செல்லப் பிராணி ஒன்றை நீங்கள் உண்மையிலேயே கவனிக்க முடியுமா?
டென்மார்க் “விழித்தெழு!” நிருபர்
மாரடைப்புகளுக்குப் பிறகு மனித வாழ்க்கையின் எதிர்பார்ப்பு பற்றிய ஆராய்ச்சி, செல்லப் பிராணியை வைத்திருந்தவர்கள், அப்படிப்பட்ட பிராணிகளை வளர்க்காதவர்களைவிட அதிக நாட்கள் வாழ்ந்தார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. ஆபத்தில்லாத பிராணிகளின் சகவாசம் ஓர் அமைதிப்படுத்தும் விளைவையுடையதாக இருக்கிறதென்று தெரிகிறது. பிராணிகள்கூட, உடற்பிரகாரமாக, மனதின் பிரகாரமாக ஊனமுற்றவர்களாக மேலும் நரம்பு சம்பந்தமான கோளறு உடைய நபர்கள் மேல் சாதகமான செல்வாக்கைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
நீங்கள் ஒரு செல்லப் பிராணியை வளர்க்க தீர்மானிப்பதற்குமுன்—உங்கள் நலனுக்காக, உங்களைச் சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக அந்தப் பிராணியின் நலனுக்காக—சிந்திக்கவேண்டிய சில கேள்விகள் இருக்கின்றன. கருத்துள்ள பதில்கள் நீங்கள் பணம் விரயமாகும் தவறுகளைச் செய்வதிலிருந்து தவிர்க்க உதவும்.
உங்கள் வாழ்க்கைப் பாங்கு சரியானபடி ஒரு பிராணியை கவனிக்க அனுமதிக்கிறதா? நீண்ட காலப் பகுதிகளில் நீங்கள் வீட்டில் இல்லாமல் இருக்கிறீர்களா? செல்லப் பிராணியை வைத்திருப்பது எதை அர்த்தப்படுத்துகிறதென்று அறிந்துகொள்வதற்கு உங்கள் பிள்ளைகள் ஏற்ற வயதுடையவர்களாக இருக்கிறார்களா? உங்கள் மனதில் நினைத்திருக்கும் அந்தச் செல்லப் பிராணியின் வகைக்கேற்ப உங்களிடம் போதுமான இடம் இருக்கிறதா அல்லது அதிக நேரம் அது நெருக்கமான கூண்டிலடைக்கப்பட்டு கிடக்க வேண்டியிருக்குமா? ஒரு செல்லப் பிராணியை பெறுவதற்கு முன் இக்கேள்விகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
பூர்வீக இஸ்ரவேலில் மிருகங்களின் சொந்தக்காரர்கள் அவைகளை எவ்விதமாக வளர்த்தார்களோ அதற்கு அவர்களைக் கடவுள் உத்திரவாதமாக்கினார்.—யாத்திராகமம் 23:4, 5; உபாகமம் 22:10; 25:4; நீதிமொழிகள் 12:10.
ஜானி ஒரு செல்லப் பிராணியை வைத்திருக்க வேண்டுமா?
“பிராணிகளை எப்படி நடத்த வேண்டுமென்பதைக் கற்றுக்கொள்வது பிள்ளைகளுக்கு நல்லது” என்று ஒரு கருத்து அடிக்கடி சொல்லப்படுகிறது. “கற்றுக்கொள்” என்ற வார்த்தையே முக்கியமாக இருக்கிறது—பிள்ளை கற்றுக்கொள்வதற்கேற்ற வயதையுடையதாக இருக்கவேண்டும்.
மிகச் சிறிய பிள்ளைகள், அவர்கள் நசுக்குவதும், அழுத்துவதும் ஒரு பிராணிக்கு வலியுண்டாக்கக்கூடியதாக இருக்கும், அது நிரந்தரமான கெடுதியை விளைவிக்கலாம் என்பதை உணராதவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறாக, வெள்ளெலி ஒன்றை வைத்திருக்க விரும்பிய மூன்று வயது பையனின் தாய், மிருக வைத்தியரால், அப்படிப்பட்ட உதவியற்ற பிராணியை வைத்திருப்பதற்கு அக்குழந்தை மிகவும் இளையவனாக இருக்கிறான் என்று சொல்லப்பட்டான். அந்தத் தாய் அப்பிள்ளைக்கு ஒரு செல்லப் பிராணியைக் கொடுப்பதற்கு முன் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென்று அம்மிருக வைத்தியர் சிபாரிசு செய்தார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு செல்லப் பிராணியிடம் சரியானபடி நடந்துகொள்ள இலகுவில் வழிகாட்டுதல்களைக் கொடுத்துவிடக்கூடும் என்று நினைக்கலாம். ஆகிலும் இது அவர்கள் பணங்கொடுத்து வாங்கியதைவிட அதிக நேரத்தையும், பொறுமையையும் தேவைப்படுத்தும், மேலும் வீட்டில் பிராணியை வைத்துப் பார்க்கும் விலையை அடிக்கடி அந்தச் செல்லப் பிராணியே கொடுக்க வேண்டியதாக இருக்கும்!
பெற்றோர் தெரிந்திருக்கிற பிரகாரம், குழந்தைகள் அவர்கள் ஏதாவது விரும்பும்போது அதைப் பெற விடாப்பிடியாக இருப்பார்கள். அதனால் அநேக விஷயங்களில் பெற்றோர், “சரி நீ ஒரு செல்லப் பிராணியை வைத்திருக்கலாம், ஆனால் அதை நீயே தான் கவனித்துக்கொள்ள வேண்டும்” என்று விட்டுக்கொடுப்பார்கள். இருந்தாலும், வீட்டிற்குள் நுழைவதற்கு முன் மிதியடியில் கால்களைத் துடைத்துவிட்டு வர அடிக்கடி மறந்து விடுவதுபோல், சிறுவர்கள் மறந்துவிடக்கூடிய சுபாவமுள்ளவர்களாக இருக்கிறார்கள். சரியானபடி பெரியோர்களின் மேற்பார்வையின்றி உயிருள்ள பிராணியின் நலனை ஒரு சிறு பிள்ளையின் கைகளில் ஒப்புவிப்பது ஓர் அபாயகரமான துணிகரச் செயலாக இருக்கும்.
என்ன நேரிடக்கூடும் என்பது ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் முயல்குட்டிகளைப் பராமரிக்க அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்துக் காட்டப்பட்டது. ஒரு நாள் அவர்கள் பாட்டனார் கூண்டுகளின் பக்கமாகச் சென்றபோது, முயல்களுக்குச் சரியானபடி தீனி போடப்படவில்லை, கூண்டுகள் நீண்ட காலமாகவே துப்புரவு செய்யப்படாமல் இருந்ததைக் கண்டார். ஒரு முயல் ஆகாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக கூண்டை விட்டு வெளியே செல்ல முயற்சிசெய்து பற்கள் தேய்ந்து போக கடித்துக்கொண்டிருந்தது.
இதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது? நீங்கள் உங்கள் பிள்ளைக்கு ஒரு செல்லப்பிராணியின் உத்திரவாதத்தைக் கொடுக்க நினைத்தால், ஒரு பூனைக்குட்டியோ, ஒரு நாய் குட்டியோ, எவ்வளவு வசீகரமாக இருந்தபோதிலும், உங்கள் பிள்ளையின் கண்கள் எவ்வளவு வேண்டிக்கொள்வதாக இருந்தாலும், நினைவில் இருக்கட்டும்—முதியவர்தான் அந்தச் செல்லப் பிராணிக்கு முடிவாக பொறுப்பை ஏற்பவராக இருக்க வேண்டும். ஒரு பிள்ளையின் ஆர்வம் சீக்கிரமே குறைந்துபோகும்.
பூனைகளும், நாய்களும்—நீங்களும்
எல்லா முதியோர்களும், வேறு ஒரு ‘நபரை’ குடும்பத்திற்குள் அனுமதிப்பதன் பலன்களை ஆழ்ந்து யோசனை செய்வதில்லை. ஒரு செல்லப் பிராணி கொண்டுவரும் அசெளகரியங்களையும், உத்தரவாதங்களையும் அவர்கள் எப்பொழுதும் முன்னோக்கிப் பார்ப்பதில்லை. இது யெகோவாவின் சாட்சிகளைப் பொறுத்தவரை பிரத்தியேகமான உண்மையாக இருக்கும், அவர்கள் அவர்களுடைய கிறிஸ்தவ ஊழியத்தில் அப்படிப்பட்ட சுறுசுறுப்பான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அடிக்கடி கூட்டங்களில், கிறிஸ்தவ மாநாடுகளில் கலந்துகொள்வதற்கு வெளியே செல்லுகிறார்கள். பிறகு இந்தச் செல்லப் பிராணியைக் கவனிக்க வேறு ஒருவரைக் கண்டுபிடிக்கும் பிரச்னை எழும்புகிறது. நிச்சயமாகவே, பிராணிகளிடத்தில் அதிக அளவு கற்பனையான இணைப்பின் காரணமாக கிறிஸ்தவ நடவடிக்கைகளைத் தவறவிடுவது பொருத்தமாக இருக்காது.—எபிரெயர் 10:24, 25.
இன்று அநேக கணவன்மாரும், மனைவிமாரும் அவர்களுடைய உலகப் பிரகாரமான வேலையினிமித்தம் நாள் முழுவதும் வெளியே இருக்கும்பொழுது, நகர அடுக்கு அறைகளில் தனிமையில் இருக்கும் பூனைகளும், நாய்களும் ஒரு வளரும் பிரச்னையாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு ஸ்திரீயானவள் அவளுடைய பூனை விசித்திரமாக நடந்துகொண்டிருந்ததால் அதைத் தூங்க வைக்க மிருக வைத்தியரிடம் சென்றாள். இந்தப் பூனை அறையில் பல மணிநேரம் ஒரே நாளில் அடைக்கப்பட்டிருந்ததை அந்த மிருக வைத்தியர் கண்டுபிடித்தபோது, அதுதான் அந்தப் பூனை அப்படி நடந்துகொண்டதற்குச் சாத்தியமான காரணம் என்ற முடிவுக்கு அவர் வந்தார். பூனைகள் அமைதியான வாழ்க்கையை நடத்தும் சுபாவமுள்ளவையாக இருந்தபோதிலும் அவை இன்னும், அவற்றின் மனித ‘குடும்பத்துடன்’ சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கின்றன. மற்ற மிருகங்கள், ஒரு வாகனத்தில் அடைத்து வைத்திருந்தபோது போதுமான காற்றோட்டம் இல்லாததால் பாதிக்கப்பட்டன.
நாய்களும் உத்திரவாதத்தைக் கொண்டு வருவதாக இருக்கின்றன. அவற்றிற்கு பயிற்சி தேவை. நாயை ஒரு நாளில் ஒரு தடவை வெளியே நடத்திச் சென்றுவிட்டு பிறகு அதைத் தனிமையில் (அது ஏற்கெனவே இரவை கழித்திருக்கும்) ஓர் இருட்டு அறையில் விடுவது அல்லது குட்டையான சங்கிலியால் கட்டிவைப்பது போதுமானதல்ல. இங்கிலாந்தில் ஒரு குடும்பம் மந்தையைக் காக்கும் சுறுசுறுப்பான நாயை வைத்திருந்தனர், ஆனால் ஆடுகள் இல்லை. அந்த நாய் நரம்பு கோளறினால் கஷ்டப்பட்டு அதை ஒரு விவசாயிக்குக் கொடுத்துவிட வேண்டியதாக இருந்தது.
அதனால், ஒருவருக்கு உண்மையில் ஓர் செல்லப் பிராணி வேண்டுமானால், அவர் ஆரோக்கியமுள்ள செல்லப் பிராணிக்குத் தேவையான தியாகத்தை தினமும் செய்ய விருப்பமுள்ளவராக இருக்கிறாரா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அவரிடம் சரியான பாதுகாப்புக்கும், கவனிப்புக்கும் செளகரியங்கள் இருக்கின்றனவா? ஞாபகத்தில் இருக்கட்டும் பிராணிகள் சாப்பிடுகின்றன, பெரிய பிராணிகள் அதிகமாக சாப்பிடுகின்றன! கருத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு காரியம்—அது உங்கள் பணத்தை அதிகம் செலவழிக்கச் செய்துவிடும். பிராணிகள் நிச்சயமாகவே சுகவீனமடையும், அதற்கான மருத்துவ செலவு உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும்.
இன்னொரு காரணம் சுகாதாரம். அநேக மிருகங்களின் நாக்கு அவைகளின் சுத்தம் செய்யும் துணியாகவும் இருக்கிறது, அதை அவை உடலின் எல்லாப் பகுதிகளிலும் உபயோகிக்கின்றன! பிராணிகள், தங்கள் உடம்பிற்குள்ளே செல்லும் கிருமிகளைக் கையாளுவதற்கு ஆயத்தமாக இருந்தபோதிலும், பிள்ளைகள் அப்படி இல்லை. ஆகையால் உங்கள் பிள்ளை ஒரு பிராணியை முத்தமிட ஊக்குவிக்காதீர்கள். உங்கள் குழந்தையின் முகத்தை அல்லது கைகளை ஒரு பிராணி நக்க அனுமதிப்பதும்கூட, அந்தப் பிள்ளையை அநேகமாக, பூச்சிகள் உட்பட சுகாதார பிரச்னைகளுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அப்படி நேரிடும்போது, உடனடியாக சோப்பும் தண்ணீரும் உபயோகித்து கழுவுவது தொத்து நோய் வராமல் தவிர்க்கும். செல்லப் பிராணிகளுக்கென்றே சாப்பாட்டுக் கிண்ணங்கள் தனியாக இருக்க வேண்டும், மனிதர்களால் உபயோகப்படுத்தும் தட்டுகளை அவை நக்க விடக்கூடாது. பிராணிகள் தெள்ளுப்பூச்சிகள் மற்றும் “விரும்பத்தகாதவைகளை” வீட்டிற்குள் கொண்டுவரக்கூடும். நாய்களின் சொந்தக்காரர்கள் சிலர் புத்திசாலித்தானமாக அவற்றை தங்கள் வீடுகளுக்குள் அனுமதிப்பதில்லை.
பறவைகளும் மீன்களும்—நீங்களும்
‘ஆனால் பிறகு ஒரு பறவையைப் பற்றியதென்ன?’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். ‘அது மிக சுலபம்—நீங்கள் அதை ஒரு கூண்டில் வைத்து அதற்கு அவ்வப்போது உணவளிக்கிறீர்கள்.’ ஆஸ்திரேலியா கிளிகள் (பட்கெரிகார்ஸ்) அல்லது நீண்ட வால்களைக் கொண்ட சிறிய கிளிகள் (பராகீட்ஸ்) மிகவும் புகழ்பெற்றவை, சில வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களைச் சொல்ல அவைகளைப் பயிற்றுவிக்கக்கூடும். கானரி பறவைகள் கூட, சந்தோஷமாக பாடிக்கொண்டிருக்கையில் காணும்போது மகிழ்ச்சியுடையதாக இருக்கும். ஆனால் பறவைகளுக்கும்கூட கணிசமான கவனிப்பு தேவை.
ஓர் ஆலோசகர் இப்படி எழுதுகிறார்: “ஆஸ்திரேலியா கிளி ஓர் உயிருள்ள பிராணி, அதுவும் மகிழ்ச்சிள்ள ஒன்று. . . . அந்தப் பறவையைப் பெற்றுக்கொண்ட உடனேயே அதன் சுகநலத்துக்கு நீங்கள் உத்தரவாதத்தை ஏற்கிறீர்கள். உணவளித்தல், இருப்பிடத்தின் தேவைகள் முதலியவைகளைப் பற்றிய குறைந்த அறிவு, மற்றும் அப்பறவையின் இயல்பு, குணாதிசயங்களைப் பற்றி விளங்கிக் கொள்ளாமலிருப்பது, பல ஆண்டுகளாக எண்ணிலடங்காத ஆஸ்திரேலியா கிளிகள் மோசமான வாழ்க்கையை வாழவேண்டியதாகி, சரிவர கையாளப்படாமல், வெகு விரைவில் சாகும்படி நேரிட்டது. ஆகையால் செல்லப் பிராணிகளை விற்கும் கடைக்குச் செல்வதற்கு முன் கவனமாக யோசித்துப் பாருங்கள்.”
மிருகங்களின் சுகாதாரத்தைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அவை பறவைகளுக்கும் பொருந்தும். அவற்றின் அலகுகள்தான் அவைகளின் சுத்தம் செய்யும் துணியாக இருக்கின்றன. நிச்சயமாகவே ஆஸ்திரேலியா கிளி மேஜையைச் சுற்றி நடக்க விடப்பட்டு, சர்க்கரை மற்றும் வேறு உணவுகளைக் கொத்தித் தின்ன வைப்பது ஞானமுள்ளதாக இருக்காது; அல்லது ஒரு பறவைக்கு உங்கள் வாயிலிருந்தோ அல்லது உங்கள் தட்டிலிருந்தோ உணவை ஊட்டுவது புத்திசாலித்தனமாக இருக்காது. வீட்டிலே அவிழ்த்துவிடப்பட்ட ஒரு பறவை சங்கடமான இடங்களில் அதன் எச்சமிட்டுவிடும்.
மீனைப்பற்றியதென்ன? அநேக குடும்பங்கள் அவர்கள் வசிக்கும் அறையில் உஷ்ணமண்டல கவர்ச்சியான மீன்களுக்கு மீன் தொட்டி வைக்க விரும்புவார்கள். அதைக் கவனிக்க அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவை உங்கள் கவலையைக் குறைப்பதாக இருக்கின்றனவா? அதற்கு மாறாக, தண்ணீரை சரியான உஷ்ணநிலையில் கட்டுப்படுத்துவது, தண்ணீரில் பிராணவாயுவை ஏற்றுவது, வெளிச்சம், சுத்தப்படுத்துதல் அல்லது உணவு கொடுப்பதில் ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும், தொட்டி முழுவதும் செத்த மீன்கள் இருக்க நீங்கள் காண்பீர்கள். ஆம், மீன்கள்கூட ஞானமுள்ள கவனிப்பை அவசியப்படுத்துகிறது.
பொது அறிவும் சமநிலையும்
நீங்கள் ஒரு செல்லப் பிராணியை வளர்க்கலாமென நினைத்தால், அல்லது ஏற்கெனவே செல்லப் பிராணியை வைத்திருந்தால், தெளிவாகவே அதன் உணவு, ஆரோக்கியம், இவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு தேவையாக இருக்கிறது. ஒரு சில நிமிடங்களின் போதனை போதது. அநேக பொது நூலகங்கள் வீட்டுப் பிராணிகள், செல்லப் பிராணிகளைக் கவனிப்பதைப் பற்றிய விவரங்களைக் கொண்ட புத்தகங்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் செல்லப் பிராணிகளை விற்கும் கடைகளில் பிராணிகளின் கவனிப்பைப் பற்றிய பிரயோஜனமுள்ள வெளியீடுகளை பொதுவாக வைத்திருப்பார்கள்.
நிச்சயமாகவே, நாம் செல்லமாக வளர்க்கும் பிராணிகளை வைத்திருக்க வேண்டுமென்று விரும்பினால், அவைகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்துகொள்ள அதிகப்படியான முயற்சி எடுப்பது மதிப்புள்ளதுதான். பிறகு, செல்லப் பிராணியின் சொந்தக்காரருக்கும் செல்லப் பிராணிக்கும் அந்தக் கூட்டுறவு மகிழ்ச்சியுள்ளதாக இருக்கும். (g89 6⁄8)
[பக்கம் 15-ன் படம்]
ஒரு பூனைக்குட்டி மகிழ்ச்சிதரும் ஒன்று, ஆனால் அதை முத்தமிடுவது சுகாதாரமற்றது