கடைசி நாட்கள் அடுத்து என்ன?
“இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” —இயேசு கிறிஸ்து, மத்தேயு 24:34
இயேசு, “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கான அடையாளத்தை” விளக்கிக்கொண்டிருந்த போது, வியந்துகொண்டிருந்த தம்முடைய சீஷர்களிடம் மேற்கோள் காண்பிக்கப்பட்ட வார்த்தைகளைச் சொன்னார். (மத்தேயு 24:3) “சந்ததி” என்ற வார்த்தையால் இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? எந்தச் சம்பவங்கள் இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு வழிநடத்தும்? வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், உடனடியான எதிர்காலத்தில் நாம் என்ன சம்பவங்களை எதிர்நோக்கியிருக்க வேண்டும்?
ஒரு சந்ததி எவ்வளவு காலம் நீடிக்கக்கூடும்?
முதல் உலக மகா யுத்தத்தில் 47,43,826 ஐக்கிய மாகாண ஆண்களும் பெண்களும் பங்குகொண்டனர் என்று அமெரிக்க சேனைப் பத்திரிகை (The American Legion Magazine) குறிப்பிட்டது. ஆனால் 1984-ல் 2,72,000 பேர்தான் உயிருடனிருந்தனர். அவர்கள் சராசரியாக மணிக்கு ஒன்பது பேர் என்ற கணக்கில் மரித்துக்கொண்டிருந்தனர். அப்படியென்றால், 1914-ன் சந்ததி ஏற்கெனவே இல்லாமற்போய்விட்டது என்று அர்த்தமாகுமா?
இயேசுவின் வார்த்தைகளைப் பற்றிய தங்களுடைய பதிவுகளில் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியவர்கள் சந்ததி என்பதற்குப் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை ஜெனீயா (geneʹa). அது பயன்படுத்தப்படும் இடத்துக்கேற்ப பொருத்தத்தில் வித்தியாசப்படக்கூடும். என்றபோதிலும், புதிய ஏற்பாட்டு இறைமையியலின் புதிய சர்வதேச அகராதி (The New International Dictionary of New Testament Theology) அதை இப்படியாக விளக்குகிறது: “ஒரே சமயத்தில் பிறந்தவர்கள் . . . இத்துடன் சம்பந்தப்பட்டிருக்கும் அர்த்தம்: ஒருவருடைய காலப்பகுதியில் வாழ்ந்த தொகுதியினர், ஒரு சகாப்தம்.” புதிய ஏற்பாட்டின் கிரேக்க-ஆங்கில சொற்களஞ்சியம் (A Greek-English Lexicon of the New Testament) குறிப்பிடுவதாவது: “ஒரே சமயத்தில் பிறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு குறிப்பிட்ட தலைமுறக் காலத்தில் வாழ்பவர்களை, சமகாலத்தவர்களை உட்படுத்துவதற்கு விரிவுபடுத்தப்படுகிறது.” இந்த விளக்கங்கள் சரித்திர முக்கியத்துவம் கொண்ட ஒரு சம்பவத்தின் காலத்தில் பிறந்தவர்களையும் அந்தச் சமயத்தில் உயிருடன் இருந்தவர்களையும் குறிப்பதற்கு அனுமதிக்கின்றன.
J.A. பென்ஜல், புதிய ஏற்பாட்டுச் சொல் ஆய்வுகள் (New Testament Word Studies) என்ற தன்னுடைய புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “எபிரெயர்கள் . . . எழுபத்தைந்து ஆண்டுகளை ஒரு சந்ததியாகக் கொண்டனர், ஒழிந்து போகாது என்ற வார்த்தைகள் எல்லாம் நிறைவேறுவதற்கு முன்பு, [இயேசுவின் நாளைய] அந்தச் சந்ததி முழுவதும் அல்ல, ஆனால் பெரும்பகுதி, ஒழிந்துபோயிருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.” இது பொ.ச. 70-ம் ஆண்டில், எருசலேம் அழிக்கப்பட்ட சமயத்தில் உண்மையாயிருந்தது.
அதுபோல, இன்று 1914-ன் சந்ததியில் பெரும்பகுதி ஒழிந்துபோயிற்று. என்றபோதிலும், அந்த ஆண்டில் அல்லது அதற்கு முன்னால் பூமியில் பிறந்த இலட்சக்கணக்கான ஆட்கள் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை குறைந்துகொண்டிருப்பினும், “இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது,” இயேசுவின் வார்த்தைகள் உண்மையாக நிரூபிக்கும். திருடனைப் போன்று வரும் யெகோவாவின் நாள் அண்மையிலிருக்கிறது என்பதை நம்புவதற்கு இது இன்னொரு காரணமாயிருக்கிறது. எனவே, விழிப்புள்ள கிறிஸ்தவர்கள் என்ன சம்பவங்களை எதிர்நோக்கியிருக்க வேண்டும்?
“சமாதானமும் சவுக்கியமும்” விரைவிலா?
“இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்.”—1 தெசலோனிக்கேயர் 5:2, 3.
1945-ல் இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுபெற்றது முதல், மனிதவர்க்கம் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கும் இரண்டு வல்லரசுகளாகிய ஐக்கிய மாகாணங்களும் சோவியத் யூனியனும் ஒருவரோடொருவர் போரிட்டு வந்திருக்க, மனிதவர்க்கம் போரின் விளிம்பில் நிற்கின்றது. 1962-ன் கியூபா தேசத்து ஏவுகணைப் பிரச்னை நேரடியான ஒரு மோதலாக இருந்தது. ஆனால் சோவியத் யூனியன் தன்னுடைய ஏவுகணைகளைக் கியூபாவிலிருந்து விலக்கிக்கொண்டது. ஐக்கிய மாகாணங்கள் தன்னுடைய ஏவுகணைகளைத் துருக்கியிலிருந்து அமைதலாக விலக்கிக்கொண்டது. இது குளிர் யுத்தத்தின் பல வெளிக்காட்டுகளில் ஒன்று மட்டுமே.
ஆயுதக்குறைப்பு பல பத்தாண்டுகளாக விவாதிக்கப்பட்டுவந்திருக்கும் பொருள், இது இரண்டு நாடுகளுக்குமே ஒரு பிரச்சாரப் பயிற்சியாகவே முடிந்தது. அதிபர் ரீகனின் ஆட்சிக் காலப்பகுதியிலும் தலைவர் கார்பஷாவின் கிளாஸ்னாஸ்ட் (glasnost, மனம்திறந்த) கொள்கையின் வெதுவெதுப்பான சூழ்நிலையிலும் தற்போதைய அணு ஆயுத நிலையின் வன்மையைக் குறைப்பது குறித்து மும்முரமான பேச்சுகள் இருந்துவந்திருப்பதாகத் தெரிகிறது. இது உலகத்துக்குப் பொதுவாக சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கு முன் இருக்கும் நிலையா, அல்லவா என்பதை நாம் முன்காண முடியாது. ஆனால் பைபிள் தீர்க்கதரிசனத்துக்கு இசைவாக, அதற்காகத்தான் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள். அது ஏற்படும்போது, என்ன நடக்கும்?
“சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது”—அது ஐக்கிய நாடுகளிலிருந்து வருவதாயிருந்தாலும், அல்லது பெரிய வல்லரசுகளிடமிருந்தே வருவதாயிருந்தாலும்—பைபிளைக் கவனமாகப் படிக்கும் மாணாக்கர்கள் ஏமாற்றம் அடைந்துவிட மாட்டார்கள் உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் நீதியுள்ள ஆட்சியிலிருந்துமட்டுமே, கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலம் மட்டுமே வரமுடியும்.
அந்தக் காரணத்தினிமித்தமே, சமாதானம் பாதுகாப்பு சம்பந்தமாக உலகத் தலைவர்கள் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பூகோள அளவான அறிவிப்பை செய்வதுதானே, கடவுள் செயல்பட வருவதற்கு, விசுவாசமற்ற இந்த உலகத்தின்மீது “இரவிலே திருடன் வருகிறவிதமாய்” எதிர்பாராத நேரத்தில் வந்து நடவடிக்கை எடுப்பதற்குச் செய்கைக் குறியாக இருக்கும். ஆம், யெகோவாவையும் அவருடைய சாட்சிகளையும் வெறுத்தொதுக்கிய மதம் மற்றும் அரசியல் சக்திகள் மீது “அழிவு சடுதியாய் வரும்.” இது நமக்கு எப்படித் தெரியும்?
வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவரின் தீர்வான நடவடிக்கை
திருவெளிப்பாட்டின் அந்த நான்கு குதிரைகளில் சவாரி செய்கிறவர்களைப் பற்றிய தரிசனத்துக்குத் திரும்புகையில், நாம் இன்னும் குறிப்பிடாத ஒருவர் இருக்கிறார்—வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவர். பைபிள் எழுத்தாளர் அவரை இப்படியாக விளக்குகிறார்: “நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.” வெளிப்படுத்துதல் 19-ம் அதிகாரத்தில் விளக்கப்பட்ட அதே நபர்தான் இவர்: “இதோ, ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். . . . புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்.” இவர் யார்? இவர் மேல் ஒரு பெயர் எழுதப்பட்டிருக்கிறது: “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா.” இவர்தான் உயிர்த்தெழுப்பப்பட்ட கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து.—வெளிப்படுத்துதல் 6:2; 19:11-16.
அப்படியென்றால் இந்த “ராஜாதி ராஜா”வின் நடவடிக்கையை எது தேவைப்படுத்துகிறது? தானியேல் 11-வது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் “வடதிசை ராஜாவும்” (முதலாளித்துவத்துக்கு எதிரான முகாம்), “தென்திசை ராஜாவும்” (ஐக்கிய மாகாணங்களின் நிழிலில் இருக்கும் முதலாளித்துவ நாடுகள்), ஓர் இக்கட்டான நிலையை அடைகிறார்கள். (தானியேல் 11:40 முன்னறிவித்தபடி, “வடதிசை ராஜா” ஏற்கெனவே, விசேஷமாக 1945 முதல் அநேக தேசங்களில் பொங்கியெழந்துள்ளான்.)a
எனவே, தற்போதைய ஒழுங்குமுறைக்கு ஒரு முடிவைக் கொண்டுவர கடவுளுடைய தீர்வான தலையிடுதலுக்கு முன்பு வேறு என்ன காரியம் நடக்க வேண்டும்?
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், ஐக்கிய நாட்டு சங்கத்திலுள்ள தீவிர அரசியல் கூறுகள் தலையிடும் உலக மதங்களின் அதிகாரத்துக்கு எதிராகத் திரும்பி, அவற்றின் வேடத்தைக் கலைத்திடும் என்று பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.—வெளிப்படுத்துதல் 17:16, 17.b
உலகத்தின் பொய்மதக் கூறுகளின் இந்த அழிவின் விளைவாக, யெகோவாவின் சாட்சிகள் மீது ஒரு தாக்குதல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது, யெகோவாவின் அரசருடைய, வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவருடைய பதில் தாக்குதலைத் தூண்டிவிடும். (எசேக்கியேல் 38:10-12, 21-23) விளைவைக் குறித்து தானியேல் 2:44 என்ன சொல்லுகிறது? “அந்த ராஜாக்களின் [தற்போதைய அரசியல் வல்லமைகளின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” ஆம், பூமியில் சாத்தானின் காணக்கூடிய அரசியல் கூறுகளுக்கு எதிரான கடவுளுடைய அர்மகெதோன் யுத்தம் யெகோவாவுக்கும் அவருடைய ராஜாதி ராஜனுக்கும் முழு வெற்றியில் முடிவடையும்.—வெளிப்படுத்துதல் 16:14–16; 19:17–21.
பின்தொடருவது என்ன? ஏன், சமாதானப் பிரியரும், கடவுள் பயமுமுள்ள கிறிஸ்தவர்களுடைய காலாகாலமான ஆசை—கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தின் மீது கடவுளுடைய ஆயிர வருட ஆட்சி! அப்பொழுது வெளிப்படுத்துதல் 21:3, 4-லுள்ள மகத்தான தீர்க்கதரிசனம் நிறைவேறும்: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனிமேல் மரணமும் இல்லை, துக்கமும் இல்லை, அலறுதலும் இல்லை, வருத்தமும் இல்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”
அந்தக் குறிப்பிடத்தக்க பைபிள் தீர்க்கதரிசனங்களின் பேரிலும், அவை நமக்குத் தனிப்பட்டவிதத்தில் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதன் பேரிலும் நீங்கள் கூடுதல் தகவல் அறிய விரும்பினால், உங்கள் பிராந்தியத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளை அனுகுங்கள், அல்லது உங்கள் தேசத்திலிருக்கும் இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளருக்கு எழுதுங்கள். (g88 4⁄8)
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் போராட்டத்தைக் குறித்த ஒரு விவரமான கலந்தாராய்வுக்கு, “உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக,” (”Your Will Be Done on Earth”) என்ற ஆங்கிலப் புத்தகத்தில், “முடிவின் குறித்த காலம்,” என்ற 11-வது அதிகாரத்தைப் பாருங்கள். இப்புத்தகம் உவாட்ச் டவர் சங்கத்தால் பிரசுரிக்கப்பட்டது.
b இந்தத் தீர்க்கதரினத்தைக் குறித்த ஒரு விவரமான கலந்தாராய்வுக்கு, உவாட்ச் டவர் சங்கம் பிரசுரித்த “மகா பாபிலோன் விழுந்தது” கடவுளுடைய ராஜ்யம் ஆளுகிறது! (“Babylon the Great Has Fallen!” God’s Kingdom Rules!) என்ற ஆங்கிலப் புத்தகத்தில் “மகா வேசியின் மீது நியாயத்தீர்ப்பு,” என்ற 26-வது அதிகாரத்தை வாசிக்கவும்.
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
சந்ததி–“ஒரே சமயத்தில் பிறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்பவர்களை உட்படுத்துவதற்கு விரிவுபடுத்தப்படுகிறது.”—“புதிய ஏற்பாட்டின் கிரேக்க–ஆங்கில சொற்களஞ்சியம்”
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
ஐக்கிய நாடுகளிலுள்ள தீவிர அரசியல் கூறுகள் உலக காரியங்களில் தலையிடும் மதங்களுக்கு எதிராகத் திரும்பும் என்று பைபிள் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.
[பக்கம் 15-ன் படம்]
அர்மகெதோனுக்குப் பின்பு, சமாதானமும் நீதியும் கொண்ட கடவுளுடைய புதிய உலகில், ‘முந்தினவைகள் ஒழிந்துபோயிருக்கும்.’—வெளிப்படுத்துதல் 21:3, 4.