பைபிளின் கருத்து
கடவுளைப்பற்றிய அறிவு விசேஷமான ஒருசிலருக்கு மட்டுமா?
1987 ஜூலை மாதம் ஒரு மாலைப் பொழுது, ஃபிரான்சில் பாரிஸ் நகரிலுள்ள பாலாய்ஸ் டெஸ் காங்கிரஸ் அரங்கில் ஓர் அசாதாரண வைபவம். மன்றத்தினுள் லேசர் கதிர் விளக்குகள் சுவர்களில் மின்னின, பக்திமயமான மின்னிசை ஒலிகள் ஒலித்தன, இடையிடையே மணியோசை அறையை நிரப்பின. மேடையில் இரண்டு மனிதர் கருப்பு உடையில் பிரவேசித்து கப்பல் வடிவில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு தீபத்தை மெதுவாக அசைக்க, மேடையின் இரு பக்கங்களிலிருந்தும் பல வண்ண புகை எழும்பியது. அதே சமயத்தில், மன்றத்தில் கூடியிருந்த 4,000 பேருக்கு முன்பாக வெள்ளை உடை அணிந்த பல ஆண்களும் பெண்களும் தோன்றினர்.
அந்த வைபவம் என்ன? ஒரு ராக் இசை விருந்தா? இல்லை, கிறிஸ்தியன் ரோசன்க்ரூஸ் மாயமறைத்துறை கழகத்தினரின் (Rosicrucians) ஒரு மத அற்பணிப்பு நிகழ்ச்சியின் துவக்க விழா. அது மறைபொருளுக்கு அல்லது இரகசிய ஞானத்துக்கு அற்பணித்திருக்கும் ஓர் இயக்கம். என்றபோதிலும், இந்த உலக தோழமை ஒழுங்கின் புதிதாய் மதமாற்றமானவர்களுக்கு, இந்த மத விழா ஒரு தொடர் தொடக்க விழாவின் முதற்படியாகத்தான் அமைந்தது.
ரோசன்க்ரூஸியரின் இரகசிய சமுதாயம், ஒரு சில வழிகளில், இரண்டாம் நூற்றாண்டில் செழித்ததும் கிறிஸ்தவ மதத்திற்குப் போட்டியாகவும் அமைந்ததுமான க்நாஸ்டிக் (Gnostic) பிரிவினருக்கு ஒப்பாயிருக்கிறது. இரட்சிப்பு மறைபொருள் அறிவினால் வருகிறது என்றும், அப்படிப்பட்ட இரகசியத்தின் ஞானம் விசேஷமாக தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆனால் கடவுளைப் பற்றிய அறிவு விசேஷமான ஒருசிலருக்கு மட்டுமானதா? இது அந்தச் சமயக்கூட்டில் சேர்க்கப்பட்ட தொகுதியினருக்கு மட்டும் கட்டுப்பட்டதா?
கிறிஸ்தவம் ஓர் இரகசிய தோழமை மதமா?
கிறிஸ்தவ மதம் ஓரளவுக்கு மறைபொருள் ஞானம் கொண்டது, அல்லது ஒரு சிலருக்கு மட்டும் உரிமையாக்கப்பட்டது என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். லெசோடெரிஸ்மெ (L’esoterisme) என்ற தன்னுடைய புத்தகத்தில் ஃபிரான்ஸ் தேசீய அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் லுக் பெனாய்ஸ்ட் எழுதினார்: “ஒதுக்கீடு செய்யப்பட்ட போதனைகள் சம்பந்தமான அறிகுறிகள் புனித பவுலின் கடிதத்தில் காணப்படுகின்றன: ‘உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக் கொடுத்தேன். . . . பாலுண்கிறவர்களாய் மட்டும் இருப்பவர்கள் ஞானத்தின் சொற்பொழிவுகளில் ஒன்றும் புரியாதவராயிருக்கிறார்கள்.’ [1 கொரிந்தியர் 3:2 மற்றும் எபிரெயர் 5:13-ன் தொகுப்பு] ஆரம்ப சர்ச் பிதாக்களின் எழுத்துக்கள் ‘புதிதாய் மதமாறியவர்கள் சிந்தித்துப்பார்க்கமுடியாத ஒரு சத்தியத்தைக்’ குறிப்பிடுகிறது.”
என்றபோதிலும், அப்போஸ்தலனாகிய பவுல் மறைபொருள் ஞானம் குறித்து எழுதுகிறானா? இல்லை, பவுல் எழுதிய வார்த்தைகளின் சந்தர்ப்ப சூழ்நிலை, அவன் உண்மையில் புதிதாய் மதம் மாறியவர்களாயிராத தன்னுடைய கிறிஸ்தவ தோழர்களைக் கடிந்துகொள்கிறவனாயிருந்தான். ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறாமல் இருந்த கிறிஸ்தவர்களுக்கு, விசுவாசத்தில் இருந்துவந்த “காலத்தைப் பார்த்தால்” மற்றவர்களுக்குப் “போதகராயிருக்கவேண்டிய” கிறிஸ்தவர்களுக்கு எழுதிக்கொண்டிருந்தான்.—எபிரெயர் 5:12.
எனவே, பவுல் தான் இரகசியமாக வைத்துக்கொள்ள விரும்பிய சத்தியங்களைக் குறிப்பிட்டுப் பேசிக்கொண்டில்லை, ஆனால் அவர்களோடு தான் பகிர்ந்துகொள்ள விரும்பிய விளக்கங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தான். என்றபோதிலும் அது அவர்களுடைய ஆவிக்குரிய தெளிந்துணர்வுக்கு அப்பாற்பட்டதாயிருந்தது, ஏனென்றால் அவர்கள் வேத அறிவில் முன்னேறியிருக்கவேண்டிய அளவுக்கு முன்னேறியவர்களாய் இல்லை. அந்தச் சில கிறிஸ்தவர்களின் மத்தியில் பவுலின் நிலையை, தன்னுடைய மாணவர்களிடமிருந்து முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் கணித ஆசிரியரின் நிலைக்கு ஒப்பிடலாம். மாணவர்கள் தங்களுடைய வீட்டுப்பாடத்தைச் சரியாக செய்ய தவறியதால் சாதாரண கூட்டல் பெருக்கல் விதிகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாதிருக்க, அவர்களுக்குக் கடினமான இயற்கணித சமன்களைப் புரியவைப்பது கடினமாக இருப்பதை அந்த ஆசிரியர் காண்பார்.
அறிவு எல்லாருக்கும் திறந்திருக்கிறது
பைபிள் அறிவு தேங்கிக்கிடக்கும் ஒன்றல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நேரமும் முயற்சியும் கொண்டு சத்தியத்தை நன்றாகப் புரிந்து கொள்ளவும், ஆவிக்குரிய காரியங்களை ஆழமாகவும் தெளிவாகவும் தெரிந்துகொள்ள முடியும். மேலும், யெகோவா தம்முடைய ஊழியர்களுக்குத் தம்முடைய நோக்கங்களைப் படிப்படியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று பைபிள் காண்பிக்கிறது. ஆனால் ஒரு காலப் பகுதியில் வாழும் சிலருக்குக் கிடைக்கக்கூடியதும், ஆனால் அதே காலப் பகுதியில் உண்மை மனதுடன் சத்தியத்தைத் தேடும் மற்றவர்களுக்கு மறைவானதுமாயிருக்கும் “மறைவான சத்தியங்களைக்” குறித்து அது ஒருபோதும் குறிப்பிடுவதில்லை. (சங்கீதம் 147:19, 20; நீதிமொழிகள் 2:1–11; 4:18; ஏசாயா 45:19) கடவுள் இஸ்ரவேல் தேசத்துடன் தொடர்பு கொண்ட அந்தச் சமயத்தில் மட்டும் அல்ல, ஆனால் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, கிறிஸ்தவ மதத்துக்கு அஸ்திபாரம் போட்டுக்கொண்டிருந்த சமயத்திலும் இது உண்மையாக இருந்தது.
அவருடைய மூன்றரை ஆண்டு ஊழியத்தின்போது, இயேசு இஸ்ரவேல் பிராந்தியத்தின் பெரும் பகுதியை முடித்தார். இதை அவர் ஒளிவுமறைவான முறையில் செய்தாரா அல்லது விசேஷமானவர்களாகக் கருதப்பட்ட ஒரு மறைவான தொகுதியை மட்டும் அவர் சந்தித்தாரா? இல்லை, தம்முடைய செய்தியை வெளியரங்கமாகப் பிரசங்கித்தார், அநேக சமயங்களில் கூட்டமாகக் கூடியிருந்த மக்களிடம் பிரசங்கித்தார். அவருடைய மரணத்துக்குச் சற்று முன்னால், அவருடைய போதனையின் முறை குறித்து யூத மத அதிகாரிகள் அவரைக் கேள்வி கேட்ட போது, அவர் இப்படியாக விளக்கினார்: “நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன். ஜெப ஆலயங்களிலேயும், யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.”—யோவான்18:20.
இயேசுவின் செய்தி பலஸ்தீனாவுக்கு மட்டுமல்லாமல் அதைவிட ஒரு பெரிய கூட்டத்துக்குக் கொடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அது முழு உலகத்துக்கும் சொல்லப்படுகிறது! ‘நான் எல்லா மக்களிடமும் பேசினேன்,’ அதாவது எல்லா யூதரிடமும் பேசினதாக இயேசு சொல்லவில்லை. மாறாக, தீர்க்கதரிசனமாக இருக்க, அவர் “உலகம்” என்பதற்கு குறிப்பாக ஒரு வார்த்தையைத் தெரிந்துகொண்டார்.a இப்படியாக மறைபொருள் போதனையைப் பிரசங்கிக்கவில்லை; அது எல்லாருக்கும், எந்த இடத்தவருக்குமானது.
உண்மைதான், இயேசு அடையாள அர்த்தத்தில் பேசினார், விசேஷமாக உவமைகள் மூலம் அல்லது எடுத்துக்காட்டுகள் மூலம் பேசும்போது அப்படிச் செய்தார். ஆனால் இந்த முறை, தமக்குச் செவிகொடுத்துக் கேட்பவர்களைத் தெரிந்தெடுப்பதற்கு உதவியாயிருந்தது. இயேசுவின் போதனையில் உண்மையான அக்கறையில்லாதவர்கள் அவருடைய உவமைகளைச் செவிகொடுத்துக் கேட்டுவிட்டு, அதை ஆழமாகக் கவனியாமற் போய்விட்டார்கள். அறிவுக்கான தாகம் கொண்டவர்கள் கூடுதல் விளக்கத்துக்காக அவருடன் தங்கினர். இப்படியாக அறிவை உண்மையிலேயே நாடுகிறவர்களுக்கு அது எட்டும் தூரத்தில்தான் இருந்தது.—மத்தேயு 13:13, 34–36.
கிறிஸ்தவ மதம் எல்லாருக்கும் திறந்திருக்கும் ஒரு மதம் என்ற உண்மை வேதாகமத்தின் மற்ற பகுதிகளின் தோரணையிலிருந்து தெளிவாகிறது. உதாரணமாக, பைபிளின் கடைசி வசனங்களில் ஒன்று ‘ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளும்படியான’ கடவுளுடைய அழைப்பைக் கொண்டிருக்கிறது. அது குறிப்பாகக் கூறுகிறது: “தாகமாயிருக்கிற எவனும் வரக்கடவன்; விருப்பமுள்ள எவனும் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” ஆக, மீண்டும், பைபிள் அறிவு எல்லாருக்கும் கிடைக்கிறது.—வெளிப்படுத்துதல் 22:17; ஏசாயா 55:1-ஐ ஒப்பிடவும்.
கடவுளைப் பற்றிய அறிவு எல்லாருக்கும் கிடைப்பதாய் இருந்தாலும், அதைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி தேவைப்படுகிறது. “அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடும்”படியாக பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 2:4) எனவே, அறிவு கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும், மற்றும் அதன் நியமங்களும் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும்போது ஞானம் காணப்படுகிறது.
அந்த முயற்சியில் பயனுண்டா? ஆம், அப்படிப்பட்ட ஞானம் “யெகோவாவின் நற்பிரியத்தை” பெற்றுத்தருகிறது, நித்திய ஜீவனுக்கும் வழிநடத்துகிறது. என்னே ஒரு பொக்கிஷம்! அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவுக்காக நீங்கள் தனிப்பட்டவிதத்தில் தேட ஆரம்பித்திருக்கிறீர்களா?—நீதிமொழிகள் 8:34–36; சங்கீதம் 119:105. (g88 11⁄8)
[அடிக்குறிப்புகள்]
a இயேசு (pantiʹ toi laoiʹ) “எல்லா மக்களுக்கும்,” அதாவது, கூடியிருந்த எல்லாருக்கும் அல்லது ஒரே ஜாதியைச் சேர்ந்த அனைவருக்கும் என்ற பதத்தைப் பயன்படுத்தவில்லை; ஆனால் (toi koʹsmoi) “உலகத்துக்கு,” அதாவது மனித குலத்துக்கு, மனிதவர்க்கத்துக்கு என்ற பதத்தைப் பயன்படுத்தினார். அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், யோவான் 18:20 குறித்து யோவான் சுவிசேஷத்தின் பேரில் ஒரு விளக்க ஆய்வு உரை (A Critical and Exegetical Commentary on the Gospel According to St. John) குறிப்பிடுவதாவது: “இயேசுவின் வார்த்தைகளில் மறைவான சுவிசேஷத்துக்கு அல்லது இரகசிய போதனைக்குப் பலமான மறுப்பு யோவானில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.”
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
மேடையில் இரண்டு மனிதர் கருப்பு உடையில் பிரவேசித்து கப்பல் வடிவில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு தீபத்தை மெதுவாக அசைத்தனர்