பைபிளின் கருத்து
துயர்துடைப்பு இறைமையியல் கோட்பாடு ஏன் விடையாக இல்லை
துயர் துடைப்பு இறைமையியல் கோட்பாடு என்பது ஓரளவுக்குப் புதிய ஒரு கருத்தே ஆகும். இது தங்களுடைய மந்தைகளிலுள்ள அநேகரின் கடுமையான வறுமையினால் நிலைகுலைந்து போன தென் அமெரிக்காவிலுள்ள ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களால் தோற்றுவிக்கப்பட்டது. மிக மோசமான ஏழ்மையிலிருப்பவர்களிடம் வெறுமென ஆன்மீகக் காரியங்களைப் பற்றி பேசுவது உண்மையில் அவர்களுக்கு உதவி செய்வதில்லை என்பதாக அவர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். மாறாக, மக்கள் ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு தீவிரமான சமுதாய மாற்றங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதாக பாதிரிமார்களாகிய அவர்கள் நினைத்தார்கள். சிலர் பரிணாமத்தைக்கூட ஆதரித்து வாதாடினார்கள்.
நிச்சயமாகவே ஏழ்மையிலிருப்பவர்களின் நிலையை, மேம்படுத்த விரும்புவது தவறல்ல. இயேசுதாமேயும் அவருடைய நாளிலிருந்த மக்களுக்காக வெகுவாக இரக்கப்பட்டிருக்கிறார். நாம் வாசிக்கிறோம்: “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள் மேல் மனதுருகினார்.” (மத்தேயு 9:36) ஆம், இயேசு பின்வருமாறு சொல்லும்போது தம்முடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கிறவர்களுக்குத் துயர்துடைப்பை வாக்களித்தார்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) ஆகவே ஒரு கிறிஸ்தவ ஊழியனுக்கு ஏழ்மையிலுள்ளவர்களுக்கு உதவி செய்ய, துயர்துடைப்பு இறைமையியல் கோட்பாடு, பைபிளின் வழியாக இருக்கிறதா?
தவறான ஒரு கோட்பாடு
இல்லை, அநேக காரணங்களுக்காக அது அப்படி இல்லை. ஒரு காரியமானது, ஒரு கிறிஸ்தவ ஊழியனின் அடிப்படைப் பொறுப்பு அவனுடைய மந்தையின் ஆவிக்குரிய நலனாக இருக்கிறது. ஏழை ஒருவனின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படுமேயானால் அவன் ஆன்மீக ரீதியிலும் மேம்பட விரும்புவான் என்பதற்கு அத்தாட்சி ஏதுமில்லை. ஆம், பணக்கார தேசங்களாகிய வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் அவைகளுடைய உயர்ந்த வாழ்க்கைத் தரத்தின் மத்தியிலும் கடுமையான ஆன்மீகப் பிரச்னையிலிருந்து அவதியுறுகின்றன. ஒரு சிலவற்றைச் சொல்ல வேண்டுமானால், நேர்மையற்றத் தன்மையும், ஒழுக்கயீனமும், பிள்ளைகளின் மற்றும் வயதானவர்களின் துர்ப்பிரயோகமும், பேராசையும் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் கடவுள் பேரிலுள்ள அக்கறை மறைந்துவிட்டிருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1–5.
மேலுமாக இயேசு எளியவர்களுக்கு உதவி செய்வதற்கு பயன்படுத்தியது துயர்துடைப்பு இறைமையியலாக இல்லை. மேலுமாக, இயேசுவே மெய்கிறிஸ்தவர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். (1 பேதுரு 2:21) இயேசு பூமியிலிருக்கையில், குடியேற்ற தேச அரசின் கீழ் குடிமக்களாக, மோசடி செய்யும் வரிவசூலிப்பவர்களின் கைகளில் துன்பமனுபவித்த மக்களின் மத்தியிலும் அவர் வாழ்ந்து வந்தார். அவர்களில் மிகவும் எளியவர்கள், ஆட்சி அதிகார வர்க்கத்திலிருந்த பேராசைப் பிடித்தலைகிற உறுப்பினர்களுக்கு அநேகமாக இரையானார்கள். (மத்தேயு 22:21; லூக்கா 3:12, 13; 20:46, 47) என்றபோதிலும் இயேசு அவர்களுடைய நிலையை மேம்படுத்துவதற்கு முற்படும்வகையில் அரசியலிலோ சமுதாயப் போராட்டங்களிலோ அவர் ஈடுபடவில்லை. மாறாக, அவர் “ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப்” பிரசங்கித்தார்.—மத்தேயு 4:23.
கடைசியாக துயர்துடைப்பு இறைமையியல் கோட்பாட்டை ஊக்குவிக்கும் மதத்திலுள்ள ஊழியர்கள், கடவுளுடைய வழியில் மாத்திரமே தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்னைக்கு அரசியல் பரிகாரத்தை நாடுகிறார்கள். இந்தக் கோட்பாடு இறைமையியல் என்றழைக்கப்பட்டாலும் இதற்கு பைபிள் ஆதாரமில்லை. இயேசு தம்முடைய சீஷர்களைக் குறித்து சொன்னதாவது: “நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:16) அரசியலில் நேரடியாக ஈடுபாடு கொள்வதை ஊக்குவித்து, “உலகத்தானல்லாதவராக” இருப்பது கூடாத காரியமாகும்.—யாக்கோபு 4:4.
ஏழ்மையிலிருப்பவர்களுக்கு உண்மையில் உதவி செய்வது எது?
உண்மையில், மிகவும் ஏழ்மையிலிருப்பவர்களுக்கு பொருத்தமான ஆன்மீகச் செய்தி, துயர்துடைப்பு இறைமையியலர்களுக்கு இல்லையென்றால், அவர்கள் தவறான செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் சொல்ல வேண்டும். இயேசு அவருடைய நாளில் சாதகமாக பிரதிபலித்த ஏழைகளுக்கு வெகுவாக உதவி செய்தார். யெகோவாவின் சாட்சிகளும் இன்று “ராஜ்யத்தினுடைய நற்செய்தியைப்” பிரசங்கிப்பதில் பங்கு கொள்கையில் அதையே செய்கிறார்கள்.—மத்தேயு 24:14.
இந்த நற்செய்தி என்ன? நம்முடைய காலத்தில், கடவுளுடைய ராஜ்யம் பரலோகங்களில் ஸ்தபிக்கப்பட்டுவிட்டது, அது விரைவில் இந்தப் பூமியிலிருந்து எல்லாப் பொல்லாப்பையும் கொடுங்கோன்மையையும் நீக்கிவிடும் என்ற சத்தியமே. (வெளிப்படுத்துதல் 11:15, 18) இவ்வகையில் கடவுளுடைய ராஜ்யம் வறுமை மற்றும் கொடுங்கோன்மைப் பிரச்னைகளை என்றுமாக தீர்த்துவிடும். கடவுளுடைய ராஜ்யத்தின் ஆட்சியைப் பற்றிய பாதிப்பைக்குறித்து பேசுகையில் பைபிள் சொல்வதாவது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின.” (வெளிப்படுத்துதல் 21:4) நேர்மையான இருதயமுள்ளோருக்கு என்னே மகத்தான ஓர் எதிர்பார்ப்பு!
ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய இந்தச் சத்தியம் எவ்விதமாக ஏழ்மையிலிருப்பவர்களுக்கு இப்பொழுது உதவி செய்கிறது? ஆம், இயேசு சொன்னது நினைவிலிருக்கட்டும்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) சத்தியமானது குற்றமுள்ள மனச்சாட்சியிலிருந்து விடுதலையையும், எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலிருந்து விடுதலையையும் மதசம்பந்தமான மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலையையும் அனுபவித்துக் களிக்க ஒருவருக்கு உதவி செய்கிறது.
மேலுமாக இந்தச் சத்தியத்தைக் கற்றறியும் ஒரு நபர் இரண்டு மிக சக்திவாய்ந்த நண்பர்களை சம்பாதித்துக் கொள்கிறார். இப்பொழுது கடவுளுடைய ராஜ்யத்தில் ராஜாவாக ஆளுகைச் செய்து கொண்டிருக்கும் கிறிஸ்து இயேசு ஒருவராக இருக்கிறார். மற்றொருவர் யெகோவா தேவனாக இருக்கிறார். இவரைப் பற்றி பைபிள் சொல்வதாவது: “யெகோவா மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22, NW) ஏழ்மையிலிருக்கும் ஒரு நபர் கொடுங்கோன்மையான அரசியல் அல்லது பொருளாதார அமைப்பின் கீழ் வாழ்ந்துவந்தாலும்கூட இரக்க குணமுள்ள இந்த இரண்டு நண்பர்களும் கிறிஸ்தவ சபையின் மூலமாக அவனுக்கு உதவி செய்யக்கூடும்.
மேலுமாக கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியத்துக்குச் செவி கொடுத்தல் கெட்ட பழக்க வழக்கங்களை விட்டொழித்து, அவனிடமுள்ள வள ஆதாரங்களை மிகச் சிறந்த வகையில் பயன்படுத்துவதற்கு அவனை வழிநடத்துகிறது. இல்லை, ஏழ்மையிலிருக்கும் ஒருவர் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதன் மூலம் கட்டாயமாகவே செல்வந்தனாகிவிடுவதில்லை. ஆனால் அவன் கடவுளுடைய ராஜ்யத்தை முதலிடத்தில் வைத்து அவருடைய நீதியான தராதரங்களுக்கிசைவாக வாழ்ந்து வருவானேயானால் ஏதாவது ஒரு வகையில் அவனுடைய வாழ்க்கையில் சரீரப்பிரகாரமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவிடுகின்றன. இது இயேசு வாக்களித்தவிதமாகவே இருக்கிறது. “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:33.
பூர்வ காலத்து தாவீது ராஜா கடவுள் தமக்குச் சொந்தமானவர்களை விசாரிக்கும் விதத்தைப் பற்றிய இருதயத்துக்கு அனலூட்டும் ஓர் அத்தாட்சியைக் கொடுத்தான். அவன் சொன்னதாவது: “நான் இளைஞனாயிருந்தேன் முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும் அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.” (சங்கீதம் 37:25) இன்று யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இது உண்மையாக நிரூபித்திருப்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
ஆகவே மனித தத்துவங்களின் மூலமாகவும் இறைமையியலின் மூலமாகவும் தற்காலிகமான உதவியை நாடுவதற்குப் பதிலாக, ஏழ்மையிலிருப்பவர்கள் உட்பட அனைவருமே, கடவுளைச் சேவிப்பதனால் வரும் மிக உண்மையான நன்மைகளை அனுபவிக்கும்படியாக உற்சாகப்படுத்தப்படுகின்றனர். அவ்விதமாகச் செய்பவர்கள், “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” என்பதை அப்போஸ்தலனாகிய பவுலோடுகூட ஒப்புக்கொள்கிறார்கள்.—1 தீமோத்தேயு 4:8. (g88 9⁄8)
[பக்கம் 23-ன் படம்]
உலகின் வறுமைக்கு ஒரே பரிகாரம் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியே