அந்தப் பெரிய புதிர்
‘நீங்கள் கடவுளிடம் தனிப்பட்ட விதத்தில் எந்த ஒரு கேள்வியாவது கேட்கக்கூடிய நிலையில் இருப்பீர்களானால், அது என்னவாயிருக்கும்?’ இங்கிலாந்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில் 31 சதவிகிதத்தினர் தெரிந்துகொள்ள விரும்பியது: “நாம் மரிக்கும்போது என்ன நேரிடுகிறது?”
உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், நீங்கள் அந்தக் கேள்வியைக் கேட்பீர்களா?
மரணம் “நமக்கு நிச்சயம் வரும் என்று நாம் அறிந்திருக்கிறோம், உயிரோடிருக்கும் எல்லாருடனும் நாம் அந்த அறிவைப் பகிர்ந்துகொள்கிறோம்,” என்று மரணம் என்ற புத்தகத்தில் ஆராய்ச்சியாளர் மாக் பால் எழுதுகிறார். என்றபோதிலும், எதிர்மாறான கருத்துபோல் தென்படும் வகையில் பால் மேலும் குறிப்பிடுவதாவது, “அது சாதாரண மக்களிடையே சம்பாஷணையின் உரையாடலுக்குரிய பொருளாக இருப்பதில்லை. மரணம் என்பது உங்களுக்கு நன்கு பழக்கமில்லாத ஆட்களிடம் நீங்கள் பேசும் ஒரு பொருள் அல்ல.”
உண்மையில் பார்க்கப்போனால், அநேகருக்கு மரணத்தைப் பற்றி யோசிக்கவும் விருப்பமில்லை. தி உவர்ல்டு புக் என்சைக்ளோபீடியா (The World Book Encyclopedia) பின்வருமாறு கூறுகிறது: “அநேகருக்கு மரண பயம் இருக்கிறது, அதைக் குறித்து யோசிப்பதைத் தவிர்க்கின்றனர்.” இந்தப் பயம் அறியாததைக் குறித்த பயமாகும், ஏனெனில் மரணம் பலருக்கு புரியா புதிராக இருக்கிறது. எனவேதான் ஒருவர் மரிக்கும்போது, அவர் “பிரிந்துபோனார்,” “விட்டுப்பிரிந்தார்,” “மரணத்தில் இழந்தோம்” போன்ற மங்கல வழக்குகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் நாம் எல்லாருமே மரணத்தை எதிர்ப்படுவதால், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது என்பதற்கு விளக்கம் அளிக்கும்போது நாம் அதிக திட்டவட்டமாக இருக்கலாம் அல்லவா?
நாம் ஆதாரமற்ற கேள்விகளைக் கேட்கிறோம், அது வெறும் ஒரு நம்பிக்கைதான் என்று ஐயுறவாதிகள் கூறக்கூடும். என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா இப்படியாக கூறுகிறது: “மரணம் உயிர் அல்ல. என்றபோதிலும் அது என்ன என்பதை அனுமானிக்கத்தான் முடியும்.” இருந்தாலும் அதே நூல் அறிக்கையிடுவதாவது: “மனித இனத்தவர் மரணத்தை ஏதோ ஒரு வகையில் தப்பிப்பிழைக்கின்றனர் என்ற நம்பிக்கை மனிதவர்க்கத்தின் எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் செயல்களிலும் வெகு ஆழமான செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது. அந்த நம்பிக்கை கடந்த காலங்களிலும் சரி, தற்காலத்திலும் சரி, எல்லா மதங்களிலும் வியாபித்திருக்கிறது.”
இந்த நம்பிக்கைகள் என்ன உருவில் காணப்படுகின்றன? நாம் மரிக்கும்போது என்ன நேரிடுகிறது என்பதன்பேரில் அவை உண்மையான அறிவு ஒளியை வீசுகின்றனவா, அல்லது மரணம் ஒரு புரியா புதிராகவே இருக்கின்றதா? (g88 7⁄8)