மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 5: ஏறக்குறைய பொ.ச.மு 1000–31 யோக்கியதை இல்லாத பழங்கதைக் கற்பனைக் கடவுட்கள்
“எல்லா மதமும் அதன் ஆரம்பத்தை ஆசியாவில் கொண்டதாயிருக்கிறது.”—ஜப்பானிய முதுமொழி
ஜப்பானியர் சரி. மதங்களின் வேர்கள் ஆசியாவில் காணப்படுகிறது. மிகக் குறிப்பாக, உலகிலுள்ள மதங்களின் அடிப்படை மதப் போதனைகளும் பழக்கவழக்கங்களும் ஆசியாவிலிருந்த பூர்வ பாபிலோனிலிருந்து ஆரம்பமாயின.
இதை உறுதிப்படுத்துகிறவிதத்தில், பாபிலோனியா மற்றும் அசீரியா மதங்கள் (The Religion of Babylonia and Assyria) என்ற புத்தகம் சொல்லுகிறது: “எகிப்து, பெர்சியா மற்றும் கிரீஸ் நாடுகள் பாபிலோனிய மதத்தின் செல்வாக்கை உணர்ந்தன . . . செமிட்டிக் கூறுகள் பூர்வீக கிரேக்க புராணங்களிலும் கலாச்சாரத்திலும் பலமாகக் கலந்திருப்பதற்கு கூடுதல் விளக்கங்கள் தேவையில்லை என்பது இப்பொழுது பொதுவாக அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தச் செமிட்டிக் கூறுகள் அதிகக் குறிப்பாக பாபிலோனியாவைச் சார்ந்தவை.”
கிரேக்க பழங்கதைகளில் காணப்படும் பாபிலோனிய மதக்கூறுகள் கிரேக்கரின் மதத்தில் மிக எளிதாக கலந்தது. மத என்சைக்ளோபீடியா (The Encyclopedia of Religion) குறிப்பிடுகிறபடி, அதற்கு “எல்லாக் காலத்திற்கும் ஒரு முறையாக சத்தியம் பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த ஒரு மதப் புத்தகமும் இருக்கவில்லை . . . சிறு பிராயத்தில் கற்ற கதைகளின் களஞ்சியத்திற்கு மதச் சடங்குகளை நிறைவேற்றும் ஒருவர் அத்தாட்சி பகர்ந்தால் போதுமானதாயிருந்தது. இந்த ஒவ்வொரு கதையும் பல விதமாகச் சொல்லப்பட்டன, இதனால் இவற்றிற்கு விளக்க வரம்பு அளவற்றிருந்தது.”
பொ.ச.மு. எட்டு அல்லது ஒன்பதாவது நூற்றாண்டு போல் வாழ்ந்த கிரேக்கப் பெருங்கவிஞர் ஹோமர் தன்னுடைய இலியட் (Iliad), ஒடிஸி (Odyssey) என்ற காவியங்களில் கூறிய கதைகள் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. ஒலிம்பஸ் மலையின் பழங்கதைக் கற்பனைக் கடவுட்களுக்கும், தீரச்செயல் வீரர்களாக வழிபாட்டுக்குரியவர்களாயிருந்த அழிவுள்ள, கடவுளுக்கு ஒப்பான மத்தியஸ்தர்களாயிருந்தவர்கள் உட்பட மனிதருக்கும் இடையிலான உறவுகளை அவனுடைய காவியங்கள் சிறப்பித்துக் காண்பிக்கின்றன. இது கிரேக்கருடைய மதம் எப்பொழுதும் சார்ந்திருக்கக்கூடிய ஓர் ஊற்றுமூலமாய் இருந்தது. எனவேதான், “பழங்கதைகளும் மதமும் ஒத்திருக்கிறது,” என்று எழுத்தாளர் G. S. கர்க் விளக்குகிறார்.
கிரேக்க மதம் மற்ற ஊற்றுமூலங்களுக்கும் திரும்பியிருக்கிறது. தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (The New Encyclopœdia Britannica) குறிப்பிடுவதாவது, “புரியா புதிர்களைக் கொண்ட மதங்களை விசேஷ வைராக்கியத்துடன் ஆதரித்த கிரேக்க உலகம் [எகிப்திலிருந்து] ஓஸிரிஸ், இஸிஸ் மற்றும் ஹோரஸ் கலாச்சாரத்தைப் பொருத்திக்கொண்டது.” அங்கிருந்து “அவை ரோம சாம்ராஜ்யம் முழுவதும் பரவியது.” அது எவ்விதம் நிகழ்ந்தது?
கிரேக்க புராணம் ரோமைச் சிறைகொள்கிறது
ரோமரின் பூர்வீக மூதாதையர் கடவுட்களை எல்லா வகையான சட உருவிலும் இருக்கும் மனிதரைச் சாராத ஆவிகளாக இருப்பதாய்க் கருதிய ஓர் எளிய மதத்தைக் கைக்கொண்டனர். அது நிமித்தங்களையும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மாந்தரீகத் தன்மைகளைக் கொண்டிருப்பதாய் நம்பிய ஆதாரமற்ற மூட நம்பிக்கையை உடைய ஒரு மதமாக இருந்தது. அது டிசம்பரில் கொண்டாடப்பட்ட சாட்டர்நேலியா போன்ற வருடாந்தர பண்டிகைகளைக் கொண்டிருந்தது, அந்தச் சமயத்தில் மக்கள் வெகுமதிகளை பரிமாறிக்கொண்டனர். அது “உருவ வழிபாடுடைய, மதச் சடங்குகளைக் கொண்ட ஒரு மதம், ஆவிக்குரிய காரியங்களுக்கு அழுத்தம் கொடுக்காத ஒரு மதம். ஒரு ரோமன் தன்னுடைய கடவுட்களோடு ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டான்—நீர் எனக்கு ஏதாவது செய்தால் நான் உமக்கு ஏதாவது செய்வேன்—அவனுடைய மதம் பெரும்பாலும் அந்தப் பேரத்தில் பிசகாமல் உடன்பாட்டைக் கடைப்பிடிக்கும் ஒன்றாயிருந்தது” என்று இம்பீரியல் ரோம் என்ற புத்தகம் கூறுகிறது. இது அந்த மதத்தை ஆவிக்குரியவிதத்தில் மலடாக்கியது, ரோமர்கள் ஆவிக்குரிய தேவைக்கு வேறு பக்கமாய்த் திரும்பச் செய்தது.
பெரிய அளவில் மத வழிபாட்டு முறைகளும், கோவில்களும், சொரூபங்களும், விக்கிரகங்களும் எட்ரூரியரால் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டன.a அவர்கள்தான் “ரோமை கிரேக்க தெய்வங்களுக்கும் தேவதைகளுக்கும் குறிப்பிடத்தக்கவிதத்தில் அறிமுகப்படுத்தினர், அவற்றில் பலவற்றை ரோமர்கள் எவ்வித மாற்றமுமில்லாமல் ஏற்றுக்கொண்டனர்,” என்று அதேப் புத்தகம் கூறுகிறது. சீக்கிரத்திலேயே, “ரோமிலுள்ள மதம் அநேக முகங்களையும் அநேக பெயர்களையும் தரித்துக்கொண்டது; வெற்றிகள் மூலமும் வர்த்தகத்தின் வாயிலாகவும் ரோமர் தொடர்பு கொண்ட ஒவ்வொரு புதிய மக்களும் ரோமின் பல தெய்வ வழிபாட்டுக்குக் காரியங்களைக் கூட்டியிருப்பதாகத் தெரிகிறது,” என்று சொல்லப்படலாம்.
பூர்வீக ரோம குருவர்க்கம் ஆவிக்குரிய அல்லது ஒழுக்கம் சார்ந்த தலைவர்களாக இருக்கும்படி எதிர்பார்க்கப்படவில்லை. அவர்கள் “தெய்வங்களை அழைக்கும் சரியான முறைகள், அவனுடைய வணக்கம் சம்பந்தமான விலக்கல் கட்டுப்பாடுகள், புரிந்துகொள்வதற்குச் சிக்கலான வாசகங்கள்” ஆகியவற்றை அறிந்திருந்தால் போதும் என்று இம்பீரியல் ரோம் கூறுகிறது. தாழ்ந்தவர்கள் மற்றும் உயர்ந்த பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் என்று அறியப்பட்ட பொதுமக்களுக்கு எதிர்மாறாக குருவர்க்கம் கவர்ச்சியான அரசியல் மற்றும் சமூக அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இப்படியாக, ஹோமர் காலம் முதல், ஏறக்குறைய ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு, கிரேக்க புராணங்கள் கிரீஸ் மற்றும் ரோமின் மதங்களில் பலமான செல்வாக்கைச் செலுத்த முடிந்ததால், தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு சொல்லுகிறது: “மேற்கத்திய மனிதனின் கல்வி, கலை மற்றும் உணர்ச்சிப்பூர்வ சரித்திரத்தில் கிரேக்க புராணம் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட முடியாது.” குறைந்தபட்சம் மதம் சம்பந்தமாகக் குறிப்பிடுகையில் பொ.ச.மு. முதல் நூற்றாண்டின் ஓர் இலத்தீன் கவிஞன் ஹோரஸ் சரியாகவே சொன்னான்: “சிறைபட்ட கிரீஸ் ரோமைச் சிறைகொண்டது.”
ஒரு கிரேக்க கடவுள் போர்நடை
அலெக்ஸாந்தர் III பொ.ச.மு. 356-ல் மக்கெதோனியாவிலுள்ள பெல்லாவில் பிறந்தான். அரச அதிகார சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட அவன் பிரபல கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் கீழ் கல்வி கற்றான். அவன் தத்துவம், மருத்துவம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றில் இவனுடைய அக்கறையை வளர்த்திட உதவினான். அரிஸ்டாட்டிலின் தத்துவ போதனைகள் அலெக்ஸாந்தரின் சிந்தனையை எந்தளவுக்குப் பக்குவப்படுத்தியது என்பது வாதத்துக்குரிய காரியம். ஆனால் இவன் மேல் ஹோமரின் செல்வாக்கைக் குறித்து சந்தேகிப்பதற்கில்லை, ஏனென்றால் அலெக்ஸாந்தர் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவனாயிருந்ததால், ஹோமரின் புராண எழுத்துக்களின் பேரில் தனிப் பிரியம் கொண்டிருந்தான். உண்மை என்னவெனில், அவன் இலியட் காப்பியத்தை மனப்பாடம் பண்ணினான் என்று உரிமை பாராட்டப்படுகிறது; அது ஒரு சாதாரண விஷயம் அல்ல, காரணம் இது 15,693 காப்பிய வரிகளை மனப்பாடம் செய்வதை உட்படுத்தியது.
தனது 20-வது வயதில், தன்னுடைய தந்தை கொலை செய்யப்பட்டதற்குப் பின்பு, அலெக்ஸாந்தர் மக்கெதோனிய சிங்காசனத்தில் அமர்ந்தான். உடனேயே அவன் போர்த்தொடுத்து வெற்றிகொள்ளும் ஒரு விசேஷ முயற்சியில் இறங்கினான். இதுதானே அவனுக்கு மகா அலெக்ஸாந்தர் என்ற பெயரைத் தேடித் தந்தது. எல்லாக் காலத்திற்கும் சிறந்து விளங்கிய ஓர் இராணுவ வீரன் என்று போற்றப்படும் அவன் அதனால் கடவுளாக இருக்கும் அளவுக்கு உயர்த்தப்பட்டான். அவனுடைய மரணத்துக்கு முன்பும் அதற்குப் பின்பும் அவன் தெய்வமாகக் கருதப்பட்டான்.
அலெக்ஸாந்தர் பெர்சியரை எகிப்திலிருந்து துரத்தினான், அவ்விடத்தில் அவன் மீட்பராகப் போற்றப்பட்டான். மனிதன், புராணம், மந்திரம் (Man, Myth & Magic) என்ற புத்தகம் சொல்லுகிறது: “அவன் பார்வோனாக ஏற்றுக்கொள்ளப்பட்டான். அம்மோன் தெய்வத்தின் கருவறைக்குள் சென்றபோது அவன், ஆசாரியனால் ‘அம்மோன் தெய்வத்தின் மகன்’ என போற்றப்பட்டான்.” இந்தச் சம்பவம் அவன் கிரேக்கரின் பல தெய்வங்களில் பிரதான தெய்வமாகிய ஸீயஸ் தெய்வத்தின் மகன் என்ற கதைக்கு விளக்கமளிக்கிறது.
அலெக்ஸாந்தர் கிழக்குப் பக்கமாக முன்னேறி, கடைசியில் இந்தியாவின் சில பகுதிகளை வந்தடைந்தான். வழியில் அவன் பாபிலோனை வெற்றிகொண்டான். அதிலிருந்துதான் அவனுடைய தாயகத்தின் புராணம் மற்றும் மதத்தின் பல கருத்துகள் தோன்றின. எனவே அதைத் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஆக்குவதற்குத் திட்டம்போட்டது பொருத்தமாகவே இருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குச் சற்று அதிகமாக ஆட்சிபுரிந்த மகா கிரேக்க கடவுள் பொ.ச.மு. 323-ல் ஜுன் 13-ம் நாள் தடுமாறினான்—32 வயதில் மரித்தான்!
வணங்கப்பட்ட ஒரு ரோம கடவுள்
ரோம் நகரம் பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டின் மத்தியில் இத்தாலி தீபகற்பத்தில் ஸ்தபிக்கப்பட்டது. அலெக்ஸாந்தரின் கீழ் உலக ஆதிக்கத்தின் உச்சக்கட்டத்தை கிரீஸ் எட்டுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஸ்தபிக்கப்பட்டது. அலெக்ஸாந்தரின் மரணத்துக்குப் பின்பு, உலக வல்லரசு மெதுமெதுவாக ரோம் பக்கமாகத் திரும்பியது. ரோமின் தலைவராயிருந்த தளபதி ஜூலியஸ் சீஸர் பொ.ச.மு. 44-ல் கொல்லப்பட்டான். பதிமூன்று ஆண்டுகள் அமைதியின்மை கழிந்த பின்பு அவனுடைய வளர்ப்பு மகன் ஆக்டேவியன் அவனுடைய எதிரிகளையெல்லாம் மேற்கொண்டு பொ.ச.மு. 31-ல் ரோம சாம்ராஜ்யத்தை ஸ்தபிப்பதில் முன்னேறினான்.
ஆக்டேவியனை “ரோமின் பல சக்கரவர்த்திகளில் மிகச் சிறந்து விளங்கியவன்” என்று இம்பீரியல் ரோம் சொல்லி, “ரோமர் அகஸ்டஸ் அல்லது அகஸ்து என்று அழைத்தனர், அதன் அர்த்தம் ‘வணங்கப்பட்டவன்’ என்பதாகும். மாநிலத் தலைவர்கள் அவனை ஒரு கடவுளாகப் போற்றினர்.” இந்தக் கருத்துகளுக்கு இசைவாக அகஸ்து ராயன் தனக்கு முன் இருந்த அலெக்ஸாந்தரின் உருவத்தையும் தன்னுடைய உருவத்தையும் கொண்ட ஒரு முத்திரை மோதிரத்தை அணிந்திருந்தான். ரோம சட்டசபை பின்னர் அகஸ்துவை அமரர் ஆக்க, அவனைக் கனப்படுத்தும் விதத்தில் சாம்ராஜ்யம் முழுவதும் புனித சிலைகள் அமைக்கப்பட்டன.
அந்தப் பெயருக்குரிய யோக்கியதை அவர்களுக்கு இருந்ததா?
இன்று எவரும் உலக சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் தங்களுடைய நம்பிக்கையை ரோம அல்லது கிரேக்க கடவுட்கள் பேரில் வைக்க மாட்டார்கள். ஒலிம்பஸ் மலையிலிருந்து ஆட்சி புரிந்ததாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டவர்களிலும் அல்ல, அல்லது அரசியல் சிம்மாசனங்களிலிருந்து ஆட்சி புரிந்த உண்மையில் வாழ்ந்த மனிதரிலும் அல்ல. என்றபோதிலும், ஆசியாவில் ஆரம்பத்தைக் கண்டது முதல் இன்று வரையாக பொய் மதங்கள் பெயரைத் தாங்கியும் யோக்கியதையற்றிருக்கும் அந்தப் பழங்கதைக் கற்பனைக் கடவுட்களில் தங்களுடைய நம்பிக்கையை வைக்கும்படியாக மக்களை மோசம்போக்கிவந்திருக்கிறது. பொருத்தமாகவே, அலெக்ஸாந்தர் வெகுவாய் நேசித்த ஹோமர் இலியட் காப்பியத்தில் இப்படியாக எழுதினான்: “யோக்கியதையின்றி பெற்றிருக்கும் ஒரு பெயர் வீணே.”
பூர்வீக கிரேக்கர்கள் இலியட் காவியத்தை “ஒழுக்கத்திற்கும் நடைமுறையான விவேகத்திற்கும் ஓர் ஊற்றுமூலமாகக்” கருதினார்கள் என்று சொல்லப்படுகிறது. இன்று அதுபோன்று கருதப்படும் மற்ற பல எழுத்துக்களும் உண்டு. அப்படிப்பட்ட மிக அதிகமாக விற்பனையாகும் மத நூல்களை எவ்விதம் சரியாக மதிப்பிட வேண்டும் என்பது எமது ஜுன் 8 இதழில் வெளிவரும் கட்டுரையின் பொருளாக இருக்கும். (g89 3/8)
[அடிக்குறிப்புகள்]
a எட்ரூரியரின் ஆரம்பம் வாதத்துக்குரியதாயிருக்கிறது, ஆனால் அவர்கள் பொ.ச.மு. எட்டாவது அல்லது ஏழாவது நூற்றாண்டில் ஏஜியோ-ஆசிய பிரதேசத்திலிருந்து இத்தாலிக்கு இடமாறிச் சென்று இப்படியாகத் தங்களுடன் ஓர் ஆசிய கலாச்சாரத்தையும் மதத்தையும் கொண்டுவந்தனர் என்பது அதிக பரவலாக ஆதரிக்கப்பட்ட கோட்பாடாகும்.
[பக்கம் 27-ன் பெட்டி]
ஊடுருவிப் பரவிய கிரேக்க பக்தி
பூர்வீக கிரேக்கர் மதத்திற்கு குறிப்பாக ஒரு வார்த்தையைக் கொண்டில்லை. அவர்கள் இயுசெபியா (eu·seʹbei·a) என்ற பதத்தைப் பயன்படுத்தினர். இது “பக்தி” அல்லது “கடவுட்கள் சம்பந்தமாக நன்னடத்தை,” “நன்கு வணங்குதல்” மற்றும் “தேவ பக்தி” என்று மொழிபெயர்க்கப்படலாம்.b
தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (The New Encyclopœdia Britannica) பின்வருமாறு குறிப்பிடுகிறது: “கிரேக்க மதம் அதன் வளர்ந்த நிலையில் ஓர் ஆயிர ஆண்டுகளுக்கு மேல் நிலைத்தது, ஹோமரின் காலம் (அநேகமாக கி.மு. 9-வது அல்லது 8-வது நூற்றாண்டு) முதல் ஜூலியன் சக்கரவர்த்தியின் ஆளுகை (கி.பி. 4-வது நூற்றாண்டு) வரை என்றாலும், அதன் ஆரம்பம் பழைய சகாப்தங்களுக்குச் செல்கிறது. அந்தக் காலப் பகுதியில் அதன் செல்வாக்கு மேற்கில் ஸ்பய்ன் வரையிலும், கிழக்கில் இன்டஸ் வரையிலும், மத்தியதரை உலகம் முழுவதிலும் பரவியது. அதன் பாதிப்பு பெருமளவில் ரோமரை உள்ளடக்கியது, அவர்கள் தங்களுடைய கடவுட்களை கிரேக்க கடவுட்களுடன் அடையாளங்கண்டனர். கிறிஸ்தவ மதத்தின் கீழ் கிரேக்க வீரர்களும் கடவுட்களும் புனிதர்களக நிலைத்தனர், மறுபட்சத்தில் தென் ஐரோப்பிய சமுதாயங்களின் கன்னி மரியாள்கள் பிராந்திய கலாச்சாரத்தின் தன்னிச்சையான போக்கைப் பிரதிபலித்தது.”
பூர்வீக கிறிஸ்தவர்கள் கிரேக்க மற்றும் ரோம பொய்க்கடவுட்களின் வணக்கத்தாரை எதிர்ப்பட வேண்டியதாயிருந்தது. பைபிள் பதிவு நமக்குச் சொல்வதாவது: “பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு தேவர்கள் மனுஷ ரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி, பர்னபாவை யூப்பித்தர் [கிரேக்க கடவுட்களின் தலைமைக் கடவுள்] என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி [மற்ற கடவுட்களுக்குத் தூதுவர்களாக சேவித்த கடவுள்] என்றும் சொன்னார்கள். அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டு வந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்ட பொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்: மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே, நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்ப வேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்” என்றார்கள்.—அப்போஸ்தலர் 14:11–15. (g89 3/8)
[அடிக்குறிப்புகள்]
b உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்த, கிரேக்க வேதாகமத்தின் கிங்டம் இன்டர்லீனியர் மொழிபெயர்ப்பில் (The Kingdom Interlinear Translation of the Greek Scriptures) 1 தீமோத்தேயு 4:7, 8 பார்க்கவும்.
[பக்கம் 28-ன் வரைப்படம்/[பக்கம் 14-ன் படங்கள்]
கிரேக்க மற்றும் ரோம தெய்வங்கள்
கிரேக்க பழங்கதைக் கற்பனைத் தெய்வங்களிலும் தேவதைகளிலும் பல ரோம பழங்கதைகளிலும் அல்லது புராணங்களிலும் ஒத்த ஸ்தானங்களைக் கொண்டிருந்தன. கீழ்க்காணும் பட்டியல் சில முக்கியமான கிரேக்க மற்றும் ரோம தெய்வங்களைப் பட்டியலிட்டிருக்கிறது.
கிரேக்கர் ரோமர் ஸ்தானம்
அஃப்ரொடைட் வீனஸ் காதல் தேவதை
அப்பொலோ அப்பொலோ ஒளி, மருத்துவம் மற்றும் கவிதைக் கடவுள்
ஏரஸ் மார்ஸ் போர் கடவுள்
ஆர்ட்டீமிஸ் டயானா வேட்டை மற்றும் பிள்ளைப்பேற்றுத் தேவதை
அஸ்க்லீப்பியஸ் அஸ்குலேப்பியஸ் சுகமளிக்கும் கடவுள்
அத்தேனா மினெர்வா கலைகள், போர் மற்றும் ஞானத்தின் தேவதை
க்ரோனஸ் சாட்டர்ன் கிரேக்கு பழங்கதையில் டைட்டன்களின்
அதிபதியும் ஜீயஸின் தந்தையும்; ரோமர்
பழங்கதையில் வேளான்மைக்கும் கடவுள்
டெமீட்டர் செரெஸ் வளரும் காரியங்களின் தேவதை
டயோனிசஸ் பேக்கஸ் திராட்சரசம், இனவிருத்தி, மற்றும் களியாட்டு நடத்தை
ஈராஸ் கியூபிட் காதல் தெய்வம்
கேயா டெரா பூமியின் சின்னம், யுரேனஸின் தாயும் மனைவியும்
ஹெஃபாஸ்டஸ் வல்கன் கடவுட்களுக்கு இருப்புக் கொல்லர் மற்றும்
அக்கினிக்கும் உலோக தொழிலுக்கும் கடவுள்
ஹீரா ஜூனோ விவாகத்தையும் பெண்களையும் பாதுகாப்பவர்.
கிரேக்க புராணத்தில் ஜீயஸின் சகோதரியும்
மனைவியும்; ரோமர் புராணத்தில்
ஜூப்பிட்டரின் மனைவி
ஹெர்மிஸ் மெர்க்குரி கடவுட்களுக்குத் தூதுவர்; வர்த்தகத்துக்கும்
விஞ்ஞானத்துக்கும் கடவுள்; பயணிகளின்,
திருடர்களின், பரதேசிகளின் பாதுகாவலர்
ஹெஸ்டியா வெஸ்டா அடுக்களையின் தேவதை
ஹிப்னாஸ் சோம்னஸ் நித்திரையின் கடவுள்
புளூட்டோ, அல்லது புளூட்டோ கீழ் உலகின் கடவுள்
ஹேடீஸ்
பொசீடன் நெப்டியூன் சமுத்திரக் கடவுள். கிரேக்க புராணத்தில்
பூமியதிர்ச்சிக்கும் குதிரைகளுக்குங்கூட கடவுள்
ரேயா ஆப்ஸ் க்ரோனஸின் மனைவியும் சகோதரியும்
யுரேனஸ் யுரேனஸ் கேயாவின் மகனும் கணவனும் மற்றும்
டைட்டான்களின் தந்தை
ஜீயஸ் ஜூப்பிட்டர் தேவர்களின் அதிபதி
மூல ஆதாரம்: “தி உவர்ல்டு புக் என்சைக்ளோபீடியா,” (The World Book Encyclopedia) 1987 பதிப்பு, புத்தகம் 13, பக்கம் 820
படங்கள்]
ஹெர்மிஸ்
டயானா
ஆஸ்க்லீப்பியஸ்
ஜூப்பிடர்
[படத்திற்கான நன்றி]
புகைப்பட மூல ஆதாரம்: ஹெர்மீஸ், டயானா, ஜூப்பிடர்—பிரிட்டிஷ் மியூசியம், லண்டன் ஆஸ்க்லீப்பியஸ்—தேசிய அகழ்வாய்வு அருங்காட்சியகம், ஏத்தென்ஸ், கிரீஸ்
[பக்கம் 26-ன் படங்கள்]
அத்தேனா, போர் மற்றும் ஞானத்தின் தேவதை—நகர வாயிலில் அமைந்த சிலை, வெசல், ஜெர்மனி