நட்சத்திரங்கள் உங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே கட்டுப்படுத்து கின்றனவா?
“ஏராளமான மக்கள் எப்பொழுதும்போல இந்த அறிவீனமான காரியங்களையே அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறார்கள்—நான் எப்பொழுது இலட்சாதிபதியாகப் போகிறேன் அல்லது திருவாளர் அதிசயத்தை நான் எப்பொழுது சந்திக்கப் போகிறேன்?” என்கிறார் ஒரு பகுதி நேர சோதிடர். உண்மைதான், தங்களுடைய எதிர்காலத்தைப்பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பெரும்பாலான மக்கள் சோதிடர்களை அணுகுகின்றனர். அவர்களுடைய விருப்பத்திற்கு சோதிடர் பலர் இணங்கிச் செல்கின்றனர்—ஆம், ஒரு தொகக்கு.
என்றபோதிலும், தங்களை நவீனமானவர்களாகக் கருதிக்கொள்ளும் சோதிடர் அப்படிப்பட்ட கருத்தைப் புறக்கணிக்கின்றனர். “நான் அப்படிப்பட்ட காரியங்களுக்குரியவன் அல்ல,” என்கிறார் அந்தப் பகுதி நேர சோதிடர். “மக்கள் தங்களைப் புரிந்துகொள்வதற்கு உதவும் ஒருவனாக இருக்கிறேன்.” அப்படியென்றால், எந்த விதத்தில் சோதிடம் தங்களைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதாகக் கருதப்படுகிறது?
மனிதரின் நடவடிக்கைகள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றன என்பது எல்லாருக்குமே தெரிந்தது. சூரியன் காலங்களையும் வளர்ச்சியின் சுழற்சியையும் நிர்ணயிக்கிறது. கடல் அலைகளுக்குப் பின்னாலிருக்கும் பிரதான சக்தி சந்திரன். நட்சத்திரங்களே வெகுகாலமாக கடற்பயணங்களில் வழிகாட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. இந்த விண்ணகப் பொருட்கள் நம்முடைய வாழ்க்கையின் மற்ற செயல்களிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடியவை என்று எண்ணுவது சரியா?
சோதிடத்தின் பதில் ஆம் என்பதாகும். சோதிடத்தின் அடிப்படைக் கருத்துபடி, நம்முடைய பிறப்பு நேரத்தின்போது வாழ்க்கையைப் பாதிப்பதாகக் கருதப்படும் நட்சத்திரத் தொகுதிகளில் சூரியன், சந்திரன் மற்றும் கோள்களின் நிலைகள் நம்முடைய தன்மைகளிலும் வாழ்க்கையிலும் செல்வாக்கு மிகுந்த பங்கை வகிக்கின்றன என்பதாகும். இப்படியாக, ஒரு நபர் பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அவருடைய செயலைப் பாதிக்கக்கூடிய அம்சங்களை விளக்கிடும் வகையில், ஒரு சோதிடர், நட்சத்திரங்களின் நிலைகளையும் கிரகங்களின் நிலைகளையும் காட்டும் ஒரு விளக்கப் படத்தை அல்லது ஜாதகத்தை அமைத்திடக்கூடும். இப்படியாக உரிமைப்பாராட்டுவதற்கு ஆதாரம் என்ன? அது எந்தளவுக்கு சரியானது?
ஒரு பரிசோதனையாக, ஃபிரஞ்சு உளநூலர் மைக்கெல் காக்வலின் மரணதண்டனைக்குள்ளான ஒரு கொலைக்காரனின் பிறப்பிடத்தையும் பிறந்த தேதியையும் ஒரு சோதிடரின் ஆய்வுக்கு அனுப்பினார். பின்பு அதன் பலனாக வந்த கருத்தை, தன்னுடைய விளம்பரத்துக்குப் பிரதிபலித்து இலவச சோதிடக் கணிப்பு தருவதற்கு முன்வந்த 150 பேருக்கு அனுப்பினார். அதன் பலன்? 90 சதவீத மக்கள் தங்களிடம் அனுப்பப்பட்ட சோதிடக் கணிப்பு அவர்களுடைய ஆள்தன்மையின் சரியான விவரிப்பாக இருந்தது என்றும், தங்களுடைய நண்பர்களும் குடும்பத்தாரும்கூட அதை ஒப்புக்கொண்டனர் என்றும் 80 சதவீதத்தினர் சொன்னதைக் கண்டார்.
நியாய நிரூபணத்துக்கு இவ்வளவு காரியங்கள்! உண்மை என்னவென்றால், சோதிட கணிப்புகள் பெரும்பாலும் தெளிவற்ற மொழிநடை கொண்டவை—மனித இயல்போ சிக்கலான ஒன்று—பொருத்தமாயிருக்கும் ஏதோ ஒரு காரியத்தைக் கண்டுபிடித்திட விடாப்பிடியாயிருப்பாரென்றால், ஜாதகக் கணிப்பு எதன்பேரில் சார்ந்ததாயிருப்பினும் அதை ஒருவர் கண்டுபிடித்திட முடியும்.
ஊற்றுமூலம்
இந்த எல்லாக் காரியங்களுமே நம்மை அந்த அடிப்படை விவாதத்துக்குக் கொண்டுவருகிறது: நம்முடைய வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவதில் நட்சத்திரங்கள் ஒரு பங்கை வகிக்கின்றன என்று வைத்துக்கொள்வோமானால், அந்தச் செல்வாக்கு நம்மீது எந்த வழியில் செலுத்தப்படுகிறது? விஞ்ஞானம் அறிந்த அனைத்து சக்திகளிலும் எந்தச் சக்தி அல்லது சக்திகள் உட்பட்டிருக்கின்றன? நட்சத்திரங்களும் கிரகங்களும் அவ்வளவு தூரத்தில் இருப்பதால், “புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தைமீது கொள்ளும் பாதிப்பைக் குறித்ததில், பிரசவத்தைக் கையாளும் மருத்துவர் அதைப் பற்றி இழுப்பதும், அந்த அறையில் இருக்கும் மின்காந்த அலைகளின் ஆற்றலுமே எந்த ஒரு கிரகத்தைக் காட்டிலும் அதிக செல்வாக்கு செலுத்துவதாயிருக்கிறது” என்று ஒரு விஞ்ஞானி கூறினார். நட்சத்திரங்களின் ஈர்ப்பு சக்தியோ, மின்காந்த ஆற்றலோ அல்லது விஞ்ஞானம் அறிந்த வேறு எந்த ஆற்றலோ நம் மீது செல்வாக்கு செலுத்துவதில்லை என்றால், அந்தச் செல்வாக்கின் ஊற்றுமூலம் என்ன?
இந்தச் சிக்கலான கேள்வியை வானூல் பேராசிரியர் ஜார்ஜ் ஏபெல் அறிவியலும் அறிவுப் பிறழ்ச்சியும் (Science and the Paranormal) என்ற தன்னுடைய புத்தகத்தில் கேட்கிறார். நட்சத்திரங்களின் மற்றும் கிரகங்களின் சக்தியைக் குறித்த சோதிடரின் அனைத்து உரிமைபாராட்டல்களையும் ஆராய்ந்த பின்பு, ஏபெல் எழுதுகிறார்:
“கிரகங்கள் நம்மீது செல்வாக்கு செலுத்துவதாயிருந்தால், அது அறியப்படாத ஒரு சக்தியின் மூலமும், விநோதமான தன்மைகளையுடைய ஒரு சக்தியின் மூலமும் இருக்க வேண்டும்: அது எல்லா விண்ணகப் பொருட்களிலிருந்தும் அல்ல, ஆனால் ஒரு சிலவற்றிலிருந்து வருவதாயிருக்க வேண்டும், பூமியிலுள்ள சில பொருட்களை மட்டுமே பாதிக்க வேண்டும், எல்லாப் பொருட்களையும் அல்ல, அதன் சக்தி தூரத்தையோ, அளவையோ அல்லது மற்ற இயல்புகளையோ சார்ந்திருக்க முடியாது. வேறுவிதமாகக் குறிப்பிடவேண்டுமானால், மற்ற எல்லாச் சக்திகளிலும் மெய்யாயிருக்கும் இந்த அகிலாண்டத்திற்குப் பொருந்தக்கூடிய இயற்கைச் சட்டத்திலும் காணப்படும் அகிலாண்டத்தன்மையை, ஒழுங்கை, மற்றும் ஒத்திசைவை அது இழந்ததாயிருக்கும்.”
விஞ்ஞானம் அப்படிப்பட்ட ஒரு சக்தியை அறியவில்லை. சோதிடம் பலிக்கிறது என்றால், “மெய்யாயிருக்கும் இந்த அகிலாண்டத்திற்கு” புறம்பான ஒரு சக்தியால், அல்லது சக்திகளின் மூலமே செயல்படவேண்டும். ஆனால் சோதிடம் அதன் வேர்களைப் பூர்வ பாபிலோனில் கொண்டிருக்கிறது, அங்கு நட்சத்திரங்களும் கிரகங்களும் தெய்வங்களாக வணங்கப்பட்டன என்பதை நினைவிற்குக் கொண்டுவருகையில், அதன் செல்வாக்குக்குரிய ஊற்றுமூலம் “மெய்யான இந்த அகிலாண்டம்” அல்ல, ஆனால் இயற்கைக்கு மிஞ்சிய ஓர் ஊற்றுமூலமே என்பது ஆச்சரியத்துக்குரியதன்று.
சோதிடத்துக்குப் பின்னே இருக்கும் சக்தி
“உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது” என்று பைபிள் காண்பிக்கிறது. அவன்தான் பிசாசாகிய சாத்தான். அவன் காணக்கூடாதவனாயிருந்தும் மக்களையும் பூமியின் சம்பவங்களையும் கட்டுப்படுத்தும், தன் போக்கில் செயல்படச் செய்யும் திறமையும் கொண்ட வல்லமை வாய்ந்த ஓர் ஆவி சிருஷ்டி. (1 யோவான் 5:19) சில முன்னறிவிப்புகள் உண்மையில் நிகழ்வதாகத் தோன்றச்செய்யுமளவுக்குக் காரியங்களின் போக்கை செயல்படுத்துவதன் மூலம் சாத்தானும் அவனுடைய பேய்க்கூட்டாளிகளும் மக்களுடைய ஆர்வத்தைத் தன்வயப்படுத்தி, சோதிடத்தை ஒரு வழிபாட்டு மரபாக மாற்றிவிட்டிருக்கின்றனர்.
என்றபோதிலும், குறிப்பிடத்தக்கவிதத்தில், உண்மையாகியிருப்பதாய்க் கூறப்படும் அந்த முன்னறிவிப்புகள் எப்படிப்பட்டவை? அவை பெரும்பாலும் மரணம், கொலைகள், படுகொலைகள், பேரழிவுகள்—கொடியதும் கோரமானதும், சாத்தானிய தன்மைக்குரியவை மற்றும் பேய்த்தனமானவை அல்லவா? மிகத் தெளிவான ஓர் உண்மை என்னவெனில், மக்கள் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர்களைக் கட்டுப்படுத்தவும் அவர்கள் பேரில் செல்வாக்குச் செலுத்திடவும் அவன் பயன்படுத்தும் “பிசாசின் தந்திரங்களில்” ஒன்றுதான் சோதிடம்.—எபேசியர் 6:11.
அந்த நோக்கம் என்ன? “கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவன் அவர்களுடைய கண்களைக் குருடாக்கிப்போட்டான்,” என்று பைபிள் பதிலளிக்கிறது. (2 கொரிந்தியர் 4:4) அந்தளவிற்கு, சோதிடம் தன் எஜமானை நன்கு சேவித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வான்கோள்நிலை ஆய்வாளர் வின்ஸ் ஃபோர்டு கூறினார்: “சோதிடம் ஒருவித மதமாகிவிட்டிருக்கிறது, ஆனால் அது நிரூபிக்கமுடியாதது . . . நான் சொல்ல முடிந்ததெல்லாம் என்னவெனில், அவற்றை நம்புகிறவர்கள் தங்களுடைய செயல்களுக்கு அந்த அப்பாவி நட்சத்திரங்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள், அவற்றிற்கான பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு நான் வருந்துகிறேன்.”
நம்முடைய பொது சகாப்தத்துக்கு முன் எட்டாம் நூற்றாண்டில் ஏசாயா தீர்க்கதரிசி சோதிடர்களுக்கு நிந்தனையை ஏற்படுத்தும் வகையில் ஒரு சவாலை எழுப்ப ஏவப்பட்டான்: “இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.”—ஏசாயா 47:13.
சோதிடத்தை நம்புகிறவர்கள் விதி என்ற கருத்துக்குத் தங்களை ஒப்படைத்துவிடுகின்றனர், அதாவது ‘நடக்க வேண்டியது நடந்துதான் ஆகவேண்டும்’ ஏனென்றால் ‘அது நட்சத்திரங்களில் எழுதப்பட்டிருக்கிறது.’ இது கடவுளுடைய சித்தத்தை அல்லது அந்தச் சித்தத்துக்கு ஏற்ப மனிதவர்க்கம் செயல்படவேண்டிய உத்தரவாதத்தை மறுப்பதாக இருக்கிறது.
எனவே நம்முடைய வாழ்க்கையை வழிநடத்துவதற்கு அறிகுறிகளுக்கும் சகுனங்களுக்கும் நட்சத்திரங்களை நோக்கியிருப்பதற்கு பதிலாக, அந்த நட்சத்திரங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஆம், நட்சத்திரங்கள் நமக்கு என்ன சொல்லக்கூடும்? அடுத்த கட்டுரை பதிலளிக்கிறது. (g89 11/22)
[பக்கம் 6-ன் பெட்டி]
சோதிடம் விஞ்ஞானப்பூர்வமானதா?
அண்மைக் காலங்களில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் சோதிடத்திற்கு மாபெரும் சவால்களை எழுப்பியிருக்கின்றன. இந்த உண்மைகளைக் கவனியுங்கள்:
◼ ஒரு நட்சத்திரக்கூட்டத்தில் தோன்றும் நட்சத்திரங்கள் உண்மையிலேயே ஒரு தொகுதியில் இல்லை என்பது இப்பொழுது அறிந்த ஒன்றாக இருக்கிறது. இவைகளில் சில விண்வெளியில் நெடுந்தொலைவிலும் மற்றவை இதனோடு ஒப்பிடுகையில் அருகாமையிலும் உள்ளன. இப்படியாகப் பல்வேறு நட்சத்திரக்கூட்டங்களின் இராசிகள் முழுக்கக் கற்பனையாகும்.
◼ யூரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் பூர்வீக சோதிடர்கள் அறியாத கிரகங்கள். ஏனென்றால் அவை தொலைநோக்கியின் கண்டுபிடிப்புக்குப் பின்னரே அறியவந்தன. காரியம் இப்படியிருக்க, அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சோதிட விளக்க அட்டவணைகள் அந்தக் கிரகங்களின் “செல்வாக்குகளை” எப்படி விளக்கக்கூடும்?
◼ பிறப்புவழிச் சார்ந்த விஞ்ஞானம், நம்முடைய குணாதிசங்கள் பிறப்பில் அல்ல, ஆனால் கருதரிக்கும் போது, தந்தையின் இலட்சக்கணக்கான விந்துகளில் ஒன்று தாயின் கருவில் இணையும்போது ஆள்தன்மைகள் உருவாகின்றன என்று கூறுகிறது. என்றபோதிலும், சோதிடம், ஒருவருடைய ஜாதகத்தைப் பிறப்பின் போது, ஒன்பது மாதங்கள் கழித்து நிர்ணயிருக்கிறது.
◼ சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள் பயணம் செய்வதாகச் சொல்லப்படும் வானப்பகுதி இராசி என்றழைக்கப்படுகிறது. இது சோதிடரால் 12 சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திரக்கூட்டத்தை அடையாளமாகக் கொண்டிருக்கிறது. உண்மையில் வானத்தின் அப்பகுதியில் 14 நட்சத்திரக்கூட்டங்கள் உள்ளன. அவை ஒரே அளவில் இல்லை. ஓரளவு ஒன்றிலொன்று கலப்பதாயிருக்கிறது. எனவே சோதிடர் வரையும் ஜாதக விளக்க அட்டவணைகள் வானத்தில் அமைந்திருப்பதற்கு இணையாக இல்லை.
◼ நட்சத்திரக்கூட்டங்களுக்குள் சூரியனின் பயண நேரம், பூமியின் பார்வையாளர்படி, சோதிடரின் விளக்க அட்டவணைகளும் கணக்குகளும் அமைக்கப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததுடன் ஒப்பிடுகையில் தற்போது ஒரு மாதம் பின்னால் இருக்கிறது. எனவே, சோதிடம், ஜூன் மாத கடைசியில் அல்லது ஜூலை மாதத்தின் ஆரம்பதில் பிறந்த ஒரு நபரை கேன்சராக (கடகம்) குறித்திடும்—எளிதில் புண்படக்கூடிய, நிலையான மனமற்ற, தன்னைப் பிரித்துக்கொள்கிற சுபாவமுடையவராகக் குறித்திடும்—ஏனென்றால் சோதிட விளக்க அட்டவணையின்படி சூரியன் கேன்சர் (கடகம்) நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கிறது. என்றபோதிலும், சூரியன் உண்மையில் ஜெமினியில் (மிதுனம்) இருக்கிறது. அது அந்த நபரை “நன்கு பேசிப் பழகுகிறவராக, நகைச்சுவை சுபாவமுடையவராக, அரட்டையடிப்பவராக” இருக்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது.
[பக்கம் 7-ன் பெட்டி]
கிழக்கு மற்றும் மேற்கு சோதிடம்
மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் சோதிடம், வருடத்தினூடே சூரியன் பயணம் செய்யும் 12 நட்சத்திர கூட்டங்களுக்கு விசேஷ குணாதிசயங்களைப் பொருத்துகின்றது. இந்த நட்சத்திரக்கூட்டங்களுக்கு கிரேக்கர்கள் பெயர் கொடுத்தார்கள். அவற்றை அவர்கள் கடா (மேஷம்), காளை (ரிஷபம்), மற்றும் இரட்டைப் பிள்ளைகள் (மிதுனம்) என்ற உயிரினங்களாகக் கருதினர்.
அக்கறைக்குரிய மற்றொரு காரியம், பூர்வீக சீனாவும் ஜப்பானும்கூட இராசியை 12 பகுதிகளாகப் பிரித்து விண்ணகக் கிளைகள் என்று சொல்லப்படுகின்றவற்றின் 12 விலங்குகளுக்கு இணையாகப் பிரித்திருக்கிறது—நாய், கோழி, குரங்கு, வெள்ளாடு, குதிரை முதலாக மற்றும் பல. இந்த ஒவ்வொரு விலங்கும் அதன் தன்மைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்டக் காலப்பகுதிக்கு அதன் செல்வாக்கைச் செலுத்துவதாகக் கருதப்படுகிறது. வானங்களின் ஒத்தப் பகுதிகள் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய சோதிடரால் இவ்விதமாய்க் குறிப்பிடப்படுகிறது:
மேற்கத்திய இராசி கிழக்கத்திய இராசி
ஏரீஸ் கடா (மேஷம்) நாய்
டாரஸ் காளை (ரிஷபம்) கோழி
ஜெமினி இரட்டைப்பிள்ளைகள் (மிதுனம்) குரங்கு
கேன்சர் நண்டு (கடகம்) வெள்ளாடு
லியோ சிங்கம் (சிம்மம்) குதிரை
விர்கோ கன்னி (கன்னி) பாம்பு
லிப்ரா தராசு (துலாம்) வலுசர்ப்பம்
ஸ்கார்ப்பியோ தேள் (விருச்சிகம்) காட்டு முயல்
சாகிட்டாரியஸ் வில்வீரன் (தனுசு) புலி
கேப்பிரிக்கார்ன் வெள்ளாடு (மகரம்) காளை
அக்வேரியஸ் நீர்க்கலம் (கும்பம்) எலி
பிஸ்கீஸ் மீன்கள் (மீனம்) பன்றி
இந்த இரண்டு ஜாதக முறைகளையும் ஒப்பிடுகையில் நாம் காண்பது என்ன? விநோதமான காரியம் என்னவெனில், கிழக்குக்கும் மேற்குக்கும் அந்த நட்சத்திரக்கூட்டங்கள் அல்லது இராசிகள் வித்தியாசமாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. உதாரணமாக சூரியன் ஏரீஸிலிருக்கும்போது அந்த ராசியில் பிறக்கும் ஒருவன் காரியங்களை சாதிப்பவனாயிருப்பான், டாரசில் பிறப்பவன் முரண்டுபிடிப்பவனாயிருப்பான் என்று தொடர்ந்து சொல்கிறது. ஆனால் இந்தக் குணங்களை ஒருவன் நாயுடனும் கோழியுடனும் இணைத்திடமாட்டான். என்றாலும் கிழக்கத்திய சோதிடம் இதைத்தான் முன்னறிவிக்கிறது. மற்ற ஜோடிகளைக் குறித்தும் இதுவே சொல்லப்படலாம். எனவே, நீங்கள் எந்த ஜாதகமுறையைத் தெரிந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொருத்து, அதே நட்சத்திரங்கள் முற்றிலும் வித்தியாசமான குணங்களைக் கொண்டிருப்பதாகவும் வித்தியாசமான செல்வாக்குடையவையாகவும் சொல்லப்படுகிறது. கட்டுப்படுத்துவது நட்சத்திரங்களா அல்லது சோதிடரின் கற்பனையா?
[பக்கம் 8-ன் படம்]
உலகின் மிகப் பழமையான ஜாதகம், ஒருவேளை பொ.ச.மு. 410, ஏப்ரல் 29-ல் பாபிலோனில் கணிக்கப்பட்டது
[படத்திற்கான நன்றி]
Courtesy of the Visitors of the Ashmolean Museum, Oxford