புகையிலையும் உங்கள் ஆரோக்கியமும் உண்மையிலேயே ஒரு தொடர்பு இருக்கிறதா?
“புகைபிடிக்காமல் இருப்பதற்கு நன்றி”—இக்காலத்திற்கான ஓர் அறிவிப்பு.
“புகைபிடிப்பதற்காக நன்றி”—ஒரு புகையிலை நிறுவனத்தாரின் பத்திரிகையில் அதைத் தாக்கி ஓர் அறிவிப்பு.
போர் அணிகள் தயாராக இருக்கின்றன, பிரசாரம் செய்வதற்காகப் பேனாக்களும் கணிப்பொறிகளும் செயல்படுத்தப்படுகின்றன. விளம்பரம் செய்யும் ஸ்தபனங்கள் தங்களுடைய எதிர்மாறான செய்திகளை வெளியிடுகின்றன. உலக சந்தையில் இப்போர் நடக்கிறது. இது புகையிலைப் போரகும், உட்பட்டிருக்கும் பணயம் அதிகம். வருடத்திற்கு நூறு கோடிக்கணக்கான டாலர்கள். புகைபிடித்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள்.
இந்தப் போர் இரு முக்கியமான நிலைகளில் நடக்கிறது—பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம். புகைபிடிப்பதை எதிர்ப்பவர்களுக்கு, ஆரோக்கியத்தைப் பற்றிய அக்கறையே முதல் இடத்தை வகிக்கிறது. புகையிலை பிரபுக்களுக்கும் இந்தத் தொழில் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், பொருளாதாரமும், இலாபமும், உத்தியோகங்களும் அக்கறைக்குரியவையாக இருக்கின்றன. உணர்ச்சி வேகங்களும் எதிர்விளைவுகளும் அதிகமாக உண்டாகின்றன. ஒரு விமான நிலையத்தில் புகைபிடிப்பவர் ஒருவர் தன் பக்கத்தில் நிற்பவரிடம் சிகரெட் லைட்டர் கேட்டார். “மன்னியுங்கள், நான் புகைபிடிப்பதில்லை,” என்ற வெகுளித்தனமான பதில் வந்தது. “நீங்கள் புகைபிடிப்பீர்களா என்று நான் கேட்கவில்லை,” என்று புகைபிடிப்பவர் சீறினார்.
ஆனால் இந்த மாறுபட்டக் கருத்தின் கருவில் இருப்பது என்ன? புகைபிடிப்பது உண்மையிலேயே உங்களுக்கு அவ்வளவு கெடுதியா? அதை நீங்கள் விட்டுவிடவேண்டுமா?
அரசாங்கத்தின் உடல்நல எச்சரிப்புகள்
ஐக்கிய மாகாணங்களில் புகையிலை மற்றும் புற்று நோய் பற்றிய பிரச்னை பல பத்தாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. புற்று நோய்க்கும், புகையிலைக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறித்த முறையில் கண்டு பிடிக்க உதவி, அதனால் புற்று நோய்க்குக் காரணமாகும் பொருட்களை விலக்கி சிகரெட்டுகளைத் தயாரிப்பதற்காக 1960-ல் புகையிலை தொழிற்சாலை இலட்சக்கணக்கான டாலர்களை இந்த ஆராய்ச்சிக்கு வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. இதன் ஒரு விளைவு ஒருவேளை புகையிலை உற்பத்தியாளர்கள் பேரம் பேசியதைவிட அதிகமாக இருந்திருக்கலாம்.
1964-ல் ஐக்கிய மாகாணங்களின் தலைமை அறுவை சிகிச்சை மருத்துவர் புகைபிடிப்பதன் ஆபத்துக்களைக் குறித்த முதல் அறிக்கையை வெளியிட்டார். 1965-லிருந்து ஐ.மா.-விலுள்ள சிகரெட்டு உற்பத்தியாளர்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அவர்களுடைய சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைகளை அச்சிட வேண்டியிருக்கிறது. முதலில் இந்தச் செய்தி தாழ்வான தொனியிலிருந்தது: “எச்சரிக்கை: சிகரெட்டு பிடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று அறுவை சிகிச்சை மருத்துவர் தீர்மானித்திருக்கிறார்.” பிறகு 1985-ல் புகையிலை சங்கங்கள் தங்களது விளம்பரங்களிலும், தங்கள் பொருட்கள் மீதும் நான்கு செய்திகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட வேண்டியிருந்தது. ஒவ்வொன்றும் இந்த வார்ததைகளைக் கொண்டு ஆரம்பிக்கிறது: “அறுவை சிகிச்சை மருத்துவர் எச்சரிக்கை.” பிறகு அந்த வெவ்வேறு செய்திகள்: “புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கும், இருதய நோய்க்கும், எம்ஃபிஸீமாவுக்கும் காரணமாகும், மேலும் கர்ப்பத்தையும் சிக்கலாக்கலாம்.” (பக்கம் 4-ல் இருக்கும் பெட்டியைப் பார்க்கவும்.) “கர்ப்பிணி பெண்கள் புகைபிடிப்பது கருச் சேதத்திலும், உரிய காலத்திற்கு முற்பட்ட பிரசவத்திலும் குறைந்த எடையுடன் கூடிய பிறப்பிலும் முடிவடையலாம்.” “இப்பொழுதே புகைபிடிப்பதை நிறுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய விபரீதங்களைக் குறைக்கிறது.” “சிகரெட் புகையில் கார்பன் மோனாக்ஸைடு அடங்கி இருக்கிறது.”a
ஐக்கிய மாகாணங்களைத் தவிர மற்ற சில நாடுகளும், சிகரெட்டுகளைக் குறித்து எச்சரிக்கைகளை அளிக்கின்றன. இந்த வார்த்தைகள் அடங்கிய விளம்பரங்களை இந்தியா டுடே என்ற பத்திரிகை கொண்டுள்ளது: “சட்ட முறையான எச்சரிக்கை: சிகரெட் புகைப்பது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.” கானடாவில் சிறிய எழுத்தில் அவர்கள் குறிப்பிட்டது: “எச்சரிக்கை: ஆரோக்கியமும், பொது நலமும் நாடும் கானடா புகைபிடிக்கும் அளவிற்கேற்ப ஆரோக்கியத்திற்கு ஆபத்தும் அதிகரிக்கிறது—புகையை உள்ளிழுப்பதைத் தவிர்க்கவும் என்று ஆலோசனை அளிக்கிறது.” மே 31, 1988 முதல் கானடாவில் புகையிலையை விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் சிகரெட் விளம்பரங்கள் இந்த வார்த்தைகளைக் கொண்டுள்ளன: “பாதி டார் [அல்லது குறைவான டார்] மேன்மைதங்கிய அரசின் விளக்கம் அபாயம்: அரசாங்கத்தின் உடல்நல எச்சரிக்கை: சிகரெட்டுகள் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கக்கூடும்.” 1962 முதல் இத்தாலியில் புகையிலையை விளம்பரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. (இருந்தபோதிலும் கடந்த 20 ஆண்டுகளில் இத்தாலியர் சிகரெட் புகைப்பதை இரட்டித்துள்ளனர்!) கடந்த ஆண்டுகளில் நடந்த 50,000-ற்கும் அதிகமான ஆராய்ச்சிகளின் அசைக்கமுடியாத, விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தின் பேரில் அளிக்கப்பட்ட இவ்வளவு எச்சரிக்கைகளின் தவிர்க்க முடியாத முடிவு இதுவே—புகைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்து!
புகைபிடிப்பது உலகமுழுவதும் நடக்கும் ஒரு காரிமாயிருக்கின்ற போதிலும், இந்தப் பொருளின் மீது எச்சரிக்கைகளை அச்சிட வேண்டுமென்று எல்லா நாடுகளும் வற்புறுத்துவதில்லை. ஒரு வட்டாரத்தில் வியாபாரம் நலிந்துவிட்டால், புகையிலை அரக்கர்கள் அவர்கள் அதிக செல்வாக்குள்ள விளம்பரங்களைக்கொண்டு மற்ற நாடுகளில் வியாபாரத்தை ஆரம்பித்துவிடுகிறார்கள். உங்கள் நாடு செல்வாக்கான புகையிலை விளம்பரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா? அயல்நாட்டு சிகரெட்டுகள் அதிகக் கவர்ச்சிகரமாகத் தோன்றும்படி செய்யப்படுகின்றனவா? இந்தப் “பெரிய விற்பனைக்கு” பின் மறைந்துள்ள அந்த உண்மைக் கதை என்ன? (g89 7/8)
[அடிக்குறிப்புகள்]
a வாசனையற்ற வாயுவாகிய கார்பன் மோனாக்ஸைடு சிகரெட் புகையில் 1-லிருந்து 5 சதவீத அளவு உள்ளது. மேலும் இது இரத்தத்திலுள்ள பிராணவாயுவை எடுத்துச் செல்லும் கூட்டணுவாகிய ஹீமோக்ளோபினிடம் அதிக ஈடுபாடுள்ளது. இரத்தத்தில் சுற்றிவர வேண்டிய மிக அவசியமான பிராணவாயுவை இது குறைக்கிறது, ஏற்கெனவே இருதய நோயால் அவதிப்படும் ஒருவருக்கு இது ஆபத்தாக இருக்கக்கூடும்.
[பக்கம் 5-ன் பெட்டி]
புகை பிடிப்பதும் எம்ஃபிஸீமாவும்
எம்ஃபிஸீமா என்பது நுரையீரல்களின் விரிவடையக்கூடிய தன்மையை படிப்படியாகக் குறைக்கக்கூடிய ஒரு நோயாகும். இது முடிவில், மாசுபட்ட காற்றைப் போதுமான அளவில் வெளியே சுவாசிக்க இயலாத வண்ணம் செய்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகக் கல்லூரியின் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்களின் முழுமையான வீட்டு மருத்துவ வழிகாட்டி விளக்குகிறது: “எம்ஃபிஸீமாவுடைய (ஐக்கிய மாகாண) மக்கள் ஒரு செயல் மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்: அவர்கள் பொதுவாக ஆண்களாக, 50 முதல் 70 வயதுக்குள், பல வருடங்களாக மிகவும் அதிகமாக புகைபிடித்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த காலத்தில், ஆண்களைப்போல அடிக்கடி பெண்கள் எம்ஃபிஸீமாவால் பாதிக்கப்படாவிட்டாலும், பெண்கள் தொடர்ந்து அதிகமாக புகைபிடிப்பவர்களாக ஆகிவருவதனால் இந்தச் செயல் மாதிரி மாறிவருகிறது.”
அதே கட்டுரை தொடர்ந்து சொல்லுகிறது: “எம்ஃபிஸீமா நோய் வேறொன்றாக வருடக்கணக்கில் தோன்றலாம். எம்ஃபிஸீமா நோயுடைய ஒருவர் சில வருடங்களாக ஒவ்வொரு குளிர் காலத்திலும் பலதடவை அதிக ஜலதோஷத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்; ஒவ்வொரு முறையும் கூடவே அதிக இருமலும் ஒருவேளை விடா மார்புச்சளி நோயும் இருந்திருக்கலாம். அடிக்கடி இருமல் தொடர்ந்திருந்து, விடாத ஒன்றாகிவிடுகிறது.” எம்ஃபிஸீமாவின் வேறு சில அறிகுறிகள் யாவை?
எம்ஃபிஸீமா நோய் மெதுவாக வளர்கிறது. காலையிலும் மாலையிலும் சுவாசிப்பதில் சற்று கஷ்டமாக இருந்தபிறகு சிறிதுகாலம் கழித்து செய்யும் செயல்களிலும் குறுக்கிட ஆரம்பிக்கிறது. மூச்சுத்திணறலைக் கொண்டுவர சிறுதூரம் நடந்தாலே போதுமானதாக இருக்கும்; படிகளில் ஏறிச்செல்வது கடினமாக இருக்கும். முடிவாக, நுரையீரல்களின் மூச்சை உள்ளிழுப்பதற்கும் வெளியே விடுவதற்கும் காற்றை மாற்றுவதற்குமான சக்தி குறையக்குறைய ஒவ்வொரு மூச்சும் ஒரு பெரிய முயற்சியை தேவைப்படுத்தும் ஒரு நிலைமைக்கு வரலாம்; மேலும் இதனால் நோயாளி சாதாரண காரியங்களைக்கூட செய்ய முடியாமல் செயலற்றவனாக்கப்படுகிறான்.”
வினைமையான இருதய இரத்த ஓட்ட நாளங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் எம்ஃபிஸீமா நோய் வழிநடத்தலாமென்று அதே மருத்துவ வழிகாட்டி மேலும் கூறுகிறது. உண்மையிலேயே, இது தேவைதானா? உங்கள் அருமையான ஈவாகிய உயிரை ஏன் நிலையில்லாத நிகோடீன் மோகத்திற்கு மாற்றாக அளித்து அழிக்க வேண்டும்?▪
[பக்கம் 4, 5-ன் பெட்டி/படம்]
புகை பிடிப்பதும் கர்ப்பிணிகளும்
சாவியத் பத்திரிகையான நெளகா ஐ ஷீன் (விஞ்ஞானமும் உயிரும்) சமீபத்தில் டாக்டர் விக்டர் காஸ்மின் எழுதிய கட்டுரையை வெளியிட்டது. அதில் அவர் கர்ப்பத்தின் சமயம் தாய் புகைபிடிப்பதால், தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் அபாயத்தை விவரித்தார். அவர் குறிப்பிட்டதாவது: “அவளது உருவ அமைப்பின் தனித்தன்மை நச்சுகளுக்குக் கூருணர்வுடையதாக உள்ளபடியால் அதிகமாக புகைபிடிப்பது பெண்ணின் உறுப்பாண்மையை பாதிக்கிறது. புகையிலையிலிருந்து வரும் புகை ஆரோக்கியத்திற்கு அபாயகரமானப் பொருட்களைமட்டுமே கொண்டுள்ளது.”
புகைபிடிக்கும் தாய்மார்கள் உண்மையிலேயே தங்கள் குழந்தைக்கு நஞ்சூட்டுகின்றனர் என்று கூறுகிறார். “நிகோடீன் மற்றும் அதன் சிதைவு பொருளாகிய கோடினீன் போன்ற நச்சுகள் இப்படிப்பட்ட பெண்நோயாளிகளின் கருவைச் சுற்றியிருக்கும் திரவத்தில் இருப்பதை ஆய்வுக்கூட ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. மின்னணு அணுதரிசினி ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மிக பயங்கரமான காரியம் என்னவென்றால், கர்ப்பத்தின் சமயம் புகைபிடிக்கும் பெண்களில் கொப்பூழ்க் கொடியின் அமைப்பே மாறுகிறது, உயிருக்குத் தேவையான அனைத்தையும் கரு இந்தக் கொடி வழியாகத்தான் தாயினிடமிருந்து பெறுகிறது. . . .
“கருத்தரித்த பிறகு முதல் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தாய் புகைபிடிப்பதனால், கட்டாயமாக, ஆரம்ப கருவின் மத்திய நரம்பு மண்டலம் மிகவும் பாதிக்கப்படுகிறது . . . கர்ப்பத்தின் நான்காவது அல்லது ஐந்தாவது வாரத்தில் இருதய இரத்த ஓட்ட நாள மண்டலம் உருவாகிறது. அப்பொழுது அது முதலில் நச்சுப்படுத்தப்படுகிறது.”
டாக்டர் காஸ்மின் எடுத்த முடிவு? “புகையிலையிலிருந்து வரும் புகை தாயைவிட கருவையே மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.” இது பிரயோஜனமான ஒன்றா? ஐ. மா. மருத்துவ அதிகாரியின் எச்சரிக்கையை நினைவுகூருங்கள்: “புகைபிடிப்பது . . . கர்ப்பத்தைச் சிக்கலாக்கலாம்.” இது அதன் வன்மையைக் குறைத்து சொல்வதாகும்.▪
[படத்திற்கான நன்றி]
WHO/American Cancer Society