இளைஞர் கேட்கின்றனர் . . .
என்னுடைய பணத்தை நான் எவ்வாறு ஞானமாக உபயோகிக்கலாம்?
“இந்த நாட்டிலுள்ள இளைஞர்கள் இன்று செலவழிப்பதற்காக வளர்க்கப்படுகிறார்கள்.” ஐக்கிய மாகாணங்களில் பருவ வயதினரின் செலவழிக்கும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ந்தப் பின்பு, பொது கருத்தைத் திரட்டிய லெஸ்டர் ரான்ட் இந்த முடிவுக்கு வந்தார். ரான்டின் பிரகாரம், ஐக்கிய மாகாணங்களிலுள்ள இளைஞர்கள் ஒரே ஆண்டில் 66,300 கோடி ரூபாய் செலவழிக்கிறார்கள்! பணம் எங்கே போகிறது?
ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஆய்வாளர்கள் நார்மனும் ஹாரிஸும் அறிவிப்பதாவது: “ஏதாவது ஒருவகை பொழுதுபோக்கு, குறிப்பாக இசை, பெரும்பாலும் ஒவ்வொரு பட்டியலிலும் முதலிடத்திலிருக்கிறது . . . காரோட்டும் பருவ வயதினர், பெரும்பகுதியானப் பணத்தை கல்லெண்ணைக்கும், பழுதுப் பார்ப்பதற்கும், பொதுப் பராமரிப்புக்காகவும் செலவழிக்கிறார்கள். மற்ற அநேகர் பல்வகை நொறுக்குத் தீனிக்கு பணம் செலவழிக்கிறார்கள். இதில் பிஸா என்ற ஒருவகை இத்தாலிய பண்டமும், குளிர் பானங்களும், பன்றி இறைச்சி சான்ட்விச்சும் பட்டியலில் முதலிடம் பெறுகின்றன. பெண்கள், பையன்களைவிட உடைகளுக்காக அதிகமாக செலவழிக்கிறார்கள்; நிச்சயமாகவே பருவ வயது பெண்கள் ஒப்பனைப் பொருள் தொழிற்சாலைக்கு அருமதிப்புள்ளவர்களாவர்.”
கார் செலவுகள், உணவு, பொழுதுபோக்கு—இவை முற்றிலும் நியாயமான செலவுகள் என்று ஒப்புக்கொள்ளப்படலாம். ஆனால் பருவ வயதினர் செய்யும் செலவுகள் அனைத்தும் ஞானமாகச் செய்யப்படுகிறதா?a வேலைப் பார்க்கும் ஓர் இளைஞனின் பொறுப்புகள் தனக்குத்தானே பொருட்களை வாங்கிக் கொண்டிருப்பதற்கும் அப்பால் செல்லக்கூடுமா?
விவேகமாக செலவழிப்பது எப்படி
உதாரணமாக கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதை நாம் சிந்திக்கலாம். பெரும்பாலான இளைஞர்கள் விசேஷமாக செலவழிப்பதற்கு அவர்களுடைய பையில் பணமிருக்குமானால் இதை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் நீ விரும்புகின்ற மற்றும் பார்க்கின்ற அனைத்தையும் வாங்குவது உண்மையில் மிகச் சிறந்தக் கொள்கையாக இருக்கிறதா?
இங்கிலாந்தில் 600 பேரை வைத்து நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில், வினவப்பட்ட 15-க்கும் 19-க்கும் இடைப்பட்ட வயதினரில் குறைந்தபட்சம் 62 சதவிகிதத்தினர் அவ்வப்போது, ஆராயாமல் மனம்போன போக்கில் பொருட்களை வாங்கும் பழக்கமுள்ளவர்களாக இருந்தனர் என்பது தெரிந்தது. (வளரிளமைப் பருவம், இலையுதிர் பருவம் 1982) ஆனால் அறிவுடன் வாங்குபவர், அவனுக்கு அல்லது அவளுக்கு என்ன தேவை என்பதை முன்கூட்டியே சிந்திக்கிறார். அப்படியென்றால் கடைக்கு வாங்கப் போவதற்கு முன்பாக, என்ன வாங்குவது என்பது பற்றி ஒரு பட்டியல் தயாரித்து அந்தப் பட்டியலுக்குள் வாங்குவதை ஏன் கட்டுப்படுத்திக்கொள்ளக்கூடாது? விருப்பங்கள் என்ற தங்கள் புத்தகத்தில் ஆசிரியர்கள் ஷாவும் பெரியும் மேலுமாகப் பரிந்துரைச் செய்வது: “வாங்குவதற்குக் கடைக்கு நீங்கள் செல்லுகையில், உங்களுக்கு உண்மையில் தேவையாயிருப்பதை அல்லது கடையைவிட்டு நீங்கள் வருவதற்கு முன்பாக என்ன வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களோ அதை வாங்குவதற்குப் போதுமான பணத்தை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.”
பெரியவர்களாக இருக்கும் நுகர்வோர் துணிகளை வாங்கும்போது தரத்தைப் பற்றியும் நடைமுறைப் பயனைப்பற்றியும் அக்கறையுள்ளவர்களாக இருக்கையில், இளைஞர்கள் நாகரீக பாணியைக் குறித்து அதிக அக்கறையுள்ளர்வளாக இருக்கிறார்கள் என்றும்கூட வளரிளமைப் பருவம் பத்திரிகைக் குறிப்பிட்டது. அது உன்னுடைய விஷயத்தில் உண்மையாக இருக்கிறதா? அப்படியானால் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் உன் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய். கடினமாக உழைத்து சம்பாதித்த உன் பணத்தைச் செலவழிப்பதற்கு முன்பாக ஓர் உடை எவ்வளவு காலம் உழைக்கும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார். ஒரு சில வருடங்களா? அல்லது ஒரு சில மாதங்களில் நாகரீகப் பாணி மறைந்துவிடுமா?
தரத்தைப் பற்றியும்கூட அக்கறையுள்ளவனாயிரு. குறைந்த தரமுள்ள மலிவான பொருள், பழுதுப் பார்த்தல் அல்லது மாற்றீடு செய்தல் போன்றவற்றின் காரணமாக முடிவாக அதிக செலவை உட்படுத்தக்கூடும். ஆகவே சுற்றிப்பார்த்து வாங்கு. இது உடையாக இருக்குமானால், நூலிழை அமைப்பை ஆராய்ந்துபார். எத்தனை அடிக்கடி இந்த ஆடையைச் சுத்தம் செய்வது அவசியமாக இருக்கும்? அது சலவைச் செய்யப்பட முடியுமா? இவை, விலைக்கொடுத்து பொருளை வாங்குவதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய சில காரியங்களாகும்.
லைஷோன்டிரா என்ற பெயருள்ள ஒரு பெண், தன்னுடைய பெற்றோரிடமிருந்து, கடைக்குச் சென்று வாங்கும்போது பயன்படுத்தக்கூடிய ஒரு திறமையை கற்றுக்கொண்டிருக்கிறாள். அவள் சொல்கிறாள்: “நான் பொதுவாக என் அம்மாவுடன் கடைக்குச் செல்கிறேன். என்னுடைய பணத்தை முழு அளவில் பயன்படுத்தும் பொருட்டு, குறைந்த விலை விற்பனைக்காகப் பார்த்துக் கொண்டிருக்கும்படி என் அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாள்.” பேர வியாபாரம் அதிகமாக இருக்கும் சமயத்தில், விசேஷமாக விற்பனைக் காலம் முடிவு வரையாக வாங்குவதை தாமதப்படுத்துவது மற்றொரு உத்தியாக இருக்கிறது. பேரம்பேசி வாங்குவதில் ஏற்கெனவே அனுபவமுள்ளவளாக இருக்கும் ஃபிலிஸ் என்ற ஓர் இளம் பெண் மேலுமாகச் சொன்னது: “வழக்கமான விலையில் எந்தப் பொருளையும் வாங்கிய ஞாபகம் எனக்கு இல்லை. பேர வியாபாரத்துக்காக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் சிக்கன விலை கடைகளை விரும்புகிறேன். என் உடைகள் புதியவை என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்!”
வீட்டுச் செலவுகளுக்கு உதவுதல்
பள்ளி முடிந்தப் பின் செய்கிற அல்லது பகுதிநேர வேலை உனக்கிருக்கிறதா? அப்படியானால் உனக்கு வேண்டியதைக் கொடுப்பது உன் பெற்றோரின் கடமை என்பதாக நினைத்து, உன் எல்லாப் பணத்தையும் உனக்காகவே நீ செலவழித்துக் கொண்டிருக்கிறாயா? ஆனால் உண்மையில் உன் பெற்றோர், எப்பொழுது கடைசியாக தங்களுக்காக மாத்திரமே பணத்தைச் செலவழித்தார்கள்? அவர்களுடைய பணத்தில் பெரும்பகுதி குடும்பத்துக்காகச் செலவிடப்படுகிறதல்லவா? அப்படியென்றால் நீ வீட்டுச் செலவுகளுக்காக உதவி செய்வது நியாயமாக இருக்குமல்லவா?
“நான் செய்கிறேன்” என்பதாக அந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது இளம் பெண் ஸ்டப்ஃபானி பதிலளித்தாள். அவளும் இன்னும் மற்ற மூன்று குடும்ப அங்கத்தினர்களும் யெகோவாவின் சாட்சிகளாக, முழுநேர ஊழியத்தைச் செய்து வருகிறார்கள். “அது அவசியம்” என்பதாக ஸ்டப்ஃபானி சொல்கிறாள். “மேலுமாக அது ஒரு பயிற்றுவிப்பாகவும்கூட அமைகிறது. ஏனென்றால், செலவுகளுக்கு உதவி செய்யாமல் ஒரு நபர் வாழக்கூடிய இடம் எங்குமே இல்லை.” ஆல்பர்ட் என்ற பெயர் கொண்ட ஓர் இளைஞன் மேலுமாகச் சொல்வது: “அது என்னுடைய உத்தரவாதத்தின் ஒரு பாகமாகவே இருக்கிறது. நான் வீட்டில் வசித்துக் கொண்டில்லை என்றால், நான் எப்படியும் செலவு செய்தே ஆக வேண்டும். ஆகவே நான் தாராளமாகக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.”
உண்மைதான், உன்னுடைய பெற்றோர் உன்னிடமிருந்து எதையுமே எதிர்பார்க்காமலிருக்கலாம். ஆனால் டாமி என்ற பெயர் கொண்ட ஓர் இளைஞன் பின்வருமாறு சொன்னபோது, நல்ல ஒரு குறிப்பைக் கொடுத்தான்: “இது நியாயமென்றே நான் நினைக்கிறேன். அவர்கள் என்னை இந்த உலகினுள் கொண்டு வந்திருக்கிறார்கள், இந்நாள் வரையாக அவர்கள் என்னைக் கவனித்து வந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு கைமாறாக, நான் எதையாவது செய்ய வேண்டும்.”
தயாள குணத்தின் ஆசீர்வாதங்கள்
“உதார குணமுள்ள மனிதன் செழிக்கிறான், எவன் மற்றவர்களை இளைப்பாற்றுகிறானோ அவனுக்கு இளைப்பாற்றப்படும்” என்பதாக பைபிள் நீதிமொழிகள் 11:25-ல் சொல்கிறது. (புதிய ஆங்கில பைபிள்) நீ சம்பாதிக்கும்போது, உனக்காக நீ வாங்கிக்கொள்ளக்கூடிய எல்லாப் பொருட்களையும் பற்றி சிந்தித்துப் பார்ப்பது சோதனையாக இருக்கக்கூடும். என்றபோதிலும் இயேசு நமக்கு நினைப்பூட்டுவதாவது “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே மகிழ்ச்சி.”—அப்போஸ்தலர் 20:35, NW.
இந்த விஷயத்தில் சமநிலை அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தயாள குணம் என்பது ஒருவருக்குப் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்குச் செலவழிப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. “பரிசுகளுக்காக நான் அதிகமான பணத்தைச் செலவழிக்கிறேன். என்னுடைய பணம் விரைவில் போய்விடுகிறது” என்று ஓர் இளைஞன் வருத்தமாகச் சொன்னான். “என்னுடைய பணத்தில் எண்பத்தைந்து சதவிகிதம் இப்படித்தான் கறைந்துவிடுகிறது என்று நான் நினைக்கிறேன்.” ஆனால் நல்லெண்ணங் கொண்ட தயவானச் செயல்களைக் கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே. ஆம் நீதிமொழிகள் 19:17 சொல்வதாவது: “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் [யெகோவாவுக்கு, NW] கடன் கொடுக்கிறான், அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.”
நீதிமொழிகள் 3:9, 10, நீங்கள் உதார குணத்தைக் காண்பிக்கக்கூடிய மற்றொருப் பகுதியைச் சுட்டிக் காண்பிக்கிறது: “உன் பொருளாலும் உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் [யெகோவாவை, NW] கனம் பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.” பைபிள் காலங்களில், இஸ்ரவேலில் யெகோவாவின் வணக்கத்தார் அவர்களுடைய வேளாண்மை முயற்சியின் முதல் கனிகளைத் தாமாகவே மனமுவந்து நன்கொடையாக அளிக்க வேண்டியவர்களாக இருந்தனர். இது எருசலேமில் ஆலயத்தில் சேவை செய்துவந்த லேவி கோத்திர ஆசாரியர்களுக்கு ஆதரவளிக்க உதவியது. யெகோவாவின் சாட்சிகள் சொல்லர்த்தமான ஓர் ஆலயத்தில் இன்று வணங்காதபோதிலும் அவர்களுடைய வணக்கத்துக்குரிய இடங்களை (ராஜ்ய மன்றங்கள் என்றழைக்கப்படுகின்றன) பராமரிக்க நிதியுதவி தேவை என்பதை அவர்கள் உணருகிறார்கள். ஆல்பர்ட் என்ற பெயர்கொண்ட 18 வயது இளைஞன் சொல்கிறான்: “ஒவ்வொரு சமயமும் நான் மன்றத்துக்குச் செல்கையில் ஏதாவது நன்கொடையளிப்பதை ஒரு குறிக்கோளாகக் கொண்டேன்.”
பொறாமையின் கண்ணி
எல்லா இளைஞர்களுக்குமே பணம் சம்பாதிக்கவும், இங்கே கொடுக்கப்பட்டபடி செலவழிக்க வாய்ப்புகளும் இல்லை என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. மற்றவர்களிடம் இருப்பது உன்னிடம் இல்லை என்றால், பொறாமைக்கொள்வது சுலபமாக இருக்கிறது. உதாரணமாக, இளைஞன் டார்நெல் இப்படியாக ஒப்புக்கொள்கிறான்: “மற்றவர்கள் வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்து, ‘ஆ, அது நன்றாக இருக்கிறது’ என்பதாகச் சொல்லும் பழக்கம் எனக்கு உண்டு.” ஆனால் அந்த விஷயத்தின் பேரிலேயே எண்ணத்தை நிலைத்திருக்கச் செய்வதற்குப் பதிலாக அந்த உணர்ச்சிகளை மட்டுப்படுத்த அவன் முயற்சி செய்கிறான்.
இல்லை, நேர்த்தியான பொருட்களைக் கொண்டிருக்க விரும்புவது பாவமில்லை. ஆனால் உனக்கு விருப்பமான ஏதோ ஒன்றை வாங்க உனக்கு இயலாததால் மகிழ்ச்சியற்றவனாக ஆக உன்னை நீ அனுமதிக்கிறாயா? உன்னைவிட அதிகம் வைத்திருக்க நேரிடுகிறவர்களிடமாக பகைமை எண்ணத்தையும்கூட வளர்த்துக்கொள்கிறாயா? அப்படியானால் லூக்கா 12:15-லுள்ள இயேசு கிறிஸ்துவின் புத்திமதியை நினைவுக்குக் கொண்டுவா: “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.”
உண்மையில் உன்னைவிட அதிகத்தை வைத்திருப்பவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். மற்றவர்களைப் போலிருக்க முற்படுவது கடுந்துயரத்துக்கும் அநேக வேதனைகளுக்கும் மாத்திரமே வழிநடத்தக்கூடும். அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறான்: “உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”—1 தீமோத்தேயு 6:7, 8.
பணம், அது சரியாக நோக்கப்படுமேயானால், பயனுள்ள ஒரு வேலையாளாக இருக்கக்கூடும். சேமிக்க கற்றுக்கொள். புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் அதைச் செலவழிக்கக் கற்றுக்கொள். பணம் வாழ்க்கைக்கு நிச்சயமாகவே உதவியாயிருந்து அதை அதிக வசதியுள்ளதாகச் செய்யக்கூடும். ஆனால் மேத்யூ என்ற பெயருள்ள இளைஞன் சொல்கிறபடியே: “பணத்துக்கு அதற்குரிய இடமிருக்கிறது. ஆனால் அதுவே எல்லாமாகவும் இல்லை. அது முக்கிய காரியமல்ல. நமக்கு வாழ்க்கைக்குப் பணம் தேவை. ஆனால் அதை, நம்முடைய குடும்பத்துக்கோ அல்லது யெகோவாவுக்கோ முன்பாக ஒருபோதும் வைக்கக்கூடது.” (g89 1/22)
[அடிக்குறிப்புகள்]
a 1990 ஜனவரி 8, தேதியிட்ட விழித்தெழு! பணத்தை திட்டமிட்டு சேமிப்பது குறித்து கலந்தாராய்ந்தது.
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
ஐக்கிய மாகாணங்களிலுள்ள இளைஞர்கள் ஓர் ஆண்டில் சுமார் 66,300 கோடி ரூபாய் செலவழிக்கிறார்கள்!
[பக்கம் 15-ன் படம்]
உனக்கு ஒரு வேலையிருக்குமானால், வீட்டுச் செலவுகளை மனமுவந்து பகிர்ந்துகொள்கிறாயா?