உலகத்தைக் கவனித்தல்
கடுமையான உணவு பற்றாகுறை
1988-ம் ஆண்டு, சீனா முழுவதும் ஏற்பட்ட வெள்ளமும் வறட்சியும் தேசத்தின் 2 கோடி மக்கள் கடுமையான உணவு பற்றாகுறையை எதிர்ப்பட வழிநடத்தியது என்று பீஜிங்கின் சைனா டெய்லி அறிக்கை செய்கிறது. குடிமுறை ஆட்சித்துறையின் ஓர் அதிகாரியின்படி, அசாதாரணமாக ஏற்பட்ட கடுமையான இயற்கைச் சீற்றத்தின் சேதங்கள் பேரளவில் உணவு தானியங்களைப் பாதித்ததால் கிராமப்புறங்களில் கூடுதலாக 8 கோடி மக்களை இது பாதித்திருக்கிறது. கடந்த ஒன்பது மாத கால வறட்சியாலும், கடுமையான பனியாலும் யாங்சே நதியில் வெள்ளம் ஏற்பட்டதாலும் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட ஏறக்குறைய 11.4 கோடி ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
வேலை இல்லாததால் அழுத்தம்
சலிப்படைவதாலும் வேலை இல்லாததாலும் ஏற்படும் அழுத்தம் நோய், திறமையின்மை, மற்றும் தனிப்பட்ட பிரச்னைகளுக்கு வழிநடத்துகிறது என்று BUPA என்ற பிரிட்டிஷ் தனியார் உடல்நல இன்ஷுரன்ஸ் குழு உறுதியாக சொல்கிறது. அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் பணியாளர்கள் வேலையை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதில்லை, அதே சமயத்தில், குறைந்த வேலையுடைய பணியாளர்கள் அதிகமான வேலையைக் கோருவதுமில்லை என்று அக்குழு தெரிவிக்கிறது. வியாதியும் வேலைக்குச் செல்லாதிருப்பதும் ஓர் ஆண்டுக்கு 36 கோடி வேலை நாட்கள் இழக்கப்படுவதில் விளைவடைந்திருக்கிறது என்று லண்டனின் தி டைம்ஸ் குறிப்பிடுகிறது. சில கம்பெனிகள் நோயாளிகளுக்காக 7 முதல் 10 சதவீதம் வரை செலவு செய்கிறவர்களாய் இருக்கக்கூடும்.
சிலந்தி பட்டு
சிலந்தியின் வலையை ஈக்கள் அதிவேகமாக மோதும்போது, அந்த வலை எவ்விதம் முறியாமல் விரிந்துகொடுக்கிறது என்பது குறித்து நீங்கள் வியந்ததுண்டா? குறைந்த எடையும் விரிந்துகொடுக்கும் ஆற்றலும் கொண்ட பொருட்களுக்காகத் தேடும் பொறியாளர்கள் வெகு காலமாக சிலந்தியின் வலை கண்டு பொறாமைப்பட்டிருக்கின்றனர். என்றபோதிலும் இப்பொழுது, பிரிட்டிஷ் உயிர் சார்ந்த தொழில்நுட்ப ஆய்வாளர்கள், சிலந்தி வலையின் அசாதாரணமான தன்மைகளுக்குக் காரணமாயிருக்கும் பிறப்புக்கூற்றை தனித்திடும் ஒரு முறையை திட்டமிட்டிருக்கின்றனர். இந்தச் செயற் குறிப்புகளை ஒரு விசேஷமான பாக்டீரியாவில் ஊசி மூலம் ஏற்றுவதன் மூலம், தாங்கள் பட்டு உற்படுத்தி செய்திட முடியும் என்று இவர்கள் உரிமைப்பாராட்டுவதாக தி டைம்ஸ் கூறுகிறது. இந்தப் பொருட்கள் காவல்துறையினருக்கும், இராணுவத்தினருக்கும் மற்ற வியாபார உபயோகத்திற்கும் குண்டு துளைக்காத சட்டைகளைத் தயாரிக்க பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று உரிமைப்பாராட்டுகின்றனர்.
சிறுவர் வீரர்கள்
“உலகிலுள்ள மொத்த சேனை 2,00,000 இளைஞரை உட்படுத்துகிறது, அவர்களில் சிலர் 12 வயதிலும் இருக்கிறார்கள்,” என்று தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் ஐ.நா.வின் மனித உரிமைகள் பிரிவின் ஒரு துணை கமிஷனின் அறிக்கையில் இருக்கிறது. இந்த இளைஞரில் சிலர் அவர்களுடைய நாட்டு அரசாங்கத்தால் வற்புறுத்தப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள், இன்னும் மற்றவர்கள் வேலை, உணவு கிடைப்பதற்காகவும், பிள்ளை போரில் மரித்தால் குடும்பத்துக்குப் பணம் கிடைக்கும் என்ற காரணத்தால் தங்களுடைய பெற்றோரால் துரிதப்படுத்தப்பட்டுமிருக்கின்றனர். இப்படியாக, இராணுவத்தில் சேர்வதற்குக் குறைந்தபட்சம் 15 வயது இருக்க வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை அநேக நாடுகள் மீறியிருக்கின்றன.
அணுஆயுத போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு கூடுகின்றனவா?
அதிகமதிகமான தேசங்கள் அணுஆயுதங்களைப் பெருக்குவதால், தங்கள் பிரதேசங்களில் ஏற்படும் போர்களில் அவை பயன்படுத்தப்படும் சாத்தியம் அதிகரிக்கிறது. “பெரிய வல்லரசுகள் [ஐ.மா., சோவியத் ரஷ்யா, ஃபிரான்ஸ், பிரிட்டன், சீனா] அணு ஆயுதங்களைத் தாங்கள் மட்டும் உற்பத்திசெய்வதாயிருந்தது முடிவுக்கு வருகிறது,” என்று நியுஸ் விக் அறிக்கை செய்கிறது. “வேறு நான்கு தேசங்களும் [இந்தியா, இஸ்ரேல், பாக்கிஸ்தான், தென் ஆப்பிரிக்கா] அணு ஆயுத வெடிப்பு முனைப்பகுதிகளையும் அவற்றைச் செலுத்துவதற்கான ஏதுக்களையும் உற்பத்தி செய்திருப்பதாக அறிக்கை செய்துள்ளன. மற்ற தேசங்களும் வெகு பின்னாக இல்லை.” ஓர் அரசாங்க அதிகாரி கூறினார்: “அநேக நாடுகள் அணு ஆயுதங்களை இந்தளவுக்குத் தெரிந்துகொள்ளுவது வேறு எந்தச் சமயத்திலும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.” இன்னொருவர் சொன்னார்: “சிறிய அல்லது தொழில்துறையில் குறைந்த முன்னேற்றமடைந்த நாடுகள் என்ன செய்கிறதோ அதுதானே . . . அணு ஆயுத போரின் ஆபத்தை அதிகரிக்கச் செய்கிறது.”
பேரளவான காடுகள்
“உலகத்திலேயே பேரளவான காடுகள் இருக்கும் நாடு எது?” என்று ஏஷியாவீக் கேட்கிறது. “கானடா? நார்வே? பிரேஸில்? இல்லை, அது ஜப்பான் நாடாகும்.” “மொத்த நிலப்பரப்புடன் ஒப்பிடும் போது அதன் வீதத்தொடர்வுக்கு அண்மையில் வேறு எந்தப் பெரிய அல்லது நடுத்தர நாடும் வரவில்லை.” ஜப்பானின் 67 சதவீதம்—1,45,841 சதுர மைல்—காடுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது, பெரும்பாலும் மலைச்சரிவுகளில் வளர்க்கப்படும் பசுமையான மரங்களால் நிரம்பியிருக்கிறது. 3.89 கோடி மக்கள் 2.5 சதவீத நிலபரப்பைதான் குடியிருப்பதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள், தொழிற்சாலைகளும் அவற்றிற்கான இடங்களும் 0.4 சதவீதம் மட்டுமே.
ஜெர்மனியின் தற்கொலைகள்
ஜெர்மனிக் குடியரசில் தற்கொலைகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருக்கிறது. இதற்குப் பிரதான காரணங்கள் குடிவெறி, போத மருந்துகள், மற்றும் வேலையில்லா திண்டாட்டம் என்று ரீகன்ஸ்பர்கில் நடைபெற்ற தன்னுடைய வருடாந்தர கூட்டத்தில் தற்கொலைத் தடுப்பு ஜெர்மன் சங்கத்தால் குறிப்பிடப்பட்டது. என்றபோதிலும், தற்கொலையினிடமாக இருக்கும் ஒரு மனச்சாய்வு சுதந்தரிப்புத் தன்மை கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாய் ஷ்வீன்ஃபர்ட்டர் டாக்பிளாட் என்ற ஜெர்மன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இந்நாடு ஒவ்வொரு ஆண்டும் 13,000 தற்கொலைகளையும் ஐந்து இலட்சம் தற்கொலை முயற்சிகளையும் கொண்டிருந்ததாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
பிள்ளைகள் மிக அதிகமாகப் பயப்படும் காரியங்கள்
தங்களுடைய பெற்றோர் மரிப்பதற்குத்தானே பிள்ளைகள் மிக அதிகமாகப் பயப்படுகின்றனர் என்றாலும், அவர்களுடைய இரண்டாவது பயம் அணு ஆயுதப் போரப் பற்றியது என்று போலந்து தேசத்தில் வார்சா பல்கலைக்கழகத்தில் உளநூல் மருத்துவ துறையின் பேராசிரியர் டாக்டர் போடன் வாசிலெவ்ஸ்கி கூறுகிறார். ஆஸ்திரேலியாவுக்குத் தன்னுடைய விஜயத்தின் போது, அணு ஆயுத போருக்குப் பயப்படும் ஆறு வயது பிள்ளைகளையும் தான் கண்டதாக ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டார். “போரின் அச்சுறுத்தல் போன்ற தங்களால் தீர்க்கமுடியாத பிரச்னைகளை இளைஞர் எதிர்ப்படும்போது, வாழ்க்கையிலிருந்து தப்பித்திட மதுபானங்களையும், போத மருந்துகளையும், சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் தெரிந்துகொள்கின்றனர்,” என்றார் அவர். மற்றும் சில பொதுவான அறிகுறிகள் மனக்கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் எதிர்காலத்திலும் கல்வியிலும் அக்கறையின்மையையும் உட்படுத்துகிறது. (g89 2/8)
வீட்டிற்குள் நச்சுப்பாடு
மின்னாற்றல் திறம் மிகுந்த வீடுகள் மிகப் பெரிய அளவில் உடல் நலப் பிரச்னைகளுக்குக் காரணமாயிருக்கின்றன. அதற்குக் காரணம்? அவை வீட்டிற்குள்ளாக நச்சுப்பொருட்களைப் பிடித்துவைத்திருக்கின்றன என்கிறார் ஒரு கானடா தேச கட்டிட கலைஞரும் சுற்றுப்புறச்சூழல் ஆய்வாளருமாயிருப்பவர். “சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் வேதியல் பொருட்கள், வாசனைப் பொருட்கள், அறைகளை வாசனையாக வைப்பதற்கான பொருட்கள், தொற்றுத்தடைக் காப்புப் பொருட்கள், பாலிஷ், மெழுகுகள் மற்றும் பசைகள் சருமத்தில் அரிப்புகளை ஏற்படுத்தக்கூடும்,” என்று அவர் குறிப்பிடுவதாக தி டொராண்டோ ஸ்டர் அறிக்கை செய்கிறது. லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் நோய்த்தடைக்காப்பு மற்றும் எதிர்விளைவுகள் ஆய்வுத் துறையின் தலைமை மருத்துவர் டாக்டர் வில்லியம் சோட்ரிக்கர் கூறுவதாவது, தங்களுடைய வீட்டிற்குள் இருக்கும் பொருட்கள் உடலுக்கு ஒவ்வாது பாதிப்புகளை ஏற்படுத்தும் காரியத்தில் ஏறக்குறைய 15 சதவீத மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வீட்டுப் பொருட்களால் ஏற்படும் பொதுவான நோய் ஆஸ்துமா என்றும் அவர் குறிப்பிடுகிறார். காற்றோட்டம் இல்லாத மின்னாற்றல்திறம் மிகுந்த வீடுகளில் சூடு மற்றும் குளிர் சாதனங்கள் நச்சுப்பொருட்களை மீண்டும் சுற்றச் செய்து பிரச்னையைக் கூட்டுகிறது.
நாய்வெறி நோய் அதிகரிக்கிறது
உலகிலேயே ஏழு நாடுகள் மட்டும்தான் நாய்வெறி நோய் இல்லாமல் இருக்கிறது என்று லண்டனின் தி இன்டிபெண்டன்ட் அறிக்கை செய்கிறது. அவற்றில் ஐந்து, இக்கோளத்தின் வடப்பாதியில் அமைந்த நாடுகள் (பிரிட்டன், அயர்லாந்து குடியரசு, சுவீடன், ஐஸ்லாந்து மற்றும் நார்வே) மற்ற இரண்டு தென் பாதியில் அமைந்த நாடுகள் (ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து). என்றபோதிலும், அண்மையில் இந்த நோயின் பெருக்கத்தால் வடதுருவத்துக்கு மேல் அமைந்த பகுதிகளுக்குள் இந்த நோய் பிரவேசித்துவிடாதபடி தடுப்பதற்காக முழு கவனமாயிருப்பதற்கு ஸ்கண்டிநேவிய அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கத் தூண்டியிருக்கிறது. ரேபீஸ் என்னும் நாய் வெறி நோய் ஏற்கெனவே கிரீன்லாந்து, சைபீரியா மற்றும் அலாஸ்கா உட்பட வடதுருவ பிரதேசங்களில் குறிப்பிட்ட காலங்களில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. வீட்டு விலங்குகளும், அப்பகுதிக் கலைமான்களும், இதுவரை பாதிக்கப்படவில்லை என்றாலும், செந்நரிகள், வடதுருவ நரிகள், கீரியினம் மற்றும் பெருந்தசையுண்ணி வகைகள் கொலையாளியாகிய இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவை.
சூறையாடும் வெட்டுக்கிளிகள்
கடந்த கால் நூற்றாண்டில் “உலகின் மிக மோசமான வெட்டுக்கிளி வாதை” வட ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது, செல்லும் வழியில் என்னென்ன தாவரங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் நாசப்படுத்திவிடுகிறது என்று தி எக்கானமிஸ்ட் அறிக்கை செய்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் எத்தியோப்பியாவில் ஆரம்பத்தைக் கொண்டிருந்த வெட்டுக்கிளிகள் இப்பொழுது 65 நாடுகளை அச்சுறுத்துகின்றன. இந்த வாதையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இன்னும் இரண்டு ஆண்டுகள் எடுக்கும்” என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கணக்கிட்டது. அவற்றின் கடுமையான பசியால், இடம் விட்டு இடம் செல்லும் ஒரு பாலைவன வெட்டுக்கிளி, ஒவ்வொரு நாளும் தன்னுடைய எடைக்குச் சமானமான உணவை சாப்பிடுகிறது. எனவே ஒரு சதுரமைல் பரப்பில் மூன்றில் ஒரு பங்கில் காணப்படும் ஏறக்குறைய 5 கோடி வெட்டுக்கிளிகள் அடங்கிய ஒரு கூட்டம், “500 பேர் இருக்கும் ஒரு கிராமம் ஒரு வருடத்தில் உணவாகக் கொள்ளும் உணவை ஒரே நாளில் விழுங்கிவிடும்” என்று தி எக்கானமிஸ்ட் குறிப்பிடுகிறது. (g89 2/22)