இளைஞர் கேட்கின்றனர் . . .
பிறருடன் சம்பாஷிப்பதை நான் எப்படி விருத்திசெய்து கொள்ளலாம்?
இளம் ஷேரன் இயல்பாகவே எளிதில் புண்படக்கூடிய வெட்கப்படுகிற ஒரு பெண். விழித்தெழு! பத்திரிகைக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் அவள் இதை ஒப்புக்கொண்டாள்: “நான் எவரிடமாவது அறிமுகப்படுத்தப்பட்டால், என்ன சொல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. தவறான காரியத்தைச் சொல்லி, அந்த நபரை வருத்தப்படுத்த எனக்கு விருப்பமில்லை.” ஷேரன் போன்ற கூச்ச சுபாவமுடைய இளைஞருக்குப் பிறருடன் சம்பாஷிப்பதை விருத்திசெய்துகொள்வது உண்மையான முயற்சியைத் தேவைப்படுத்துகிறது.
மற்றவர்களுக்கோ, இன வேற்றுமையுணர்வுகள் பேச்சுத்தொடர்புக்குத் தடையாக இருக்கக்கூடும். கருப்பு இனத் தென் ஆப்பிரிக்க இளைஞன் லூக்காஸ் விஷயத்தைக் கவனியுங்கள். அவன் இந்தப் பத்திரிகையை அந்தப் பிராந்திய மொழியில் பிரசுரிப்போரின் சர்வ இன அங்கத்தினரில் ஒருவனாக ஆனான். “கருப்பு இனத்தவன் வெள்ளையருடன் ஒரே மேசையில் உட்கார்ந்து உணவருந்துவது ஒரு கலாச்சார அதிர்ச்சியாக இருக்கிறது,” என்று விளக்கினான். “இங்கு வந்து வெள்ளையருடன் வாழ்வது எனக்குப் பயமாக இருந்தது, ஏனென்றால் எங்களுடைய பின்னணி வித்தியாசமாயிருந்தது. நான் சொல்வது ஏற்றுக்கொள்ளப்படுமோ என்று யோசித்தேன். அந்த உணர்வை மேற்கொள்வதற்குக் காலம் எடுக்கும்.”
ஒரே இனத் தொகுதியினர் மத்தியிலும் பேச்சுத் தொடர்புக்குத் தடைகள் உண்டு. பீட்டர் என்ற தென் ஆப்பிரிக்கர் ஒருவர் இதை நினைவுபடுத்துகிறார்: “நான் ஒரு பண்ணையிலே வளர்ந்தேன், பின்னர் எங்கள் குடும்பம் பட்டணத்துக்கு மாறிச் சென்றது. நான் பண்ணை வாழ்க்கையைக் குறித்துப் பேசக்கூடும், ஆனால் பட்டண வாழ்க்கை அதிக வித்தியாசமாயிருந்தது. என்னுடைய நண்பர்களுடைய சம்பாஷணையை நான் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருப்பதையே கண்டேன், நான் வெறுமென அமைதியாய் இருந்தேன்.”
மேலே குறிப்பிட்டது போன்ற ஒரு பிரச்னை உங்களுக்கு இருக்குமானால், அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்?
கூச்சப்படுதலை மேற்கொள்ளுதல்
மற்றவர்களோடு இருக்கும் போது நீங்கள் பேசத் திணறுவதாக உணருகிறீர்களா? இது வளர்ச்சியின் ஒரு சாதாரண அறிகுறி என்பதை மனதிற்கொள்ளுங்கள். பருவ வயது தங்கள் நிலை குறித்து உணர்வுள்ளவர்களாக இருக்கும் ஒரு பருவமாக இருக்கிறது—தங்களைக் குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து அதிக உணர்வுள்ளவர்களாக இருக்கும் ஒரு பருவமாக இருக்கிறது. பெரும்பாலும் பிறர் கவனத்தைத் தங்கள் பக்கமாகத் திருப்புவதைத் அவர்கள் தவிர்க்கிறார்கள் மேலும் குறைவாக பேசுகிறார்கள்.
“கூச்சம், ஒரு வகைப் பாதுகாப்பாக இருக்கிறது,” என்று தனிமை (Loneliness) என்ற புத்தகத்தில் டாக்டர் டோனி லேக் விளக்குகிறார். “கூச்சப்படும் ஒருவர் தவறிழைப்பதிலிருந்து பாதுகாக்கப்படுகிறார், ஏனென்றால் மடத்தனமாக நடந்துகொள்வதை அல்லது பேசிவிடுவதைத் தவிர்த்துக்கொள்ள அவனுடைய கூச்ச உணர்வு உதவுகிறது.” ஒரு சம்பாஷணையில் பங்கு கொள்வது என்ற எண்ணமே கூச்சப்படும் ஆட்களை வியர்வையில் ஆழ்த்திடும்! பேசுவதற்குப் போதுமான தைரியத்தை அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியவில்லை. அல்லது, அப்படியும் முயன்றால், வார்த்தைகளில் குளறல் ஏற்படுகிறது. அதைக் கேட்பவர்கள் குழம்பி நிற்கிறார்கள் அல்லது சிரிக்கவும் கூடும். உங்களுக்கு இவ்விதம் நடந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
“இதற்கு விடை, நாம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று விளக்குகிறார் டாக்டர் லேக். “நம்மில் அடிப்படையில் ஏதோ தவறிருக்கிறது என்று நினைத்துக்கொள்ளும் தவறை நாம் செய்யக் கூடாது. நாம் பேசுவதற்கு ஆயத்தமாக இருக்கிறோம் என்று உணரும் வரை செவிகொடுத்துக் கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும்.” (யாக்கோபு 1:19-ஐ ஒப்பிடவும்.) இந்த நம்பிக்கையான அணுகுமுறை ஐரீன் போன்ற அநேகருக்கு உதவியாயிருந்திருக்கிறது. “நான் மற்றவர்களுடைய சம்பாஷணைகளிலிருந்து கற்றுக்கொள்வதற்காக அவற்றை மிகவும் கவனமாகக் கேட்பதுண்டு,” என்று விளக்குகிறாள். “பின்பு அதிக தகவலைப் பெற்றுக்கொள்வதற்காக நான் ஆராய்ச்சியையும் படிப்பையும் மேற்கொள்கிறேன். அந்தப் பொருள் மறுபடியும் வருமானால், அதைக் குறித்து நான் பேச முடிகிறது.”
நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டால் என்ன செய்வது?
சில சமயங்களில் சம்பாஷிப்பதற்கான உங்கள் உள்ளான முயற்சிகள் எதிர் பிரதிபலிப்புகளைக் கொண்டுவரக்கூடும்; நீங்கள் சொல்லுவது தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்களைப் பின்வாங்கச் செய்தது என்று எண்ணி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடாதீர்கள். “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே (புண்பட்டுவிடாதே, NW); மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்,” என்று பிரசங்கி 7:9 சொல்லுகிறது.
இளம் தாவீது வெகுகாலமாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டான் என்று பைபிள் குறிப்பிடுகிறது. அவனுடைய தந்தை இஸ்ரவேல் பாளயத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த தன் மூத்த சகோதரர்களுக்கு ஒரு வெகுமதியுடன் அவனைப் பாளயத்துக்கு அனுப்பினார். பாளயத்திற்கு வந்த போது, பெலிஸ்தரின் இராட்சதன் கோலியாத் நிந்தித்ததைக் கேட்டு அதிர்ச்சியுற்றான். “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தன் எம்மாத்திரம்?” என்று தாவீது யுத்த வீரர்களைக் கேட்டான். தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலியாப் இதைக் கேட்டபோது அதிகக் கோபப்பட்டான். தன்னுடைய தம்பி அங்கு வந்த நோக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டவனாய், அவன் சொன்னான்: “யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன்.”—1 சாமுவேல் 17:26–28.
அதுபோல நீங்களும் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், அது உங்களை நொறுக்கிட அனுமதியாதீர்கள். விரைவிலேயே தாவீதின் நல்ல நோக்கம் வெளிப்பட்டதுபோல, நன்கு சம்பாஷிப்பதற்கான உங்கள் உள்ளான முயற்சிகள் கடைசியில் நல்ல பலன்களைத் தந்திடும். “நற்கிரியைகள் வெளியரங்கமாகும்,” என்று பைபிள் உறுதியளிக்கிறது. (1 தீமோத்தேயு 5:24, 25) எனவே, தொடர்ந்து முயன்றுகொண்டிருங்கள்.
பிறர் நிலையில் உங்களை வைத்துப் பார்ப்பது அவசியம்
என்றபோதிலும், நீங்கள் எப்படி ஆரம்பிக்கலாம்? “பேச்சுத் தொடர்பில் மிகச் சிறந்த பலன்களைத் தந்திடும் முறை பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்த்து பிரதிபலித்தல்,” என்று குறிப்பிடுகிறார் பேச்சுத்தொடர்பு (Communication) என்ற தன்னுடைய புத்தகத்தில் லேரி L. பேக்கர். “பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்ப்பது என்றால், மற்றவர்களை ஆழமாகப் புரிந்திருப்பது, அவர்களுடைய எண்ணங்களை அறிந்து செயல்படுதல், அவர்களுடைய வேதனைகளை உணருதல், அவர்களுடைய மகிழ்ச்சியில் பங்குகொள்ளுதலாகும்.” இந்தத் தன்மையைக் காண்பிப்பதில் இயேசு கிறிஸ்து மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். ஒரு சமயம் தம்முடைய மரணத்தின் பேரில் துக்கித்துக்கொண்டிருந்த இரண்டு சீஷர்களிடம் சம்பாஷிக்கத் தொடங்கினார். தம்மை அடையாளங்காட்டாமல், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, “நீங்கள் . . . வழிநடந்து ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளும் காரியம் என்ன?” என்று கேட்டார்.—லூக்கா 24:17.
எருசலேமில் அப்பொழுதுதானே நடந்த விசனமான காரியங்களைப் பற்றி இந்த “அந்நியர்” அறிந்தில்லையே என்று இருவரும் ஆச்சரியத்தோடு பிரதிபலித்தார்கள். “எவைகள்?” என்று இயேசு மீண்டும் கேட்டார். ஓர் அருமையான சம்பாஷணை பின்தொடர்ந்தது. அதற்குப் பின் சீஷர்களில் ஒருவர் சொன்னதாவது: “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” (லூக்கா 24:13–32) ஆம், இயேசு பல அருமையான சம்பாஷணைகளை அனுபவித்தார், ஏனென்றால் அவர் மற்றவர்களுக்குச் செவிகொடுத்தார், மற்றும் பிறர் நிலையில் தம்மை வைத்துப்பார்க்கும் தன்மையைக் காண்பித்தார்.—யோவான் 4:7–26.
சம்பாஷணைகளை ஆரம்பித்தல்
மேற்குறிப்பிடப்பட்ட சம்பாஷணை ஓர் எளிய கேள்வியில் ஆரம்பித்தது என்பதைக் கவனியுங்கள். கேள்விகள் சம்பாஷணைகளை ஆரம்பித்து வைக்கும் மிகச் சிறந்த ஏதுக்கள். உங்களுக்கு அக்கறையான ஒரு பொருளில் கேள்வி கேட்பது குறித்து யோசிப்பது மிகவும் எளிது என்பது உண்மைதான், ஆனால் இது எப்பொழுதுமே இன்பமான ஒரு சம்பாஷணைக்கு வழிநடத்தாமல் இருக்கலாம். “மற்றவர்களிலும், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலும் அக்கறையாக இரு”க்கும்படி பைபிள் ஊக்குவிக்கிறது என்பதை நினைவிற் கொள்ளுங்கள். (பிலிப்பியர் 2:4, தி லிவ்விங் பைபிள்) எனவே, நீங்கள் செய்ய வேண்டுமென்றால், உங்களுடைய கூட்டாளி விடையளிப்பதற்கு மகிழும் ஒரு கேள்வியைக் குறித்து யோசிக்க வேண்டியது அவசியம். அது நீங்கள் பிறருடைய நிலையில் உங்களை வைத்துப் பார்ப்பதை உட்படுத்துகிறது. உங்களுக்கு அக்கறையாயிராத ஒரு பொருளைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கலாம், ஆனால் உற்சாகமான பிரதிபலிப்பும் மதிப்பு வாய்ந்த தகவலும் அதற்கான நல்ல பலன்களாக நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
“ஒரு சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கு பத்து எளிய வழிகளை” எழுத்தாசிரியர் லெஸ் டானல்டுசன் பட்டியலிடுகிறார். அவற்றில் ஏழு ஆலோசனைகள் கேள்விகளை உட்படுத்துகின்றன. ஒருவருடைய பின்னணியைக் குறித்துக் கேட்பது, ஆலோசனைக் கேட்பது, உதவி கேட்பது, ஓர் அபிப்பிராயத்தைக் கேட்பது, மதிப்பிடும்படிக் கேட்பது, உள்ளூர் பழக்க வழக்கங்களைப் பற்றி அல்லது உள்ளூர் உணவகங்கள் பற்றி கேட்பது. கேள்வி என்னவாக இருந்தாலும் அது உண்மை மனதோடு கேட்கப்பட வேண்டும். நீங்கள் எப்படிச் செவிகொடுக்கிறீர்கள் என்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும். (லூக்கா 8:18 ஒப்பிடவும்.) உங்களுடைய மனதையும் கண்களையும் அலைய விடுவீர்களானால், தான் சொல்லுவதில் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதோ என்று பதிலளிப்பவர் சந்தேகிக்கக்கூடும்.
சம்பாஷணைகளை ஆரம்பிப்பதற்கு டானல்ட்சன் கொடுக்கும் மற்ற மூன்று ஆலோசனைகள்: உள்ளூர் சம்பவத்தின் பேரில் குறிப்பு சொல்லுதல்; இயற்கைக் காட்சி போன்ற போற்றுதற்குரிய ஒரு காரியத்தின் பேரில் குறிப்பு சொல்லுதல்; அல்லது போற்றுதலைத் தெரிவித்தல். “மக்களைப் போற்றுவதற்கான காரியங்களைக் கண்டுபிடிக்க முயன்றால், ஏராளமான காரியங்களைக் கண்டுபிடிப்பீர்கள்,” என்று சம்பாஷணை மந்திரம் (Conversational Magic) என்ற புத்தகத்தின் ஆசிரியர் கூறுகிறார். ஆனால் அவர் இந்த எச்சரிப்பைக் கூட்டுகிறார்: “மனதாரத் தெரிவிக்கப்படாத போற்றுதலை மக்கள் அறிந்துகொள்கிறார்கள், மற்றும் அவ்விதம் உண்மையற்ற ஒருவருடன் அதிக நேரம் சம்பாஷிக்க ஆயத்தமாயிருக்க மாட்டார்கள்.”
சம்பாஷிப்பதற்காக எந்தக் “கொக்கியைப்” பயன்படுத்தினாலும், தொடர்ந்த முயற்சி பொதுவாக நல்ல பலன்களைக் கொண்டுவருகிறது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஷேரனைக் கவனியுங்கள். அவளுக்கு இப்பொழுது 22 வயது, தன்னுடைய கூச்ச சுபாவத்தை மேற்கொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைச் செய்திருக்கிறாள். அவள் பேட்டிக் காணப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. அது முதல் அவள் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு முழு நேர ஊழியராக இருக்கிறாள், அந்நியரைச் சந்திப்பதிலும் பைபிள் சம்பாஷணைகளை ஆரம்பிப்பதிலும் வருடத்துக்கு ஆயிரம் மணிநேரத்துக்கு மேல் செலவழிக்கிறாள். லூக்காஸ் மற்றும் பீட்டரைக் குறித்ததில், அவர்கள் இருவருமே தென் ஆப்பிரிக்காவிலுள்ள காவற்கோபுர சங்கத்தின் கிளை அலுவலகத்தில் பைபிள் பிரசுரங்களை அச்சடிப்பதில் அநேக ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார்கள். அவர்களைச் சந்தித்தால் ஒரு காலத்தில் அவர்கள் சம்பாஷிப்பதற்குக் கஷ்டப்பட்டவர்கள் என்பதை நம்பத் தயங்குவீர்கள்.
எனவே ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் சம்பாஷிப்பதைக் கடினமாகக் காண்பீர்களானால், உங்கள் முயற்சியைக் கைவிடாதீர்கள்; நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்குச் செவிகொடுங்கள். தற்போதைய தகவல்களை அறிந்தவர்களாயிருக்கப் படியுங்கள், வாசியுங்கள். சம்பாஷணையின் கலையை விருத்தி செய்துகொள்ளுதல், உங்கள் வாழ்க்கையை நிறைவு செய்து மற்றவர்களின் மகிழ்ச்சியைக் கூட்டிடும். (g89 5/22)
[பக்கம் 31-ன் படம்]
சம்பாஷணையில் உட்படுத்திக்கொள்ள உளமாற முயற்சி செய்யுங்கள்