மதத்தின் கடந்த கால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 20: 19-வது நூற்றாண்டு முதல்முன்னிலை மீட்பு உடனடியாக வர இருந்தது!
“தெய்வீக ஒளியைக் காண்பதற்கு மிகச் சிறந்த வழி உன் சொந்த மெழுகுதிரியை அணைத்துப் போடுவதாகும்.”—தாமஸ் ஃபுல்லர், ஆங்கில நாட்டு மருத்துவரும் எழுத்தாளரும் (1654–1734)
19-ம் நூற்றாண்டு, கிறிஸ்தவ சரித்திரத்தின் படு சுறுசுறுப்பான காலப்பகுதிகளில் ஒன்று என்பதாக அழைக்கப்பட்டு, தொடக்க கால நூற்றாண்டுகளோடும் சீர்திருத்த ஆண்டுகளோடும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. சமய விழிப்புணர்ச்சியிலும் நடவடிக்கைகளிலும் இப்படிப்பட்ட வளர்ச்சிக்கான காரணங்கள் அநேகமாகவும் வித்தியாசப்பட்டவையாகவும் இருக்கின்றன.
ஆசிரியர் கென்னத் S. லட்டோரெட் 13 பொருத்தமான காரணங்களை பட்டியலிடுகிறார், இவற்றில் சில இந்தப் பத்திரிகையின் முந்தின இதழில் கலந்தாலோசிக்கப்பட்டன. “இத்தனை குறுகிய காலத்தில் மனித சமுதாயம் அடியோடும், இத்தனை வெவ்வேறு வழிகளிலும் முன்னொரு போதும் மாறியது கிடையாது” என்பதாக அவர் சொல்லுகிறார்
ஐக்கிய மாகாணங்களில், மறுமலர்ச்சி தெளிவாக காணப்படத்தக்கதாக இருந்தது. உதாரணமாக, நூற்றாண்டின் ஆரம்பத்தில் சர்ச் உறுப்பினர் எண்ணிக்கை, மக்கள் தொகயில் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது, அதன் முடிவில் ஏறக்குறைய 40 சதவீதமாக உயர்ந்தது. 1780-ல் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, சமய போதனைக்காக ஞாயிறன்று நடத்தப்படும் பள்ளிகளுக்கு பொதுமக்களிடையே மதிப்பு வளர்ந்தது. இதற்கு ஒரு காரணம், ஐரோப்பாவுக்கு நேர் எதிர் மாறாக, சர்ச்சும் அரசும் வெவ்வேறாக பிரிந்திருந்த ஐக்கிய மாகாணங்களில் பொதுப் பள்ளிகளில் சமயப் போதனை தடைசெய்யப்பட்டிருந்தது. மேலுமாக டஜன்கள் கணக்கில் சமயக் கிளையினைச் சார்ந்த கல்லூரிகளும், பல்வேறு சமய கிளைகளும் சேர்ந்து ஏற்படுத்திய பைபிள் சங்கங்களும் நிறுவப்பட்டன, நூற்றாண்டின் முதல் பாதியின் போது குறைந்தபட்சம் 25 இறையியல் கல்விக் கூடங்கள் ஐக்கிய மாகாணங்களில் ஸ்தபிக்கப்பட்டன.
இதற்கிடையில், உலகளாவிய அளவில், புராட்டஸ்டன்டு மதம் மிஷனரி–மனதுள்ளதாக ஆகிக்கொண்டு வந்தது. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சக்கிலியரும் ஆசிரியருமான வில்லியம் கேரி, 1792-ல், புற மதத்தினரை மதமாற்றுவதற்கு பொருள்வளங்களை உபயோகிக்க வேண்டிய கிறிஸ்தவர்களின் கடமைகளுக்குள் ஒரு விசாரணை என்ற புத்தகத்தைப் பிரசுரிப்பதன் மூலம் வழிகாட்டியிருந்தார். இந்தியாவில் மிஷனரிகளாக பணி புரிகையில், கேரியும் அவருடைய கூட்டாளிகளும் பைபிளை முழுமையாக அல்லது பகுதிகளாக 40-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் மற்ற ஆசிய மொழிகளிலும் கிளைமொழிகளிலும் மொழிபெயர்த்தார்கள். பைபிளை விநியோகிப்பதில் இந்தத் தொடக்க கால மிஷனரிமார்களில் சிலர் செய்திருக்கும் பணி பாராட்டப்படத் தகுந்ததாகும்.
ஒப்பிடுகையில், புதிய அறிவியலாக இருக்கும் பைபிள் சார்ந்த புதைப் பொருள் ஆய்வும்கூட கடந்த நூற்றாண்டின் போது அந்தஸ்தைப் பெற்றது. 1799-ல் எகிப்திலிருந்த ஃபிரெஞ்சு படைவீரர்கள் இப்பொழுது ரோசட்டா கல் என்றழைக்கப்படும் கருப்பு எரிமலை பாறையாலான ஒரு கற்பலகையை கண்டுபிடித்தனர். இது இரண்டு முறை எகிப்திய சித்திர எழுத்து முறையின் இரண்டு வித்தியாசமான வடிவங்களிலும், ஒரு முறை கிரேக்குவிலுமாக மூன்று தடவைகள் எழுதப்பட்ட ஒரே எழுத்துப்பொறிப்புகளைக் கொண்டிருந்தது. இது எகிப்திய சித்திர எழுத்து முறையின் பொருளை கண்டுபிடிப்பதில் மதிப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. அதற்குப்பின் விரைவிலேயே, அசீரியரின் ஆப்பு வடிவ எழுத்துக்களும்கூட விளங்கிக்கொள்ளப்பட்டன. ஆகவே அசீரியாவிலும் அதற்குப் பின் விரைவில் எகிப்திலும் நில அகழ்வு ஆரம்பமானபோது தோண்டியெடுக்கப்பட்ட கலை வேலைபாடு கொண்ட பொருட்கள் புதிய அர்த்தத்தை எடுத்துக் கொண்டன. அநேக பைபிள் பதிவுகள் மிகச் சிறிய விவரங்கள் வரையிலுமாக உண்மையாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
தங்கள் சொந்த மெழுகுதிரிகளை எரிப்பது
மதத்தில் அக்கறை வளர்ந்த போது, எதிர்கால சீர்திருத்தவாதிகளும் எண்ணிக்கையில் பெருகினர். என்றபோதிலும் அனைவரும் உண்மை மனதுள்ளவர்களாக இருக்கவில்லை என்பது தெளிவாக இருந்தது. முன்கூறப்பட்ட ஆசிரியர் கென்னத் S. லட்டோரெட், சில புதிய மதப் பிரிவுகள் “பொறாமை, சண்டை, தனிப்பட்ட பேராசை” ஆகியவற்றிலிருந்து தோன்றின” என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறார். ஆனால் சீர்திருத்தவாதிகள் சொந்த பேராவலின் மெழுகுத் திரிகளை எரிய வைப்பது, மெய் வணக்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்குரிய கடவுளுடைய தெரிவாக இருக்கும்படி எதிர்பார்க்கப்பட முடியாது.
தனிப்பட்ட மெழுகுதிரிகள், மனதை குழப்பும் வகையில் அணைந்தணைந்து எரிந்து கொண்டிருக்கையில், இறையியல் சிந்தனை தாறுமாறானது. முக்கியமாக ஜெர்மன் பல்கலைக்கழகங்களின் விளைவாக இருந்த வரலாற்று முறை ஆய்வு ஆராய்ச்சி, “முற்போக்கு” விஞ்ஞான கண்ணோட்டத்தின் வெளிச்சத்தில் வேதாகமத்துக்கு மறுபொருள் கூறியது. வரலாற்று முறை ஆய்வாளர்கள் பைபிளை, யூதருடைய மத அனுபவங்களின் பதிவைக் காட்டிலும் சற்று அதிகமானது என்பதாக கருதினர். இரட்சிப்பின் வழியை தீர்மானிப்பதில் பைபிளின் அதிகாரம் இன்றியமையாததாக இருப்பதும், அது ஆதரிக்கும் ஒழுக்க தராதரங்களின் ஞானமும் சந்தேகத்துக்குட்படுத்தப்பட்டது.
வரலாற்று முறை ஆய்வு ஆராய்ச்சி குறிப்பாக, புராட்டஸ்டன்டு குருமார் மத்தியில் உடனடி ஆதரவைப் பெற்றது. அறிக்கை ஒன்றின்படி, 1897-க்குள், ஜெர்மனியிலிருந்த 20 புராட்டஸ்டன்டு இறையியல் பல்கலைக்கழக குழுவின் ஓர் உறுப்பினர்கூட, முதல் ஐந்து புத்தகங்கள் அல்லது ஏசாயா புத்தகத்தின் எழுத்தாண்மையைப் பற்றிய சம்பிரதாயக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை.
ஒருசில வருடங்களுக்குப் பின்னால், 1902-ல் ஸ்கட்லாந்திலுள்ள பிரிஸ்பிட்டேரியன் சர்ச்சுகளின் பொதுப்பேரவை மாநாட்டில் வரலாற்று முறை ஆய்வு குறித்து கருத்து வேறுபாடு தோன்றியது. எடின்பர்க் ஈவினிங் நியூஸ் இவ்வாறு அறிவித்தது: “வரலாற்று முறை ஆய்வாளர்கள் பிரகாரம், . . . பைபிள் கட்டுக் கதைகளின் ஒரு தொகுப்பாகும், திறமையுள்ள ஓர் ஒழுக்க நெறி ஆசிரியர் ஒழுக்க நெறி போதனைகளை ‘ஈசோப் கட்டுக்கதைகளிலிருந்து’ பிரித்தெடுக்கிற விதமாகவே, ஒரு பிரசங்கியார் அதிலிருந்து ஒழுக்கநெறி போதனைகளை பிரித்தெடுக்க முடியும்.” என்றபோதிலும் செய்தித்தாள் பின்னர் குறிப்பிட்டது: “தொழிலாள வர்க்கத்தினர் முட்டாள்கள் இல்லை. தாங்கள் தாமே மனதின் பிரகாரமாய் ஒரு குழப்பதில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆட்கள் பேசுவதை செவிகொடுக்க அவர்கள் சர்ச்சுக்குப் போகமாட்டார்கள்.”
ஒரு சில நாட்களுக்குப் பின் வந்த இரண்டாம் கட்டுரை இன்னும் அதிக வெளிப்படையாக இவ்விதமாக குறிப்பிட்டது: “விஷயங்களை மறைப்பதில் பிரயோஜனமில்லை. புராட்டஸ்டன்டு சர்ச் ஒழுங்கமைக்கப்பட்ட மாய்மாலமாகவும், அதன் தலைவர்கள் கொடிய மோசடிக்காரர்களாகவும் இருக்கிறார்கள். ‘பகுத்தறிவு சகாப்தம்’ ஆசிரியர் இன்று உயிரோடிருப்பாரானால், சமய நம்பிக்கையற்ற டாம் பேய்ன் என்பதாக அவர் ஏளனமாக பேசப்படமாட்டார், ஆனால் அவர் அருட்டிரு தாமஸ் பேய்ன், D. D., எபிரெய மற்றும் பழைய ஏற்பாட்டு விரிவுரை பேராசிரியர், யுனைட்டட் ஃபிரி காலேஜ், க்ளாஸ்கோ என்றைழைக்கப்படுவார். இறையியல் பேராசிரியராக கைநிறைய சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு . . . புராட்டஸ்டன்டு சர்ச் மேடையிலிருந்து பிரசங்கிப்பதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.”
மத சம்பந்தமான ஒரு திடீர் பின்னடைவு
ஆரம்பம் முதற்கொண்டு, புராட்டஸ்டன்டு மதம் தனிப்பட்ட மாற்றத்துக்கும் கிறிஸ்தவ அனுபவத்துக்கும் முக்கியத்துவம் அளித்து முக்கியமாக வேதாகமத்தின் மீது சார்ந்திருந்து, புனித சடங்குகளையும் பாரம்பரியங்களையும் மதிப்புக் குறைவாக கருதியிருக்கிறது.
1830 மற்றும் 1840-களில், அநேக புராட்டஸ்டன்டு சுவிசேஷகர்கள், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நெருங்கிவிட்டதாகவும் அதோடு ஆயிரம் வருட ஆட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் அறிவிக்க ஆரம்பித்தனர். நியு யார்க் விவசாயியான வில்லியம் மில்லர், இரண்டாம் வருகை சுமார் 1843 போல் இருக்கும் என்பதாக துணிந்து கூறினார். ஆயிர வருட ஆட்சியில் நம்பிக்கையுடையவர்களின் இந்த இயக்கமானது அதிக முதன்மை வாய்ந்ததும் துணிச்சலானதுமான ஒரு வகையான சுவிசேஷத்துக்கு அஸ்திபாரம் போட்டது, இது மாறா மரபேற்புக் கோட்பாடு என்று அறியப்படலானது.
மாறா மரபேற்புக் கோட்பாடு என்பது பெரும்பாலும் முற்போக்கு மனப்பான்மையுடைய புராட்டஸ்டன்டு மதம் ஊட்டி வளர்த்திருந்த ஐயுறவாதம், கட்டுப்பாடற்ற சிந்தனை, பகுத்தறிவாதம் மற்றும் ஒழுக்கத்தில் கண்டிப்பில்லாமைக்கு எதிராக ஒரு திடீர் பின்னடைவாகவே இருந்தது. 1909 முதல் 1912 வரையாக மூடி பைபிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அடிப்படை தத்துவங்கள் என்ற 12 தொடர் ஏடுகளிலிருந்து தன் பெயரை பின்னால் ஏற்றுக்கொண்டது.
மாறா மரபேற்புக் கோட்பாட்டாளர் குறிப்பாக ஐக்கிய மாகாணங்களில், அதனுடைய திறம்பட்ட வானொலி மற்றும் டிவி ஊழியங்கள், அதன் பைபிள் நிறுவனங்கள் மற்றும் நன்கு விளம்பரப்படுத்தப்படும் புத்துயிர் கூட்டங்களின் மூலம் நன்கு அறியப்பட்டவையாக ஆகியிருக்கின்றன. என்றபோதிலும் அண்மையில், அதனுடைய மிகப் பிரபலமான தலைவர்களில் சிலருடைய நிதி சம்பந்தமான மற்றும் பால் சம்பந்தமான ஒழுங்கின்மையின் கீழ் அதன் நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளது. விசேஷமாக அண்மையில் கலைக்கப்பட்ட மாரல் மெஜாரிட்டி 1979-ல் உருவானது முதற்கொண்டு அதனுடைய அதிகப்படியான அரசியல் நடிவடிக்கைக்காக அது விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
பைபிளை ஆதரிப்பதாக உரிமைப்பாராட்டிக் கொண்டு மாறாமரபேற்புக் கோட்பாடு உண்மையில் அதன் அதிகாரத்துவத்தை அழித்துவிட்டிருக்கிறது. தெளிவாகவே சொல்லர்த்தமாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாத வேதவாக்கியங்களுக்கு சொல்லர்த்தமாக பொருள் கூறுவதன் மூலம் அவ்விதமாக அது செய்திருப்பது இதில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஓர் உதாரணம், ஆதியாகமப் பதிவின் பிரகாரம் பூமி 24-மணி நேரம் கொண்ட சொல்லர்த்தமான 6 நாட்களில் சிருஷ்டிக்கப்பட்டது என்ற உரிமைப்பாராட்டலாகும். தெளிவாகவே இவை நீண்ட காலப்பகுதியை உள்ளடக்கிய அடையாள அர்த்தமுள்ள நாட்களாகும். (ஆதியாகமம் 2:3, 4; 2 பேதுரு 3:8 ஒப்பிடவும்.) மாறா மரபேற்புக் கோட்பாடு பைபிளுக்கு தீங்கிழைத்திருக்கும் மற்ற வழிகள், நரக அக்கினியில் நித்திய வாதனை போன்ற வேதபூர்வமற்ற கோட்பாடுகளைப் போதிப்பதும், மதுபானம் பருகுவதையும் பெண்கள் ஒப்பனைப் பொருட்களை உபயோகிப்பதையும் தடை செய்வது போன்ற சில சமயங்களில் வேதாகமத்தால் தேவைப்படுத்தப்படாத மற்ற நடத்தைக்குரிய தராதரங்களை ஊக்குவிப்பதுமாக இருக்கிறது. இந்த விதங்களில், மாறா மரபேற்புக் கோட்பாடு பைபிளின் செய்தியை, மக்கள் பேதமையான, நியாயமற்ற, விஞ்ஞான பூர்வமற்றதாக தள்ளிவிடும்படி செய்திருக்கிறது.
காலம் பற்றிய விஷயம்
தேவைப்பட்டது திரும்ப நிலைநாட்டப்படுவதே, மெய் வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதே! ஆனால் பிரசங்கி 3:1 சொல்வது போல: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு.”
முதல் நூற்றாண்டில், இயேசு, கிறிஸ்தவத்தின் உருவில் மெய் வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டினார். என்றபோதிலும் விசுவாச துரோகம் ஏற்படும் என்பதாக அவர் முன்னுரைத்தார். கோதுமையைப் போல மெய்க் கிறிஸ்தவர்களும், களைகளைப் போல போலி கிறிஸ்தவர்களும் ஆகிய “இரண்டும் அறுப்புமட்டும் வளரும்” என்பதாக அவர் சொன்னார். அந்தச் சமயத்தில் தேவதூதர்கள், “களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிப்பார்கள்”, மெய்க் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய தயவுக்குள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். (மத்தேயு 13:24–30, 37–43) 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தத் திரும்ப நிலைநாட்டப்படுதலுக்கான நியமிக்கப்பட்ட காலம் வாசலருகே இருந்தது.
சார்லஸ் டேஸ் ரஸல், 1852-ல் பென்சில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் பிறந்தார். சிறு பிள்ளையாக இருக்கையிலேயே அவர் பைபிளில் அதிக ஆர்வத்தை காட்டினார். அவருடைய 20 வயதுகளின் ஆரம்பத்தில் குடும்ப வியாபாரத்திலிருந்து தன் கவனத்தைத் திருப்பி, தன்னுடைய எல்லா நேரத்தையும் பிரசங்கிப்பதற்கு அர்ப்பணித்தார். 1916-ல் 64 வயதில் அவர் மரிப்பதற்குள், அவர் 30,000-க்கும் மேற்பட்ட பிரசங்கங்களை செய்ததாகவும், 50,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புத்தகங்களை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
பைபிளை முன்னேற்றுவிப்பதில் மற்றவர்கள் செய்திருக்கும் பாராட்டத்தக்க வேலையை ஒப்புக்கொண்ட போதிலும், வெறுமென பைபிளை மொழிபெயர்ப்பதும், அச்சிடுவதும், விநியோகிப்பதும் போதுமானதல்ல என்பதாக ரஸல் உணர்ந்தார். ஆகவே 1879-ல் இப்பொழுது காவற்கோபுரம் என்று அறியப்படும் பத்திரிகையை வெளியிட ஆரம்பித்தார். அதன் முதல் இதழ் இவ்வாறு சொன்னது: “எந்த ஒரு கேள்விக்கும் வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதற்கு பதிலாக அதிகமாக என்னுடைய சர்ச் என்ன சொல்லுகிறது என்பதாகவே நாம் கேட்கும் மனச்சாய்வுள்ளவர்களாக இருக்கிறோம். அதிகமாக இறையியல் படிக்கப்படுகிறது, பைபிள் போதிய அளவு படிக்கப்பட்டில்லை. அப்படியென்றால், ‘வேதாகமம் நம்மை ஞானவானாக்கக் கூடியதாயிருக்கிறது’ ‘ஆண்டவருடைய சாட்சியங்கள் பேதைகளை ஞானிகளாக்குகிறது’ என்ற எண்ணத்துடன் நாம் ஆராய்வோமாக.”
இன்று, 112 வருடங்களாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வரும் காவற்கோபுரம் (இப்பொழுது 111 மொழிகளிலும் ஒவ்வொரு இதழும் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான பிரதிகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது) தொடர்ந்து கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்து வருகிறது. பைபிள் போதிப்பதை படிப்பதிலும், புரிந்து கொள்வதிலும் பொருத்துவதிலும் இது அளித்துவரும் உதவியை அநேகர் போற்றுவதற்கு கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ரஸல், அவருடைய காலத்தில் வாழ்ந்து வந்த சீர்திருத்த மனமுள்ள மற்ற அநேகரைப் போல் இல்லாமல், கடவுளிடமாக விசேஷமான அணுகுமுறையை பிரசங்கிக்கவோ, தெய்வீக தரிசனங்களை அல்லது வெளிப்படுத்தல்களைக் குறித்து பெருமைப்பாராட்டவோ மறைத்துவைக்கப்பட்ட புத்தகங்கள் வடிவிலோ அல்லது வேறு வகையிலோ மறைபொருளான செய்திகளை கண்டுபிடிக்கவோ, சரீர நோய்களை குணமாக்க முடியுமென்றோ ஒருபோதும் உரிமைப் பாராட்டவில்லை. மேலுமாக தன்னால் பைபிளுக்கு அர்த்தஞ் சொல்ல முடியும் என்பதாகவும் அவர் உறுதியாக கூறவில்லை. கடவுளுடைய கைகளில் மனமுவந்து வரும் ஒரு கருவியாக “தன் சொந்த மெழுகுதிரியின்” ஒளி தெய்வீக ஒளியை விஞ்சிவிட அனுமதிக்கும் எல்லா சோதனைகளையும் அவர் எதிர்த்து வந்தார்.
“சத்தியத்தின் ஊழியன் அல்ல சத்தியமே கனப்படுத்தப்படவும் அறிவிக்கப்படவும் வேண்டும்” என்பதாக 1900-ல் ரஸல் எழுதினார். மேலுமாக அவர் எழுதினதாவது: “எல்லா சத்தியமும் கடவுளுக்கே உரியது என்பதை மறந்து சத்தியத்துக்காக பாராட்டை பிரசங்கியாருக்குக் கொடுக்கும் மனச்சாய்வு அதிகமிருந்து வருகிறது. அவர் தம் பிரியத்தின்படி அதை அறிவிப்பதற்கு ஊழியரில் ஒருவரையோ மற்றவரையோ பயன்படுத்துகிறார்.” உவாட்ச் டவர் பிரசுரங்களின் எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழுவின் அங்கத்தினர்களும் பெயர் அறியப்படாமல் இருக்கத் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
கடவுளுடைய ராஜா சிங்காசனத்திலேற்றப்பட்டார்!
முதல் நூற்றாண்டில், யோவன் ஸ்நனன் கடவுளுடைய நியமிக்கப்பட்ட ராஜாவாக இயேசுவின் தோற்றம் சீக்கிரத்தில் இருந்ததை அறிவித்தான். 19-வது நூற்றாண்டில், பரலோக வல்லமையில் அந்த ராஜா சீக்கிரத்தில் வரவிருந்ததை அறிவிப்பதற்குரிய காலம் வந்துவிட்டது. ஆனபடியால், 1880 மார்ச் இதழில் சீயோனின் காவற்கோபுரம் அறிவித்தது: “புறஜாதிகளின் காலங்கள் 1914 வரை இருக்கிறது, பரலோக ராஜ்யம் அது வரையாக முழுமையாக ஆட்சி செலுத்தாது.”
இவ்விதமாக இன்று யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்பட்டிருக்கும் தொகுதி, 1914-ம் ஆண்டு, கடவுளுடைய ராஜ்யத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் என்பதாக நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். கடவுளுடைய ராஜா சிங்காசனத்திலேற்றப்பட்டது, அணைந்தணைந்து எரிந்து கொண்டிருக்கும் பொய் மத மெழுகுதிரி, தெய்வீக ஒளியை இனிமேலும் மறைத்துவிடாதபடிக்கு கடைசியாக அணைத்துப் போடப்படுவதற்கு ஆரம்ப படியாக இருந்தது.
19-ம் நூற்றாண்டு முடிவுக்கு வருகையில், கிறிஸ்தவமண்டல மதம், கடவுளுடைய ஊழியனாக தன்னை அடையாளங்காட்டும் வஸ்திரமில்லாதிருந்தது. அது கடவுளால் கைவிடப்பட பாத்திரமுள்ளதாக இருந்தது. அதனுடைய நியாயத்தீர்ப்பு காலம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. எமது அடுத்த இதழில் இதைக் குறித்து அதிகம் படியுங்கள். (g89 10/22)
[பக்கம் 21-ன் படம்]
சீர்திருத்த பிள்ளைகளில் “பின்னால்” வந்த சிலர்
கிறிஸ்துவின் சர்ச், விஞ்ஞானி: இந்தச் சமய இயக்கம் பொதுவாக கிறிஸ்தவ விஞ்ஞானம் என்று அறியப்பட்டிருக்கிறது. இது வெகுவாக ஆரோக்கிய உணர்வுள்ளவளாக இருந்த மேரி பேக்கர் எட்டியினால் 1879-ல் ஸ்தபிக்கப்பட்டது. 1866-ல் மிக மோசமான ஒரு விபத்திலிருந்து உடனடியாக அவள் குணமானதாகச் சொல்லப்படுகிறது. இது வியாதியஸ்தரை குணப்படுத்தவும் மரித்தோரை எழுப்பவும் இயேசுவுக்கு உதவி செய்த நியமங்களைக் கண்டுபிடித்துவிட்டதாக அவளை உறுதியாக நம்ப வைத்தது. அவளுடைய 1875 புத்தகம் வேதவசன குறிப்புகளோடு விஞ்ஞானமும் உடல் ஆரோக்கியமும், ஆன்மா சரீரத்தின் மீது வெற்றிகொள்கிறது என்றும் பாவம், நோய், மரணம் இன்னும் மற்ற எதிர்மறையான காரியங்கள் சத்தியத்தின் அறிவாலும் மனதுக்கு அதாவது கடவுளுக்கு இசைவான நேர்நிலையான சிந்தனையாலும் வெல்லப்படக்கூடிய பொய்த்தோற்றமே என்றும் கற்பிக்கிறது.
கிறிஸ்துவின் சீடர்கள்: இந்தச் சர்ச் 1832-ல் முன்னிலை மீட்சி மனதுள்ள அமெரிக்க பிரிஸ்பிட்டேரியன்களால் உருவாக்கப்பட்டது. அவர்களுடைய சுலோகம் இதுவாக இருந்தது: “வேதாகமம் பேசுகிற இடத்தில் நாம் பேசுவோம்; வேதாகமம் மெளனமாயிருக்கையில் நாம் மெளனமாயிருப்போம்.” குறிப்புரை ஏடு ஒன்று “கோட்பாடு மற்றும் சமய விஷயங்களில் மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்கள்” என்பதாக அவர்களை விவரிக்கிறது. உறுப்பினர்கள், ஐ.மா. உள்நாட்டுப் போரில் அரசியல்வாதிகள் தங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துவதை அனுமதித்தார்கள். 1906-ல் ஏற்பட்ட கிறிஸ்துவின் சர்ச்சுகளைச் சேர்த்து, 1970-ல் 118 பிரிவுகள் இருந்தன.
இரட்சணிய சேனை: வில்லியம் பூத் இராணுவ படிவமுறைகளை பின்பற்றும் வகையில் ஒழுங்கமைத்த சமயத் தொகுதி. பூத் தம்முடைய 20 வயதுகளின் ஆரம்பத்தில் மெத்தடிஸ்ட் ஊழியத்தில் பிரவேசித்தார், 1861-ல் அவர் தனித்து செயல்பட்ட ஒரு சுவிசேஷகரானார். அவருடைய மனைவியும் அவரும் சேர்ந்து லண்டன் ஈஸ்ட் என்டில் ஏழைகள் மத்தியில் பிரசங்க ஊழியத்தை ஸ்தபித்தனர். இத்தொகுதியின் ‘கிறிஸ்தவ மிஷனன்’ என்ற பெயரிலிருந்து ‘இரட்சணிய சேனை’ என்பதாக 1878-ல் மாற்றப்பட்டது. இரட்சணிய சேனை, வீடு இல்லாதவர்களுக்கு, பசியாயிருப்பவர்களுக்கு, தவறாக நடத்தப்பட்டவர்களுக்கு, பின்தங்கியவர்களுக்கு சமுதாய உதவியளிப்பதன் மூலம் “ஆத்துமாக்களை இரட்சிக்க” நாடுகிறது.
ஏழாம்–நாள் அட்வென்டிஸ்டுகள்: இது 200 அட்வென்டிஸ்டு பிரிவுகளில் மிகப் பெரியது. இரண்டாம் வருகை அல்லது கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கையின் காரணமாக இந்தப் பெயர் ஏற்பட்டது. 1840-களின் ஆரம்பக் காலப் பகுதியில் பாப்டிஸ்டு ஊழியரான வில்லியம் மில்லர் இயக்கத்திலிருந்து அட்வென்டிஸ்டு தோன்றியது. பத்துக் கற்பனைகள் இன்னும் அமுலில் இருக்கிறது என்று கற்பித்து, ஏழாம்–நாள் அட்வென்டிஸ்டுகள் சொல்லர்த்தமான சனிக்கிழமை ஓய்வுநாளை கடைப்பிடிக்கிறார்கள். சில உறுப்பினர்கள் இந்தத் தொகுதியில் அதிக செல்வாக்குப் பெற்ற தலைவர்களில் ஒருவரான எலன் கோல்ட் வைட்டின் எழுத்துக்கள் பெரும்பாலும் பைபிளைப் போன்று ஏவப்பட்டது என்பதாக உரிமைப்பாராட்டுகிறார்கள். இவள் தொடர்ச்சியாக தெய்வீக தரிசனங்களால் விளக்கம் பெற்றுக்கொண்டதாக உரிமைப் பாராட்டினாள்.
[பக்கம் 20-ன் படம்]
ரோசட்டா கல் பைபிளின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய உதவியிருக்கிறது