மதத்தின் கடந்த கால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 21: 1900 முதல்வஸ்திர ஓரங்களில் இரத்தக்கறை
“இரத்தத்தின் மேல் ஆதாரமுடைய உறுதியான அஸ்திவாரம் எதுவும் இல்லை.”ஷேக்ஸ்பியர், ஆங்கில கவிஞரும் நாடக ஆசிரியரும் (1564-1616)
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் மாதத்தில் கயானாவிலுள்ள ஜோன்ஸ்டவுனில் ஏற்பட்ட பெரும் உயிர்ப்பலி உங்களுக்கு நினைவிருக்கிறதா? மக்கள் ஆலயம் என்று அறிப்பட்டிருந்த மதத் தொகுதியைச் சேர்ந்த 900-ற்கும் அதிகமான அங்கத்தினர்கள் மொத்தமாக தற்கொலை செய்துகொண்டனர், அவர்களில் பலர் மனமுவந்து சயனைட் கலந்த பழரசத்தைச் சாப்பிட்டு உயிர்நீத்தனர்.
அதிர்ச்சிக்குள்ளான மக்கள் பின்வருமாறு கேட்டனர்: ‘தன்னுடைய சொந்த உறுப்பினரின் உயிர்களைப் பலிசெலுத்தும் மதம் என்ன மதமாக இருக்கும்?’ என்றபோதிலும் மதம் என்ற பெயரில் ஏறக்குறைய 6,000 ஆண்டுகளாகக் குற்றமற்ற இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், சரித்திரத்தின் வேறு எந்த ஒரு சமயத்தைக் காட்டிலும் இந்த 20-வது நூற்றாண்டில், இரத்தம் அநேக சமயங்களில், இன்னும் அநேக வழிகளில் சிந்தப்பட்டிருக்கிறது. அத்தாட்சியின் ஒரு சிறிய பகுதியைக் கவனியுங்கள்.
பொய்க் கடவுளுக்கு மானிட பலிகள்
1914 முதல், இரண்டு உலக மகா யுத்தங்களும் நூற்றுக்கணக்கான சிறிய போரட்டங்களும் ஒரு சமுத்திர அளவான இரத்தத்தைச் சிந்தியிருக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், பிரஞ்சு எழுத்தாளர் கை டி மாப்பஸன்ட் சொன்னதாவது, “போர்களைப் பொறித்திடும் முட்டைதான்” தேசபக்தி, இதை அவர் “ஒரு வகை மதம்” என்று அழைக்கிறார். உண்மை என்னவெனில், மத என்சைக்ளோபீடியா சொல்வதாவது, தேசபக்தியின் உறவினன் தேசீயம், “நவீன உலகில் ஒரு பிரபலமான மத வகையாக ஆகியிருக்கிறது, பாரம்பரிய மத மதிப்பீடுகளின் தேய்மானத்தால் விடப்பட்ட வெற்றிடத்தைத் தனதாக்கியிருக்கிறது.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.) உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிப்பதில் தவறுவதன் மூலம், பொய்மதம் ஓர் ஆவிக்குரிய வெற்றிடத்தை உண்டாக்க, அதில் தேசீயம் உட்பிரவேசிக்க முடிந்தது.
இது நாசி ஜெர்மனியைத் தவிர வேறு எங்கும் சிறந்த விதத்தில் விளக்கப்படவில்லை. ஜெர்மனியின் குடிமக்கள் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது 94.4 சதவீதம் கிறிஸ்தவர்களாக இருந்தனர். அனைத்து இடங்களைக் காட்டிலும், ஜெர்மனிதான்—புராட்டஸ்டன்ட் மதத்தின் பிறப்பிடம் மற்றும் 1914-ல் போப் பயஸ் X அதை “உலகிலேயே மிகச் சிறந்த கத்தோலிக்கரின்” இல்லம் என்றும் போற்றின இடம்—கிறிஸ்தவமண்டலம் அளிக்க முன்வந்த மிகச் சிறந்ததைப் பிரதிநிதித்துவம் செய்திருக்க வேண்டும்.
குறிப்பிடத்தக்க காரியம், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த அடால்ப் ஹிட்லர் கத்தோலிக்கரிடையே ஆதரவைக் காண்பதைக் காட்டிலும் புராட்டஸ்டன்ட்டினரிடையே தாராளமான ஆதரவைக் கண்டார். 1930 தேர்தல்களில் புராட்டஸ்டன்ட் மாவட்டங்கள் பிரபலமான விதத்தில் 20 சதவீத வாக்களிப்பைக் கொடுத்தனர், கத்தோலிக்க மாவட்டங்கள் 14 சதவீதம் ஆதரவுதான் அளித்தார்கள். மாநில தேர்தல்களில் நாசி கழகத்திற்கு முதல் முறையாக முழு பெரும்பான்மை வெற்றி ஓல்டென்பர்கில் 1932-ல் இருந்தது, இது 75 சதவீத புராட்டஸ்டன்ட் மாவட்டம்.
“பாரம்பரிய மத மதிப்பீடுகளின் தேய்மானத்தால் விடப்பட்ட வெற்றிடம்” கத்தோலிக்க மதத்தில் இருந்ததைவிட புராட்டஸ்டான்டினரிடையேதான் அதிகமாயிருந்தது. இது புரிந்துகொள்ளத்தக்கதே. கட்டவிழ்க்கப்பட்ட இறைமையியலும் பைபிளைக் குற்றங்கண்டுபிடிப்பதும் ஜெர்மானிய மொழி பேசும் புராட்டஸ்டன்ட் இறையியல் வல்லுனருடையதாய் இருந்தது.
ஹிட்லருக்குப் பின்னால் குறைந்திருந்த கத்தோலிக்க ஆதரவைக் கடைசியில் எது வலுப்படுத்தியது என்பது அதுபோலவே குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் சரித்திராசிரியன் க்ளாஸ் ஷோல்டர் விவரிப்பதாவது, “ஜெர்மானிய கத்தோலிக்க மதம் பரம்பரையாக ரோமுடன் விசேஷ நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது.” நாசியத்தில் கம்யூனிசத்திற்கு எதிராக ஓர் அரண் இருப்பதைக் கண்டு வத்திக்கன் அதை ஹிட்லரின் கரங்களைப் பலப்படுத்த பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. “அடிப்படைத் தீர்மானங்கள் அதிகமதிகமாக ரோமின் ஆட்சிமன்றத்தினிடமாய் மாறியது,” என்கிறார் ஷோல்டர், “மற்றும் உண்மை என்னவெனில், நாசியர் ஆட்சிக்குரிய ஜெர்மன் குடியரசில் கத்தோலிக்க மதத்தின் அந்தஸ்தும் எதிர்காலமும் ஏறக்குறைய கடைசியாக ரோமில்தானே தீர்மானிக்கப்பட்டது.”
இரண்டு உலக மகா யுத்தங்களிலும் கிறிஸ்தவமண்டலம் வகித்த பாகம் தானே அதன் மதிப்பை இழக்கச் செய்தது. கிறிஸ்தவ உலக மிஷனின் சிற்றகராதி விளக்குகிறது: “ஓர் ஆயிர ஆண்டு கிறிஸ்தவ போதனைகளைக் கொண்டிருந்தும் அவர்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது, மற்றும் ஆசையைத் திருப்திசெய்வதற்காக இந்த முழு உலகத்தையும் எரித்துவிட்டது என்ற உண்மைக்கு அத்தாட்சியை . . . கிறிஸ்தவர்களல்லாதவர்கள் தங்களுடைய கண்களுக்கு முன்பாகவே கொண்டிருந்தனர்.”
உண்மைதான், மதத் தூண்டுதல் பெற்ற போர்கள் புதியவை அல்ல. ஆனால் வித்தியாசமான மதங்களைப் பின்பற்றிய தேசங்கள் ஒன்றுக்கொன்று போரிட்ட கடந்த காலத்திற்கு எதிர்மாறாக, 20-வது நூற்றாண்டில், ஒரே மதத்தைச் சேர்ந்த தேசங்கள் கடுமையான போர்நிலையில் இருப்பது அதிகரித்து வருகிறது. தேசீயத்தின் கடவுள் மதத்தின் கடவுட்களை இக்காரியத்தில் திறமையாக நடத்த முடிந்திருக்கிறது என்பது தெளிவாயிருக்கிறது. இப்படியாக, இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, கிரேட் பிரிட்டனிலிருந்த கத்தோலிக்கரும் புராட்டஸ்டன்டினரும் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் இருந்த கத்தோலிக்கரையும் புராட்டஸ்டன்டினரையும் கொல்லுகிற சமயத்தில், ஜப்பானிலுள்ள புத்தர்கள் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தங்களுடைய புத்தமத சகோதரர்களையும் அப்படியே கொன்றனர்.
என்றபோதிலும், அதனுடைய சொந்த இரத்தக்கறைப்பட்ட உடையைப் பார்க்கும்போது, கிறிஸ்தவமண்டலம் சுயநீதியுள்ளவளாகத் தன் விரலால் மற்றவர்களைச் சுட்டிக்காட்ட முடியாது. அபூரண மனித அரசாங்கங்களை பிரஸ்தாபப்படுத்தியும், ஆதரித்தும், சில சமயங்களில் தேர்ந்தெடுத்தும் இருப்பதால், கிறிஸ்தவர்கள் என்னப்பட்டவர்களும், கிறிஸ்தவமல்லாதவர்களும் இந்த அரசாங்கங்கள் சிந்தியிருக்கும் இரத்தத்திற்கு ஒன்றாகவே பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால் எப்படிப்பட்ட மதம் அரசாங்கத்தை மதத்துக்கு மேல் உயர்த்தி, தன்னுடைய சொந்த உறுப்பினர்களையே போர்க் கடவுளின் பீடத்தில் அரசியல் பலியாக அளித்திடும்?
“அவர்கள் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்”
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விசுவாச துரோக இஸ்ரவேலை நோக்கிச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் பொய் மதங்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவமண்டல மதங்களுக்கும் பொருந்துகிறது. (சங்கீதம் 106:38) பேரழிவில் லட்சக்கணக்கான உயிர்கள் சாம்பலாக்கப்பட்டதை மறந்துவிடவேண்டாம், இதில் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் குற்றமற்ற நிலையில் இல்லை.—விழித்தெழு! மே 8, 1990 பார்க்கவும்.
மற்றொரு பிரச்னையிலும் ஜெர்மானிய பாதிரிமார்களும் அமைதலாக இருந்திருக்கிறார்கள், குறைவாக அறியப்பட்டிருப்பினும், இது அதிக சேதத்தை ஏற்படுத்தியது. 1927-ல் மெயீன் கேம்ப்ஃ-ல் இனம் பேரில் ஹிட்லர் தன்னுடைய எண்ணங்களை எடுத்தியம்பிய பின்னர், கத்தோலிக்க எழுத்தாளரும் இறைமையியலருமான ஜோசப் மேயர் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அது சொன்னதாவது: “மனநல நோயாளிகள், ஒழுக்கப் பித்தர்கள், இந்தக் கீழ்த்தர ஆட்கள் அடுப்பு மூட்டுவதற்கு உரிமையற்றவர்களாய் இருப்பதுபோல, பரப்புவதற்கும் எந்த உரிமையும் இல்லாதிருக்கின்றனர்.” லூதரன் பாதிரி பிரட்ரீச் வான் பாடல்ஸ்விங் ஊனமுற்றவர்களில் கருவளத்தை அழித்தல் இயேசுவின் சித்தத்துக்கு இசைவாக இருப்பதாகக் கண்டது.
மதரீதியில் ஆதரிக்கப்பட்ட இந்த மனப்பான்மை ஹிட்லரின் 1939 “யுத்தெனேசியா உத்தரவுக்கு” வழியை வகுத்தது, இது 1,00,000-ற்கும் அதிகமான மன வளர்ச்சியற்ற குடிமக்கள் மரணத்திற்கும், 4,00,000 பேருக்கு கட்டாயக் கருவள அழிவு நிறைவேற்றப்படுவதற்கும் வழிநடத்தியது.a
1985 வரை, போர் முடிவுக்கு வந்து 40 ஆண்டுகள் கழிந்து ரீன்லாண்டு லூதரன் சர்ச் அதிகாரிகள் பொதுப்படையாக ஏற்றுக்கொண்ட ஒரு காரியம்: “நம்முடைய சர்ச்சுகள் கட்டாயக் கருவள அழிப்பையும், நோய்ப்பட்ட உடல் ஊனமுற்றவர்கள் கொல்லப்படுவதையும், மனிதரில் கொடூரமான மருத்துவ சோதனைகளைச் செய்வதையும் போதியளவுக்குப் பலமாக எதிர்க்கவில்லை. இன்னும் உயிரோடிருக்கிற பலியாட்களின் மற்றும் உயிர்பிழைத்திருக்கிறவர்களின் மன்னிப்பை நாங்கள் கேட்கிறோம்.”
மன்ஸ்டர் கத்தோலிக்க பிஷப் ஆகஸ்ட் 3, 1941 அன்று கடுமையான வார்த்தைகளைக் கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்ததற்குப் பின்பு அரசாங்கத்தின் யுத்தனேசியா திட்டத்தின் செயலாக்கம் வெகுவாகக் குறைந்தது, அவர் அந்தக் கொள்கையைக் கொலை என்று அழைத்தார். ஆனால் ஒரு பொது கண்டனத்துக்குச் செவிகொடுக்க ஏன் 19 மாதங்களும் 60,000 மரணங்களும் எடுத்தன?
மதத்தின் இரத்தப்பழி
பெரும்பாலான மதங்கள் உயிரை மதிப்பதாகவும் மக்களைத் தீங்கிலிருந்து பாதுகாப்பதில் அக்கறையாயிருப்பதாகவும் உரிமைப்பாராட்டுகின்றனர். ஆனால் பின்வரும் இந்தக் காரியங்களில் உட்பட்டிருக்கும் உடல் சம்பந்தமான ஆபத்துகளைக் குறித்து, அதாவது புகைபிடித்தல், மதுபானம் உட்பட போத மருந்துகளின் துர்ப்பிரயோகம், உடலில் இரத்தத்தை ஏற்றிக்கொள்ளுதல், கட்டுப்பாடற்ற பாலுறவு குறித்து குருவர்க்கம் தன் மந்தைகளை எச்சரிக்கின்றதா? அதைவிட முக்கியமாக, பைபிள் செய்வதுபோல் அவர்கள் மாம்சத்தின் கிரியைகள் கடவுளுடைய அங்கிகாரத்தைப் பெறுவதிலிருந்து நம்மை விலக்கிடும் என்று அவர்களுக்கு விளக்குவதன் மூலம் அவற்றைக் கண்டனம் செய்கிறார்களா?—அப்போஸ்தலர் 15:28, 29; கலாத்தியர் 5:19-21.
உண்மைதான், சிலர் செய்கின்றனர். கருச்சிதைவு செய்தல் குற்றமற்ற இரத்தத்தைச் சிந்துவதாகும் என்று அதைக் கண்டனம்செய்வதன் மூலம் கத்தோலிக்க சர்ச்சும் மற்றும் பல மாறா மரபேற்புக் கோட்பாடுடைய சர்ச்சுகளும் உயிருக்கு மதிப்பைக் காண்பிக்கின்றன. என்றபோதிலும், கத்தோலிக்க இத்தாலியின் கருச்சிதைவு சட்டம் ஐரோப்பாவின் தளர்ந்த சட்டங்களில் ஒன்று.
புத்த மதமுங்கூட கருச்சிதைவைக் கண்டனம் செய்கிறது. ஆனால் ஜப்பானில் மக்கள்தொகையில் 70 சதவீதத்தினர் புத்த மதத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தாலும், ஒரே ஆண்டில் 6,18,000 கருச்சிதைவுகள் செய்யப்பட்டன என்று அறிக்கை செய்யப்பட்டது. இது எழுப்பும் கேள்வி: நாம் எந்த அடிப்படையில் ஒரு மதத்தைக் கணித்திட வேண்டும்? அதன் அதிகார உறுப்புகள் அல்லது அதன் குருமார்களில் சிலர் சொல்லும் காரியங்களின் அடிப்படையிலா, அல்லது நல்ல நிலைநிற்கையுடைய அதன் பெரும்பாலான ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்ற அடிப்படையிலா?
துன்மார்க்கனை எச்சரிக்கத் தவறிய இன்னொரு உதாரணம் பைபிள் காலக்கணக்கும் பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றமும் சம்பந்தப்பட்ட காரியம். இரண்டுமே 1914-ல் கடவுளுடைய பரலோக ராஜ்யம் இயேசு கிறிஸ்துவின் கரங்களில் ஸ்தபிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடுகின்றன.b கிறிஸ்தவமண்டலம் கிறிஸ்து பிறந்த தேதியாகக் கூறப்படும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறது என்றாலும், 19 நூற்றாண்டுகளுக்கு முன்பு அரசராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை யூத மதத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாததுபோலவே கிறிஸ்தவமண்டலமும் அவரை ஆளும் அரசராக பிரகடனப்படுத்துவதில்லை.
ஒழுக்கம் சம்பந்தமாகக் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமற்போவதும், ஆட்சிபுரியும் கடவுளுடைய ராஜ்யத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க மறுப்பதும் கொண்டுவரும் விளைவுகளைக் குறித்து குருவர்க்கம் எச்சரிக்கத் தவறுவது, எசேக்கியேல் 33:8-ன்படி தங்கள் மீது இரத்தப்பழியைக் குவிப்பதாயிருக்கிறது. அவர்கள் அமைதலாயிருப்பது, அவர்களுடைய மந்தைகளின் லட்சக்கணக்கானவர்கள் இரத்தப்பழிக்குள்ளாகும்போது பக்கத்தில் வெறுமையாய் நின்றுகொண்டிருப்பதையே அர்த்தப்படுத்துகிறது.
இப்படியாக, பொய்மதம் அதன் வஸ்திர ஓரங்களைக் குற்றமற்ற இரத்தத்தால் கறைப்படுத்தியது. கிறிஸ்து இயேசுவின் உயிர்-கொடுக்கும் இரத்தத்தை நிராகரித்துவிட்டது. (மத்தேயு 20:28 மற்றும் எபேசியர் 1:7-ஐப் பார்க்கவும்.) அந்தக் காரணத்தினிமித்தமே, பொய் மதத்தின் வஸ்திர ஓரத்தில் தெளித்திருக்கும இரத்தம்—மிக சீக்கிரத்தில்—அதனுடையதாகவே இருக்கும்!—வெளிப்படுத்துதல் 18:8.
“பொய் மதம்—கடந்தகாலத்தால் முந்தப்பட்டு!” எவ்விதப் பாதுகாப்பையும் பெறாது. எமது அடுத்த இதழ் அதை விளக்கட்டும். (g89 11/8)
[அடிக்குறிப்புகள்]
a 15-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் போப் ஆசீர்வாதத்தால் 3,00,000 முதல் 30,00,000 “சூனியக்காரிகள்” கொல்லப்பட்டதை நினைவுபடுத்துகிறது.
b 1982-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்த நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தில் அதிகாரங்கள் 16–18-ஐ பார்க்கவும்.
[பக்கம் 24-ன் பெட்டி]
“மதம் உலகின் பல பாகங்களில் புரட்சியின் ஏவற்பெண்ணாகி இருக்கிறது . . . இந்திய துணைகண்டத்திலும் பிலிப்பைன்ஸிலும் இருப்பதுபோல் அது வடக்கு அயர்லாந்தில் கொல்லுவதைத் தொடர்ந்து ஏவுகிறது.”—மதத்தின் என்சைக்ளோபீடியா
[பக்கம் 23-ன் படம்]
பொய் மதத்தின் கடந்தகால இரத்தப்பழி, 15-வது நூற்றாண்டு மரவெட்டு காட்டுகிறபடி முரண்கோட்பாட்டாளர் மொத்தமாக எரிக்கப்படுகின்றனர், அது 20-வது நூற்றாண்டு பதிவால் வெகுவாய் மறைக்கப்படுகிறது
[பக்கம் 24-ன் படங்கள்]
முதல் உலக மகா யுத்தத்தின்போது போர்த் தேவைகளுக்காக ஜெர்மானிய சர்ச் மணிகள் உருக்கப்பட்டன