நான் போரின் பயனின்மையைப் பார்த்தேன்
முன்னாள் ஐ.மா. இராணுவ மருத்துவர் ரஸல் டிக்ஸன் கூறியது
1944, பிலிப்பீனில் லேட்டி தீவு. புகைந்து கொண்டிருக்கும் காட்டுப்பகுதியில் வேவுகாரர்களாக நாங்கள் பகைவர்களை—மரங்களுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கும் ஜப்பானியரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தோம். நான் 19 வயது தற்காப்பு மருத்துவத் துறையைச் சேர்ந்தவன், பொதுவாக எங்கள் அணியில் நான்தான் கடைசி. ஏதாவது சிறு சண்டைகளின் போது காயங்கள் ஏற்பட்டால் மருந்து பஞ்சு முதலியவற்றுடன் விரைவதில் முதல்வனாக இருந்தேன். இந்தச் சமயத்தில் நான் எப்படியோ வரிசையின் முன்னால் இருந்தேன், முன்னணிக் காவலில் இருந்தேன். எந்த நேரத்திலும் எதிரிகளின் கண்ணிக்கும் திடீர் தாக்குதலுக்கும் இறையாகக்கூடும் என்ற நடுக்கம் ஒருபக்கம். அப்பொழுது திடீரென்று ஒன்று சம்பவித்தது.
எனக்கு முன் ஒருசில கஜ தூரத்தில் ஒரு ஜப்பானிய அதிகாரி துள்ளி குதித்து, ஒரு வெள்ளைத் துணியை அடைத்துக்கொண்டு, “என்னைச் சுடாதீர்கள்! நான் சிக்காகோவைச் சேர்ந்தவன்! நான் சிக்காகோவைச் சேர்ந்தவன்! என்று சப்தமாகக் குரல் கொடுத்தான். எங்களுடைய விரல்களோ சிந்திப்பதற்கும் இடைவெளியின்றி சுடுவதற்குத் தயாராக இருந்தன. எனக்குப் பின்னால் இருந்த மனிதன் தன்னுடைய துப்பாக்கியால் பல முறை சுட்டான்—குறி தவறியது. “நான் சிக்காகோவைச் சேர்ந்தவன்!” என்று அந்த அதிகாரி கதறிய போது நாங்களோ அப்படியே நின்றோம்.
தன்னுடைய கதையைத் தெளிவான அமெரிக்கர் ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டிருந்த அவன் அவசரமாகத் தன்னுடைய சட்டை உறையிலிருந்து சில புகைப்படங்களை எடுத்தான். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. இதோ, நாங்கள் ஒரு காட்டின் மத்தியில் இருந்தோம். இந்த ஜப்பானிய படைத் தலைவன் தன்னுடைய மனைவி, பிள்ளைகளின் புகைப்படங்களைக் காண்பித்தான். அது உண்மையாக இருந்தது—அவன் அமெரிக்கா பிரஜா உரிமைப் பெற்றிருந்த ஜப்பானியன்!
“அவர்கள் சரணடைய மாட்டார்கள்”
போர் துவங்குவதற்கு முன்பு அவன் சிக்காகோவிலிருந்து ஜப்பானிலிருந்த தன்னுடைய பெற்றோரைச் சந்திக்கப் போயிருந்தான். அவன் ஜப்பானிய இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டான். இங்கு அவன் ஐக்கிய மாகாணங்களுக்கு எதிராகச் சண்டை செய்துகொண்டிருந்தான். “உன்னோடு வேறு யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டோம். தனக்குப் பின்னால் ஒருசில அடிகள் தள்ளி ஒருவனை சுட்டிக்காட்டினான். அவனை உடனே எழுந்திருக்கும்படி உத்தரவிட்டோம்! என்னுடைய வயதிலிருந்த ஒரு ஜப்பானிய இளைஞன் எழுந்து வந்தான். “மற்றவர்கள் எங்கே?” “அதோ பின்னால் இருக்கிறார்கள்.” அந்தத் தலைவன் தனக்குப் பின்னேயிருந்த காட்டுப் பகுதியைச் சுட்டிக்காட்டினான்.
நாங்கள் அந்தத் தலைவனுடன் பேரம் பேச ஆரம்பித்தோம். “உன்னுடைய மற்ற ஆட்களைச் சரணடைய செய்தால், நாங்கள் உன்னைக் கைதியாகக் கொண்டுச்செல்கிறோம். இல்லாவிட்டால், உன்னைக் கொன்றுவிடுவோம்!” என்றார் எங்கள் அணித்தலைவர். நாங்கள் அறிந்திருந்ததைத்தான் அந்த அதிகாரியின் பதில் உறுதிசெய்தது. “அவர்கள் சரணடைய மாட்டார்கள். அதைச் செய்ய முயன்றால் அவர்கள் எங்களைக் கொன்றுவிடுவார்கள்.”
அந்த இளம் வீரனைத் தன்னுடைய ஆட்களிடம் அனுப்பும்படி நாங்கள் அவனை வற்புறுத்தினோம். ஓரிரண்டு நிமிடத்துக்குள் துப்பாக்கியின் சப்தம் கேட்டது. அந்த ஜப்பானிய அதிகாரியைப் பார்த்தபோது, அவன் சொன்னான்: “அவர்கள் அவனைக் கொன்றுவிட்டார்கள்,” என் உள்ளத்தில் நான் அந்த இளைஞனுக்காக வருந்தினேன். போர் அந்தளவுக்குப் பயனற்றது என்ற அதே உணர்வுதான் எனக்கு அநேகமுறை இருந்திருக்கின்றன, இன்னும் அதிகமாகவே இருக்கும்.
எங்களுடைய ஆட்களில் சிலர் அந்த அதிகாரியை எங்கள் தள முகாமுக்கு எடுத்துச்செல்ல, நாங்கள் அந்த ஒற்றடிப்பாதையில் முன்னேறினோம். ஒரு மருத்துவ மனிதனாக, நான் வரிசையின் பின்னே சென்றுகொண்டிருந்தேன். அப்பொழுதுதான், யாரேனும் காயமுற்றால், உடனடியாக அவனுடைய உதவிக்கு விரைய முடியும். ஒரு சில கஜங்கள் கடந்து செல்ல, எதிரி படையினரில் மற்றவர்களைக் கண்டோம். ஒரு சிறிய சண்டையில் அவர்கள் எல்லாருமே கொல்லப்பட்டார்கள்.
ஆனால் நாங்கள் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு காரியத்தைச் சாதித்தோம்—ஒரு ஜப்பானிய அமெரிக்கப் படை அதிகாரியைக் கைப்பற்றிவிட்டோம்—உயிரோடு கொண்டுவரப்பட்ட மிகச் சிலரில் இவனும் ஒருவன். ஆனால் அடிக்கடி நடந்த கொலைகளை பார்த்த எனக்கு வெறுப்புத்தட்டியது.
ஓக்லஹோமா நாட்டு மருத்துவரின் மகனாகிய நான் அந்தக் காட்டுத் தீவில் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என்று என்னை நானே அடிக்கடிக் கேட்டுக்கொள்வேன். உண்மை என்னவென்றால், நான் என்னுடைய தகப்பனின் நியமத்தைப் பின்பற்றியிருந்தேனானால், அவ்விடத்தில் இருந்திருக்கவே மாட்டேன். நான் ஒருவேளை சிறைக்குத்தான் சென்றிருப்பேன். ‘அது எப்படிக்கூடும்?’ என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம்.
எல்லாம் சமாதானமாக இருந்தபோது
நான் 1925-ல் பிறந்தேன், ஐந்து மகன்களில் நான்காவது. ஐக்கிய மாகாணங்களில் தென்மேற்குப் பிராந்தியத்தின் அமைதியான வேளாண்மைச் சூழ்நிலையில் வளர்ந்தேன். அந்தச் சிறிய ஊரின் பெயர் மூர்லண்டு, ஓக்லஹோமா. எங்களுடைய பெற்றோர் சமாதானத்தை விரும்பிய பைபிள் மாணாக்கர்கள். அவர்கள் 1931 முதல் யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் எங்களைத் தவறாமல் பைபிள் கூட்டங்களுக்குக் கூட்டிச்செல்வார்கள். சில சமயங்களில் நான் என்னுடைய தந்தையுடன் ஒரு ஒலிப்பெட்டியுடன் அயலகத்தாரை சந்திப்பவர்களாய் வீட்டுக்கு வீடு சென்றிருக்கிறேன். மற்றும் பைபிள் பொதுப் பேச்சுகளை அறிவிப்பவர்களாய் நகரைச் சுற்றி அணியணியாக நடந்துவருவதிலும் நாங்கள் பங்குபெற்றிருக்கிறோம். ஆனால் வாழ்க்கையில் எனக்கு மற்ற அக்கறைகளும் இருந்தன.
போட்டி விளையாட்டுகள் என்றால் எனக்கு அதிகப் பிரியம், விசேஷமாக கூடைப்பந்தாட்டமும் தளக்கட்டுப்பந்தாட்டமும். இதில் நான் வித்தியாசப்பட்டவன் என்பதல்ல, ஆனால் நான் ஒரு பையனாக இருந்ததால், அவற்றில் நான் வெகுவாக மகிழ்ந்தேன். அதன் பலன் என்னவென்றால், எனக்கு 16 வயது இருக்கும்போது, என்னுடைய சகோதரர்களைப் போல நான் சாட்சிகளின் கூட்டங்களுக்குப் போவதிலிருந்தும், அவர்களுடைய கூட்டுறவிலிருந்தும் மெதுமெதுவாக வழுவிப்போனேன். அந்தச் சமயத்தில், நாங்கள் ஆவிக்குரிய மதிப்பீடுகளை மதித்துணரவில்லை. இது என்னுடைய பெற்றோருக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்கும்.
போரின் உண்மைநிலைகள்
1943-ல் நான் ஐ.மா. இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, அந்தச் சேனையின் ஓர் அங்கத்தினனாக ஆனேன். நான் சாட்சிகளோடு கொண்டிருந்த கூட்டுறவை விட்டுவிட்டதால், கிறிஸ்தவ நடுநிலைமைக் குறித்து எனக்கு எவ்விதத்திலும் பலமான நம்பிக்கை கிடையாது. எனவே என்னைச் சிறைக்குக் கொண்டுபோயிருக்கக்கூடிய அந்தப் பிரச்சினையை நான் தவிர்த்தேன். கடைசியாக நான் டெக்ஸாஸில் எல் பேசோ என்ற இடத்திலிருந்த ஃபோர்ட் பிளிஸூக்கு இராணுவ மருத்துவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டேன். அந்த ஒரு பயிற்சிக்கு என்னை ஏன் தெரிந்தெடுத்தனர் என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை. ஒருவேளை என்னுடைய தகப்பன் ஒரு மருத்துவர் என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
அந்த மருத்துவப் பயிற்சிக்குப் பின் நான் தெற்கு பசிபிக்கில் ஐ.மா. இராணுவத்தினருக்கு ஒரு மாற்று நிலையம் இருந்த தீவுக்கு, நியு காலிடோனியாவுக்கு அனுப்பப்பட்டேன். என்னுடைய முதல் போர்முனைப் பணி ஒரு நியு யார்க் பிரிவிலிருந்தது, அது குவாமில் 77-வது தரைப்படைப் பிரிவாகும். ஆஸ்திரேலியாவுக்கும் ஜப்பானுக்கும் பாதி தூரத்திலிருந்த அந்தத் தீவு ஜப்பானியர்களின் கட்டுப்பாட்டிலிருந்தது. நாங்கள் அங்கு ஜீலை 21, 1944-ல், 3-வது கடல் பிரிவுடன் இறங்கினோம். நாங்கள் உடனடியாகவே போருக்குச் சென்றோம். விரைவில் அது எனக்கு உண்மையான ஒரு போரின் முதல் அனுபவமாக இருந்தது.
குவாமில் நான் மறக்க முடியாதது. அங்கு பெய்த மழை, முட்டி ஆழத்துக்கு இருந்த சேறு, குழப்பம். அப்பொழுதுதான் கடுமையான துப்பாக்கிச் சூட்டின் தாக்குதலுக்குள்ளாகும் என்னுடைய முதல் அனுபவம். துப்பாக்கியிலிருந்து “டும்” என்ற வெடிப்பு ஒலி, அதைத் தொடர்ந்து ஆகாயத்தைத் துளைத்துச் செல்லும் குண்டின் சீழ்க்கை ஒலி. அந்த ஒவ்வொரு குண்டுகளும் எங்கே விழுகிறது என்பதைக் காண காத்திருந்தேன். நான் உண்மையாக இருக்க வேண்டும்—மற்ற இராணுவத்தினரைப் போலவே நானும் அநேக சமயங்களில் பயந்தேன். கடவுளிடம் ஜெபித்தேன். இந்தக் குழப்பத்திலிருந்து வெளியேற அவரிடம் முட்டாள்தனமாக பேரம் பேசினேன். அவர் இதிலிருந்து என்னை வெளியேற்றுவாரானால், நான் அவரைச் சேவிப்பேன்! ஆம், குழியில் பதுங்கிய நிலையில் விசுவாசிக்கும் ஒருவனாயிருந்தேன்!
இரவு நேரங்களில்தான் நான் அதிகமாகப் பயந்தேன். தரை பாறையாக இல்லாதிருந்தால் 18 முதல் 24 அங்குல ஆழமுள்ள ஒரு பதுங்கு குழியை நீங்களே வெட்ட வேண்டும். நோக்கம் என்னவென்றால், உங்கள் தோழருக்கோ அல்லது எதிரிகளுக்கோ (என்னே ஒரு நம்பிக்கை!) இது மிகவும் முக்கியம், ஏனென்றால், இரவு நேர சட்டம்: ‘ஏதாவது அசைந்தால் கொன்றுவிடு. பிறகு கேள்வி கேள்.’ எனவே நான் தரை மட்டத்துக்குக் கீழை இருப்பதை நிச்சயப்படுத்திக்கொண்டேன். அடிக்கடி நான் மழை நீரிலும் சேற்றிலும் தூங்கவேண்டியதாயிருந்த போதிலும் அப்படிச் செய்தேன்.
அந்தக் கடுமையான போர்க்காலங்களில் எங்களுடைய அடிப்படை உணர்வுகள் என்னவாயிருந்தன? அநேக சமயங்களில் அது “கடவுளு தேசமும்” என்பதாயிருந்ததில்லை. மற்ற அநேக இளம் வீரர்களைப் போலவே, உயிர்கள் துப்பாக்கி முனைகளுக்கும், எரிகணைகளுக்கும், குண்டுகளுக்கும், தற்கொலைத் தாக்குதல்களுக்கும், சுத்தி முனைகளுக்கும் பஸ்பமாயிற்று. அவையனைத்தும் எந்தளவுக்குப் பயனற்றதாயிருந்தது என்பதை நான் பார்த்தேன். வெளியேற வழியறியாமல் நம்பிக்கையிழந்த ஒரு சூழ்நிலையில் சிக்கியவனாயிருந்தேன். என்னுடைய அடிப்படை நோக்கம், மற்றவர்களைப் போல், உயிர்ப்பிழைப்பதாகவே இருந்தது.
அந்த விஷயத்தில், எங்களுடைய அணுகுமுறை ஜப்பானியரின் முறையிலிருந்து முற்றிலும் வித்தியாசமாயிருந்தது. அவர்கள் ஜப்பானின் மாமன்னனுக்கும் நாட்டுக்கும் உயிர்துறப்பது ஒரு கனம் பொருந்திய காரியம் என்று போதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவ்விதமாகவே கருதினார்கள். எனவேதான், அவர்கள் கடற்படைக் கப்பல்களுக்கு எதிராக கேமிக்கேசே (தற்கொலை) விமானங்களை அனுப்ப முடிந்தது. தரையில் அவர்களுடைய தற்கொலைப் படை வீரர்கள் தங்களுடைய முதுகில் வெடிகுண்டுகளைத் தாங்கியவர்களாய் நாங்கள் தங்கியிருக்கும் மறை குழிகளுக்குள் நகர்ந்துவந்து எங்களையும் தங்களையும் தூள்தூளாக வெடித்துவிடுவார்கள். பொய் மதக் கருத்துக்களைக் கொண்ட அந்தப் போதனை எவ்வளவாக அவர்களை வஞ்சித்திருக்கிறது!
ஆனால் குவாம் ஆரம்பமாக மட்டுமே இருந்தது. பாப்புவா நியு கினியாவுக்கு வடக்கே மேனஸ் தீவில் மறுவாழ்வுக் காலப் பகுதிக்குப் பின்பு, நாங்கள் அடுத்த போர்த்தளத்துக்கு, பிலிப்பீனிலிருந்த லேட்டிக்கு அனுப்பப்பட்டோம்.
“நான் சாகப்போகிறேனா?”
அதே போர்க் கதைத்தான், அடிபட்டவர்களும் மரித்தவர்களும். நான் எப்பொழுதும் வேலையாக இருந்தேன், சேற்றில் நகர்ந்து செல்வதும், காயமுற்றவர்களுக்குக் கட்டுக்கட்டுவதுமாக இருந்தேன். அநேக சமயங்களில், சேற்றில் ஒரு தோழனுக்கு இரத்தத்தைத் தடுக்கும் கருவி கொண்டு சிகிச்சை செய்துகொண்டிருப்பேன், அதற்குப் பின் அவனை ஒரு பத்திரமான இடத்துக்குக் கொண்டு செல்வேன். அடிக்கடி சட்டைகளின் மடிப்புகளைக் கிழித்து அபினிச்சத்து கொண்ட கந்தகி ஊசி மருந்தை எடுத்து, அவனுடைய வேதனையைக் கொல்லுவதற்கு வேகமாக ஒரு ஊசி போடவேண்டியதாயிருந்தது. “எவ்வளவு மோசமாக இருக்கிறது, டாக்டர்? நான் சாகப்போகிறேனா? என்னை இங்கே விட்டுவிடாதீர்கள்!” என்று சிலர் கேட்பார்கள். சில சமயங்களில் கவனிப்பதற்கு ஏராளமான வீரர்கள் இருப்பார்கள், எனவே நாங்கள் சற்று நேரத்தில் வந்து அவர்களைக் கவனிப்பதாக சொல்லிவிடுவோம். உண்மை என்னவென்றால், நாங்கள் திரும்பிவருவது அவர்களுக்குப் பயனில்லாத வகையில் பிந்திப்போய்விடும். அவர்கள் மரித்துவிட்டிருப்பார்கள். அதுதான் போரின் பயனற்றத் தன்மை.
எங்களுடைய அடுத்த போர்ப்பகுதி, அந்தச் சமயத்தில் ஜப்பானியரின் ஆதிக்கத்திலிருந்ததும் ஒக்கினாவா கரையோரப்பகுதிக்குச் சற்று அப்புறம் இருந்த அந்தச் சிறிய இஷிமா தீவு. அநேக போர்களில் என்னுடன் ஒன்றாக இருந்துவந்த ஒரு நண்பன் எனக்கு இருந்தான். அவன் எப்பொழுதுமே போர்க்களத்தில் அதிக ஜாக்கிரதையாக இருந்தான், எந்தவிதமான துணிச்சலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமாட்டான். மற்றவர்களைப் போலவே அவனும் உயிருடனிருக்க விரும்பினான். ஒரு நாள், இஷிமாவைக் கைப்பற்ற ஒரு கடைசி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எதிரியுடைய குண்டுகளின் தாக்குதலிலிருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ள பலர் தரையோடு முகங்குப்புறப் படுத்துக்கொண்டிருந்தோம். அவன் எனக்கு முன்னே ஒருசில அடிகள் தள்ளியிருந்தான். திடீரென்று எங்களுடைய சொந்த பீரங்கியின் இயந்திர துப்பாக்கிகள் கவலீனமாக வலதுபக்கம் சற்று கூடுதலாகத் திரும்பி ஒரு சுற்று சுட்டது. அந்த நண்பனும் இன்னும் மூவரும் அதே இடத்தில் மாண்டனர்.
மற்றொரு சமயத்தில், எங்களுடைய வீரரில் பலர் எங்களுடைய சொந்த விமானங்களின் குண்டுவீச்சுக்குப் பலியானார்கள். மனிதனின் தவறும் கூடுதல் மாயையுமாகும்.
இதே தீவில் பிரபல போர்க்கால பத்திரிகை நிருபர் எர்னீ பைல், தொலைதூரத்திலிருந்து எய்யப்பட்ட ஒரு துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார். உணர்ச்சிகளின் பேரில் அவர் ஒருமுறை எழுதிய கருத்துக்களை நான் ஒப்புக்கொள்பவனாயிருந்தேன்: “எந்த ஒரு போரையும் தப்பிப்பிழைக்கும் எவரும் எப்படி எதனிடமாகவும் இனிமேல் எந்தச் சமயத்திலும் கொடூரமாக இருக்க முடியும் என்பதை நான் காண்பதற்கில்லை.” எதிர்பாராதவிதமாக, அனுபவம் மறுபக்கத்தையே நிரூபிக்கிறது. மனிதனின் கொடுமை தொடருகிறது.
சிறு பீரங்கியின் தாக்குதல்
எங்களுடைய அடுத்த போர்ப்பயணம், ஒக்கினாவாவிலிருந்து எங்களைப் பிரித்த அந்தக் கடற்கால்வாயைக் கடப்பதாயிருந்தது. ஜப்பானியர் அங்கு புதைந்திருந்தனர். குகைகளில் மறைந்திருந்தனர், வெளியேறுவது மிகவும் கடினம்.
ஒரு நாள் நான் ஒரு பாறையுச்சியில் உட்கார்ந்துகொண்டு, குறுகிய மலையிடுக்கு வழியாய் எனக்குமுன் நடந்துகொண்டிருந்த சண்டையை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஜப்பானியரின் சிறிய முழுங்கால் பீரங்கியின் சப்தம் கேட்டேன். நொடி பொழுதில் நான் இருந்த இடத்துக்கு ஒரு சில கெஜ தூரத்தில் ஒரு குண்டு விழுந்தது. போர் நடக்கும்போது ஒரு மூலையில் இருந்த எனக்கு இவ்வளவு அருகிலே குண்டு விழுவது எனக்கு விநோதமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இன்னொரு குண்டு எனக்குப் பின்னே வந்து விழுந்தது! ஒருவேளை பகைவன் என்னைக் குறிவைத்திருக்கிறான் போலும் என்று நினைத்தேன். நான் விரைவாக இறங்கி, அந்தப் பாறைக்குப் பின்னே மறைந்துகொண்டேன். மூன்றாவது குண்டு நான் உட்கார்ந்துகொண்டிருந்த அதே இடத்தை நேரே தாக்கியது! என்னை மிக நெருக்கமாக தாக்கிய குண்டுவீச்சுகளில் இது ஒன்று.
ஒக்கினாவாவுக்கான போர் மூன்று மாதங்கள் தொடர்ந்தன. ஒரு சரித்திர நூல் பின்வருமாறு அறிக்கை செய்கிறது: “ஒக்கினாவாதான் மத்திய பசிபிக்க கடல் பகுதியில் மிக அதிக செலவை உட்படுத்திய போராக இருந்தது. ஏறக்குறைய ஐந்து லட்சம் ஆண்கள் போரில் ஈடுபட்டிருந்தனர். அமெரிக்கருடைய தரப்பில் 49, 000 பேர் காயமுற்றனர், அவர்களில் 12, 500 பேர் உயிரிழந்தனர். அந்தத் தீவில் ஏறக்குறைய 1,10,000 ஜப்பானியர் கொல்லப்பட்டனர்.” குறைந்தபட்சம் 1,22,000 வீரர்கள் கொல்லப்பட்டனர், ஏறக்குறைய 870 சதுர மைல் கொண்டதும் அநேகமாய் அறியப்படாதிருந்ததுமான ஒரு தீவுக்காக இராணுவத்தைச் சாராத ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்!
அந்தப் போர்த் திட்டத்துக்குப் பின்பு நாங்கள் மறுவாழ்வுக்கும் ஜப்பானியர் தாக்குதலுக்கு ஆயத்தமாவதற்கும் பிலிப்பீன்ஸூக்கு அனுப்பப்பட்டோம். இந்தச் சமயத்தில் எனக்குக் கண் நோய் ஏற்பட்டது. என்னுடைய இடத்தில் மற்றவர்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் என்னுடைய தம்பி ராஜர் இருந்தான். என்றபோதிலும் அவன் போரை நேரடியாக பார்த்ததில்லை. ஆகஸ்ட் 6, 1945-ல் முதல் அணு குண்டு ஜப்பானிய நகராகிய ஹிரோஷிமாவில் போடப்பட்டது. மூன்று நாட்கள் கழிந்து, இரண்டாவது அணு குண்டு நகராகிய மீது போடப்பட்டது. அத்துடன் போர் முடிவுக்கு வந்தது.
என்னைச் சிந்திக்கவைத்த ஒரு மரணம்
என் தம்பியும் நானும் ஜப்பானில் சப்போரோவிலிருந்த பற்றாட்சிக்காலப்படைக்கு அனுப்பப்பட்டோம். அதற்குப் பின்பு சீக்கிரத்திலேயே நான் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டேன், ஆனால் என்னுடைய தம்பி இன்னொரு வருடத்துக்கு ஜப்பானில் தங்கவேண்டியதாயிருந்தது. நான் வீட்டுக்கும் குடும்பத்தின் வரவேற்பைப் பெற்றிடவும் புறப்பட்டேன்.
ஓக்லஹோமாவுக்குத் திரும்பிய நான், விட்டதைத் தொடர்ந்தேன், கல்லூரிக்குச் சென்றேன். அங்கே நான்கு ஆண்டு புகுமுக மருத்துவ படிப்பையும் ஓராண்டு மேல்நிலைப் படிப்பையும் தொடர்ந்தேன். இந்தக் காலப் பகுதியில் நான் ஓர் அழகிய பெண்ணைச் சந்தித்தேன், ஓக்லஹோமாவைச் சேர்ந்த ஒரு மாணவி, நான்சி உட். பதினெட்டு மாதங்களுக்குள் நாங்கள் விவாகம்செய்துகொண்டோம். கடந்த 40 ஆண்டுகளாக அவள் எனக்கு உண்மையான துணையாக இருந்துவந்திருக்கிறாள்.
இதுவரையுமாகக்கூட என்னுடைய பெற்றோரின் மதத்தில் நான் எவ்வித கூடுதல் அக்கறையும் எடுக்கவில்லை. என்னுடைய சொந்த அக்கறைகளிலேயே நான் மூழ்கியிருந்தேன். 1950-ல் ஒரு பேரிழப்பு நேர்ந்தது.
அந்தச் சமயத்தில் என்னுடைய தகப்பனுக்கு வயது 66. ஒரு நாட்டு மருத்துவராக அதிக சுறுசுறுப்பாயிருந்துவந்த என்னுடைய தந்தை மாரடைப்பால் காலமானார். என் தாய்க்கு அது தாங்கமுடியாத ஓர் அடியாக இருந்தது. அவருடைய மரணம் எங்கள் எல்லாருக்கும் ஓர் அதிர்ச்சிதான். அவருடைய மகன்களாகிய நாங்கள் ஐவரும் ஒரு தந்தையையும் ஒரு நல்ல நண்பரையும் இழந்தோம். அண்மை நகரிலிருந்துவந்த ஒரு யெகோவாவின் சாட்சி கொடுத்த சவ அடக்க நிகழ்ச்சியின் பேச்சை நாங்கள் எல்லாருமே கேட்டோம். அந்தப் பேச்சு எங்கள் எல்லாரிலும் நீடித்த பாதிப்புகளைக் கண்டது.
இந்தப் பூமி சமாதானமான ஒரு பரதீஸாக திரும்ப நிலைநாட்டப்படும்போது அப்பா உயிர்த்தெழுதலில் திரும்ப வருவார் என்று அந்தப் பேச்சாளர் பைபிளிலிருந்து விளக்கிக் காண்பித்தார். இந்தக் காரியங்களனைத்துமே நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிந்திருந்த காரியங்களை என்னுடைய நினைவுக்குக் கொண்டுவந்தது. ஒரு சிறிய காலப்பகுதிக்குள், நான்சியுடனும் என்னுடனும் சாட்சிகள் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். நான் எவ்வளவுக்கு அதிகமாக படித்தேனோ, அவ்வளவுக்கு அதிகமாக உலகத்தின் தற்போதைய குழம்பிய நிலையை என்னால் உணர முடிந்தது. போரில் என்னே மாயை—ஒவ்வொரு தேசத்தின் குருவர்க்கத்தினராலும் ஆதரிக்கப்பட்டுவரும் அரசியல் ஆட்சியாளர்களின் தன்னலப் பேராசையை வளர்த்திடுவதற்காக அந்த உயிர்கள் பலிகொடுக்கப்பட்டிருக்கின்றன.
மனிதர் சமாதான உறைவிடங்களில் வாழும்போது
1914 முதல் சம்பவித்துவந்திருக்கும் காரியங்கள் முடிவு காலம் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் என்பது தெளிவாயிருக்கிறது. அவர் குறிப்பிட்டிருந்த எல்லாமே ஒரே சந்ததிக்குள் கடந்துபோவதாயிருக்கின்றன. எனவே, கடவுளுடைய போராகிய அர்மகெதோன், பூமியிலிருந்து எல்லா பொல்லாதவர்களையும் நீக்கிவிடும் நீதியான போர் விரைவில் வந்து, கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தின் சமாதான ஆட்சி திரும்ப நிலைநாட்டப்படும் ஒரு பூமிக்கு முன்னோடியாக அமையும்.—வெளிப்படுத்துதல் 11:18; 21:1-4.
நான்சியும் நானும் 1950-ல் முழுக்காட்டுதல் பெற்றோம். எங்களுடைய கல்லூரிப் படிப்பைத் தொடருவதற்குப் பதிலாக எங்களுடைய விவகாரங்களை சீரமைத்துக்கொண்டு 1956-ல் முழுநேர ஊழியத்தில் பிரவேசித்தோம். கடந்த ஆண்டுகளில் நாங்கள் பயண ஊழியத்தில் வட்டார மற்றும் மாவட்ட கண்காணியாக ஐக்கிய மாகாணங்களின் பல பகுதிகளில் பிரசங்கித்திருக்கிறோம். எட்டு ஆண்டுகளுக்கு மேல் நான் சபை மூப்பர்களுக்கான ராஜ்ய ஊழிய பள்ளியிலும் முழுநேர ஊழியர்களுக்கான பயனியர் பள்ளியிலும் போதித்து வந்தேன். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் நியு யார்க்கில், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் உலக தலைமைக் காரியாலயத்தில் பணிபுரிந்திருக்கிறோம். (g88 4/8)
[பக்கம் 17-ன் படம்]
[பக்கம் 18-ன் படம்]
நாங்கள் பணியாற்றும் யெகோவாவின் சாட்சிகளின் தலைமைக்காரியாலயத்தின் முன் என் மனைவியுடன்
[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]
U.S. Army photo