அந்தப் படுகொலை மறக்கப்பட்ட பலியாட்கள்
“யூத இனம் முழுவதும் அழிக்கப்படவேண்டும் என்ற நாசியரின் கொள்கை போலந்து யூதர்கள் எந்தளவுக்கு மரித்தார்களோ அந்தளவுக்கு யூதரல்லாத போலந்து மக்களும் மாண்டார்கள், இப்படியாக அவர்களை ‘மறக்கப்பட்ட படுகொலையின்’ சக-பலியாட்களாக ஆக்கியது.”—ரிச்சர்டு C. லூக்காஸ் எழுதிய “அந்த மறக்கப்பட்ட படுகொலை”
படுகொலை—அது எதை அர்த்தப்படுத்துகிறது? சில அகராதிகளின்படி, இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஐரோப்பிய யூதரின் இனம் நாசியரால் படுகொலை செய்யப்பட்டதாகும். நாசியரின் கைகளில் யூதர்கள் மட்டுமே துன்பப்பட்டு மரித்தனர் என்ற ஓர் எண்ணத்தையே இது கொடுக்கக்கூடும். என்றபோதிலும், “அந்தப் படுகொலை” நாசி சகாப்தத்தின்போது பலியாட்களான யூதருக்கு மட்டுமே பொருந்துவது நியாயத்துக்கும் உண்மைக்கும் உட்படுவதாயிருக்கிறதா?
எழுத்தாளராகிய ரிச்சர்டு லூக்காஸ் குறிப்பிடுவதாவது: “படுகொலை என்ற வார்த்தை அநேகருக்கு இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது ஜெர்மானியர் ஆட்சியில் யூதர்கள் அனுபவித்த வேதனையையும் பேரழிவையுமே குறிப்பதாக இருக்கக்கூடும். மனோ ரீதியில் நோக்கும் போது, அந்தப் பதம் யூதர்களின் அனுபவத்தை மட்டுமே குறிக்கப்படுவதை யூதர்கள் ஏன் விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. . . . என்றபோதிலும், அந்தப் படுகொலையில் மற்றவர்களை உட்படுத்தாது பிரித்துவிடுவதன் மூலம் நாசியர் கைகளில் போலந்து மக்களும், ஸ்லவியரும், நாடோடிகளும் பட்ட பயங்கர பாடுகள் அநேகமாக கவனிக்கப்படாமற்போகிறது, அல்லது மறக்கப்படுகிறது.”
லூக்காஸ் மேலும் கூறுகிறார்: “அவர்களுக்கு [சரித்திராசிரியர்களுக்கு] அந்தப் படுகொலை யூதரின் விஷயத்தில் தனித்தன்மை வாய்ந்ததாயிருந்தது. எனவே உலகம் அறிந்திராத மிகப் பெரிய உயிர்ச்சேதத்தில் அழிந்த முப்பது இலட்சம் [புறஜாதியாராயிருந்த] போலந்து மக்கள் உட்பட யூதரல்லாத தொண்ணூறு இலட்சம் புறஜாதியினரைக் குறித்து அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.”
குடியிருப்பு இடத்துக்கான ஹிட்லரின் பேராசை
செப்டம்பர் 1939-ல் ஹிட்லரின் இராணுவம் போலந்து மீது போர் தொடுத்த போது, ஜெர்மன் தேச மக்களுக்கு லெபன்ஸ்ராம் (Lebensraum), அதாவது குடியிருப்பு இடத்தைப் பெறவேண்டும் என்ற ஹிட்லரின் கொள்கையை நிறைவேற்றும்படியான கட்டளையின் கீழ் அவர்கள் இருந்தார்கள். ரிச்சர்டு லூக்காஸ் கூறுகிறார்: “நாசியருக்கு போலந்து மக்கள் அவர்கள் லெபன்ஸ்ராம் (குடியிருப்பு இடம்) பகுதியில் குடியிருந்த அன்டர்மென்ஷராக (Untermenschen) (கீழ்மட்ட மனிதராக) இருந்தனர். இது மேலான ஜெர்மன் இனத்தவரால் இச்சிக்கப்பட்டது.” எனவே, “போலந்து வம்சத்தினராயிருந்த அல்லது மொழியினராயிருந்த அனைத்து ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் ஈவு இரக்கமின்றி கொல்”லும்படியாக ஹிட்லர் தன் படைக்கு அதிகாரமளித்திருந்தான். “இவ்விதமாக மாத்திரமே நமக்குத் தேவையான குடியிருப்பு இடத்தை நாம் பெறலாம்.”
செப்டம்பர் 1939 போலந்து மக்களுக்குக் கொடுமையின் ஆரம்பமாக இருந்தது. ஹிட்லர் சொல்லிருந்ததாவது: “இந்தப் போர் முற்றிலும் அழிவை ஏற்படுத்திடும் ஒரு போரக இருக்க வேண்டும்.” ஹிட்லரின் மெய்க்காவற்படைத் தலைவன் ஹீன்ரிச் ஹிம்லர் அறிக்கையிட்டதாவது: “போலந்து மக்கள் அனைவருமே உலகில் இல்லாமற்போவார்கள். . . . அனைத்துப் போலந்து மக்களையும் நிர்மூலமாக்குவதை மகா ஜெர்மானிய மக்கள் ஒரு பிரதான இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும்.” எனவே, அந்தப் படுகொலை போலந்து யூதர்கள் மீதான தாக்குதலாக மட்டும் இருக்கவில்லை; அது “அனைத்துப் போலந்து மக்கள்” மீதான தாக்குதலாக இருந்தது.
“இவர்கள் குடியேறிய எல்லாத் தேசங்களிலுமே பயங்கரவாதம் குடியேறியது. . . . ஆனால் போலந்திலோ எல்லாருமே அப்படிப்பட்ட கொடுமைக்கு இறையானார்கள். கூட்டுக் குற்றம் என்ற நியமத்தின் அடிப்படையில் மொத்தமாகக் கொல்லப்படுதல் அதிகமாக இடம்பெற்றது. ஏனென்றால், வயது, பால் அல்லது உடல்நலம் என்ற காரியத்தில் வித்தியாசமின்றி ஒவ்வொரு போலந்து குடிமகனும் கண்டனம் செய்யப்பட்ட—நாசி கட்சி மற்றும் அரசின் கொள்கை அமைப்பாளரால் கண்டனம் செய்யப்பட்ட ஒரு தேசத்தின் குடிமகனாக இருந்தான்,” என்கிறார் ஆஸ்ச்விட்ஸில் மதிப்பீடுகளும் வன்முறைகளும் (Values and Violence in Auschwitz) என்ற போலீஷ் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் கேத்தரின் லீச். போலந்து மக்கள் கொத்தடிமைகளுக்குரிய இடத்தில் வைக்கப்படவேண்டிய ஒரு தாழ்ந்த இனம் என்பதாக ஹிம்லர் கருதினார் என்று அந்த மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார்.
போலந்து சரணடைந்த பின்னருங்கூட [செப்டம்பர் 28, 1939], வெர்மாஷ்ட் (ஜெர்மானியர் இராணுவம்) ‘போலந்து வம்சத்தினராயிருந்த அல்லது மொழியினராயிருந்த அனைத்து ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் ஈவு இரக்கமின்றி கொல்ல’ ஹிட்லர் பிறப்பித்த ஆகஸ்ட் 22, 1939-ன் ஆணையை மிகுந்த கவனமாக நிறைவேற்றியது. ஜெர்மன் இராணுவமும் SS-ம் அப்படிப்பட்ட ஈவு இரக்கமற்ற படுகொலையைச் செய்ய எப்படித் தூண்டப்பட்டிருக்க முடியும்? ஆரிய இனம் உயர்ந்தது, மற்ற அனைத்து இனங்களும் தாழ்ந்தவை என்ற போதனையில் ஊறியிருப்பதாலே. அந்த மறக்கப்பட்ட படுகொலை (The Forgotten Holocaust) என்ற புத்தகத்தில் லூக்காஸ் குறிப்பிட்ட விதமாக இருக்கிறது: “போலந்தில் குடியேற்ற சாம்ராஜ்யம் என்ற நாசியர் கொள்கை ஹிட்லர் மிக அதிகமாக வெறுத்த யூதர்களுக்கு அடுத்தபடியாக இருந்த போலந்து மக்களுக்கு மனிதாபிமான மறுப்பின் அடிப்படையில் அமைந்திருந்தது.”
“எதிர்மறையான மக்கள்தொகை புள்ளிவிவரக் கொள்கை”
ஆஸ்ச்விட்ஸ் படைத் தலைவன் (Commandant of Auschwitz) என்ற தன்னுடைய புத்தகத்தின் முன்னுரையில் லிவர்பூலைச் சேர்ந்த லார்டு ரசல் கூறினார்: “போரின் போது படையெடுத்து கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களில் 1.2 கோடி ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அதிகமாகவே ஜெர்மானியரால் கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஒரு கூட்டு கணக்கின்படி, கான்சன்ட்ரேஷன் முகாம்களில் மட்டும் எண்பது இலட்சம் பேர் மாண்டனர். அதில் யூதர்கள் மட்டும் ஐம்பது இலட்சத்திற்கும் குறைவாக இல்லை. . . . என்றபோதிலும், உண்மையான எண்ணிக்கை ஒருபோதும் தெரியப்போவதில்லை.” இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும், பலியாட்களான எழுபது இலட்சம் மக்கள் யூதரல்லாதவர்கள்.
மற்றொரு சாட்சியம் கேத்தரின் லீச் என்பவருடையது. அவர் எழுதுகிறதாவது: “ஹிட்லரின் எதிர்மறையான மக்கள்தொகை புள்ளிவிவரக் கொள்கையின் கீழ் முதன் முதலில் வந்தது போலந்து தேசமாகும். அவனுடைய நோக்கம் ‘கிழக்கில்’ இருந்த மிகப் பெரிய பிராந்தியத்தை ஜெர்மன் மக்களின் மறுகுடியிருப்புக்காக ஆயத்தப்படுத்துவதாயிருந்தது. அவர்கள் குடியிருந்த எல்லாத் தேசங்களிலும் போலந்து தேசம்தானே அதிகப்படியான உயிர்ச்சேதத்தைக் கொண்டிருந்தது—1000 குடிகளுக்கு 220 பேர். போலந்து தேச புள்ளிவிவரத்தின்படி 60,28,000 போலந்து மக்களுக்குக் குறையாமல் . . . உயிரிழந்தனர்.” இவர்களில் 32,00,000 யூதர்கள். அப்படியென்றால், ஏறக்குறைய உயிரிழந்த போலந்து மக்களில் 50% யூதரல்லாதவர்.
யூதரல்லாத இலட்சக்கணக்கான பலியாட்கள், முக்கியமாக ஸ்லவிய பிறப்பு மூலத்தவர் உட்பட்ட ஒரு “மறக்கப்பட்ட படுகொலை” நடந்தது என்பது வாதத்துக்கு இடமற்றிருக்கிறது. இது நாசியரால் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான ரஷ்ய மக்களையும் உட்படுத்துகிறது. அந்த ரஷ்ய மக்கள் வேறு தெரிவு செய்வதற்கில்லை. நாசி இனக் கொள்கையின் காரணத்தால் அவர்கள் ஈவு இரக்கமின்றி மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
என்றபோதிலும், ஷிட்லரையும் அவனுடைய இன மேன்மைத் தத்துவத்தையும் எதிர்க்க தைரியமாயிருந்து அந்தப் படுகொலைக்குப் பலியாட்களான ஆயிரக்கணக்கான யூதரல்லாத ஜெர்மானியரை இந்தப் புள்ளிவிவரப் பட்டியல் கணக்கிலெடுக்கத் தவறியது. இவர்களில் ஹிட்லரின் இராணுவ நோக்கங்களில் பங்கு கொள்ள மறுத்த ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளும் அடங்குவர். ஆம், ஜெர்மனியிலும் நாசியர் குடியேறிய தேசங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தெரிந்து தெளிவான தெரிவைச் செய்தது அவர்களைக் கான்சன்ட்ரேஷன் முகாம்களுக்கு அனுப்பியது மட்டுமின்றி, பலர் இரத்த சாட்சிகளாக அல்லது புனிதத் தியாகிகளாக மரிக்கவும் செய்தது.
எனவே, எழும் பொருத்தமான கேள்வி, “அந்தப் படுகொலையின் பலியாட்களாக (victims) மரித்தவர்களுக்கும் இரத்த சாட்சிகளாக (martyrs) மரித்தவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? (g89 4/8)
[பக்கம் 10-ன் வரைப்படம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
This map/picture is missing from the Archives
[படம்]
[படத்திற்கான நன்றி]
Library of Congress
[படம்]
[படத்திற்கான நன்றி]
UPI/Bettmann Newsphotos