இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் எப்படி இனவேற்றுமை சார்ந்த தப்பெண்ணத்தை எதிர்த்து சமாளிக்கலாம்?
அருங்காட்சியகம் அவர்களுடைய வீட்டிலிருந்து ஒரு சில மைல்கள் தூரமே இருந்தது. 11-வயது பையன்கள் இருவரிடமும் நுழைவுக் கட்டணத்துக்குப் போதுமான பணம் மாத்திரமே இருந்ததன் காரணமாக அவர்கள் நடந்து செல்ல தீர்மானித்திருந்தார்கள்.
அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்துக்குச் செல்ல, கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நகரில் வேலியாக அமைந்த ஒரு விசாலமானத் தெருவைக் கடந்து செல்ல வேண்டும். எந்த அசம்பாவமுமின்றி துணிச்சலோடு, பிரித்து வைத்த அந்த வேலியை அவர்கள் கடந்து சென்றபோது, அவர்கள் தளர்வு நிலையிலும் கோடைகால வெப்பத்தை அனுபவித்துக்கொண்டும் நடக்க ஆரம்பித்தார்கள். ஆனால் எங்கிருந்தோ வெள்ளை இளைஞர்கள் ஒரு கூட்டமாக அங்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். கம்புகளைச் சுழற்றிக் கொண்டு அவர்கள் இனத்தைப் பழிக்கும் அவதூறான வார்த்தைகளைப் பேசி “அவர்களைப் பிடி! அவர்களைப் பிடி!” என்பதாக கூச்சல்போட்டுக் கொண்டு கலக கும்பல் அவர்களைத் துரத்தியது.
இன வேற்றுமை சார்ந்த தப்பெண்ணம். செய்தி அறிக்கைகள் இதை உலகம் முழுவதிலுமிருக்கும் பிரச்னையாக காண்பிக்கிறது. இதன் காரணமாக வீடு, வேலை, மருத்துவ சிகிச்சை இவற்றில் பேதம் காண்பிப்பது, பொதுவான புகார்களாக இருக்கின்றன.
அப்படியென்றால் முந்தியோ அல்லது பிந்தியோ, இனவேற்றுமைச் சார்ந்த தப்பெண்ணத்தை நேருக்கு நேர் நீ எதிர்ப்பட வேண்டியிருக்கலாம். உதாரணமாக, சில இளைஞர்கள் பள்ளியில் தப்பெண்ணத்தின் பலியாட்களாக—முடிவில்லாத இனவேற்றுமைச் சார்ந்த அவதூறுகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியர்கள், கீழோரிடத்தில் கருணைக்காட்டுகிறவிதமாக இவர்களிடம் நடந்து கொள்கிறார்கள். “என்னுடைய ஆசிரியர் வகுப்பில் என்னை பரிகாசம் செய்வார்” என்று ஒரு யூத இளைஞன் சொல்கிறான். “அவர் பழைய தப்பெண்ணங்களையும் நம்பிக்கைகளையும் பற்றி பேசுவார். மேலும் அவர் என்னை வகுப்பில் முழுவதுமாக அசட்டைச் செய்துவிடுவார்.” பாமலா என்ற பெயர் கொண்ட பருவ வயது பெண் சொல்கிறாள்: “எங்கள் பள்ளியில் தப்பெண்ணம் கொள்ளைநோயாக இருக்கிறது, ஏனென்றால் ஒவ்வொரு சமயமும் எங்களுக்கு அசெம்பிளி நிகழ்ச்சி இருக்கையில் கறுப்பர்கள் ஒரு பக்கத்திலும் வெள்ளையர்கள் மன்றத்தின் அடுத்தப் பக்கத்திலுமாக உட்காருவார்கள்.”
இனக் கலப்பு விவாகத்தில் பிறந்த ட்ரீனா என்ற பதினைந்து வயதுப் பெண், அடிக்கடி தப்பெண்ணத்திற்கிடையில் உண்மையில் பிழிந்தெடுக்கப்படுவதாக உணருகிறாள். அவள் சொல்கிறாள்: “நான் கறுப்பர்களோடு கூட்டுறவு வைத்துக் கொண்டால், வெள்ளை மாணவர்கள் நான் அவர்களோடு இருக்க விரும்பவில்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள். என்றபோதிலும், நான் வெள்ளை மாணவர்களோடு கூட்டுறவு வைத்துக் கொண்டால் கறுப்பர்கள் நான் அவர்களைவிட மேலானவள் என்பதாய் நினைப்பதாக எண்ணுகிறார்கள்.”
தப்பெண்ணத்தின் பலியாட்கள் எவ்வாறு உணருகிறார்கள்
ஒருவேளை உனக்கும் ஒரு வேலைகிட்டாமல் போனதை, நீ படிக்க விரும்பிய பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட மறுக்கப்பட்டதை, ஒரு கடை அல்லது சிற்றுண்டிச் சாலையில் அவமரியாதையாக நடத்தப்பட்டதை அல்லது ஒத்த வயதினரால் துன்புறுத்தப்பட்டதை அனுபவித்திருக்கலாம். அப்படியென்றால் தப்பெண்ணம் புண்படுத்துகிறது என்பது உனக்குத் தெரியும். 17 வயது லூஸி சொல்கிறாள்: “தப்பெண்ணம் உண்மையில் எனக்கு எரிச்சலூட்டுகிறது.” ஸ்பனிய நாட்டுப் பின்னணியைச் சேர்ந்தவளாக இருப்பதால், தப்பெண்ணம் எத்தனை ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறாள். “நான் என் வேலையைச் செய்து பள்ளியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றாலும்கூட, நான் ஒருபோதும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதில்லை. வெள்ளையர் இனத்தைச்சேர்ந்த ஒரு நபர் நன்றாகச் செய்தால் என் ஆசிரியர் அவரைப் புகழ்ந்து பேசுகிறார். ஆனால் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், நீங்கள் வெள்ளை இனத்தைச்சேர்ந்தவராக இல்லையென்றால், அது போதுமானது இல்லை.”
மற்ற இளைஞர்கள் அறவே விலகியிருப்பதன் மூலம் தப்பெண்ணத்துக்குப் பிரதிபலிக்கிறார்கள். கறுப்பு இனத்தைச் சேர்ந்த பருவ வயதுப் பெண் சொல்கிறாள்: “என்னுடைய பள்ளியில் பெரும்பாலானவர்கள் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள், நான் நன்றாகவே அவர்களை அனுசரித்து நடந்து கொள்கிறேன். என்னை அவர்கள் பெயர்கள் வைத்து அழைக்கிறார்கள். ஆனால் நான் உண்மையில் அதைப் பொருட்படுத்துவதில்லை, ஏனென்றால் அது இப்பொழுது எனக்குப் பழகிப்போய்விட்டது.”
என்றபோதிலும் சிலர் மற்றவர்களுடைய புண்படுத்தும் சொற்களும் இரக்க பாவனையான உணர்ச்சிகளும் தங்களுடைய தன்மதிப்பை அழித்துவிட அனுமதிக்கிறார்கள். ஓர் இளம் மனிதன் சொல்வதாவது: “என்னுடைய அம்மாவும் அப்பாவும் இரண்டு வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். நான் வளர்ந்துவருகையில், இரண்டு பக்கங்களிலும் தாழ்வாக நோக்கப்பட்டேன். இதன் விளைவாக நான் அதிகமாக மனதிலும் உணர்ச்சிகளிலும் சேதத்தை அனுபவித்தேன். என்னுடைய நிறத்தைக் குறித்து நான் வெட்கப்பட்ட சமயங்கள் எனக்கு நினைவிருக்கிறது.”
தப்பெண்ணத்தைச் சமாளித்தல்
இனவேற்றுமைச் சார்ந்த தப்பெண்ணம், கோபவேச உணர்ச்சிகளை ஏற்படுத்தவும், பழிவாங்க, பதிலுக்குப் பதில் செய்ய, கலகத்தில் கிளர்ந்தெழவும் செய்யக்கூடும் என்பது புரிந்து கொள்ளப்படத்தக்கதே! “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்” என்கிறது பிரசங்கி 7:7. ஆனால் கோபவேசமான, புரட்சிகரமான இயக்கங்கள் அநீதிகளுக்குக் கவனத்தை ஒருவேளை இழுப்பதாக இருந்து—சிலருடைய விஷயங்களில் ஓரளவு நிவாரணத்தைக் கொண்டுவந்தாலும்கூட—இப்படிப்பட்ட இயக்கங்களின் பலன்கள் மிகச் சாதகமாக இருந்தாலும் தற்காலிகமானதே என்பதை சரித்திரம் காண்பிக்கிறது. தவிர, “பகை விரோதங்களை எழுப்பும்.” (நீதிமொழிகள் 10:12) ஆகவே பகையைப் பகையால் எதிர்ப்பது மோசமான நிலைமையை நிச்சயமாகவே படுமோசமாக்கிவிடுகிறது!
பைபிள் சொல்கிறது: “கோணலானதை நேராக்கக்கூடது.” (பிரசங்கி 1:15) மனித ஆட்சி நம்பமுடியாத அளவுக்கு கோணிவிட்டிருக்கிறது. (எரேமியா 10:23) விதிவிலக்கற்ற எந்த அரசியல் சீர்திருத்தமும்கூட, தப்பெண்ணத்தின் அடிப்படைக் காரணங்களைத் துடைத்தழித்துவிட முடியாது: சுயநலம், பேராசை, சுயபுகழ்ச்சிக்கான ஆசை. (யாக்கோபு 3:13–16; 4:1–3 ஒப்பிடவும்.) ஒரு நீதிமொழி சொல்வது போல: “மூடனை உரலில்போட்டு உலக்கையினால் . . . குத்தினாலும் அவனுடைய மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது.” (நீதிமொழிகள் 27:22) நிலைநாட்டப்பட்ட அமைப்புக்கு எதிராக கலகஞ் செய்வது எதையும் மாற்றுகிறதில்லை.
அப்படியென்றால் தப்பெண்ணத்தை எதிர்ப்படுகையில் ஓர் இளைஞன் எவ்விதமாக பிரதிபலிக்க வேண்டும்? இதோ இங்கே சில யோசனைகள்:
அளவுக்கு அதிகமான எதிர்தாக்குதலை தவிர்த்திடு. கடந்த கால அனுபவங்களால், எளிதில் புண்படுத்தப்பட்டு, தப்பெண்ணத் தாக்குதலாக அமையும் எதையும் எதிர்த்து தாக்கும் மனச்சாய்வு இயல்பாக ஏற்படலாம். என்றபோதிலும் பைபிள் எச்சரிக்கிறது: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங் கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.” (பிரசங்கி 7:9) ஆகவே மற்றவர்களுக்கு ஐயநிலையின் சாதகத்தை அளித்திடு. இனவேற்றுமைப் பற்றிய விஷயமே உண்மையில் பிரச்னையாக இல்லாமலிருக்கலாம்.
தப்பெண்ணத்தின் இயல்பைப் புரிந்துகொள். நீதிமொழிகள் 19:11 சொல்கிறது: “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்.” இனவெறி சிலரில் குழந்தைப் பருவம் முதற்கொண்டே ஊட்டிவளர்க்கப்பட்டிருப்பதை புரிந்துகொள்ள முயற்சி செய். (ஜுலை 8, 1989 விழித்தெழு! பத்திரிகையில் தோன்றிய “இனவேற்றுமை உணர்வுகள் சார்ந்த தப்பெண்ணங்களை நான் எவ்விதம் மேற்கொள்ளலாம்?” கட்டுரையைப் பார்க்கவும்.) புரிந்து கொள்கின்ற, வயது வந்த ஒருவரிடம், ஒருவேளை உன் பெற்றோரிடம் காரியங்களைக் கலந்து பேசுவதும்கூட உதவியாக இருக்கும்.
“உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது,” மனிதவர்க்கத்தினிடையே பிரிவினைகளை உண்டுபண்ணுவதற்காக சாத்தான் “அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கி”யிருக்கிறான் என்பதையும்கூட நினைவில் கொள். (1 யோவான் 5:19; 2 கொரிந்தியர் 4:4) மனிதர்களுடைய மனங்கள் அடிமையாயிருப்பதை உணர்ந்தவர்களாய், வெகுவாக அறியாமையில் செயல்படுகிறவர்களுக்காக நாம் இரக்கமும்கூட காண்பிக்க வேண்டும்.
“தீமைக்குத் தீமை” செய்யாதே. இனவேற்றுமைச் சார்ந்த அவதூறான சொற்களுக்குப் பலியாயிருப்பது அல்லது இனவேற்றுமை சார்ந்த நாகரீகமற்ற “நகைச்சுவை” பேச்சுக்கு உட்படுத்தப்படுவது தீவிர உணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடும். தாரா என்ற பெயர் கொண்ட 16 வயது பெண் நினைவுபடுத்திச் சொல்கிறாள்: “வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்களாக இருந்த பள்ளிக்கு நான் சென்றேன். பிள்ளைகள் ஒருவரோடொருவர் தாழ்வான குரலில்—ஆனால் என் காதில் விழும்படியானக் குரலில்—எல்லாவிதமான இனவேற்றுமைச் சார்ந்த அவதூறுகளையும் சொல்வார்கள்.” வசை மொழியால் திருப்பித் தாக்க வெகுவாக தூண்டப்படலாம். ஆனால் இதை நினைவில் வை: புண்படுத்துகின்ற பேச்சைப் பேசுகிறவர்கள், நீ கோபங்கொண்டு பதில் செய்ய வேண்டுமென்றே விரும்புகிறார்கள். இது உன்னை சரீரப்பிரகாரமாகத் தாக்கவும் மேலுமாக வாய்ச்சொல்லால் உன்னைத் திட்டுவதற்கும் ஒரு காரணத்தை அளிப்பதாக இருக்கும். நீதிமொழிகள் 14:17 சரியாகவே சொல்வதாவது: “முற்கோபி மதிகேட்டைச் செய்வான்.”
ஆகவே ஆவியில் அமைதலாயிருக்க முயற்சி செய். பூர்வ ஞானவானான ஆலோசகனின் வார்த்தைகளை நினைவில் வை: “சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே.” (பிரசங்கி 7:21) “நான் உண்மையில் அவர்கள் சொல்வதை கவனித்திருந்தால், அவர்கள் என்னை பைத்தியமாக்கியிருப்பார்கள். ஆனால் அது என்னை அணுக நான் விடவில்லை” என்று தாரா நினைவுக்கு கொண்டுவருகிறாள். “தீமைக்குத் தீமை” செய்வதற்கான தூண்டுதல் அத்தனை திகைக்க வைப்பதாக இருக்கிறது. (ரோமர் 12:17) “மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலவாய்” என்பதாக பைபிள் ஆலோசனை சொல்கிறது. (நீதிமொழிகள் 26:4) அவதூறான பேச்சை அசட்டைச் செய்வதன் மூலம் ‘மறுகன்னத்தைத் திருப்பிக் கொடுப்பது’ கோழத்தனமானதன்று, ஆனால் முடிவில் செய்வதற்கு அதுவே மிகவும் நடைமுறை பயனுள்ள காரியமாகும். (மத்தேயு 5:39) காலப்போக்கில், உன்னைத் துன்புறுத்துகிறவர்கள் தங்களுடைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டில் சோர்வடைந்துவிடக்கூடும். மேலும் “விறகில்லாமல் நெருப்பு அவியும்.”—நீதிமொழிகள் 26:20.
எப்பொழுது பேச வேண்டும் என்பதை அறிந்திரு. எல்லா அநீதங்களுமே அமைதியாக சகித்துக் கொள்ளப்பட வேண்டியவை அல்ல. “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:7) உன்னை நீயே பாதுகாத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது ஞானமான காரியமாக இருக்கலாம். தாரா தான் அனுபவித்த அவதூறான பேச்சைத் தன் பெற்றோருக்குத் தெரிவித்திருந்தாள். காலப்போக்கில் அவள் வேறொரு பள்ளிக்குச் செல்ல முடிந்தது. உன்னிடம் இனவேற்றுமைச் சார்ந்த அருவருப்பான கேலிப் பேச்சு பேசி உன்னை எப்போதும் வெறுப்பேற்றும் மற்றொரு நிலைமை ஏற்படக்கூடும். ஒருவேளை அந்த நபர் இப்படிப்பட்ட பேச்சு எத்தனை அருவருப்பானது என்பதை உண்மையில் மதித்துணராமலிருக்கலாம். தயவாகவும் அமைதியாகவும் புண்படுத்தியவனிடம் மனந்திறந்து பேசுதல் அவனை சரிசெய்துவிடக்கூடும்.
உன் சுய-மதிப்பை இழந்துவிடாதே. மற்றவர்கள் உன்னைத் தாழ்வாக மதிப்பிட்டுவைத்திருப்பார்களேயானால், கடவுள் ‘உன் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணி’வைத்திருக்கிறார் என்பதையும் அவருடையப் பார்வையில் நீ பெருமதிப்புள்ளவனாயிருப்பதையும் ஒருபோதும் மறந்துவிடாதே. (மத்தேயு 10:30) கடவுளற்ற இளைஞர்களின் அபிப்பிராயங்களின் மேல் அல்ல, ஆனால் கடவுளோடுக் கொண்டிருக்கும் உறுதியான நட்பின் மீது உன் சுய-மதிப்பை வளர்த்துக் கொள். (1 கொரிந்தியர் 1:31 ஒப்பிடவும்.) ஒத்தவயதினரின் பரிகாசத்துக்குக் காரணமாயிருக்கும் இனவேற்றுமைச் சார்ந்த உன் தோற்றம் “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப் பண்ணின” கடவுளின் மாபெரும் படைப்பாற்றலின் வெளிகாட்டாகவே இருக்கிறது.—அப்போஸ்தலர் 17:26.
நிச்சயமாகவே யெகோவா தேவன் மாத்திரமே நிற வேற்றுமைப் பாராத சமுதாயத்தைக் கொண்டுவரமுடியும். இதை அவர் விரைவில், தம்முடையப் பரலோக அரசாங்கத்தின் மூலமாகக் கொண்டுவருவார். (தானியேல் 2:44) இதற்கிடையில், பைபிள் நியமங்களை முடிந்த அளவு பின்பற்றி, நிலைமையை சமாளிக்க முயற்சி செய். இனவேற்றுமைச் சார்ந்த தப்பெண்ணங்களை தங்களிடமிருந்து ஒழித்துக் கட்டுவதற்காகக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் ஆட்களோடு நீ இருக்கக்கூடிய யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் கூட்டுறவை அனுபவித்துக் களி. வாழ்க்கை இன்னல் நிறைந்ததாகும் போது உதவிக்காக உன் பரலோகத் தகப்பனிடம் மன்றாடத் தயங்காதே. இளம் லூஸி சொல்கிறாள்: “தப்பெண்ணத்தைச் சமாளிக்க நான் ஜெபிக்கவும் கடினமாக ஜெபிக்கவும் வேண்டும். ஆனால் அதைச் சகித்துக் கொள்ள வேண்டியதாயிருக்கையில், நான் என் ஜெபத்தைச் சொல்கிறேன், அப்பொழுது யெகோவா என்னோடேகூட இருக்கிறார் என்பதை அறிவேன்.” (g89 2/8)
[பக்கம் 25-ன் படம்]
இனவேற்றுமைச் சார்ந்த தப்பெண்ணத்தின் காரணமாக பள்ளியில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக சில இளைஞர்கள் உணருகிறார்கள்