்க்கும் கனவிலேயே லயித்திருந்தது.
சிப்பியின் புதிரை விடுவித்தல்
இதற்கிடையில் வேறு இரண்டு மனிதர்கள் இதே காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். 1904-ல், தன்னை விஞ்ஞானியாக்கிக் கொண்ட டாட்ஸுயி மிஸி, ஜப்பானிலுள்ள கடல் துறை நிபுணர்களிடம் அளிக்க உருண்டை வடிவ முத்துக்களின் மாதிரிகளைக் கொண்டிருந்தார். 1907-ல் கடல் வாழ் உயிர் நூலர் டோக்கிச்சி நிஷிக்கவாவும் கூட அளிப்பதற்கு உருண்டை வடிவ முத்துக்களைக் கொண்டிருந்தார். ஒரு மனிதனின் முன்னேற்றம் மற்றொரு மனிதனின் அறிவு கண்களைத் திறக்க வழிநடத்தியது. இன்று முத்துப் பண்ணைகள் பெரும்பாலும் இந்த மனிதர்கள் உருவாக்கிய முறைகளைக் கலந்தே பயன்படுத்திக் கொள்கின்றன. என்றபோதிலும் முழுமையான உருண்டை வடிவ வளர்ப்பு முத்துக்கான உரிமை பத்திரம் கடைசியாக 1916-ல் மிக்கிமோட்டோவுக்கே கிடைக்க இருந்தது. என்ன நடந்துவிட்டது?
மீண்டுமாக 1905-ல் மிக்கிமோட்டோ, நியுக்ளியஸ் நாட்டப்பட்ட சிப்பி பயிரை கொலையாளியாகிய சிவப்பு அலையில் பறிகொடுத்துவிட்டார். அகோ விரிகுடா கடற்கரையில் உயிரிழந்து நாறிக் கொண்டிருந்த 8,50,000 சிப்பிகளை ஆராய்கையில் சோர்வுற்றிருந்த அந்த மனிதர் சிப்பியின் புதிரை தற்செயலாக கண்டுபிடித்துவிட்டார். ஓட்டின் உள் புறத்தில் உருவாவதற்கு பதிலாக சிப்பியின் உடலின் ஆழத்தில் பதிந்துக் கொண்டிருக்கும் அழகாக உருவாகியிருந்த உருண்டையான ஐந்து முத்துக்களை அவர் கண்டுபிடித்தார். இப்பொழுது தன் தவறை அவர் புரிந்து கொண்டார். அவர் நியுக்ளியஸை ஓட்டுக்கும் சிப்பியின் உடலுக்குமிடையே விதைத்துக் கொண்டிருந்ததால் அவர் வெறும் பக்குவமுறாத முத்துக்களையே பெற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இவை சிப்பியின் ‘வயிற்றுக்குள்’ ஆழத்திலிருப்பதால், அவைகளால் ‘தடையின்றி உருள முடிகிறது.’ ஆகவே முத்தின் தாய் அடுக்கு முழுமையாக இதை மூடிக் கொள்கிறது. இதன் விளைவே முழுமையான அழகான உருண்டை வடிவ முத்துக்களாகும்!
பொது மக்களை நம்பச் செய்தல்
1920-க்குள் வளர்க்கப்பட்ட முத்துக்கள் பன்னாட்டு சந்தையில் விற்கப்பட ஆரம்பித்தன. ஆனால் ஒரு கேள்வி பாக்கி இருந்தது: அவை நல் முத்துக்களா அல்லது போலி முத்துக்களா? இங்கிலாந்திலும் ஃபிரான்சிலும் நீதிமன்ற வழக்குகள் பதிவாயின. ஆனால் இந்தத் தேசங்களில் செய்யப்பட்ட விஞ்ஞானப் பூர்வமான ஆராய்ச்சி, இயற்கையான முத்துக்களுக்கும் வளர்ப்பு முத்துக்களுக்குமிடையே உள்ள வித்தியாசம் அதன் பிறப்பிடத்தில் மட்டுமே என்ற முடிவுக்கு வழிநடத்தியது. அதற்காக, மிக்கிமோட்டோ தன்னுடைய முத்துக்களை—முத்துக்களாக ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுக்கொண்டார். “முத்து ராஜா” என்ற பொருத்தமான பட்டப் பெயரையும் அவர் சம்பாதித்துக் கொண்டார்.
“முத்து ராஜா” தன் சொந்த நாட்டிலுள்ள சந்தையிலேயே குறிப்பிடத்தக்க பதிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவராக இருந்தார். மீன் செதில்களிலிருந்து பெறப்பட்ட பொருளினால் கண்ணாடி மணிகளைத் தோய்த்து, போலி முத்துக்களை சந்தையில் குவிக்கும்படியாக வியாபாரிகளை பொருளாதார மந்தம் தூண்டியிருந்தது. இப்படிப்பட்ட மோசடிப் பழக்கங்கள் சந்தையை பாழாக்குவது உறுதியாகும். மிக்கிமோட்டோ உள்ளே புகுந்து கண்ணில் பட்ட அனைத்துப் போலி முத்துக்களையும் விலை கொடுத்து வாங்கி விட்டார். பின்னர் ஒரு நாள் 1933-ல் 7,50,000 என்பதாக மதிப்பிடப்பட்ட போலி முத்துக்களையும் சரியாக வளர்க்கப்படாத ஒரு சில முத்துக்களையும் ஒரு பொது இடத்தில் தாமாகவே நெருப்பில் அள்ளிப் போட்டார். வளர்க்கப்பட்ட நல் முத்துக்களைப் பற்றிய சந்தேகங்கள் புகையோடு கலந்து மறைய, அப்போது முதற்கொண்டு மணிக்கல் சந்தையில், கனத்துக்குரிய இடத்தை இவை பெற்று வருகின்றன.
இப்போதெல்லாம், முத்துக்களின் அழகு அரச குடும்பத்தினருக்கும் அதிக செல்வந்தருக்குமே உரிய தனி உரிமையாக இருப்பதில்லை. கருமையான மேகத்தில் காணப்படும் நிலாவைப் போல, நகை வியாபாரியின் கருமையான வெல்வெட்டு பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள முழுமையாக உருண்டை வடிவிலுள்ள முத்துக்களை வேலை செய்யும் பெண்களில் அநேகரால் பார்க்க முடியும். அவளால் சிலவற்றை தனக்காக வாங்கிக் கொள்ளவும் முடியும்—முத்துக்கள் வளர்க்கப்படுவதே இதற்கு காரணமாகும். என்னே அருமையான ஒரு யோசனை!—ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர் எழுதியது. (g88 1⁄22)
[அடிக்குறிப்புகள்]
a இந்த உரையாடல் ராபர்ட் உன்சன் எழுதிய முத்து ராஜா—பழம் புகழ் மிக்கிமோட்டோவின் கதை என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.