மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதின் எதிர்காலம்
பகுதி 7: சுமார் பொ.ச.மு. 1500 முதல் இந்து மதம் உன்னுடைய பெயர் சகிப்புத்தன்மை
“ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த மதத்தைப் பின்பற்றவேண்டும்.”
ராமகிருஷ்ணா, 19-ம் நூற்றாண்டு இந்து சீர்த்திருத்தவாதி
சகிப்புத்தன்மை பொதுவாக ஒரு நற்பண்பாக கருதப்படுகிறது. எப்படியிருப்பினும், மிகப் பெரிய உலக மதமாகிய இந்து மதத்தை இது நன்கு விவரிக்கிறது. 1985-ல் உலகத்தின் ஜனத்தொகையில் 13.5 சதவிகிதத்தினர், சுமார் 65,00,00,000 பேர் இந்துக்களாக இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்து மதமானது “ஒரு கதம்பம்போன்ற சிக்கலான தேசீய மதம்” என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. வெறுமென “இந்தியாவின் எல்லா மதங்களுக்கும் ஒரு பொதுவான வார்த்தையாக” இருந்திருக்கிறது. தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்காவிலும்கூட காரியங்கள் தெளிவாக்கப்படுவதில்லை. “இந்து மதத்தைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைச் சொல்ல முற்படும் ஒவ்வொரு முயற்சியும் ஏதாவதொரு விதத்தில் மனநிறைவளிக்காததாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்துக்கள் உட்பட இந்து மதத்தின் மிகச் சிறந்த இந்திய கல்விமான்கள் இதன் சம்பந்தமாக வித்தியாசமான அம்சங்களை வலியுறுத்தியிருப்பதே இதற்குக் காரணம்.”
எப்படியிருப்பினும், இந்து மதம் ஒரு பழமையான மதமாக இருக்கிறது. இது பாக்கிஸ்தானின் ஒரு பகுதியாக இப்பொழுது இருக்கும் சிந்து நதி பள்ளத்தாக்கில் ஆரம்பமானது. சுமார் பொ.ச.மு. 1500-ல் ஆரியர்கள் என்றழைக்கப்படும் இந்திய-ஐரோப்பியா மக்கள் இந்தப் பகுதியில் குடியேறினார்கள். அவர்கள் சில எழுத்துக்களைப் பரிசுத்த அறிவாக (வேதம்) கருதினதினால், அவர்களுடைய மதம் வேதாந்தம் என்று அறியப்பட்டது. இன்றுள்ள ஈரானியர்களுடைய முற்பிதாக்களின் மதத்திலிருந்து சில அம்சங்களை இது கொண்டிருந்தது. என்ஸைக்ளோபீடியா ஆஃப் ரிலிஜன் அண்ட் எதிக்ஸ் விவரிப்பதுபோன்று பாபிலோனின் செல்வாக்கு இருப்பதற்கும்கூட வாய்ப்பிருக்கிறது. இது “பாபிலோனிய மற்றும் பூர்வ இந்து பண்பாட்டிற்கு இடையேயுள்ள ஒத்திசைவான பல்வேறு காரியங்களைக்” குறித்து பேசுகிறது. ஆரம்பத்தில் குடியேறியவர்களின் மதமானது இந்த அந்நிய அம்சங்களின்மீது கட்டியமைக்கப்பட்டது. மற்ற மதங்கள் அவற்றின் செல்வாக்கைச் செலுத்தியபோது ஆண்டுகளினூடாக சில நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் இது சேர்த்துக்கொண்டது அல்லது கைவிட்டது. இவ்வாறாக, இந்து மதமானது அநேக ஊற்றுமூலங்களிலிருந்து பெறப்பட்ட எண்ணற்ற அம்சங்களின் ஒரு தொடர்ச்சியான ஒன்று சேர்க்கையின் விளைவாக இருக்கிறது.
போதனைகளும் பழக்கவழக்கங்களும்
ஆரியர்கள் இந்துக்களின் ஜாதி முறைக்கு அடித்தளம்போட உதவினர். ஆரம்பத்திலிருந்த நான்கு ஜாதிகள், பிற்பாடு அநேக ஆயிரக்கணக்கான உட்பிரிவுகளாக பெருகின. இந்த நான்கு ஜாதிகள் புருஷாவின் வித்தியாசமான உடல் அங்கங்களிலிருந்து தோன்றியிருக்கலாம். புருஷா என்பது மனிதவர்க்கத்தின் பூர்வ தகப்பனைக் குறிப்பிடும், “ஆள்” அல்லது “மனிதன்” என்று அர்த்தங்கொள்ளும் சமஸ்கிருத வார்த்தையாகும்.
இவருடைய வாயிலிருந்து பிறந்தவர்களாக கருதப்படும் பிராமணர், மதத்தலைவர்கள்; இவருடைய புயங்களிலிருந்து பிறந்தவர்களாக கருதப்படும் சத்திரியர், இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள்; இவருடைய தொடப் பாகத்திலிருந்து தோன்றியவர்களாக கருதப்படும் வைஷியர், விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் வியாபாரிகள்; இவருடைய பாதத்திலிருந்து தோன்றியவர்களாக கருதப்படும் சூத்திரர், அடிமைகள். “தீண்டப்படாதவர்கள்” கீழ்ஜாதி மக்களாக இருந்தனர். இவர்களுடைய வேலைகள் அல்லது வாழ்க்கை முறை மத சம்பந்தமாக அசுத்தமான நடவடிக்கைகளை உட்படுத்தியது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்துக்களின் ஜாதி சம்பந்தமான முறையின் தீவிரமான வடிவுகளை இந்தியாவும் பாக்கிஸ்தானும் நீக்கிவிட்டபோதிலும், இன்னும் இத்தகைய சூழ்நிலைமைகள் நிலவுகின்றன.
ஒரு காலத்திற்கு, மிருக பலிகள் வணக்கத்தில் ஒரு முக்கிய பாகமாக இருந்தன; இது தேவையான சடங்குகளை நடத்த ஓர் ஆசாரியத்துவத்தைத் தேவைப்படுத்தியது. பிராமணர் அவ்வளவு வல்லமையோடு வளர்ந்தபோது பிராமண மதம் என்ற மதப்பிரிவு ஒன்று தோன்றியது. “தேவர்களைக் காட்டிலும் மதகுருக்களுக்கு அதிக பயபக்தியும் மற்றும் கனமும் கொடுக்கப்பட்டது. ஏனென்றால் வெறுமென பிரார்த்தனையை மாற்றுவதன் மூலமாக மதகுருக்கள் எதிரிகளை அழித்துவிடக்கூடும்” என்று T.W. ஆர்கன் சொல்லுகிறார். மத சம்பந்தமான சடங்குகள் அதிக சிக்கலானபோது, சந்நியாசத்தை அல்லது தன்னடக்கத்தை அழுத்திக்கூறும் ஒரு போக்கு உண்டானது.
சம்சாரா என்பது ஓர் அடிப்படை நம்பிக்கையாக இருந்தது, அநேகமாக பொ.ச.மு. முதலாவது ஆயிர வருடத்தின் முன்பாதியின் காலப்பகுதிக்குட்பட்ட இந்துக்களுடைய வேத எழுத்துகளின் தொகுதியாகிய உபநிடதங்களில் இது விவரிக்கப்பட்டிருக்கிறது. மரணத்திற்கும் மற்றும் பரலோகத்தில் அல்லது நரகத்தில் தங்கும் இடைப்பட்ட காலத்திற்குப் பிற்பாடு, கர்மா நியமத்தின்படி, ஆட்கள் தாங்கள் முன்பு அனுபவித்த வாழ்க்கைக்கு மேம்பட்ட அல்லது தாழ்ந்த ஒரு வாழ்க்கையில் மனிதர்களாகவோ அல்லது மிருகங்களாகவோ மறுபடியும் பிறப்பார்கள். மோட்சத்தை அடைவதே வாழ்க்கையின் இலக்காக இருக்கிறது. இது பிறப்பு மற்றும் மறுபிறப்பின் ஓய்வற்ற சுழற்சியிலிருந்து விடுவிக்கப்பட்டு, பிரம்மா என்றழைக்கப்படும் முடிவான ஊற்றுமூலத்தில் இணைவதைக் குறிக்கிறது.
வேதாந்தம் அநேக கடவுட்களைக் கொண்டிருந்தது. கான்செப்ட் ஆஃப் இண்டியன் ஃபிலாசஃபி என்ற புத்தகத்தின் பிரகாரம், இதன் ஆதரவாளர்கள் இது மனநிறைவளிப்பதாக இல்லாததைக் கண்டார்கள். எனவே “அவர்கள் ஒரே கடவுள் என்ற கோட்பாட்டினிடமாக மனம் சாய்ந்தனர். . . . முந்தய எல்லாக் கடவுட்களையும் ஒன்றுசேர்த்து . . . ஒரு கருத்துவடிவ கடவுளை உருவாக்குவது ஒரு வழிமுறையானது.” இவ்வாறாக பிரம்மா இயல்புகளும் குணங்களும் இல்லாத, பல்வேறு தெய்வங்களாக உருவெடுக்கும் ஒரு கடவுள் ஆனார். ஒரு பிரத்தியேகமான கடவுளாக இல்லை.
மோட்சத்தை அடையும் ஆவலானது சரித்திராசிரியரான வில் டுரான்ட் சொல்லுவதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது: “உயிர்வாழ்க்கையை விட்டு மீளுவதே . . . , எல்லா இந்து தத்துவத்திலும் அழுத்திக் காண்பிக்கப்படுகிறது.” இந்த உற்சாகமற்ற மற்றும் நம்பிக்கையற்ற மனநிலை மைத்தரி உபநிடதத்தில் நன்கு விவரிக்கப்பட்டிருக்கிறது. இது இவ்வாறு கேட்கிறது: “ஆசை, கோபம், இச்சை, ஏமாற்றம், பயம், மனச்சோர்வு, பொருமை, விரும்பத்தக்கவைகளிலிருந்து பிரிந்திருந்தல், விரும்பத்தகாதவைகளோடு ஐக்கியம், பசி, தாகம், முதுமை, மரணம், வியாதி, துக்கம் போன்ற காரியங்களால் பாதிக்கப்படுகின்ற இந்த உடல் ஆசைகளை அனுபவிப்பதில் என்ன நன்மை இருக்கிறது?”
இந்தச் சந்தோஷமற்ற சூழ்நிலைமையைத் தவிர்ப்பதற்கான ஒரு வழி அநேகமாக பொது சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட புத்தகங்களின் ஒரு தொகுதியாகிய, “பூர்வீக கதைகள்” என்று அர்த்தப்படும் புராணங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை பரவலாக கிடைத்தன மற்றும் சாதாரண மனிதனின் வேதவாக்கியங்கள் என்று அறியப்பட்டன. கருட புராணம் இவ்வாறு உரிமைப்பாரட்டுகிறது: “எல்லா உணர்ச்சிகளையும் அமிழ்த்துவிடுவதிலேயே மெய்யான சந்தோஷம் இருக்கிறது. . . . எங்கே பாசம் இருக்கிறதோ அங்கே துன்பம் இருக்கிறது . . . பாசத்தைத் துறந்துவிடுங்கள்; சந்தோஷமாக இருப்பீர்கள்.” துரதிஷ்டவசமாக, சந்தோஷமின்மையைக் குறைப்பதற்காகச் சொல்லப்படும் இந்தத் தீர்வே துன்பத்தைக் கொண்டுவருவதாக இருக்கிறது.
இதற்கு முந்தய புத்தகமாகிய, “கர்த்தரின் பாடல்” என்று அர்த்தப்படுகின்ற மற்றும் சில சமயங்களில் “இந்தியாவில் ஒருபோதும் எழுதப்பட்டிராத மிக முக்கியமான புத்தகம்” என்று அழைக்கப்படுகின்ற புத்தகமாகிய பகவத் கீதை விடுதலை அடைய மூன்று வழிகளைச் சுட்டிக்காட்டுகிறது. “கடமைப் பாதை” சடங்குகள் மற்றும் சமுதாயம் சம்பந்தமான கடமைகளை நிறைவேற்றுவதை அழுத்திக் காட்டியது; “அறிவுப் பாதை” தியானம் மற்றும் யோகசனம் செய்வதை உட்படுத்தியது; மற்றும் “பக்திப் பாதை” ஒரு தனிப்பட்ட கடவுளுக்கு பக்தி செலுத்துவதை உட்படுத்தியது. பகவத் கீதை கிறிஸ்தவ மண்டலத்தின் “புதிய ஏற்பாட்டிற்கு” ஒப்பிடப்பட்டிருக்கிறது. அநேக இந்தியர்கள் அதனுடைய வசனங்களில் சிலவற்றை மனப்பாடமாக அறிந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மனப்பாடம் செய்யப்பட்ட பகுதிகளை தினந்தோறும் ஓதுகிறார்கள்.
பகவத் கீதையானது மகா பாரதம் என்றழைக்கப்படும் ஓர் இந்து புராணத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமேயாகும். மகா பாரதம் பத்து இலட்சம் வசனங்களைக் கொண்டிருக்கிறது; உலகத்தின் மிகப் பெரிய செய்யுளாக இருக்கிறது. மகா பாரதத்தில் பகவத் கீதை இணைக்கப்பட்டபோது (அநேகமாக பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில்) வேதாந்தம் மற்றும் பிராமண மதம் அல்லாமல் இந்து மதமானது முடிவில் ஒரு தனிப்பட்ட மதமானது.
தொடர்ச்சியான சீர்த்திருத்தம்
அதனுடைய ஆரம்பத்திலிருந்தே, இந்து மதம் தொடர்ச்சியான சீர்த்திருத்தத்திற்கு உள்ளானது. பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டின் சீர்த்திருத்தவாதிகளில் புத்தமதத்தின் ஸ்தபகராகிய சித்தார்த்தா கெளதமரும் மற்றும் ஜைன மதத்தின் ஸ்தபகராகிய வர்த்தமானா மகாவீரரும் முக்கியமானவர்கள்.
ஜைனர்களின் (ஜெயங்கொள்கிறவர்கள்) வம்சவழியில் தான் 24-ம் நபர் என்பதாக மகாவீரர் தன்னைக் கருதினார். ஜைன மதம் இவர்களுடைய வாழ்க்கையின் அடிப்படையிலானது. இந்த மதம் இந்து மதத்திலிருந்து வித்தியாசப்படுகிறது. ஜைன மதம் சிருஷ்டிகர் ஒருவர் இருப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. உலகம் எப்பொழுதும் இருந்திருக்கிறது என்று போதிக்கிறது. இது அகிம்சா கோட்பாட்டிற்கு தனிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கிறது. 20-ம் நூற்றாண்டு இந்திய தலைவராகிய மோகன்தாஸ் காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்காக தன்னுடைய போரட்டத்தின்போது பின்பற்றிய அகிம்சைப் போக்கு உண்மையில் அரசியல் ரீதியாக இந்த மத சம்பந்தமான கோட்பாட்டைப் பொருத்திப் பிரயோகித்தலாக இருந்தது.
ஜைன மதத்தின் பிரகாரம், சரியான நம்பிக்கை, சரியான அறிவு மற்றும் சரியான நடத்தை ஆகியவற்றோடு சேர்ந்து யோகசனம் செய்வது விடுதலைக்கு வழிநடத்துகிறது. அதே சமயத்தில், ஒவ்வொரு காரியமும் முக்கியமாக அதைச் சிந்திக்கின்ற விதத்திலேயே இருக்கிறது என்று அது விவாதிக்கிறது. இவ்வாறாக, சரி மற்றும் தவறு ஆகியவை சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தராதரங்களை ஒதுக்கி வைக்கிறது. இது இந்து மதத்தின் சகித்துக்கொள்ளும் மனநிலையைக் குறிப்பிடுகிறது. இந்த இந்து மதத்திலிருந்தே ஜைன மதம் தோன்றியது.
சுமார் 2,000 ஆண்டுகளுக்குப் பிற்பாடு, 15-வது நூற்றாண்டில் இன்னொரு சீர்த்திருத்தவாதி தோன்றினார். நானக் என்ற பெயர்கொண்ட இவர் இந்துக்களும் மற்றும் முகமதியர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான ஒரு மதத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். இதன் விளைவாக சீக்கிய மதம் உருவானது. “சீக்கியர்” என்ற வார்த்தையானது “சீஷன்” என்றர்த்தப்படும் ஒரு சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. பத்து குருக்களில் முதல் குரு நானக் ஆவார். இவர்களில் பத்தாவது குரு, 1699-ல் கால்சா (பரிசுத்தவான்கள்) என்றழைக்கப்படும் ஒரு சங்கத்தை ஸ்தபித்தார். ஜாதி வித்தியாசங்களை நீக்குவதற்கும் மற்றும் தங்களுடைய விசுவாசத்தின் போர்வீரர்களாக அவர்கள் இருப்பதை அழுத்திக் காண்பிப்பதற்கும் அதனுடைய அங்கத்தினர்கள் சிங் (சிங்கம்) என்ற பொதுப்பெயர் கொடுக்கப்பட்டார்கள். ஐந்து காரியங்களைக் கைக்கொள்ளும்படியாக அவர்கள் உத்தரவிடப்பட்டார்கள்: அவர்களுடைய தலைமுடியையும் தாடியையும் (கெஷ்) வெட்டாமல் விட்டுவிடுவது; தலைப்பாகையால் மூடப்பட்ட அவர்களுடைய தலைமுடியில் ஒரு சீப்பை (கான்கா) வைத்துக் கட்டுவது; அரைக்காற்சட்டை (காச்ஸ்) அணிந்துகொள்வது, அநேகமாக நீண்ட முழுக்காற்சட்டையின் கீழ் அணிந்துகொள்வது; ஒரு கத்தியைக் (கிர்பான்) கொண்டுசெல்வது; இரும்பு வளையல் (காரா) அணிந்துகொள்வது. பத்து குருக்களோடு குரு வரிசை முடிவடைந்தது. சீக்கிய மதத்தின் பரிசுத்த புத்தகமாகிய குரு கிரன்த் சாகிப் அதன் இடத்தை நிரப்பியது. 1604-ல் தொகுக்கப்பட்டு, ஒரு நூற்றாண்டிற்குப் பிற்பாடு திருத்தியமைக்கப்பட்டது.a
19-ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில், கல்கத்தாவைச் சேர்ந்த குரு ராமகிருஷ்ணா மேற்கத்திய மத சம்பந்தமான எண்ணத்தின் சிறந்தது என்பதாக அவர் கருதியதை இந்து மதத்தோடு இணைக்க முயற்சி செய்தார். வித்தியாசமான மொழிகளில் வித்தியாசமான பெயர் தண்ணீருக்கு இருப்பதுபோல “நித்திய—புத்திக்கூர்மையுள்ள—பேரின்பமாகிய சத்-சித்தானந்தா சிலரால் கடவுள் என்பதாகவும், சிலரால் அல்லா என்பதாகவும், சிலரால் யெகோவா என்பதாகவும், சிலரால் ஹரி என்பதாகவும் மற்றும் சிலரால் பிரம்மன் என்பதாகவும் அழைக்கப்படுகிறார்” என்று அவர் விவாதித்தார். “வீட்டின் உச்சிக்கு ஒருவன் ஓர் ஏணி . . . அல்லது ஒரு மூங்கில் அல்லது ஒரு படிகட்டு அல்லது ஒரு கயிற்றின் மூலமாக ஏறுவது போன்று, கடவுளை அணுகுவதற்கு பல்வேறுபட்ட வழிகளும் முறைகளும் இருக்கின்றன. . . . வித்தியாசமான மத நம்பிக்கைகள் சர்வவல்லமையுள்ளவரை அடைவதற்கான வித்தியாசமான வழிகளாகும்.”
இத்தகைய ஒரு சகிப்புத் தன்மையுள்ள மனப்போக்கு இந்த வணக்கத்தில் அநேக சுயாதீனமுள்ள செயல்களுக்கு இடமளிக்கிறது. சில பிரிவுகள் தங்களுடைய வணக்கத்தைப் பிரதானமாக பிரம்மாவிற்கும் (பிரம்மா வணக்கம்), மற்றவர்கள் விஷ்ணுவிற்கும் (வைஷ்ணவ வணக்கம்) இன்னும் சிலர் சிவாவிற்கும் (சிவன் வணக்கம்) செலுத்துவதை இது அனுமதிக்கிறது. இது கிராமிய இந்து மதம், சக்தி மதம் மற்றும் தாந்திரியம் ஆகியவைகள் இந்து மதத்தை தங்களுடைய சொந்த பாணியிலே பிரசங்கிக்க அனுமதிக்கிறது. உதாரணமாக, தாந்திரியம் ஆதிவாசி மற்றும் கிராமிய பழக்கங்களை உள்ளடக்குகிறது. மற்றும் இந்து மத வரலாற்றின் ஆரம்பத்தில் தோன்றிய தேவதா வணக்கத்தையும் வலியுறுத்துகிறது. இந்தியர்கள் தங்களுடைய தேசத்தை “இந்தியத் தாய்” என்பதாக அழைக்கின்றனர்; இது பாரத் மா என்றழைக்கப்படும் ஒரு தேவதையால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.
சகிப்புத்தன்மை—நல்லதா அல்லது கெட்டதா?
“இந்து மதமானது எப்பொழுதும் புதிய போதகங்களைத் தன்னகத்தே ஏற்றுக்கொள்ளும் திறமைவாய்ந்ததாக நிரூபித்திருக்கிறது,” என்று பிரிட்டனின் இறைமையியல் வல்லுநரும் மற்றும் மத ஒப்புமையில் விரிவுரையாளருமாகிய ஜெஃப்ரி பாரின்டர் எழுதுகிறார். அவர் மேலும் இவ்வாறு சொல்லுகிறார்: “மதங்களின் மாறுபட்ட கொள்கைகளை கலப்பது அல்லது ஒன்று சேர்ப்பதானது இன்று இந்து போதனையின் பொதுவான வழிமுறையாக இருக்கிறது.” பெரும்பாலான ஆட்கள் வெளிப்படையாக சகிப்புத் தன்மை சம்பந்தப்பட்ட இந்த இந்து தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள்: ‘உங்களுக்குச் சரியான பாதையில் கடவுளைச் சேவியுங்கள்.’
ஆனால் பாரின்டா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எல்லா நம்பிக்கைகளையும் சமமாக்குவதனால், நன்மைக்கும் தீமைக்கும் இடையே சீர்தூக்கிப் பார்க்க தவறிவிடும் ஆபத்து” இருக்கிறது. மதம் நல்லதாகவும் கெட்டதாகவும் இருக்கக்கூடும் என்பது அதிகதிகமாக தெளிவாக தெரிவதில்லையா? கெட்ட மதத்தின் அம்சங்களை தன்னுடைய சொந்த மதத்தில் அறிமுகப்படுத்துவதில் ஏதாவது நன்மை இருக்கிறதா?
இன்று அநேகருக்கு அவர்களுடைய மதம் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசாளும் வகுப்பான சத்திரிய வகுப்பைச் சேர்ந்த ஓர் இந்து இவ்வாறாகவே ஏமாற்றமடைந்தார். இந்து மதம் அவருடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறியது. அவர் அறிவொளியை நாடினார். “விடுதலையை வாக்குறுதி செய்த ஓர் அறிவொளி” என்ற எமது அடுத்த இதழின் கட்டுரை நமக்கு அதிகத்தைச் சொல்லும் (g89 4⁄8)
[அடிக்குறிப்புகள்]
a 1985-ல், சுமார் 33,00,300 ஜைனர்கள் 5 வித்தியாசமான தேசங்களில் வாழ்ந்துவந்தனர், மற்றும் சுமார் 1,60,00,000 சீக்கியர்கள் 19 தேசங்களில் வாழ்ந்துவந்தனர்.
[பக்கம் 21-ன் பெட்டி]
நீங்கள் ஒருவேளை சிந்தித்திருக்கலாம்
சம்சாரா என்பதை இந்துக்கள் எப்படி விவரிக்கிறார்கள்? பகவத் கீதை இவ்வாறு சொல்லுகிறது: “ஒரு மனுஷன், கந்தையான உடைகளைக் களைந்துவிட்டு புதியவற்றை தரித்துக்கொள்வதுபோன்று, சரீரத்தில் வாசமாயிருப்பவர் பழுதான சரீரங்களைக் களைந்துவிட்டு புதிய சரீரங்களுக்குள் பிரவேசிக்கிறார்.” கருட புராணம் இவ்வாறு விவரிக்கிறது: “முந்தய வாழ்க்கையில் செய்யப்பட்ட கிரியைகள் அடுத்துவரும் வாழ்க்கையில் என்ன விதமான பிராணியாக இருப்பான் என்பதைத் தீர்மானிக்கிறது . . . ஒருவன் இந்த வாழ்க்கையில் எதைப் பெறுவான் என்பது விதியினால் தீர்மானிக்கப்படுகிறது. அதை ஒரு கடவுளும்கூட வேறுவிதமாக மாற்ற முடியாது.” உதாரணத்துக்கு, மார்கண்டேயர் புராணம் ஒருவர் சொல்வதை இவ்வாறு மேற்கோள் காட்டுகிறது: “தான் ஒரு பிராமணனாகவும், ஒரு சத்திரியனாகவும், ஒரு வைஷியனாகவும் மற்றும் ஒரு சூத்திரனாகவும் பிறந்தேன். மறுபடியும் நான் ஒரு மிருகமாகவும், ஒரு புழுவாகவும், ஒரு மானாகவும் மற்றும் ஒரு பறவையாகவும் பிறந்தேன்.”
இந்துக்கள் பசுக்களை புனிதமாக கருதுகிறார்களா? ரிக் வேதமும் மற்றும் அவெஸ்தாவும் பசுக்களைக் “கொலைச் செய்யப்படக்கூடாத உயிரினங்களாக” குறிப்பிடுகின்றன. ஆனால் இது மறுபிறப்பின் நம்பிக்கையில் அல்லாமல் அகிம்சைக் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததாகத் தோன்றுகிறது. இருப்பினும், இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படியத் தவறுவதன் வினைமையான தன்மையை மார்கண்டேயா புராணம் குறிப்பிடுகிறது. அது இவ்வாறு சொல்லுகிறது: “ஒரு பசுவைக் கொலைச் செய்யும் ஒருவன் தொடர்ச்சியாக மூன்று பிறப்புகளில் நரகத்திற்குப் போவான்.”
கங்கை நதியை இந்துக்கள் எப்படிக் கருதுகிறார்கள்? “இந்த நதியின் தண்ணீரில் குளிப்பதனால் தூய்மையாக்கப்படுகின்ற மற்றும் கேசவாவுக்கு [விஷ்ணு] தங்களுடைய மனதை அர்ப்பணம் செய்கின்ற முனிவர்கள் முடிவான விடுதலையை அடைவார்கள். இந்தப் புனித நிதியைக் குறித்து கேள்விப்படுகையில், அதை விரும்புகையில், பார்க்கையில், தொடுகையில், அதில் குளிக்கையில், அல்லது அதைக் குறித்து துதிபாடுகையில், நாளுக்கு நாள் இது எல்லா உயிரினங்களையும் சுத்திகரிக்கிறது. நூறு யோயானாக்கள் [900 மைல்கள்] தொலைவில் வசிப்பவர்களும்கூட “கங்கா கங்கா” என்று கூக்குரலிடுகையில் முந்தய மூன்று வாழ்க்கையின்போது செய்த பாவங்களிலிருந்து நிவாரணமடைகிறார்கள்.”—விஷ்ணு புராணம்.
ஹரே கிருஷ்ண வணக்கத்தார் யார்? இவர்கள் கிருஷ்ணா உணர்வுள்ள சர்வதேச சமுதாயத்தின் அங்கத்தினர்கள் ஆவர். பக்தியுள்ள இந்து மதத்தின் ஒரு மிஷனரி வகையைச் சேர்ந்தவர்கள். இதன் ஸ்தாபகராகிய காலஞ்சென்ற A.C. பக்திவேதாந்தா ஸ்வாமி பிரபுபாதா 1965-ல் தன்னுடைய செய்தியை ஐக்கிய மாகாணங்களுக்குக் கொண்டுவந்தார். இது இந்துமதத்தின் துறவு சம்பந்தப்பட்ட சில அம்சங்களைத் தன்னில் கொண்டிருக்கிறது, கிருஷ்ணா தெய்வத்தின் வணக்கத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. மற்றும் ஹரே கிருஷ்ணா மந்திரம் ஓதுவதை வலியுறுத்திக் காட்டுகிறது. கடவுளுடைய நாமத்தை வெறுமனே உச்சரிப்பது இரட்சிப்புக்கு போதுமானது என்று பக்திவேதாந்தா கருதினார்.